Sunday, December 13, 2009

கலிகாலம் - பகுதி 2

கலிகாலத்தைப்பற்றி பகுதியாக பகுதியாக எழுதும் காலம் வந்தாலே, நாம் கலிகாலத்தில் வாழ்வது உறுதியாகி விட்டது.

இந்தியாவில் "வலைத்தளங்களில் வேலை வாய்ப்புகள் (Online Jobs)" தில்லுமுல்லுகள் பரவிக்கிடக்கின்றன. இவற்றில் rupeemail போன்ற தளங்களும் அடங்கும். ருபிமெயில் தளத்திலிருந்து பணம் சம்பாதிப்பதற்காக பூஜா என்பவர் செய்த வேலையை இங்கு பாருங்கள். இது நிஜமாகவே பூஜா என்ற பெண்மணியா அல்லது எந்த பிராடாவது செய்த தில்லுமுல்லா என்று தெரியாது.

தொடர்புள்ள இணைப்பு: Rupeemail post 1 | Rupeemail post 2

Thursday, November 26, 2009

அள்ளிக்கொடுக்கும் கறுப்பு வெள்ளி

அமெரிக்காவில் இன்று நன்றி கூறும் நாள். நண்பர்கள், எதிரிகள் அனைவருக்கும் நன்றி!

நாளை கறுப்பு வெள்ளி. நீங்கள் அமெரிக்காவில் வாழ்பவராக இருந்தால் உங்கள் கிரடிட் கார்டுகள் தேயும்வரை அவற்றை நாளை கொடுமைப்படுத்தலாம். வலைத்தளத்தில் எங்கு திரும்பினாலும் நல்ல டீல்கள் இருக்கிறது. எனது சக எழுத்தாளர்கள் எழுதிய கீழ்க்கண்ட வலைப்பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Irresistible Black Friday Deals for Laptops, LCD TVs


Black Friday Deals: They are Worth Your Time

Sunday, November 22, 2009

உதடில்லை, உதடில்லை, மந்திரிச்ச தகடு...!

தமிழில் "நான் கடவுள்" படத்திற்கு பிறகு திரும்ப திரும்ப கேட்குமளவுக்கு பாட்டுகள் வரவில்லை. இன்று வேட்டைக்காரன் (பழைய படத்தின் பெயரில் புதிய படம்) படத்திலிருந்து "கரிகாலன் காலைப் போல" பாடலை பத்து முறையாவது கேட்டு விட்டேன். பாடலை பாடியவர்கள் அனுபவித்து பாடியிருக்கிறார்கள். விஜய் ஆன்டனியின் குத்துப்பாட்டுகள் பொதுவாக இரைச்சலாக இருக்கும். கரிகாலன் பாடலில் மொத்த குழுவும் கலக்கியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமா கவிஞர்களின் கற்பனைக்கு அளவேயில்லை. காதலன் காதலின் உதடை வர்ணிக்கும் போது காதலி அவள் உதடை "மந்திரிச்ச தகடு" என்கிறாள். (Very true!) ஒரு சில இடங்களில் இரட்டை அர்த்தமிருந்தாலும் ("இது தேகமில்லை, தீப்பிடிச்ச மேகம்") பாடலில் காந்தம் இருக்கிறது. பாடகர்களுக்கு (சங்கீதா ராஜேஸ்வரன், சுர்ஜித்?) ஒளிமயமான எதிர்காலமிருக்கிறது.

Well, தமிழ்நிதிக்கும் மந்திரிச்ச தகடுக்கும் என்ன சம்பந்தம்? As usual, ஒன்றுமில்லை. எப்போதும் பங்கு சந்தை பற்றியெழுதி போரடித்து விட்டது!

Sunday, October 18, 2009

என்ன கொடுமை சார் இது?Search Engine Marketing மனிதர்களுக்கு பித்து பிடித்து விட்டது போல. எந்த கீ-வேர்டுகளுக்கு எந்த விளம்பரம் கொடுப்பது என்று விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.

Thursday, October 08, 2009

தங்கமே தங்கம் - Update

தமிழ் நிதியை எழுத ஆரம்பித்து பல வருடங்களாகி விட்டன. Time flies! டிசம்பர் 2005-ல் "தங்கமே தங்கம்" என்று தங்கத்தைப் பற்றி பதிவு எழுதியிருந்தேன். கடந்த நான்கு வருடங்களில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இரு மடங்காகியிருக்கிறது!

டிசம்பர் 2005-ல் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $550. இன்று $1054. டாலர் மதிப்பு குறைவதால் இன்று வரலாறு காணாத விலைக்கு தங்கம் போய் விட்டது. டிசம்பர் 2005-ல் தங்கத்தைப் பற்றி எழுதும் போது அதன் விலை இரு மடங்காகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நல்ல லாபம் வரும் என்று எதிர்பார்த்தேன். தங்க மழையே பெய்திருக்கிறது!$1050 per ounce விலையளவில் டெக்னிக்கல் சார்ட்டுகளில் தங்கத்துக்கு கண்டம் இருந்தது. $1050 விலையை தங்கம் தாண்டாது என்று பல டெக்னிக்கல் நிபுணர்கள் நினைத்தார்கள். $1050 விலையை தாண்டி விட்டதால் தங்கத்தின் வேகம் தணியாது போல தெரிகிறது.

Related Link: Gold going to $2,000 an ounce?!

Saturday, September 26, 2009

இந்தியர்களின் வெளிநாட்டுத் திருமணங்கள்

நம் ஊரில் பல கோடிகளை செலவு செய்து திருமணம் செய்து பார்த்து சலித்துப் போய்விட்டதால், சில பணக்கார கணவான்கள் தங்கள் வீட்டு திருமணங்களை வெளி நாட்டில் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சுனில் முத்தா தன் மகன் திருமணத்தை சீனாவில் உள்ள மெக்காவ் MGM ஹோட்டலில் பிரமாண்டமாக நடத்தியிருக்கிறார். விருந்தாளிகள் போவதற்கு தனி விமானங்கள். புரோகிதரிலிருந்து சமையல்காரர்கள் வரை இந்தியாவிலிருந்து கொண்டு போயிருக்கிறார்கள். மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு யானை கிடைக்காததால், $14,000 செலவு செய்து குதிரையை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். திருமணத்துக்கான மொத்த செலவு வெறும் 23 கோடி ரூபாய் தான்.

இந்த வருடத்தில் மட்டும் பதினான்கு பணக்கார இந்தியர்களின் திருமணங்கள் வெளிநாட்டில் நடத்தப்பட்டிருக்கின்றன. இவர்களில் பெரும்பாலோர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்கள். No wonder.

Related Link: Macau Travel Talk

Saturday, September 19, 2009

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை மீண்டும் உயிர் பெற்று வருகின்றது. வழக்கம் போல ஆசிய சந்தைகள் அதிவேகத்தில் மேலே ஏறி இப்போது ஓரளவுக்கு சமநிலையை கண்டிருக்கிறது. அமெரிக்க சந்தை இன்னும் சில மாதங்களுக்காவது லாபத்தைக் கொடுக்கும். நல்ல பங்குகளை வாங்கி covered call எழுதினாலே கணிசமான தொகையை சம்பாதிக்கலாம்.

கடந்த பல வாரங்களில் AAPL, GS, GE, MSFT, ISRG பங்குகளை/ஆப்ஷன்களை வாங்கினேன். பல மாதங்களுக்கு பிறகு என் கணக்கில் லாபம் தெரிகிறது. Emerging markets பரஸ்பர நிதிகள் கூட உற்சாகத்துடன் காற்றை சுவாசிக்க ஆரம்பித்திருக்கின்றது. டிசம்பர் வரைக்குமாவது இந்த நிலைமை நீடித்தால் பரவாயில்லை.

அமெரிக்க மத்திய வங்கி சேர்மன் "பொருளாதார சரிவு பெரும்பாலும் முடிந்து விட்டது" என்று சொல்லியிருக்கிறார். (தொடர்புள்ள பதிவு: Recession ended in July) அவர் அப்படி சொன்னதே பொருளாதார சரிவு முடிந்து விட்டதற்கான அறிகுறி தான். வேலையில்லா திண்டாட்டமும் குறைந்து விட்டால் பங்கு சந்தைகள் அதிக பலம் பெறும்.

Tuesday, September 01, 2009

V வடிவமா அல்லது W வடிவமா அல்லது L வடிவமா?

பொருளாதார சரிவிலிருந்து அமெரிக்கா மீண்டு வருவது போல தெரிகிறது. இந்த சரிவு V வடிவத்தில் மீண்டு வரும் என்று சிலர் கணித்திருந்தார்கள் (பொருளாதாரம் வேகமாக விழுந்து அதே வேகத்தில் திரும்பவும் மேலே வரும் - ஆங்கில எழுத்து "V" வடிவத்தில்). "அதற்கெல்லாம் சான்ஸே இல்லை, பொருளாதாரம் இரண்டு முறை பலத்த அடி பட்டு, W வடிவத்தில் இரண்டு முறை recession வந்த பிறகு தான், பொருளாதாரம் சரியாகும்" என்று பல நிபுணர்கள் கணித்தார்கள்.

