Friday, January 30, 2009

ஜனவரியின் தாக்கம்

ஜனவரி 2009ல் S&P 500 8.57 சதவிகிதம் விழுந்திருக்கிறது. ஜனவரியில் பங்கு சந்தை நஷ்டப்பட்டால் வருடம் முழுதும் பங்கு சந்தை நஷ்டப்படலாம் என்ற பரவலான நம்பிக்கை இருக்கிறது. அதற்கு January Barometer என்று ஒரு பெயரும் வைத்திருக்கிறார்கள். பல வருடங்களில் இப்படித்தான் நடந்திருக்கிறது.

அமெரிக்காவிலும் இப்படி ஒரு மூடநம்பிக்கையா என்று நினைக்க வேண்டாம்! பங்கு சந்தைகளில் எவ்வளவு ஏற்ற தாழ்வு ஏற்பட்டாலும், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பொதுவாக பங்கு சந்தை மேலே ஏறும். முக்கியமாக ஜனவரியில் மேலே ஏறும். புது வருடம் வரும் போது புது நம்பிக்கை வரும். பல முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதிகளில் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்வார்கள். பரஸ்பர நிதிகள் தங்களிடம் வரும் பல பில்லியன் டாலர்களை பங்கு சந்தையில் முதலீடு செய்யும்போது பங்கு சந்தை உயரும். ஜனவரியில் கூட முதலீட்டாளர்களின் மனதில் உற்சாகம் இல்லாத போது அந்த வருடத்தில் பங்கு சந்தைகளுக்கு கஷ்டகாலம் தான்.

தொடர்புள்ள இணைப்புகள்: January Barometer | January drop is not a welcome sign

Friday, January 23, 2009

பங்கு சந்தைகள் இன்னும் எத்தனை நாட்களுக்கு தள்ளாடும்?

இன்னும் பல மாதங்களுக்கு!

செப்டம்பர் 15, 2008 அன்று எழுதிய பதிவில் "இந்த கலாட்டாவில் பேங்க் ஆப் அமெரிக்கா வங்கியும் lehman brothers போல திவாலானால் கூட ஆச்சரியப்பட மாட்டேன்." என்று எழுதியிருந்தேன். 46 பில்லியன் டாலர்களுக்கு மெரில் லிஞ்ச் நிறுவனத்தை வாங்கிய பேங்க் ஆஃப் அமெரிக்கா வங்கியின் இன்றைய மொத்த மார்க்கெட் மதிப்பு வெறும் 31 பில்லியன் டாலர்கள் தான். பேங்க் ஆஃப் அமெரிக்காவின் பங்குகள் ஐந்து டாலருக்கு விற்கும் நிலைமை வந்து விட்டது. மெரில் லிஞ்ச் நிறுவனத்தை விற்றவர்கள் புத்திசாலிகள். பல பில்லியன் டாலர்கள் நஷ்டம் வரும் என்பதை முன்பே அறிந்து சாமர்த்தியமாக பேங்க் ஆஃப் அமெரிக்காவின் பங்குதாரர்கள் தலையில் நஷ்டத்தைக் கட்டிவிட்டு போய் விட்டார்கள்.

Bank of America merger with Merrill Lynch

இன்றைய தேதியில் பேங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைமை அதிகாரியின் (Ken Lewis) வேலைக்கே உத்தரவாதம் கிடையாது. தன் பெயர் கெட்டு விட்டதால் ஆத்திரமாகி நேற்று மெரில் லிஞ்சின் ஜான் தெய்னை (John Thain) வேலையை விட்டு பேங்க் ஆஃப் அமெரிக்காவின் கென் லூயிஸ் நீக்கி விட்டார். இது பற்றிய முழு விபரங்கள் இங்கே.

மெரில் லிஞ்சின் ஜான் தெய்ன் போன வருடம் தன் நிறுவனத்தில் அனைவரையும் செலவுகளை குறைக்க சொல்லிவிட்டு தனது ஆபிஸ் ரூமை புதுப்பிப்பதற்கு $800,000 செலவு செய்திருக்கிறார். தரைக்கம்பளத்திற்கு மட்டும் $87,000! Tyco நிறுவனத்தின் முந்தைய தலைமை அதிகாரி Dennis Kozlowski குளியலறை திரைக்கு $6,000 செலவு செய்த கதையாக இருக்கிறது.

தனது நிறுவன mission statementகளில் மட்டும் பங்குதாரர்களுக்காக தான் நாங்கள் உயிர் வாழ்கிறோம் என்று ரீல் சுத்தி விட்டு பங்குதாரர்களின் பணத்தை இப்படியெல்லாம் வீணடிக்கிறார்கள்.

பல அமெரிக்க வங்கிகளின் பங்குகள் அடிமாட்டு விலைக்கு விற்கின்றன. இன்னும் என்னவெல்லாம் பூதம் கிளம்புமோ என்ற பயம் தான். பேங்க் ஆஃப் அமெரிக்கா போன்ற வங்கிகளே அரசாங்கத்திடம் பல பில்லியன் டாலர் bailout கேட்கும் போது இது மிக மிக சிரமமான காலம் தான்.

