உலக பொருளாதாரத்தை பயமுறுத்திய புயல் கரை கடந்து விட்டது போல தான் தோன்றுகிறது. அமெரிக்க தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலைமையில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை மேலும் 0.5 சதவிகிதம் குறைத்திருக்கிறது. டிசம்பரில் இன்னும் 0.5 சதவிகிதம் குறைய வேண்டும் என்று பலர் பிரார்த்தனை செய்கிறார்கள்.
உலகம் முழுவதும் வங்கிகளின் நிலைமை பல மடங்கு பரவாயில்லை. உலக வங்கிகள் மற்ற வங்கிகளுடன் கடன் பரிவர்த்தனை செய்யும் போது அவர்கள் பொதுவாக LIBOR என்று செல்லமாக அழைக்கப்படும் London Interbank Overnight Lending Rate-ல் கடன் கொடுத்து/வாங்குகிறார்கள். வங்கிகள் செப்டம்பரில் கண் பிதுங்கி அடி வாங்கும் போது LIBOR 2.8 சதவிகிதத்திலிருந்து 4.8 சதவிகிதம் உயர்ந்தது. அதனால் வங்கிகள் வாங்கிய கடன்களின் வட்டி உயர்ந்தது. 
இப்போது LIBOR 3.03 சதவிகிதத்துக்கு குறைந்து விட்டதால் வங்கிகள் சுலபமாக கடன் கொடுத்து/வாங்க முடிகிறது. உலகம் முழுவதும் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்ததாலும், தோல்வியடைந்த வங்கிகளுக்கு தோள் கொடுத்ததாலும், வங்கிகளின் நிலைமை ஓரளவுக்கு சரியாகி வருகிறது. அதனால் தான் இன்று அமெரிக்க பங்கு சந்தையில் வங்கிகளின் பங்குகள் உயர்ந்தது.
இது தவிர வங்கிகள் “மிக” குறைந்த வட்டிக்கு மத்திய வங்கியிடமிருந்து கடன் வாங்கி அதிக வட்டிக்கு தன் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பதால் வங்கிகள் கணிசமான லாபத்தை சம்பாதிக்க ஆரம்பித்திருக்கின்றன. இதை எதிர்பார்த்து தான் மத்திய வங்கியும் மிக தாராள மனதுடன் பல சலுகைகளை வங்கிகளுக்கு கொடுத்தது. அமெரிக்க மத்திய வங்கி எதிர்பார்த்தது போல சில நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன. மக்களின் மனதில் முழு நம்பிக்கை வர இன்னும் பல வாரங்களாகும்.
அடுத்த வாரம் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுபவர் மெஜாரிட்டி வாக்குகள் பெற்று வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும். 2000-ல் நடந்தது போல குழப்பமாகி விட்டால் பங்கு சந்தை மறுபடியும் விழும். சமீபத்திய கருத்து கணிப்புகளை பார்க்கும் போது ஒபாமா பெரும்பாலான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் போல தான் தோன்றுகிறது.
Related Link:
Libor Falls on Rate Cuts
Friday, October 31, 2008
உலக வங்கிகளின் நிலவரம்
Saturday, October 18, 2008
ஊழல் அரசியல்வாதிகள் ஒளித்து வைத்த பணம்
இந்தியாவின் ஊழல் முதலைகள் பலர் ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பணத்தை ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்பது open secret. அமெரிக்க பொருளாதார சரிவாலும், அமெரிக்க சப்-பிரைம் பிரச்னையாலும் உலக வங்கிகள் பலவும் பாதிக்கப்பட்டன, ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கிகள் உட்பட.
ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கிகள் பல திவாலாகும் நிலைமை வந்தததால் நம் ஊர் அரசியல்வாதிகளின் பல நூறு கோடிகள் காணாமல் போய் விடும் என்று நினைத்திருந்தேன். அப்படி நடந்திருந்தால் “திருடனுக்கு தேள் கொட்டிய” நிலைமை வந்திருக்கும். ஸ்விட்சர்லாந்து அரசாங்கம் இந்த வங்கிகளை காப்பாற்றி விட்டது.
ஹாங்காங்கில் பலர் தங்களது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்து விட்டார்கள். ஆனால் ஊழலில் கொழித்த நம் அரசியல்வாதிகளின் பணம் ஸ்விட்சர்லாந்தில் பத்திரமாக இருக்கிறது. நம் ஊர் அரசியல்வாதிகளுக்கு உடம்பெல்லாம் மச்சம் போல.