ரூபினி போன்ற மிக சிறந்த வல்லுனர்கள் "V வடிவமும் கிடையாது, W வடிவமும் கிடையாது, பொருளாதாரம் L வடிவத்தில் நாசமா போகும்" என்று சொன்னார்கள். பொருளாதாரம் கீழே விழுந்து அப்படியே பல மாதங்கள் விழுந்து கிடக்கும் என்பதால் "L".

சமீபத்தில் ECRI-ல் இருக்கும் நம்மூர் லட்சுமணன் "பொருளாதாரம் மீண்டு வருகிறது. W வடிவ பொருளாதார சரிவுக்கெல்லாம் சான்ஸே இல்லை." என்று நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்.

V, W, L -- இவற்றில் எந்த வடிவத்தில் பொருளாதாரம் மீண்டு வரும் என்ற சர்ச்சைகளுக்கிடையே சில நாட்களுக்கும் முன்னால் First Pacific Advisors-ன் தலைமை அதிகாரி ராபர்ட் "V வடிவமாவது, W வடிவமாவது, அதையெல்லாம் நம்பாதீர்கள். பொருளாதாரம் caterpillar (கம்பளிப் பூச்சி) வடிவத்தில் மேலேயும் கீழேயுமாக பல வருடங்களாக இருக்கப் போகிறது" என்று பயமுறுத்திருகிறார்.

இவர்களெல்லாம் பல மாதிரியாக "V, W, L, Caterpillar" என்று பல வடிவங்களை கணித்து நம்மை கேள்விக்குறி வடிவத்தில் மாற்றிவிட்டார்கள்.

Sunday, August 09, 2009

அமெரிக்காவின் வேலையில்லா திண்டாட்டம்

பதினைந்து மாதங்கள் கழித்து அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் குறைவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஜூலை மாதத்தில் 247,000 ஊழியர்கள் வேலையிழந்திருக்கிறார்கள். 275,000 ஊழியர்கள் வேலை இழக்கலாம் என்று நிபுணர்கள் கணித்திருந்தார்கள். வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தால் தான் பொருளாதாரம் மீண்டு வரும். வேலையில்லா திண்டாட்டம் ஓரளவு குறைந்து வருவது நல்ல செய்தி. இது நீடிக்குமா என்று தெரியாது. ஜூலை மாதத்துக்கான நம்பரை எந்த அளவுக்கு நம்புவது என்றும் தெரியாது, ஏனென்றால் வேலை தேடும் பலர் பொறுமை இழந்து வேலை தேடுவதையே விட்டு விட்டார்கள். அப்படிப்பட்ட "discouraged job-seekers"களின் எண்ணிக்கையை சேர்த்தால் வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இந்த செய்தியால் கடந்த வெள்ளியன்று டோ ஜோன்ஸ் 113 புள்ளிகள் உயர்ந்தது. இன்னும் சில நாட்களுக்கு இந்த momentum இருக்கும். பிறகு ஏதாவது ஒரு பெரிய நிறுவனம் "இன்னும் லாபம் சரியாக வரவில்லை. பொருளாதார சரிவு தான் காரணம்" என்று குண்டை தூக்கிப் போட்டால் மறுபடியும் சந்தை விழும். இவர்களுக்கு இதே பிழைப்பாகி விட்டது!

Berkshire Hathaway நிறுவனம் கடந்த காலாண்டில் 3.3 பில்லியன் டாலர்கள் லாபம் சம்பாதித்திருக்கிறது. இதற்கு முந்தைய காலாண்டில் 1.5 பில்லியன் டாலர்கள் நஷ்டம் அடைந்திருந்தது. மற்ற நிறுவனங்களை விட Berkshire & General Electric நிறுவனங்களின் லாப/நஷ்டங்கள் அமெரிக்க பொருளாதாரத்தின் உண்மை நிலைமையை பிரதிபலிக்கும். (Disclaimer: இந்த இரு நிறுவனங்களின் பங்குகளும் என்னிடம் பல வருடங்களிருக்கிறது)

அமெரிக்க பங்கு சந்தைகள் மற்றும் உலக பங்கு சந்தைகளின் கஷ்ட காலம் முடிந்தது போல தோன்றுகிறது. இந்திய பங்கு சந்தையின் நிலவரம் வேறு, இந்த வருடத்தில் கணிசமான லாபம் கண்ட இந்திய சந்தை இன்னும் அதிகமாக உயருமா என்பது anybody's guess. இந்திய பங்கு சந்தை உயர்வதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். Political Manipulation ஒரு முக்கிய காரணம். அதைப்பற்றியே பல பதிவுகள் எழுதலாம்.

இந்திய பங்கு சந்தைகள் மட்டுமல்லாது பொதுவாக அனைத்து emerging market சந்தைகளுமே (பிரேசில், சீனா & ரஷ்யா) சமீப வாரங்களில் தங்களது தள்ளாட்டத்தை நிறுத்தி ஓரளவுக்கு நிலை கொண்டிருக்கிறது. இந்த நிலைமை இன்னும் தொடர்வது அமெரிக்காவின் கையில் இருக்கிறது, குறிப்பாக அமெரிக்காவில் வேலை இழப்பவர்களின் எண்ணிக்கையை பொறுத்திருக்கிறது.

தொடர்புள்ள பதிவு: July Jobs Data Beats Expectations

Saturday, April 18, 2009

சாமியார் சிலையை புதைத்தால் வீடு விற்குமா?

அமெரிக்காவில் வீட்டை விற்பவர்கள் வீட்டை விற்பதற்கு எது வேண்டுமானாலும் செய்ய தயாராகி வருகின்றனர். செயின்ட் ஜோசப் சிலையை வீட்டின் முகப்புறத்தில் புதைத்தால் வீடு சீக்கிரம் விற்று விடும் என்று சிலர் புரளி கிளப்பி விட்டதால் இன்று செயின்ட் ஜோசப்பின் சிலைகளுக்கு demand அதிகமாகி விட்டது. Stjosephstatue.com என்ற வலைத்தளமும் உருவாகி விட்டது.அமெரிக்கர்களுக்கு கூட மூட நம்பிக்கை உள்ளதா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். மனதில் பயம் வரும் போது மனம் எதையும் நம்பும்!

தொடர்புள்ள இணைப்பு: Home sellers seek help from saint

கலிகாலம்

அமெரிக்காவில் சிறு பெண்களையும் பையன்களையும் கடத்தி கற்பழிக்கும் கொடுமை பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது. இது வரை இந்த கொடுமைகளை செய்தவர்கள் ஆண்கள். These guys were sick bastards. இவர்களின் வரிசையில் ஒரு பெண்ணும் சேர்ந்திருக்கிறாள். தன் எட்டு வயது குழந்தையின் தோழியை கொலை செய்யும் அளவுக்கு இந்த பெண்மணியின் பித்தம் கலங்கி விட்டது.

இனிமேல் பெற்றோர்கள் யாருக்கெல்லாம் பயப்பட வேண்டும் என்று தெரியவில்லை.

தொடர்புள்ள இணைப்புகள்: Private funeral for 8 year old girl found in suitcase | Mercury news editorial

Tuesday, April 14, 2009

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தமிழ் புத்தாண்டு/சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்!

சில தினங்களுக்கு முன்னால் வெல்ஸ் ஃபார்கோ வங்கி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. நேற்று Goldman Sachs இந்த வருட முதல் காலாண்டில் நல்ல லாபம் கிடைத்ததாக கூறியது. இன்று அதன் பங்குகள் கீழே விழுந்தாலும் மற்ற வங்கிகளின் பங்குகளை வாங்குவதை விட கோல்ட்மேன் பங்குகளை வாங்குவது பெட்டராக தெரிகிறது.

சூதாட்டத்தில் பிரியமிருந்தால், சிட்டிபேங்க் பங்குகளை இன்று $4க்கு வாங்கி வரும் வியாழன் சந்தை மூடும் முன்பு விற்றால் லாபம் பார்க்கலாம். சிட்டிபேங்க் ஏப்ரல் 17 அன்று தன் லாப கணக்குகளை அறிவிக்கிறது.

இன்னும் சில மாதங்களுக்கு நீண்ட கால முதலீட்டு தத்துவத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு தான் சந்தையில் விளையாட முடியும் போலிருக்கிறது. அடுத்த வாரமே நிலைமை தலைகீழாக மாறலாம்.

Tuesday, April 07, 2009

நீதிபதியை துரத்திப் பிடித்த நீதி

77 டாலர் அபராதத்தை தவிர்க்க ஒரு பொய் சொல்லி இன்று இரண்டு வருடம் சிறை தண்டணை அனுபவிக்கிறார் மார்கஸ். இவர் ஆஸ்திரேலியாவில் மத்திய நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்தவர். ஆஸ்திரேலிய மனித உரிமை கழகத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். நேஷனல் ட்ரஸ்ட் ஆப் ஆஸ்திரேலியா இவரை "தேசத்தின் பொக்கிஷம்" என்று புகழ்ந்திருக்கிறது.

