Monday, March 16, 2009

காளைக்கும் கரடிக்கும் நடக்கும் யுத்தம்

சிட்டி பேங்க் போன வாரம் கொடுத்த உற்சாக குரல் பங்கு சந்தை முதலீட்டாளர்களின் காதில் இசையாக ஒலித்து விட்டது. சிட்டி பேங்கின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் பண்டிட் தனது வங்கி ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் "இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் வங்கி நல்ல லாபம் சம்பாதித்துள்ளது" என்று எழுதியது வங்கிகளைப் பற்றிய பொதுவான பயத்தை நீக்க "கொஞ்சம்" உதவியது. ஒரு டாலருக்கும் குறைவாக விற்ற வங்கியின் பங்குகள் இன்று $2.33க்கு விற்கிறது.

சிட்டி பேங்கின் "operating profits" உயர்ந்ததாக கூறினாலும், அந்த வங்கியின் இந்த காலாண்டு செலவுகள் அனைத்தும் மார்ச் மாதம் முடியும் வரை முழுமையாக தெரியாது. "ஜனவரி, பிப்ரவரியில் 10 பில்லியன் லாபம் இருந்தது, துரதிர்ஷ்டவசமாக மார்ச் மாதத்தில் 12 பில்லியன் டாலர் செலவு இருந்தது. அதனால் இந்த காலாண்டிலும் 2 பில்லியன் நஷ்டம்" என்று இவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அமெரிக்க வங்கிகள் அனைத்துக்கும் "operating revenue, profits" பெரிய பிரச்னையாக இருந்ததில்லை. இந்த வங்கிகளின் "balance sheet" தான் பிரச்னையே. முதலீட்டாளர்களும் இதனால் தான் சிட்டி பேங்கின் பங்கு விலையை ஒரு டாலரிலிருந்து பத்து டாலருக்கு உடனே உயர்த்தாமல் இருக்கிறார்கள். ஏப்ரல் மாதத்தில் சிட்டி பேங்க் காலாண்டு கணக்குகளை அறிவிக்கும் போது அந்த வங்கியின் லாபம் உண்மையாகவே அதிகரித்திருந்தால், சிட்டி பேங்கின் பங்குகள் வேகமாக மேலே ஏறும்.

தற்போதைய நிலைமையில் வங்கிகளின் லாபம் கூடுவதாக வரும் தகவல்கள் பங்கு சந்தைக்கு உற்சாக டானிக். அமெரிக்க மத்திய வங்கி அதிகாரி பென் நேற்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க பொருளாதாரம் இந்த வருட இறுதிக்குள் சரியாகலாம் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் இன்று சிறு வியாபாரிகளுக்கு கடன் சலுகைகளை அறிவித்திருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் பங்கு சந்தையில் இந்த வருடம் காளை ஜெயிக்கும் போல தெரிகிறது.

ஆனாலும்... (I hate this "however" stuff!) வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த வருடம் அது 10%க்கு மேலே போகும் போல தெரிகின்றது. வீட்டு விலைகள் இன்னும் குறையலாம். அவை குறைவது நின்றால் தான் பொருளாதாரம் பலப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக வங்கிகள் மக்களுக்கு கடன் கொடுக்காமல் தனது அதிகாரிகளுக்கு பல கோடிகளை வாரி வழங்கி கொண்டிருக்கிறது. இந்த வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு ethics, integrity என்று ஒரு மண்ணும் இல்லாமல் போய் விட்டது. மக்களின் பணத்தை வாங்கி உயிர் பிழைத்த இந்த வங்கிகள் மக்களைப் பற்றியும் பொருளாதாரத்தைப் பற்றியும் சிறிதும் கவலைப்படாமல் வெட்டித்தனமாக செலவு செய்கின்றது. சிறு வியாபாரிகளுக்கு கூட இந்த வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. இது பற்றி கேட்டால் "அரசாங்கத்திலிருந்து 10 பில்லியன் உதவி கிடைக்கும் போது அந்த 10 பில்லியனையும் கடன் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. There is no one-to-one relationship" என்று பேங்க் ஆப் அமெரிக்காவின் கென் லூயிஸ் வியாக்கியானம் பேசுகிறார்.

நேற்று வெளியான தகவலின் படி AIG இன்சூரன்ஸ் கம்பெனி மக்களின் பணத்தை தனது முட்டாள் அதிகாரிகளுக்கு போனஸாக தாரை வார்த்திருக்கிறது. இவர்களையெல்லாம் நடு ரோட்டில் சுட்டு தள்ள வேண்டும்.

இப்போது பங்கு சந்தையில் நடப்பது bear market rally. அடிப்படை விபரங்கள் ஒன்றும் பெரிதாக மாறவில்லை. இந்த காலாண்டு கணக்கு விபரங்களை வங்கிகளும் மற்ற நிறுவனங்களும் அறிவிக்கும் போது அவற்றை பொறுத்து பங்கு சந்தையின் திசை மாறலாம்.

தொடர்புள்ள இணைப்புகள்: AIG Outrage | Obama to loosen credit for small businesses | Encouraging News from Citibank | Do not chase bear market rallies

1 comment:

மங்களூர் சிவா said...

/
அமெரிக்க மத்திய வங்கி அதிகாரி பென் நேற்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க பொருளாதாரம் இந்த வருட இறுதிக்குள் சரியாகலாம் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் இன்று சிறு வியாபாரிகளுக்கு கடன் சலுகைகளை அறிவித்திருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் பங்கு சந்தையில் இந்த வருடம் காளை ஜெயிக்கும் போல தெரிகிறது.
/

கேட்க சந்தோஷமாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!

Related Posts Plugin for WordPress, Blogger...