Wednesday, November 17, 2010

தங்கமே தங்கம் - Update

தங்கம் விலை சீறாக ஏறிக்கொண்டிருக்கிறது. இன்று தங்கம் 10 கிராமுக்கு 20,160 ரூபாய்க்கு இந்தியாவில் விற்கிறது. மேலை நாடுகளில் ஒரு அவுன்ஸ் $1,332 க்கு விற்கிறது. ஒரு அவுன்ஸ்க்கு 28.35 கிராம் என்ற கணக்கில் ஒரு கிராம் தங்கம் $47க்கு விற்கப்படுகிறது.

இன்னும் சில வருடங்களில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ்க்கு $10,000 விலையை தொடும் என்று உறுதியாக சொல்கிறார் டெக்ஸாஸில் பென்ஷன் நிதி நடத்தும் Shayne McGuire. முழு விபரங்களுக்கு இங்கு கிளிக்கவும். ஒரு அவுன்ஸ் $10,000க்கு விற்றால் ஒரு கிராம் $352க்கு, தோராயமாக 15,500 ரூபாய்க்கு விற்க கூடும். ஒரு கிராம் தங்கம் இந்த விலைக்கு விற்றால் இந்தியாவிலும் சீனாவிலும் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும். அது விலையை திரும்பவும் சமப்படுத்தும். ஒரு அவுன்ஸ் தங்கம் $10,000 என்ற சிந்தனையே வேடிக்கையாக இருக்கிறது. உலகம் முழுதும் பொருளாதாரம் படு சீரழிவு, பல நாடுகள் யுத்தம் என்ற ஒரு நிலைமை வந்தால தான் தங்கம் அந்த அளவுக்கு அநியாய விலையை அடையும். ஒரு அவுன்ஸ் $2,000 என்ற நிலைமை வரலாம். $10,000?!

இதைப்பற்றிய உங்கள் சிந்தனைகளை எழுதுங்கள் ப்ளீஸ்.

Saturday, October 02, 2010

தங்கமே தங்கம்! (இன்னுமொரு update)

தங்கத்தைப் பற்றி எழுதி கிட்டத்தட்ட ஒரு வருடமாகி விட்டது. போன வருடம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $1,054. இன்று $1,318! இந்த வருட கடைசிக்குள் $1,350க்கு போகலாம்.கடந்த பத்து வருடங்களாக தங்கம் ஒவ்வொரு வருடத்திலும் லாபம் கொடுத்திருக்கிறது! அமெரிக்க பொருளாதாரத்தை சரிசெய்ய அமெரிக்க அரசாங்கம் அதிக டாலர் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதால், அமெரிக்க டாலரின் மதிப்பு குறையலாம் என்று பரவலான எதிர்பார்ப்பு இருக்கிறது. டாலரின் மதிப்பு குறைந்தால், இது வரை டாலரில் முதலீடு செய்து விளையாடுபவர்களுக்கு தங்கம் புகலிடம் அளிக்கிறது.

தங்கம் விலை உயர்வதால் வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் விலையும் உயர்கிறது. உலக நாடுகள் பல தங்கள் நாட்டு கரன்சியின் மதிப்பை குறைக்க முயற்சி செய்வதாலும் (ஏற்றுமதியை ஊக்குவிக்க) தங்கத்தின் கவர்ச்சி அதிகமாகி விட்டது. தங்கத்தை ட்ரேட் செய்யும் பெரிய நிதி நிறுவனங்களின் காட்டில் மழை. அதே சமயம் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்திற்கு தங்கம் எட்டாத உயரத்துக்கு போய் கொண்டிருக்கிறது.

தொடர்புள்ள இணைப்பு: தங்கமே தங்கம் Update

Tuesday, September 14, 2010

சங்கீத ஜாதி முல்லை... காணவில்லை...

பல வருடங்களாக மனதை தென்றலாக வருடிய பாடல்களின் சொந்தக்காரி மண்ணை விட்டு மறைந்து விட்டாள். ஸ்வர்ணலதா மறைந்தாலும் அவரின் பாடல்கள் என்னைப் போன்ற ரசிகர்களின் மனதில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும்.எனது பள்ளிப்பருவத்தில் ஜென்சி தனது பாடல்களினால் (ஆயிரம் மலர்களே மலருங்கள்) பல்லாயிரக் கணக்கானோரை காதல் பித்து பிடித்து அலைய வைத்தார். பல வருடங்களுக்கு பிறகு "மாலையில் யாரோ மனதோடு பேச.." பாடலினால் ஜென்சியின் வெற்றிடத்தை தனது வெற்றியிடமாக மாற்றினார் ஸ்வர்ணலதா. அவர் குரலை போல இது வரை எந்தக் குரலையும் நான் கேட்டது கிடையாது. வாணி ஜெயராம் போல ஒரு unique voice ஸ்வர்ணலதாவுக்கு.

ஸ்வர்ணலதாவின் மறைவு இசைக்கு பெரிய இழப்பு.