ஒரு சிறு தவறால் வாழ்க்கையே தலைகீழாக போவதற்கு திரு. மார்கஸ் ஒரு உதாரணம். இவர் தனது காரில் 10 கி.மீ. அதிக வேகத்தில் போனதை ட்ராபிக் கேமரா புகைப்படம் எடுத்து விட்டது. தனது தவறை ஒத்துக் கொண்டு 77 டாலர் அபராதம் கட்டியிருக்கலாம். அதில்லாமல், தனது காரை தோழி ஒருவர் அன்று எடுத்துக் கொண்டு போனதாக பொய் சொல்லி விட்டார். இதைப்பற்றி ஒரு பத்திரிகை நிருபர் விசாரிக்கும் போது அந்த தோழி மூன்று வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டதாக தெரிய வந்தது. அங்கே ஆரம்பித்த சர்ச்சை முன்னாள் நீதிபதியை இன்னாள் சிறைக்கைதியாக மாற்றி விட்டது.

தமிழ்நாட்டில் பல கொலைகள் செய்தவர்களுக்கு கூட மாலையும் மரியாதையும் உயர்ந்த பதவிகளும் தேடி வருகின்றன. ஒரு பொய் சொன்னதால் முன்னாள் நீதிபதியாக இருந்தாலும் பரவாயில்லை என்று சிறைத் தண்டனை கொடுத்திருக்கிறார்கள் ஆஸ்திரேலியாவில். நீதி தேவதை உலகத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் செல்கிறார் போலிருக்கிறது.

தொடர்புள்ள இணைப்பு: Jail completes Marcus Einfeld's fall

Sunday, March 29, 2009

சென்னை ரியல் எஸ்டேட்

என்ன மாயமோ தெரியவில்லை, சென்னை ரியல் எஸ்டேட் பெரிதாக ஒன்றும் அடிபட வில்லை. மும்பை, பெங்களூரில் விலை சிறிதளவு குறைந்த போதிலும் சென்னையில் ஒன்றும் பெரிய பாதிப்பு தெரியவில்லை. சென்னையில் சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் இது இனிப்பான செய்தியாக இருந்தாலும், correction இல்லாமல் விலை ஏறிக் கொண்டே இருந்தால் பிற்காலத்தில் எல்லோருக்கும் பிரச்னை தான்.

இந்த பதிவை எழுதுவதற்கு தேவையான விபரங்களை கொடுத்த ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் உள்ள நண்பர்களுக்கு நன்றி. மும்பை, பெங்களூரில் கூட crash போன்ற எதுவும் நடக்கவில்லை. விலை ஓரளவுக்கு குறைந்திருக்கிறது. ஆனால் சென்னையில் அதற்கான அறிகுறியே தெரியவில்லை.

உதாரணம்: சென்னை வளசரவாக்கத்தில் ஒரு கிரவுண்டு நிலம் 80 லட்ச ரூபாய்க்கு விற்கிறது. அந்த நிலத்தின் சொந்தக்காரர் என் நண்பரின் நண்பர். அவர் 1982ல் காரைக்குடியிலிருந்து குடி பெயர்ந்து சென்னையில் ரியல் எஸ்டேட் தரகர் வியாபாரம் ஆரம்பித்தார். அவரின் இன்றைய சொத்து மதிப்பு 200 கோடிக்கும் மேல். (இந்தியாவில் லட்சத்துக்கெல்லாம் மதிப்பே இல்லை). சென்னையில் வீட்டு விலைகள் ஏன் கணிசமாக குறையவில்லை என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் "சிட்டிக்குள்ள ஏழையா சார் வீடு வைச்சிருக்கான்? எல்லாம் பெரும் பணக்காரங்க சார். ஒன்றரை கோடிக்கு வாங்கின அபார்ட்மென்டை ஒரு கோடிக்கு விப்பானா? வீடு சும்மா பூட்டி கிடந்தாலும் விக்க மாட்டாங்க..."

பெசன்ட் நகரில் ஒரு கிரவுண்டு 4 கோடிக்கு போகிறதாம். அடையாறு L.B. ரோடு அருகில் புதிதாக கட்டப்படவிருக்கும் அபார்ட்மென்ட்கள் சதுர அடிக்கு 17,000 ரூபாய்க்கு விற்கப் போவதாக ஆர்கிடெக்ட் நண்பர் கூறுகிறார். இன்னும் பூமி பூஜையே போடவில்லை, ஆனாலும் 17,000 ரூபாய் விலைக்கு ஒப்புக்கொண்டு பலர் புக்கிங் செய்திருக்கிறார்களாம். மந்தைவெளியில் நிலம் வாங்கிய ஒருவர் அந்த இடத்தின் வெளியே நடைபாதையில் பழக்கடை போட்டிருந்தவருக்கு பத்து லட்ச ரூபாய் பகடி கொடுத்து அவரை காலி செய்திருக்கிறார்கள். அவர் இனிமேல் பிளாட்பாரத்தில் பழக்கடை போட வேண்டிய அவசியமில்லை. நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அதை விட்டு போவதற்கு அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாக போய் விட்டது.

"இரண்டு கோடி கொடுத்து இந்த இடத்தை வாங்குகிறார்கள். நாம் கொஞ்சம் கேட்டால் கொடுக்க மாட்டார்களா?" என்ற எண்ணம் தான் பழக்கடை வியாபாரியை தூண்டுகிறது. "பத்து லட்சம் போனால் போகிறது. இந்த இடத்தின் வாசலிலே பழக்கடை இருந்தால் நம் கட்டிடத்தின் லுக் போய் விடும். அபார்மென்டுகளை வாங்கப்போகும் நபர்களிடம் பத்து லட்சத்தை வசூல் செய்து விடலாம்" என்ற எண்ணத்தில் நிலத்தை வாங்கும் நிறுவனம் பணத்தை கொடுக்கிறது. இந்த நாடகத்தில் கடைசியில் நாமம் அபார்ட்மென்டுகளை வாங்குபவர்களுக்கு தான்.

ஐ.டி. பூம் என்ற போர்வையில் கடந்த பல வருடங்களாக நம் ஊர்களில் ரியல் எஸ்டேட் செழித்து வளர்கிறது. ஐ.டி. வளர்ச்சியானால் கோடீஸ்வரரான ஒவ்வொரு ஐ.டி. ஊழியருக்கும் இணையாக நூறு ரியல் எஸ்டேட் வியாபாரிகள் பெருத்த கோடீஸ்வரர்களாகி இருக்கிறார்கள். விலை ஏற்றத்துக்கு அடிப்படை காரணம் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட் தரகர்களின் பேராசையும் துர்போதனையும் தான் காரணம். "இந்த இடத்தை ஒரு கோடிக்கு வாங்குங்க சார், ஆறே மாதத்தில் ஒன்றரை கோடிக்கு விற்கலாம்" என்று தரகர்கள் ஆசை காண்பித்து பலர் வாங்கியிருக்கிறார்கள். தரகர்கள் சொன்னபடியே ஆறு மாதங்களில் 50 சதவிகிதம் விலையும் கூடியிருக்கிறது. ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் தரகர்கள் இதே போல திரும்பவும் வசனம் பேசி பேசி, இன்று விலை எங்கேயோ போய் நிற்கிறது.

இவையெல்லாம் தவிர எந்த இடத்தில் விலை ஏற வேண்டும் என்பதை நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தீர்மானிக்கிறார்கள். OMR ரோட்டில் ஐ.டி. நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு நிலங்களை ஒதுக்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பாக அந்த ரோட்டில் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் நிலங்களை வாங்கி வைத்தார்கள் என்று ஒரு நண்பர் சொல்கிறார். அப்படி வாங்கியவர்கள் பல நூறு கோடிகளை லாபம் பார்த்திருக்கலாம். இதுவும் ஒரு insider trading தான். வளர்ந்த நாடுகளில் இது பெரும் குற்றம். வளரும் நாடுகளில் இது "புத்திசாலித்தனம்".

பல வருடங்களுக்கு முன்னால் வந்த போலீஸ் அகாடமி (6) படம் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த படத்தில் நகர மேயர் தன் நகரத்தின் ஒரு பகுதியில் திருடர்களை நடமாட விட்டு ரியல் எஸ்டேட் விலைகளை குறைத்து பல நிலங்களை மிக குறைந்த விலையில் வாங்க முயற்சிப்பார். நம் ஊர் அரசியல்வாதிகளுக்கு அந்த கஷ்டமெல்லாம் கிடையாது. எந்த இடத்தில் புராஜெக்ட் போட்டால் எந்தெந்த இடங்களில் விலை கூடும் என்பதை முன்பே தீர்மானித்து நிலங்களை பினாமியின் பெயர்களில் வாங்கி போடுகிறார்கள். நாளை என்ன நடக்கும் என்று தீர்மானிக்கும் இவர்கள் உண்மையிலேயே ஒரு வகையில் கடவுள்கள் தான்! இதனால் தான் அவர்களின் பக்தர்கள் வெறி கலந்த பக்தியில் கம்போடும் கத்தியோடும் திரிகிறார்கள்.