பேங்க் ஆஃப் அமெரிக்கா, சிட்டி பேங்க் போன்ற வங்கிகள் ஒரு நாள் 50% விழுகின்றன. அடுத்த நாள் 30% ஏறுகின்றன. "வங்கிகள் விலை அதிகமாக கீழே விழும்போது வாங்கி அடுத்த நாள் 10% ஏறினாலே சூப்பராக லாபம் சம்பாதிக்கலாம்" என்று என்னுடன் வேலை பார்க்கும் நண்பர் கடந்த மூன்று நாட்களாக சூதாட்டம் விளையாடுகிறார். இந்த வங்கியின் கடந்த சில தினங்களின் சார்ட்டை இங்கு பார்க்கலாம். பங்குகளின் விலை 30% உயரும் போது செக்ஸியாக தான் இருக்கும். சத்யம் பங்குகள் கூட இன்று 59% உயர்ந்தன. அவற்றை 25 டாலருக்கு வாங்கியவர்களுக்கு தான் அதன் வேதனை புரியும்.

இது போன்ற day trading விளையாட்டுக்கெல்லாம் நான் போவதில்லை. 12 வருடங்களுக்கு முன்னால் இதெல்லாம் விளையாடியிருக்கிறேன். ஒரு நாள் லாபம் வரும். அடுத்த மூன்று நாட்கள் நஷ்டம் வரும். கூட்டி கழித்து பார்த்தால் நஷ்டமும் வேதனையும் தான் மிச்சம்.

இன்று $6க்கு விற்கும் பங்கை வாங்கி அதில் 20% லாபம் கிடைத்து $7.20க்கு விற்றால் சந்தோஷம் தான். ஆனால் 20% நஷ்டம் ஏற்பட்டால் அதை ஈடுகட்டுவதற்கு 20 சதவிகிதத்தை விட கூட லாபம் சம்பாதிக்க வேண்டும்.

உதாரணம்: $80க்கு ஆப்பிள் நிறுவனத்தை வாங்கி பங்குகள் விலை சரிந்து $64க்கு விற்றால் எனக்கு 20% நஷ்டம். திரும்பவும் ஆப்பிள் பங்குகள் $80க்கு வருவதற்கு பங்குகள் 20% விலை உயர்ந்தால் போதாது. 25% விலை உயர்ந்தால் தான் $80க்கு வரும்.

இன்று $6க்கு விற்கும் வங்கிகளின் நீண்டகால பங்குதாரராக இருக்கலாம் என்ற எண்ணம் இருந்தால் அவற்றின் பங்குகளை வாங்கலாம். எந்த வங்கியின் பங்குகளும் என்னிடமில்லை. இன்னும் பல மாதங்களுக்கு வாங்குவதாக எண்ணமுமில்லை.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு அதில் பங்கு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வந்தால் தான் பங்கு சந்தைகள் உயரும். அதற்குள் இன்னும் எத்தனை வங்கிகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களிடம் உதவி கேட்குமோ தெரியவில்லை.

தொடர்புள்ள இணைப்புகள்: Britain Unveils Second Bank Bailout | Volatility still reigns | Caution: Banking Stocks Ahead | Fear Factor

Wednesday, January 07, 2009

பொய் சத்யம்

ராமலிங்க ராஜூ கடைசியில் உண்மையை சொல்லியிருக்கிறார். கடந்த பல வருடங்களாக நிறுவன கணக்கு வழக்குகளில் கோல்மால் செய்து தான் பல மில்லியன் டாலர்களை லாபமாக காட்டியதாக கூறியிருக்கிறார்.இந்தியாவில் பப்ளிக் லிமிடெட் நிறுவனத்தை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் ஏகப்பட்ட கெடுபிடிகள் கொடுத்து தொழில் முனைவோர்களின் நேரத்தை வீணாக்குகிறது. இந்த கெடுபிடிகளால் இந்தியாவின் ஆடிட்டர்கள் கல்லா நிரம்பி வழிந்தது. இவ்வளவு விதிமுறைகள் இருந்தும் பல வருடங்கள் சத்யம் நிறுவனத்தால் எப்படி ஏமாற்ற முடிந்தது என்று தெரியவில்லை. அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் அனைவரும் சமோசா சாப்பிட்டுவிட்டு கையெழுத்து போட்டு விட்டு போய்விட்டார்கள் போலிருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கிய ஆடிட்டர்கள் என்ன செய்தார்கள் என்று புரியவில்லை. ஆன்டர்சன் நிறுவனம் இந்தியாவில் வேறு பெயரில் கடையை திறந்து விட்டது போல.

இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு சீரியஸான பாதிப்பை சத்யம் கொடுத்திருக்கிறது. உலக பொருளாதார வீழ்ச்சியால் இந்திய அவுட்சோர்ஸிங் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று நினைத்திருந்தேன். இதுவரை அப்படி ஒன்றும் நடக்கவில்லை. சத்யம் நிறுவனத்தின் சித்து விளையாட்டுகளால் பின்விளைவுகள் மோசமாக நிறையவே வாய்ப்பிருக்கிறது.