Saturday, August 28, 2010

அமெரிக்காவில் இன்னுமொரு பொருளாதார சரிவு வருமா?

"Double-dip recession" அமெரிக்காவை வதைக்க போகிறதா என்று கடந்த ஒரு வருடமாக பல பேர் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். யேல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராபர்ட் ஷில்லர் double-dip recession கூடிய சிக்கிரம் நிச்சயமாக வருமென்கிறார். செப்டம்பர் இறுதிக்குள் அமெரிக்கா இரண்டாவது dip-ல் காலை வைத்து விடும் என்கிறார்.இந்த வருட இரண்டாவது காலாண்டில் அமெரிக்காவின் GDP வளர்ச்சி முன்பு கணித்ததை விட குறைவாக இருப்பதாக நேற்று மத்திய வங்கி அறிவித்தது. சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்காவில் வீட்டு விற்பனைகள் 27 சதவிகிதம் விழுந்ததாக National Association of Realtors அறிக்கை வெளியிட்டார்கள்.

அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் இன்னும் ஒரு பெரிய பிரச்னை. ஒரு பக்கம் கம்பெனிகள் நல்ல தகுதியுள்ள ஆட்கள் கிடைக்காமல் தடுமாறுகிறார்கள். இன்னொரு பக்கம் பல நூறாயிரம் மக்கள் தங்களுக்கு தெரிந்த வேலைகள் சீனாவுக்கு சென்று விட்டதால் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். பேசாமல் ஒவ்வொரு அரசாங்க பள்ளிகளிலும், அனைத்து வகுப்புகளுக்கும் ஒரு உதவி ஆசிரியரை நியமித்தால், மாணவர்களுக்கும் நல்லது, வேலையில்லா திண்டாட்டமும் குறையும் என்று ராபர்ட் ஷில்லர் ஐடியா கொடுக்கிறார். அமெரிக்காவில் பல மாநிலங்களில் பள்ளிகளின் பட்ஜெட்டை குறைப்பதிலேயே அரசியல்வாதிகள் கவனமாக இருக்கிறார்கள். இதில் உதவி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் எங்கே இருக்கப் போகிறது?!

அமெரிக்க பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் பொருளாதார மாற்றங்களை கவனித்து வாருங்கள். அமெரிக்க பங்கு சந்தை வீழ்ந்தால் அது இந்திய சந்தையிலும் மற்ற ஆசிய சந்தைகளிலும் பிரதிபலிக்கும்.

Saturday, March 06, 2010

பாட்டு போட்டி

உங்களுக்கு நல்ல குரல் வளம் இருந்தால், உங்களுக்காக ஒரு பாட்டு போட்டி! டிஜிடல் பூமி இணைத்தளம் பாட்டு போட்டி அறிவித்திருக்கிறது. விபரங்களுக்கு இங்கு பாருங்கள்.

பாட்டெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது, கம்ப்யூட்டர் பற்றி ஏதாவது போட்டியிருந்தால் நான் ரெடி என்று சொல்பவர்களுக்கு 3,000 ரூபாய் காத்திருக்கிறது. விபரங்களுக்கு இங்கு செல்லவும். தொழில்நுட்பம் சம்பந்தமான இடுக்கைகளுக்கான (tech threads) போட்டி விபரங்களை பார்க்கவும்.

Good Luck!

Tuesday, January 05, 2010

கலிகாலம் - பகுதி 3

ஒவ்வொருவரும் பேசுவதை பார்த்தால் உலகம் உண்மையிலேயே 2012-ல் முடிந்து விடும் போல தெரிகிறது! இதைப்பற்றிய ஒரு சீரியஸான விவாதத்தை இங்கு பாருங்கள்.

இன்னும் இரணடு வருடங்கள் தான் இருக்கிறது... என் to-do லிஸ்டில் உள்ள காரியங்களை நான் முடிப்பதற்கே இன்னும் பல வருடங்களாகும், அதற்குள் எனக்கு காரியம் செய்து விடுவார்கள் போலிருக்கிறது!

நேற்றைய அநியாய விலை...

முதலில் உங்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தமிழகத்தில் ரியல் எஸ்டேட் விலை ஓரளவு சரிந்தாலும், பெரிதாக தாக்கம் ஒன்றும் ஏற்பட்டதாக தெரிய வில்லை. ரியல் எஸ்டேட்டில் பல கோடிகள் சம்பாதித்த நண்பரிடம் பேசும் போது, "இந்தியாவையும் பிற நாடுகளையும் ரியல் எஸ்டேட்டில் ஒப்பிடாதீர்கள்" என்று கூறினார்.

"நேற்றைய அநியாய விலை, இன்றைய நியாய விலை" என்று தத்துவமும் சொல்லுகிறார். ஹ்ம்...இப்படி தத்துவம் பேசி விலையை தாறுமாறாக ஏற்றிய அனைவருக்கும் ஒரு பெரிய ஆப்பு இருக்கிறது. எப்போது என்று தான் தெரியவில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...