சென்னையில் பல முக்கிய இடங்களில் கட்டிடங்களின்/நிலங்களின் சொந்தக்காரர்கள் தமிழகத்தின் இரு பெருங்கட்சிகளின் மூத்த அரசியல்வாதிகளும் அவர்கள் வாரிசுகளும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ரியல் எஸ்டேட் விலைகள் குறைவதற்கு விரும்ப மாட்டார்கள். இன்றைய தேதியில் லஞ்ச பணத்தை பதுக்குவதற்கு சரியான இடம் ரியல் எஸ்டேட் என்று எனக்கு தெரிந்த பட்சி சேதி சொல்கிறது. தமிழகத்தின் தெற்கு பகுதியில் ஒரு வில்லங்கமான அரசியல்வாதி வில்லங்கமுள்ள பல நிலங்களை அடி மாட்டு விலைக்கு மிரட்டி வாங்குவதாக தகவல்.

அமைச்சர்களின் பாதையில் அதிகாரிகளும் போகிறார்கள். எந்த இடத்தில் நான்கு வழி பாதை வரப் போகிறது, எந்த இடத்தில் மேம்பாலம் வரும், எந்த இடத்தில் பைபாஸ் வரும் என்று தெரிந்த அதிகாரிகள் அவற்றை அதிகார பூர்வமாக அறிவிக்கும் முன்பே தன் பினாமிகளை வைத்து அந்த இடங்களில் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி போடுவது சகஜமாகி போய் விட்டது. திருச்சியில் என் குடும்ப நண்பர் சில அதிகாரிகளை தன் கையில் வைத்துக் கொண்டு முக்கிய சாலைகள் சாதாரண சாலைகளாக இருக்கும் போதே அந்த சாலைகளின் இரு பக்கங்களிலும் நிலங்களை வாங்கி விற்று இன்று சில நூறு கோடிகளுக்கு அதிபதி.

அவர் +2 வரை படித்தவர். என்னை போன்ற ஆட்கள் கஷ்டப்பட்டு பத்து வருடம் கல்லூரியில் படித்து ரிடையராகும் வரை அமெரிக்காவில் வேலை செய்தாலும் அவரின் சொத்து மதிப்பில் 10% சம்பாதித்தாலே அதிசயம்.

ரியல் எஸ்டேட் ஏறிக்கொண்டே போனால் தான் அரசியல்வாதிகளுக்கு நல்லது. இந்த நிலைமையில் ரியல் எஸ்டேட் எப்படி affordable நிலைமைக்கு வரும்? "இந்தியாவில் ரியல் எஸ்டேட் ஏன் தாறுமாறாக ஏறுகிறது" என்று இரண்டு வருடங்களுக்கு முன்னால் இந்திய பொருளாதார நிபுணர்களின் கேட்ட போது, அவர்கள் சொன்ன காரணம் "இந்தியாவில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றது போல நகரங்களில் இட வசதி இல்லை. அதனால் இருக்கின்ற இடங்களின் விலை மேலே உயர்ந்து கொண்டு தான் இருக்கும்".

அதில் ஓரளவு லாஜிக் இருந்தாலும், நடைமுறைக்கு ஒத்து வராத விவாதம். நகரத்தின் முக்கிய இடங்களில் இரண்டு பெட்ரூம் அபார்ட்மென்ட் 2004-ல் 25 லட்சத்துக்கு விற்றது. இன்று 60 லட்சத்திலிருந்து 1.5 கோடி வரை போகிறது. 2004-ல் ஒருவர் மாதம் 30,000 சம்பளம் வாங்கினார். அவரால் 25 லட்சத்துக்கு வீடு வாங்க முடிந்தது. இன்று அவர் 60 லட்சத்துக்கு வீடு வாங்க வேண்டுமென்றால் அவர் குறைந்தது மாதம் 72,000 சம்பாதிக்க வேண்டும். இது மிகவும் எளிமையாக்கப்பட்ட உதாரணம். அவருக்கு கடந்த ஐந்து வருடங்களில் குடும்பம் பெரிதாகி இருக்கலாம், மருத்துவமனை பில்கள் எகிறியிருக்கலாம், பக்கத்து வீட்டுக்காரர் வைத்திருப்பதால் தானும் ஆசைப்பட்டு ஹோண்டா சிவிக் காரை கடனில் வாங்கியிருக்கலாம்... இது போல அவரின் கடன்கள் கூடியிருக்கலாம். அது போன்ற கடன்கள் எதுவும் இல்லை என்று கற்பனை செய்து கொண்டாலும், அவர் குறைந்தது 72,000 சம்பாதித்தால் தான் அவரால் 60 லட்ச ரூபாய் வீட்டுக்கான, 48 லட்ச ரூபாய் கடனை மாதா மாதம் அடைக்க முடியும். (அவர் 20% down-payment கட்டியிருந்தால்).

2004-ல் 30,000 ரூபாய் சம்பளம், இன்று 72,000 ரூபாய் சம்பளம் என்று வைத்துக் கொண்டால், கடந்த ஐந்து வருடங்களில் 140% வருமானம் உயர்ந்தவர்களால் தான் வீட்டு விலையேற்றத்தை சமாளிக்க முடியும். நம்மில் எத்தனை பேருக்கு ஐந்து வருடங்களில் 140% வருமான உயர்வு கிடைத்திருக்கிறது?

வீடு வாங்குவதை விடுங்கள். சென்னை மாநகரத்தில் வீடு/அபார்ட்மென்டுகளில் வாடகைக்கு இருப்பவர்களின் கஷ்டம் இன்னும் கொடுமை. வருடா வருடம் 10% வாடகை ஏற்றுகிறார்கள். முக்கிய இடங்களில் இரண்டு பெட்ரூம் அபார்ட்மென்ட் 20,000+ ரூபாய் வாடகைக்கு போகிறது. இந்த 20,000த்தில் 10,000 வெள்ளை + 10,000 கருப்பு. ரியல் எஸ்டேட்டில் புழங்கும் கருப்பு பணத்தை எடுத்தாலே இந்தியாவின் பாதி கடனை அடைத்து விடலாம். 20,000 ரூபாய் வாடகை அபார்ட்மென்டில் கூட கூரை ஒழுகுகின்றது, பாத்ரூம் முழுவதும் கரப்பான் பூச்சி என்று நண்பர்கள் சொல்கிறார்கள். வீடை காலி செய்யும் போது வீட்டு உரிமையாளர் டெபாசிட்டை ஒழுங்காக திருப்பி கொடுத்தால் தான் உண்டு. ரியல் எஸ்டேட் சட்டங்கள் குடியிருப்பவர்களுக்கு சாதகமாக இருந்தாலும், நம் ஊர் நீதிமன்றங்களில் நீதி கிடைப்பதற்கு சில வருடங்களாகி விடும்.

ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்களின் ஆசைக்கு அளவேயில்லை. அவர்கள் கேட்கும் விலையை கொடுக்க ஐ.டி. ஊழியர்கள் பலர் ரெடியாக இருக்கிறார்கள். ஐ.டி.யில் இல்லாத மிடில் கிளாஸ் நண்பர்களிடம் பேசும் போது "ஐ.டி.காரனுங்க தான் இந்த நாட்டையே நாசம் செய்து விட்டார்கள்" என்று கொதிக்கிறார்கள். மைலாப்பூரில் அலுவலகம் இருந்தாலும், அம்பத்தூரில் வீடை வாடகைக்கு எடுக்க வேண்டிய கோபம் அவர்களுக்கு. வீட்டு விலைகள் தாறுமாறாக ஏறியதற்கு பலர் காரணம். ஒரு team effort-ஆக நடத்தியிருக்கிறார்கள். அந்த டீமில் இருப்பவர்கள் பழுத்த அரசியல்வாதிகள் மற்றும் பெரும் பணக்காரர்கள். எதிர் முகாமில் இருப்பவர்கள் மிடில் கிளாஸ் மற்றும் ஏழைகள். இந்தியாவில் யார் ஜெயிப்பார்கள் என்பதை கடந்த காலம் தெளிவாக சொல்கிறது. இதற்கு மேல் நான் என்ன சொல்ல?!

தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணி புரியும் பலர் விலையேற்றத்தில் கொதித்து போய் பேட்டி கொடுக்கிறார்கள். போன வருடம் வீட்டு வாடகை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். நீயா நானா டி.வி.ஷோவில் வாடகைக்கு குடியிருப்பவர்களும் வீட்டு சொந்தக்காரர்களும் மல்யுத்தம் நடத்தினார்கள். என்ன நடந்தாலும், கீழ்க்கண்டவற்றில் ஏதாவது ஒன்று நடந்தாலொழிய வீட்டு விலைகள் அடங்காது.