சத்யம் நிறுவனத்தின் பங்குகள் இந்திய சந்தையிலே 40 ரூபாய் லெவலுக்கு போய் விட்டது. நியூயார்க் சந்தையில் (pre-market) 86% வீழ்ந்து $1.26 என்ற விலைக்கு ட்ரேடாகிறது.

நீங்கள் என் கருத்தில் வேறுபடலாம். என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் பங்கு சந்தையில் ட்ரேடாகும் பல நிறுவனங்களில் transparency கிடையாது. வேறு வழியில்லாமல் ராமலிங்க ராஜூ இப்போது உண்மையை சொல்லியிருக்கிறார். இன்னும் பல ராமலிங்க ராஜூக்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களும் உண்மை சொல்லும் நேரம் வரலாம்.

தொடர்புள்ள இணைப்புகள்: Satyam Computer head quits, admits doctoring books | Ramalinga Raju's letter to the board

Monday, January 05, 2009

புது வருடம், புது நம்பிக்கை

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

2009ம் வருடம் 2008 போல கடினமாக இல்லாவிட்டாலும், சுலபமாகவும் இருக்கப்போவதில்லை. வருடத்தின் முதல் ட்ரேடிங் தேதியிலேயே (ஜனவரி 2) அது ISM (Institute of Supply Management Manufacturing Index) புள்ளிவிபரங்களில் தெரிந்து விட்டது. ISM குறியீடு 32.4 புள்ளிக்கு விழுந்து விட்டது. 1980களில் இருந்த நிலைமைக்கு போய் விட்டது.

S&P 500, Nasdaq, Dow போன்ற அனைத்து குறியீடுகளும் பங்கு சந்தை இன்னும் சில நாட்களுக்காவது மேலே போகும் என்று காட்டுகின்றன. இன்று ஒபாமா வாஷிங்க்டனில் தனது பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை அறிவிக்கிறார். ஒபாமா இன்னும் இரண்டு வாரங்களில் பதவி ஏற்பது பங்கு சந்தைக்கு பாஸிட்டிவான விஷயம்.

இந்த நாளில் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் இல்லை. வருடங்கள் மாறினாலும், பொருளாதார பிரச்னைகள் அப்படியே தான் இருக்கின்றன. ஆனாலும் முதலீட்டாளர்களின் மனோபாவம் சிறிது மாறியிருக்கிறது. இனிமேல் பிரச்னைகள் அதிகம் வராது, இன்னும் ஆறு மாதத்தில் விட்டதை திரும்ப பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை பலருக்கு வந்திருக்கிறது. ஒபாமா ஏதாவது மந்திரம் செய்வார் என்று பலர் நம்புகிறார்கள். அதன் பிரதிபலிப்பாக இன்று பங்கு சந்தை உயரலாம். இதே நிலைமை வருடம் முழுதும் நீடிக்குமா என்பது சந்தேகம் தான்.

இந்த வருடமும் ரோலர் கோஸ்டர் வருடமாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஜூன் 2009க்குள் நிலைமை சரியாகி விடும் என்று பலர் நம்புகிறார்கள். அதற்குள் ரஷ்யா, இஸ்ரேல், பாகிஸ்தான், இரான் போன்ற நாட்டின் அதிபர்கள் அரசியல் பிரச்னைகளை தீவிரமாக்கினால், அமெரிக்க அரசாங்கத்துக்கு அதிலேயே கவனம் முழுதும் போய் விடும். அமெரிக்க பொருளாதாரம் சுபிட்சமாக இருக்கும் வரை மற்ற நாடுகளின் விஷயத்தில் பஞ்சாயத்து செய்வது அமெரிக்காவுக்கு சுலபமாக இருந்தது. தன் நாட்டிலேயே பலர் வேலை இழந்து, வீடு இழந்து தவிக்கும் போது இந்த அரசாங்கத்தால் மற்ற நாடுகளின் பிரச்னைகளையும் சமாளிக்க முடியாது. இருந்தாலும் தன் சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் பிற நாடுகளின் அரசியல் பிரச்னைகளில் தீவிரம் காட்டி பொருளாதாரத்தை இன்னும் சொதப்பி விடுவார்களோ என்ற எண்ணமும் இருக்கிறது.

அமெரிக்க வங்கிகள் இன்னும் மாறவில்லை. அரசாங்கம் அந்த வங்கிகளுக்கு கொடுத்த பல பில்லியன் டாலர்களுக்கு கணக்கு கேட்டால் "தெரியாது" என்று அலட்சியமாக கூறுகிறார்கள். மக்கள் பணத்தை இன்னொரு முறை சுவாஹா செய்யப் போகிறார்களா என்று தெரியவில்லை.

இன்றைய தேதியில் ஒரே ஒரு நல்ல விஷயம் வீட்டு கடன் வட்டி விகிதம் குறைந்திருப்பது தான். உங்களுக்கு நல்ல வருமானமும் நிலையான வேலையும் இருந்தால் வீடு வாங்குவதோ அல்லது refinance செய்வதோ நல்லது.

தொடர்புள்ள இணைப்பு: Strategy for 2009

Related Posts Plugin for WordPress, Blogger...