Monday, January 05, 2009

புது வருடம், புது நம்பிக்கை

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

2009ம் வருடம் 2008 போல கடினமாக இல்லாவிட்டாலும், சுலபமாகவும் இருக்கப்போவதில்லை. வருடத்தின் முதல் ட்ரேடிங் தேதியிலேயே (ஜனவரி 2) அது ISM (Institute of Supply Management Manufacturing Index) புள்ளிவிபரங்களில் தெரிந்து விட்டது. ISM குறியீடு 32.4 புள்ளிக்கு விழுந்து விட்டது. 1980களில் இருந்த நிலைமைக்கு போய் விட்டது.

S&P 500, Nasdaq, Dow போன்ற அனைத்து குறியீடுகளும் பங்கு சந்தை இன்னும் சில நாட்களுக்காவது மேலே போகும் என்று காட்டுகின்றன. இன்று ஒபாமா வாஷிங்க்டனில் தனது பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை அறிவிக்கிறார். ஒபாமா இன்னும் இரண்டு வாரங்களில் பதவி ஏற்பது பங்கு சந்தைக்கு பாஸிட்டிவான விஷயம்.

இந்த நாளில் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் இல்லை. வருடங்கள் மாறினாலும், பொருளாதார பிரச்னைகள் அப்படியே தான் இருக்கின்றன. ஆனாலும் முதலீட்டாளர்களின் மனோபாவம் சிறிது மாறியிருக்கிறது. இனிமேல் பிரச்னைகள் அதிகம் வராது, இன்னும் ஆறு மாதத்தில் விட்டதை திரும்ப பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை பலருக்கு வந்திருக்கிறது. ஒபாமா ஏதாவது மந்திரம் செய்வார் என்று பலர் நம்புகிறார்கள். அதன் பிரதிபலிப்பாக இன்று பங்கு சந்தை உயரலாம். இதே நிலைமை வருடம் முழுதும் நீடிக்குமா என்பது சந்தேகம் தான்.

இந்த வருடமும் ரோலர் கோஸ்டர் வருடமாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஜூன் 2009க்குள் நிலைமை சரியாகி விடும் என்று பலர் நம்புகிறார்கள். அதற்குள் ரஷ்யா, இஸ்ரேல், பாகிஸ்தான், இரான் போன்ற நாட்டின் அதிபர்கள் அரசியல் பிரச்னைகளை தீவிரமாக்கினால், அமெரிக்க அரசாங்கத்துக்கு அதிலேயே கவனம் முழுதும் போய் விடும். அமெரிக்க பொருளாதாரம் சுபிட்சமாக இருக்கும் வரை மற்ற நாடுகளின் விஷயத்தில் பஞ்சாயத்து செய்வது அமெரிக்காவுக்கு சுலபமாக இருந்தது. தன் நாட்டிலேயே பலர் வேலை இழந்து, வீடு இழந்து தவிக்கும் போது இந்த அரசாங்கத்தால் மற்ற நாடுகளின் பிரச்னைகளையும் சமாளிக்க முடியாது. இருந்தாலும் தன் சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் பிற நாடுகளின் அரசியல் பிரச்னைகளில் தீவிரம் காட்டி பொருளாதாரத்தை இன்னும் சொதப்பி விடுவார்களோ என்ற எண்ணமும் இருக்கிறது.

அமெரிக்க வங்கிகள் இன்னும் மாறவில்லை. அரசாங்கம் அந்த வங்கிகளுக்கு கொடுத்த பல பில்லியன் டாலர்களுக்கு கணக்கு கேட்டால் "தெரியாது" என்று அலட்சியமாக கூறுகிறார்கள். மக்கள் பணத்தை இன்னொரு முறை சுவாஹா செய்யப் போகிறார்களா என்று தெரியவில்லை.

இன்றைய தேதியில் ஒரே ஒரு நல்ல விஷயம் வீட்டு கடன் வட்டி விகிதம் குறைந்திருப்பது தான். உங்களுக்கு நல்ல வருமானமும் நிலையான வேலையும் இருந்தால் வீடு வாங்குவதோ அல்லது refinance செய்வதோ நல்லது.

தொடர்புள்ள இணைப்பு: Strategy for 2009

2 comments:

தங்ஸ் said...

வீடு வாங்கலாம்ங்கறீங்க?ஏதாவது site இருந்தா சொல்லுங்களேன்...என் நண்பன் ஒருத்தன் டாலஸ் ஏரியால செட்டில் ஆகணும்னு பாக்குறான்.

Bharathi said...

:-) டாலஸ் ஏரியா பக்கம் நான் போனதே கிடையாது. டெக்ஸாஸ் மாநிலத்தில் ரியல் எஸ்டேட் boom-ல் அபார விலையேற்றமும் இல்லை. தற்போது அதிக வீழ்ச்சியும் இல்லை. நல்ல வேலையில் இருந்தால் தைரியமாக வாங்க சொல்லுங்கள்.

நான்கு பெட்ரூம் வீட்டை $133,000க்கு விற்கிறார்கள். (Source: http://dallas.craigslist.org/reo/).

Related Posts Plugin for WordPress, Blogger...