1. அரசாங்கம் வீட்டு விலைகள் தாறுமாறாக ஏறுவதை தடுக்க சட்டங்கள் கொண்டு வர வேண்டும். வீட்டு வாடகைகள் அநியாயமாக ஏறுவதையும் தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வந்து அது சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைவில் விசாரிக்க வேண்டும்.

2. ரியல் எஸ்டேட் வியாபாரிகள், தரகர்கள் மனம் திருந்தி நியாய விலையில் நிலம்/கட்டிடங்களை விற்க வேண்டும்.

3. பெரிய நகரங்களை சுற்றி துணை நகரங்களை உருவாக்க வேண்டும். நல்ல பள்ளிகள், வேலைகள் கிடைத்தால் மக்கள் நகரத்தின் முக்கிய பகுதிகளில் மட்டும் வசிக்க ஆசைப்பட போவதில்லை. துணை நகரங்களில் அனைத்து வசதிகளும் கிடைத்தால் பலர் நகரத்தை விட்டு துணை நகரங்களுக்கு போகலாம். நகரத்தின் முக்கிய பகுதிகளில் வசிக்க ஆர்வம் அதிகமிருப்பதற்கு முக்கிய காரணம் தரமான பள்ளிகள். நல்ல பள்ளிகளையும், நிறுவனங்களையும் துணை நகரங்களில் உருவாக்கினாலே போதும்.

4. மக்கள் புரட்சி

மேலே கண்டதில் #1 நடக்க சான்ஸ் குறைவு. #2 நடக்க வாய்ப்பேயில்லை. #3 நடக்க ஓரளவு வாய்ப்பிருக்கிறது. #4 நடக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.

"மக்கள் புரட்சியாவது, மண்ணாவது" என்று நினைப்பவர்கள் சமீபத்தில் AIG அதிகாரிகளின் வீட்டில் நடந்த சம்பவங்களை படித்து பாருங்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் பஸ்ஸில் ஏறி பேராசை பிடித்த அதிகாரிகளின் வீட்டுக்கு சென்று கொடி காண்பித்து தங்களின் அதிருப்தியை காண்பித்தார்கள். இந்தியாவில் நம் மக்களின் கோபம் வெளிப்படும் போது எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

இன்றைய நிலைமையில், சென்னையில் ரியல் எஸ்டேட் பெரிதாக குறைய வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. புறநகர் பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களில் 30% விலை குறைந்ததாக ரியல் எஸ்டேட் நண்பர்கள் சொல்கிறார்கள். நகர மையப்பகுதிகளில் விலை குறையாவிட்டாலும், ரியல் எஸ்டேட் வியாபாரம் பொதுவாகவே மந்தமாக இருக்கிறது. இந்த மந்த நிலைமை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பதை பொறுத்து தான் விலைகளின் திசை மாறும். உலக பொருளாதார வீழ்ச்சியால் இந்திய நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள், இந்தியாவின் வேலையில்லா திண்டாட்ட விகிதம் போன்றவற்றை பொறுத்து மந்த நிலைமை இன்னும் பல மாதங்கள் நீடிக்கலாம்.

போன வருடம் வரை என் நண்பர்களிடம் பேசும் போது "இந்தியாவில் வீட்டு விலைகள் இன்னும் அதிகமாக குறையும். கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குங்கள்" என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் அந்த டாபிக் வந்தாலே "என்னால் நம் ஊர் ரியல் எஸ்டேட்டை புரிந்து கொள்ள முடியவில்லை" என்று ஒதுங்கி விடுகிறேன். உண்மையும் அது தான். இந்தியாவில் ரியல் எஸ்டேட் விலை உயர்வு பற்றி உங்களுக்கு தெரிந்த விபரங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடர்புள்ள இணைப்பு: India Housing Bubble

Thursday, March 26, 2009

கலிபோர்னியாவில் வீடு விலைகள் இன்னும் குறையுமா?

அமெரிக்காவில் பல நகரங்களில் வீடு விலை குறைந்தாலும், கலிபோர்னியாவில் இது வரை சான் டியாகோ நகரம் மட்டும் தான் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. IBM நிறுவனம் சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தை வாங்க போவதால் Bay area-வில் விலை இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வருகிறது. IBM நிறுவனம் இன்று 5000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி விட்டு அவர்களின் வேலையை தனது இந்திய கிளைக்கு கொடுத்து விட்டது. சன் மைக்ரோவின் 34,000 ஊழியர்களில் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை போகுமோ தெரியவில்லை. இவர்களில் பலர் bay area-வில் வசிப்பதால் அந்த பகுதியில் வீடு விலைகள் குறையலாம்.

உலகத்தில் எங்கே வீடு விலைகள் குறைந்தாலும் சென்னையை மட்டும் யாரும் அசைக்க முடியாது போலிருக்கிறது. அது பற்றி இன்னும் சில நாட்களில் பேசலாம்.

Monday, March 16, 2009

காளைக்கும் கரடிக்கும் நடக்கும் யுத்தம்

சிட்டி பேங்க் போன வாரம் கொடுத்த உற்சாக குரல் பங்கு சந்தை முதலீட்டாளர்களின் காதில் இசையாக ஒலித்து விட்டது. சிட்டி பேங்கின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் பண்டிட் தனது வங்கி ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் "இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் வங்கி நல்ல லாபம் சம்பாதித்துள்ளது" என்று எழுதியது வங்கிகளைப் பற்றிய பொதுவான பயத்தை நீக்க "கொஞ்சம்" உதவியது. ஒரு டாலருக்கும் குறைவாக விற்ற வங்கியின் பங்குகள் இன்று $2.33க்கு விற்கிறது.

சிட்டி பேங்கின் "operating profits" உயர்ந்ததாக கூறினாலும், அந்த வங்கியின் இந்த காலாண்டு செலவுகள் அனைத்தும் மார்ச் மாதம் முடியும் வரை முழுமையாக தெரியாது. "ஜனவரி, பிப்ரவரியில் 10 பில்லியன் லாபம் இருந்தது, துரதிர்ஷ்டவசமாக மார்ச் மாதத்தில் 12 பில்லியன் டாலர் செலவு இருந்தது. அதனால் இந்த காலாண்டிலும் 2 பில்லியன் நஷ்டம்" என்று இவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அமெரிக்க வங்கிகள் அனைத்துக்கும் "operating revenue, profits" பெரிய பிரச்னையாக இருந்ததில்லை. இந்த வங்கிகளின் "balance sheet" தான் பிரச்னையே. முதலீட்டாளர்களும் இதனால் தான் சிட்டி பேங்கின் பங்கு விலையை ஒரு டாலரிலிருந்து பத்து டாலருக்கு உடனே உயர்த்தாமல் இருக்கிறார்கள். ஏப்ரல் மாதத்தில் சிட்டி பேங்க் காலாண்டு கணக்குகளை அறிவிக்கும் போது அந்த வங்கியின் லாபம் உண்மையாகவே அதிகரித்திருந்தால், சிட்டி பேங்கின் பங்குகள் வேகமாக மேலே ஏறும்.

தற்போதைய நிலைமையில் வங்கிகளின் லாபம் கூடுவதாக வரும் தகவல்கள் பங்கு சந்தைக்கு உற்சாக டானிக். அமெரிக்க மத்திய வங்கி அதிகாரி பென் நேற்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க பொருளாதாரம் இந்த வருட இறுதிக்குள் சரியாகலாம் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் இன்று சிறு வியாபாரிகளுக்கு கடன் சலுகைகளை அறிவித்திருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் பங்கு சந்தையில் இந்த வருடம் காளை ஜெயிக்கும் போல தெரிகிறது.

ஆனாலும்... (I hate this "however" stuff!) வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த வருடம் அது 10%க்கு மேலே போகும் போல தெரிகின்றது. வீட்டு விலைகள் இன்னும் குறையலாம். அவை குறைவது நின்றால் தான் பொருளாதாரம் பலப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக வங்கிகள் மக்களுக்கு கடன் கொடுக்காமல் தனது அதிகாரிகளுக்கு பல கோடிகளை வாரி வழங்கி கொண்டிருக்கிறது. இந்த வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு ethics, integrity என்று ஒரு மண்ணும் இல்லாமல் போய் விட்டது. மக்களின் பணத்தை வாங்கி உயிர் பிழைத்த இந்த வங்கிகள் மக்களைப் பற்றியும் பொருளாதாரத்தைப் பற்றியும் சிறிதும் கவலைப்படாமல் வெட்டித்தனமாக செலவு செய்கின்றது. சிறு வியாபாரிகளுக்கு கூட இந்த வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. இது பற்றி கேட்டால் "அரசாங்கத்திலிருந்து 10 பில்லியன் உதவி கிடைக்கும் போது அந்த 10 பில்லியனையும் கடன் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. There is no one-to-one relationship" என்று பேங்க் ஆப் அமெரிக்காவின் கென் லூயிஸ் வியாக்கியானம் பேசுகிறார்.

நேற்று வெளியான தகவலின் படி AIG இன்சூரன்ஸ் கம்பெனி மக்களின் பணத்தை தனது முட்டாள் அதிகாரிகளுக்கு போனஸாக தாரை வார்த்திருக்கிறது. இவர்களையெல்லாம் நடு ரோட்டில் சுட்டு தள்ள வேண்டும்.

இப்போது பங்கு சந்தையில் நடப்பது bear market rally. அடிப்படை விபரங்கள் ஒன்றும் பெரிதாக மாறவில்லை. இந்த காலாண்டு கணக்கு விபரங்களை வங்கிகளும் மற்ற நிறுவனங்களும் அறிவிக்கும் போது அவற்றை பொறுத்து பங்கு சந்தையின் திசை மாறலாம்.

தொடர்புள்ள இணைப்புகள்: AIG Outrage | Obama to loosen credit for small businesses | Encouraging News from Citibank | Do not chase bear market rallies

Sunday, March 08, 2009

ஒரு கைதியின் டைரி

ஜார்ஜியா மாநிலத்தில் சிறையிலிருந்த தப்பித்த ஒரு கைதி திரும்பவும் சிறைக்குள் நுழைய முயற்சிக்கும்போது மாட்டிக் கொண்டார். சிறையிலிருந்து தப்பித்தது சரி, திரும்பவும் ஏன் சிறைக்கே வர வேண்டும்?

"வெளியே இப்போதுள்ள நிலைமையில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. உள்ளே இருப்பதே பெட்டர், மணியடித்தால் சாப்பாடாவது கிடைக்கிறது" என்று நினைத்து திரும்பியிருப்பாரோ?

தொடர்புள்ள இணைப்பு: BBC News

வங்கி பங்குகளை வாங்கலாமா?

இப்போது தான் ஒரு நண்பருக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டு வருகிறேன். "அமெரிக்க வங்கிகளின் பங்கு விலை மிக குறைவாக இருக்கிறதே, வங்கி பங்குகளை வாங்கலாமா?" என்று கேட்டிருந்தார். சிட்டி பேங்க் "penny stock" லெவலுக்கு போய் விட்டது. இந்த நிலைமையில் சிட்டி பேங்க் அரசுடமையாக்கப்பட்டால் பங்கு தாரர்களுக்கு மிக சொற்பமே மிஞ்சும். பேங்க் ஆஃப் அமெரிக்காவுக்கும் இதே கதி தான். இந்த இரண்டு வங்கிகளுமே திவாலாக சான்ஸே இல்லை, ஏனென்றால் அமெரிக்க அரசாங்கம் இவை திவாலாக விடாது. இருந்தாலும், அமெரிக்க வங்கிகளின் பங்குகளில் இன்னும் சில மாதத்துக்காவது லாபம் கிடைப்பது சந்தேகம் தான்.

பேங்க் ஆஃப் அமெரிக்கா தலைமை அதிகாரி நியூயார்க் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் கூட மெரில் லிஞ்ச் பற்றிய உண்மைகளை சொல்ல தயங்குகிறார். அந்த வங்கியில் வேறு ஏதாவது பிரச்னை ஒளிந்திருக்கிறதா என்று தெரியவில்லை. மடியில் கனமில்லையென்றால் வழியில் பயமெதற்கு?

சரியான தருணத்தில் சிட்டி பேங்க் பங்குகளை $1க்கு வாங்கி $10க்கு விற்றால் சூப்பராக இருக்கும். ஆனால் அந்த ஒரு டாலர் பூஜ்யமாக மாறினால் கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அமெரிக்க வங்கிகளின் மீது அதீத காதல் இருந்தால், தனிப்பட்ட வங்கிகளின் பங்குகளை வாங்குவதை விட XLF போன்ற ETFகளை வாங்குவது நல்லது.

Related Link: Banking Stocks

Sunday, March 01, 2009

பங்கு சந்தை ஜாம்பவான்

Warren Buffett போன்ற பங்கு சந்தை ஜாம்பவான்கள் கூட நஷ்டத்தை சந்திக்கும் காலம் இது. திரு. வாரனின் நிறுவனம் Berkshire Hathaway Inc. போன வருடம் நான்காவது காலாண்டில் 117 மில்லியன் டாலர்கள் சம்பாதித்துள்ளது. 2007ன் நான்காவது காலாண்டில் இந்த நிறுவனம் சம்பாதித்த லாபம் 2.95 பில்லியன் டாலர்கள். நிறுவனத்தின் லாபம் 96 சதவிகிதம் சரிந்திருக்கிறது.

அமெரிக்க நிறுவனங்களில் பெரும்பாலானவை பல பில்லியன் டாலர்கள் நஷ்டத்தில் இருக்கும்போது Berkshire நிறுவனம் 117 மில்லியன் டாலர்கள் லாபத்தில் இருப்பது ஓரளவு நல்ல செய்தியாக இருந்தாலும் திரு. வாரன் போன்றவர்கள் கூட உலக பொருளாதார சரிவினால் பல பில்லியன் டாலர்களை இழந்திருப்பது பொருளாதார சூறாவளி யாரையும் விட்டு வைக்கவில்லை என்பதை காட்டுகிறது.

திரு. வாரன் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் "அமெரிக்க பொருளாதாரம் சரியாக இன்னும் பல மாதங்களாகலாம். ஆனாலும் அமெரிக்கா மீண்டு வரும் போது முன்பை விட பலமாக இருக்கும்" என்று எழுதியிருக்கிறார். நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை அமெரிக்க அரசாங்கம் சந்தைக்கு அனுப்ப தயாராகின்றது. இவை அனைத்தும் தனது வேலையை ஆரம்பிப்பதற்கே இன்னும் பல மாதங்களாகலாம். அதற்குள் இன்னும் எத்தனை பேருக்கு வேலை போகுமோ என்று தெரியவில்லை.

Sunday, February 22, 2009

இந்தியாவுக்கு வேகமாக செல்லுங்கள் - PwCன் புது மந்திரம்.

"இந்தியாவில் $500 பில்லியன் டாலர் infrastructure வாய்ப்புகள் காத்திருக்கிறது. இந்தியாவுக்கு வேகமாக செல்லுங்கள்" என்று PricewaterhouseCoopers (PwC) சமீபத்தில் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது.

சத்யம் பிரச்னையிலிருந்து தப்பிப்பதற்காக இப்படி ஏதாவது நாடகம் போடுகிறதா அல்லது உண்மையிலேயே இந்தியாவில் $500 பில்லியன் டாலர் வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை.

Saturday, February 21, 2009

ஊழல் முதலைகளின் ஸ்விட்சர்லாந்து வங்கி ரகசியம் வெளிப்படுமா?

ஜெயலலிதா 1,000 கோடி ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் மறைத்து வைத்திருக்கிறார். அவற்றில் சில கோடிகள் லண்டனில் ஹோட்டல்கள் வாங்க பயன்படுத்தப்பட்டது என்று சில வருடங்களுக்கு முன்னால் குற்றச்சாட்டு எழுந்தது. ஜெயலலிதா மட்டுமல்லாது இன்னும் பல இந்திய அரசியல்வாதிகள் ஸ்விஸ் வங்கிகளில் பணம் ஒளித்து வைத்திருப்பதாக கருத்துகள் உண்டு.

ஸ்விட்சர்லாந்து நாட்டு சட்டப்படி (1934) வங்கி கணக்குகளின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. "கிரிமினல்கள் இந்த நாட்டில் பணத்தை ஒளித்து வைக்க அனுமதிக்க மாட்டோம்" என்று சும்மா பாவ்லா காட்டிக்கொண்டு கிரிமினல்களின் பல பில்லியன் டாலர்களால் தான் ஸ்விஸ் வங்கிகள் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது. அவற்றுக்கெல்லாம் ஆப்பு வைக்கும் காலம் வந்து விட்டது.

அமெரிக்க அதிகாரிகள் ஸ்விஸ் வங்கியான UBS AGக்கு 780 மில்லியன் டாலர்கள் அபராதம் கொடுத்து வங்கியின் ரகசிய திரையை கிழித்தெறிந்திருக்கிறார்கள். இதைப்பற்றிய அதிக விபரங்கள் இங்கே.

இதே போல இந்திய அரசாங்கம் மனது வைத்தால் ஸ்விஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்கள் வெளிப்படலாம். ஆனால் இந்திய அரசு மனது வைக்குமா?

தொடரும் தற்கொலைகள்

அமெரிக்க வங்கிகளின் குறுக்கு புத்தியால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தின் விளைவாக தற்கொலைகள் தொடருகின்றது. கனடாவில் வேலை பார்த்த விஜய் டெல்லியில் உள்ள தன் பெற்றோரின் வீட்டில் நேற்று தூக்கு மாட்டிக்கொண்டார்.

கனடாவில் தனக்கு வேலை போனதால் வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டதாக கடிதம் எழுதியிருக்கிறார். இவரின் மனைவியும் ஒரு வயது குழந்தையும் கனடாவில் இருக்கின்றனர்.
மேல் விபரங்கள் இங்கே.

தனது ஒரு வயது குழந்தை குழந்தையின் முகத்தைப் பார்த்தாலே எவருக்கும் வாழ ஆசை வரும். மனது பாதிக்கப்பட்டால் எந்த லாஜிக்கும் இல்லாமல் போய் விடுகிறது.

Wednesday, February 18, 2009

787 பில்லியன் டாலர் டானிக்

அரசியல் குடுமிபிடி சண்டைகள் முடிந்து 787 பில்லியன் டாலர் stimulus bill நிறைவேற்றப்பட்டு ஒபாமா அதை சட்டமாக்கி விட்டார். அமெரிக்க முதலீட்டாளர்கள் இன்னமும் திருப்தியடையவில்லை. இன்னும் ஏதாவது பூதம் கிளம்புமோ என்று பயந்து போய்தான் இருக்கிறார்கள்.புதிதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி, நீங்கள் அமெரிக்காவில் முதல் முறையாக வீடு வாங்கினாலோ அல்லது கடந்த மூன்று வருடத்தில் வீடு வாங்காமல் இப்போது வாங்கினாலோ $8,000 வருமான வரி கிரடிட் கிடைக்கும். நவம்பர் 31, 2009க்குள் வீடு வாங்குபவர்களுக்கு இந்த சலுகை. வாங்கிய வீட்டில் குறைந்தது மூன்று வருடங்களுக்காவது வசிக்க வேண்டும்.

787 பில்லியன் டாலர்களும் அமெரிக்க பொருளாதாரத்தில் கலப்பதற்கே இன்னும் பல மாதங்களாகும். 2009 ஜூன் மாதத்தில் பொருளாதாரம் முன்னேற்றம் காணலாம் என்று நினைத்த பல நிபுணர்கள் இப்போது 2009 வருடம் முழுதும் பிரச்னை தான் என்று கருதுகிறார்கள். அமெரிக்க வங்கிகள் பல இன்னும் மீள முடியாத பிரச்னைகளில் மாட்டியிருப்பதாக பரவலான எண்ணம் இருக்கிறது. பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டி பேங்க் போன்ற வங்கிகள் அரசுடமையாக்கப்பட வேண்டும் என்று பலர் விவாதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

கடந்த சில வாரங்களாக பங்குகளின் volatility படுத்தும் பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒபாமா மற்றும் கெய்த்னர் இருவரும் வரும் நாட்களில் தங்களின் திட்டங்களைப் பற்றி முழு விபரங்களை அறிவித்தால் பங்கு சந்தை சீராகலாம். அமெரிக்காவின் கட்டுமான நிறுவனங்களின் (Infrastructure Companies) பங்குகள் மீது ஒரு கண் வைத்திருங்கள். அவை சீராக உயர ஆரம்பித்தால், பங்கு சந்தைக்கு அது ஒரு நல்ல அறிகுறியாக இருக்கும்.

தொடர்புள்ள இணைப்புகள்: Be Ready for More Pain | Give Some time to Fed

Friday, January 30, 2009

ஜனவரியின் தாக்கம்

ஜனவரி 2009ல் S&P 500 8.57 சதவிகிதம் விழுந்திருக்கிறது. ஜனவரியில் பங்கு சந்தை நஷ்டப்பட்டால் வருடம் முழுதும் பங்கு சந்தை நஷ்டப்படலாம் என்ற பரவலான நம்பிக்கை இருக்கிறது. அதற்கு January Barometer என்று ஒரு பெயரும் வைத்திருக்கிறார்கள். பல வருடங்களில் இப்படித்தான் நடந்திருக்கிறது.

அமெரிக்காவிலும் இப்படி ஒரு மூடநம்பிக்கையா என்று நினைக்க வேண்டாம்! பங்கு சந்தைகளில் எவ்வளவு ஏற்ற தாழ்வு ஏற்பட்டாலும், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பொதுவாக பங்கு சந்தை மேலே ஏறும். முக்கியமாக ஜனவரியில் மேலே ஏறும். புது வருடம் வரும் போது புது நம்பிக்கை வரும். பல முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதிகளில் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்வார்கள். பரஸ்பர நிதிகள் தங்களிடம் வரும் பல பில்லியன் டாலர்களை பங்கு சந்தையில் முதலீடு செய்யும்போது பங்கு சந்தை உயரும். ஜனவரியில் கூட முதலீட்டாளர்களின் மனதில் உற்சாகம் இல்லாத போது அந்த வருடத்தில் பங்கு சந்தைகளுக்கு கஷ்டகாலம் தான்.

தொடர்புள்ள இணைப்புகள்: January Barometer | January drop is not a welcome sign

Friday, January 23, 2009

பங்கு சந்தைகள் இன்னும் எத்தனை நாட்களுக்கு தள்ளாடும்?

இன்னும் பல மாதங்களுக்கு!

செப்டம்பர் 15, 2008 அன்று எழுதிய பதிவில் "இந்த கலாட்டாவில் பேங்க் ஆப் அமெரிக்கா வங்கியும் lehman brothers போல திவாலானால் கூட ஆச்சரியப்பட மாட்டேன்." என்று எழுதியிருந்தேன். 46 பில்லியன் டாலர்களுக்கு மெரில் லிஞ்ச் நிறுவனத்தை வாங்கிய பேங்க் ஆஃப் அமெரிக்கா வங்கியின் இன்றைய மொத்த மார்க்கெட் மதிப்பு வெறும் 31 பில்லியன் டாலர்கள் தான். பேங்க் ஆஃப் அமெரிக்காவின் பங்குகள் ஐந்து டாலருக்கு விற்கும் நிலைமை வந்து விட்டது. மெரில் லிஞ்ச் நிறுவனத்தை விற்றவர்கள் புத்திசாலிகள். பல பில்லியன் டாலர்கள் நஷ்டம் வரும் என்பதை முன்பே அறிந்து சாமர்த்தியமாக பேங்க் ஆஃப் அமெரிக்காவின் பங்குதாரர்கள் தலையில் நஷ்டத்தைக் கட்டிவிட்டு போய் விட்டார்கள்.

Bank of America merger with Merrill Lynch

இன்றைய தேதியில் பேங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைமை அதிகாரியின் (Ken Lewis) வேலைக்கே உத்தரவாதம் கிடையாது. தன் பெயர் கெட்டு விட்டதால் ஆத்திரமாகி நேற்று மெரில் லிஞ்சின் ஜான் தெய்னை (John Thain) வேலையை விட்டு பேங்க் ஆஃப் அமெரிக்காவின் கென் லூயிஸ் நீக்கி விட்டார். இது பற்றிய முழு விபரங்கள் இங்கே.

மெரில் லிஞ்சின் ஜான் தெய்ன் போன வருடம் தன் நிறுவனத்தில் அனைவரையும் செலவுகளை குறைக்க சொல்லிவிட்டு தனது ஆபிஸ் ரூமை புதுப்பிப்பதற்கு $800,000 செலவு செய்திருக்கிறார். தரைக்கம்பளத்திற்கு மட்டும் $87,000! Tyco நிறுவனத்தின் முந்தைய தலைமை அதிகாரி Dennis Kozlowski குளியலறை திரைக்கு $6,000 செலவு செய்த கதையாக இருக்கிறது.

தனது நிறுவன mission statementகளில் மட்டும் பங்குதாரர்களுக்காக தான் நாங்கள் உயிர் வாழ்கிறோம் என்று ரீல் சுத்தி விட்டு பங்குதாரர்களின் பணத்தை இப்படியெல்லாம் வீணடிக்கிறார்கள்.

பல அமெரிக்க வங்கிகளின் பங்குகள் அடிமாட்டு விலைக்கு விற்கின்றன. இன்னும் என்னவெல்லாம் பூதம் கிளம்புமோ என்ற பயம் தான். பேங்க் ஆஃப் அமெரிக்கா போன்ற வங்கிகளே அரசாங்கத்திடம் பல பில்லியன் டாலர் bailout கேட்கும் போது இது மிக மிக சிரமமான காலம் தான்.

பேங்க் ஆஃப் அமெரிக்கா, சிட்டி பேங்க் போன்ற வங்கிகள் ஒரு நாள் 50% விழுகின்றன. அடுத்த நாள் 30% ஏறுகின்றன. "வங்கிகள் விலை அதிகமாக கீழே விழும்போது வாங்கி அடுத்த நாள் 10% ஏறினாலே சூப்பராக லாபம் சம்பாதிக்கலாம்" என்று என்னுடன் வேலை பார்க்கும் நண்பர் கடந்த மூன்று நாட்களாக சூதாட்டம் விளையாடுகிறார். இந்த வங்கியின் கடந்த சில தினங்களின் சார்ட்டை இங்கு பார்க்கலாம். பங்குகளின் விலை 30% உயரும் போது செக்ஸியாக தான் இருக்கும். சத்யம் பங்குகள் கூட இன்று 59% உயர்ந்தன. அவற்றை 25 டாலருக்கு வாங்கியவர்களுக்கு தான் அதன் வேதனை புரியும்.

இது போன்ற day trading விளையாட்டுக்கெல்லாம் நான் போவதில்லை. 12 வருடங்களுக்கு முன்னால் இதெல்லாம் விளையாடியிருக்கிறேன். ஒரு நாள் லாபம் வரும். அடுத்த மூன்று நாட்கள் நஷ்டம் வரும். கூட்டி கழித்து பார்த்தால் நஷ்டமும் வேதனையும் தான் மிச்சம்.

இன்று $6க்கு விற்கும் பங்கை வாங்கி அதில் 20% லாபம் கிடைத்து $7.20க்கு விற்றால் சந்தோஷம் தான். ஆனால் 20% நஷ்டம் ஏற்பட்டால் அதை ஈடுகட்டுவதற்கு 20 சதவிகிதத்தை விட கூட லாபம் சம்பாதிக்க வேண்டும்.

உதாரணம்: $80க்கு ஆப்பிள் நிறுவனத்தை வாங்கி பங்குகள் விலை சரிந்து $64க்கு விற்றால் எனக்கு 20% நஷ்டம். திரும்பவும் ஆப்பிள் பங்குகள் $80க்கு வருவதற்கு பங்குகள் 20% விலை உயர்ந்தால் போதாது. 25% விலை உயர்ந்தால் தான் $80க்கு வரும்.

இன்று $6க்கு விற்கும் வங்கிகளின் நீண்டகால பங்குதாரராக இருக்கலாம் என்ற எண்ணம் இருந்தால் அவற்றின் பங்குகளை வாங்கலாம். எந்த வங்கியின் பங்குகளும் என்னிடமில்லை. இன்னும் பல மாதங்களுக்கு வாங்குவதாக எண்ணமுமில்லை.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு அதில் பங்கு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வந்தால் தான் பங்கு சந்தைகள் உயரும். அதற்குள் இன்னும் எத்தனை வங்கிகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களிடம் உதவி கேட்குமோ தெரியவில்லை.

தொடர்புள்ள இணைப்புகள்: Britain Unveils Second Bank Bailout | Volatility still reigns | Caution: Banking Stocks Ahead | Fear Factor

Wednesday, January 07, 2009

பொய் சத்யம்

ராமலிங்க ராஜூ கடைசியில் உண்மையை சொல்லியிருக்கிறார். கடந்த பல வருடங்களாக நிறுவன கணக்கு வழக்குகளில் கோல்மால் செய்து தான் பல மில்லியன் டாலர்களை லாபமாக காட்டியதாக கூறியிருக்கிறார்.இந்தியாவில் பப்ளிக் லிமிடெட் நிறுவனத்தை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் ஏகப்பட்ட கெடுபிடிகள் கொடுத்து தொழில் முனைவோர்களின் நேரத்தை வீணாக்குகிறது. இந்த கெடுபிடிகளால் இந்தியாவின் ஆடிட்டர்கள் கல்லா நிரம்பி வழிந்தது. இவ்வளவு விதிமுறைகள் இருந்தும் பல வருடங்கள் சத்யம் நிறுவனத்தால் எப்படி ஏமாற்ற முடிந்தது என்று தெரியவில்லை. அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் அனைவரும் சமோசா சாப்பிட்டுவிட்டு கையெழுத்து போட்டு விட்டு போய்விட்டார்கள் போலிருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கிய ஆடிட்டர்கள் என்ன செய்தார்கள் என்று புரியவில்லை. ஆன்டர்சன் நிறுவனம் இந்தியாவில் வேறு பெயரில் கடையை திறந்து விட்டது போல.

இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு சீரியஸான பாதிப்பை சத்யம் கொடுத்திருக்கிறது. உலக பொருளாதார வீழ்ச்சியால் இந்திய அவுட்சோர்ஸிங் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று நினைத்திருந்தேன். இதுவரை அப்படி ஒன்றும் நடக்கவில்லை. சத்யம் நிறுவனத்தின் சித்து விளையாட்டுகளால் பின்விளைவுகள் மோசமாக நிறையவே வாய்ப்பிருக்கிறது.

சத்யம் நிறுவனத்தின் பங்குகள் இந்திய சந்தையிலே 40 ரூபாய் லெவலுக்கு போய் விட்டது. நியூயார்க் சந்தையில் (pre-market) 86% வீழ்ந்து $1.26 என்ற விலைக்கு ட்ரேடாகிறது.

நீங்கள் என் கருத்தில் வேறுபடலாம். என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் பங்கு சந்தையில் ட்ரேடாகும் பல நிறுவனங்களில் transparency கிடையாது. வேறு வழியில்லாமல் ராமலிங்க ராஜூ இப்போது உண்மையை சொல்லியிருக்கிறார். இன்னும் பல ராமலிங்க ராஜூக்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களும் உண்மை சொல்லும் நேரம் வரலாம்.

தொடர்புள்ள இணைப்புகள்: Satyam Computer head quits, admits doctoring books | Ramalinga Raju's letter to the board

Monday, January 05, 2009

புது வருடம், புது நம்பிக்கை

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

2009ம் வருடம் 2008 போல கடினமாக இல்லாவிட்டாலும், சுலபமாகவும் இருக்கப்போவதில்லை. வருடத்தின் முதல் ட்ரேடிங் தேதியிலேயே (ஜனவரி 2) அது ISM (Institute of Supply Management Manufacturing Index) புள்ளிவிபரங்களில் தெரிந்து விட்டது. ISM குறியீடு 32.4 புள்ளிக்கு விழுந்து விட்டது. 1980களில் இருந்த நிலைமைக்கு போய் விட்டது.

S&P 500, Nasdaq, Dow போன்ற அனைத்து குறியீடுகளும் பங்கு சந்தை இன்னும் சில நாட்களுக்காவது மேலே போகும் என்று காட்டுகின்றன. இன்று ஒபாமா வாஷிங்க்டனில் தனது பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை அறிவிக்கிறார். ஒபாமா இன்னும் இரண்டு வாரங்களில் பதவி ஏற்பது பங்கு சந்தைக்கு பாஸிட்டிவான விஷயம்.

இந்த நாளில் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் இல்லை. வருடங்கள் மாறினாலும், பொருளாதார பிரச்னைகள் அப்படியே தான் இருக்கின்றன. ஆனாலும் முதலீட்டாளர்களின் மனோபாவம் சிறிது மாறியிருக்கிறது. இனிமேல் பிரச்னைகள் அதிகம் வராது, இன்னும் ஆறு மாதத்தில் விட்டதை திரும்ப பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை பலருக்கு வந்திருக்கிறது. ஒபாமா ஏதாவது மந்திரம் செய்வார் என்று பலர் நம்புகிறார்கள். அதன் பிரதிபலிப்பாக இன்று பங்கு சந்தை உயரலாம். இதே நிலைமை வருடம் முழுதும் நீடிக்குமா என்பது சந்தேகம் தான்.

இந்த வருடமும் ரோலர் கோஸ்டர் வருடமாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஜூன் 2009க்குள் நிலைமை சரியாகி விடும் என்று பலர் நம்புகிறார்கள். அதற்குள் ரஷ்யா, இஸ்ரேல், பாகிஸ்தான், இரான் போன்ற நாட்டின் அதிபர்கள் அரசியல் பிரச்னைகளை தீவிரமாக்கினால், அமெரிக்க அரசாங்கத்துக்கு அதிலேயே கவனம் முழுதும் போய் விடும். அமெரிக்க பொருளாதாரம் சுபிட்சமாக இருக்கும் வரை மற்ற நாடுகளின் விஷயத்தில் பஞ்சாயத்து செய்வது அமெரிக்காவுக்கு சுலபமாக இருந்தது. தன் நாட்டிலேயே பலர் வேலை இழந்து, வீடு இழந்து தவிக்கும் போது இந்த அரசாங்கத்தால் மற்ற நாடுகளின் பிரச்னைகளையும் சமாளிக்க முடியாது. இருந்தாலும் தன் சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் பிற நாடுகளின் அரசியல் பிரச்னைகளில் தீவிரம் காட்டி பொருளாதாரத்தை இன்னும் சொதப்பி விடுவார்களோ என்ற எண்ணமும் இருக்கிறது.

அமெரிக்க வங்கிகள் இன்னும் மாறவில்லை. அரசாங்கம் அந்த வங்கிகளுக்கு கொடுத்த பல பில்லியன் டாலர்களுக்கு கணக்கு கேட்டால் "தெரியாது" என்று அலட்சியமாக கூறுகிறார்கள். மக்கள் பணத்தை இன்னொரு முறை சுவாஹா செய்யப் போகிறார்களா என்று தெரியவில்லை.

இன்றைய தேதியில் ஒரே ஒரு நல்ல விஷயம் வீட்டு கடன் வட்டி விகிதம் குறைந்திருப்பது தான். உங்களுக்கு நல்ல வருமானமும் நிலையான வேலையும் இருந்தால் வீடு வாங்குவதோ அல்லது refinance செய்வதோ நல்லது.

தொடர்புள்ள இணைப்பு: Strategy for 2009

Related Posts Plugin for WordPress, Blogger...