Related Links:
UBS bailed out in Swiss government rescue
Swiss government comes to rescue of proud industry
Tuesday, October 14, 2008
தினந்தோறும் தீபாவளி
வால் ஸ்ட்ரீட்டில் தீபாவளி இரண்டு வாரத்துக்கு முன்பே வந்து விட்டது! போன வாரம் தெரிந்த பயம் காணாமல் போய் ஜப்பானிலிருந்து சான் பிரான்சிஸ்கோ வரை உற்சாகம்! கொஞ்சம் கொஞ்சமாக பங்குகளை வாங்குவது நல்லது.
இதே உற்சாகம் பல நாட்கள் நீடிக்காது. ஆனாலும் புயல் கரையை கடந்து விட்டது போல தான தோன்றுகிறது.
Monday, October 13, 2008
அமெரிக்க வங்கிகளால் ஏற்பட்ட நெருக்கடி
நேற்று ஜெர்மனியிலிருந்து திரு. சந்திரன் கேட்ட கேள்விகளுக்காக இந்த பதிவு.
அவர் கேட்ட கேள்விகள்:
1. அமெரிக்க வங்கிகளின் நிதி நெருக்கடி எவ்வாறு ஐரோப்பிய வங்கிகளைப் பாதித்தன?
2. அமெரிக்க வங்கிகள் திவாலகிப் போனாலும் பணம் எப்படியோ அமெரிக்கப் பணச் சுற்றோட்டத்தில் தானே இருக்க வேண்டும். வங்கிகளில் இருந்து வெளியேறிய பணம் எங்கே சென்றுவிட்டன?
இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு முன்னால் ஒரு flashback.
2001-ல் டாட் காம் நீர்க்குமிழி வெடித்தவுடன் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை வெகுவாக குறைத்தது. செப்டம்பர் 11ல் நடந்த துயர சம்பவத்துக்குப்பிறகு வட்டி விகிதம் இன்னும் குறைந்தது. 
2002-ல் அமெரிக்காவில் பல மாநிலங்களில் வீடு விலைகள் உயர ஆரம்பித்தன. பங்கு சந்தையிலிருந்து ஓடி வந்த அனைவரும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். சில டாக்டர்கள் கூட ரியல் எஸ்டேட் தொழில் செய்ய ஆரம்பித்தார்கள்.
வங்கிகள் நல்ல லாபத்தில் கொழித்தன. மத்திய வங்கியினிடம் குறைந்த வட்டியில் கடன் பெற்று மக்களிடம் 8% வட்டி வாங்கியதில் வீட்டு கடன் கொடுக்கும் வங்கிகளின் காட்டில் மழை. (அது இன்று சுனாமியாக மாறி விட்டது). வானத்திலிருந்து கொட்டும் பணத்தை கண்டு ருசி கண்ட சில வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக வீட்டு கடன் கேட்கும் அனைவருக்கும் கடன்களை வாரி வழங்கியது.
ரியல் எஸ்டேட் தரகர்களின் பங்கு இதில் மிக அதிகம். “வீட்டு விலையில் வெறும் 1% பணம் கொடுத்தால் போதும், நீங்கள் $500,000 வீடு வாங்கலாம்” என்று ரேடியோவில் விளம்பரம் கொடுத்தார்கள். சில மாதங்கள் கழித்து அந்த 1% down payment கூட தேவைப்படவில்லை. 100% கடனையும் சில வங்கிகள் அதிக வட்டியில் கொடுக்க ஆரம்பித்தன. அப்படித்தான் சப்-பிரைம் பிரச்னை உருவாகியது. 1% மற்றும் 0% downpayment கடன்கள் மிக ரிஸ்க்கானது என்று வங்கிகளுக்கும் தெரியும். அதனால் அது போன்ற கடன்களை மற்ற வங்கிகளுக்கு விற்று விடுவதில் ஆர்வம் காட்டினார்கள். ஏதாவது பிரச்னையானால் நாம் தப்பித்துக் கொள்வோம் என்ற புத்திசாலித்தனம்.
அப்படிப்பட்ட புத்திசாலிகளில் சிலர்: Indymac Bank, Countrywide Finacial and Washington Mutual. இவர்கள் அனைவரும் இன்று காணாமல் போய் விட்டார்கள்.
சப்-பிரைம் கடன்களை விற்பதற்கு Countrywide போன்ற வங்கிகள் முயற்சித்த போது அதைக் கேள்விப்பட்ட சில வால் ஸ்ட்ரீட் வங்கிகள் குயுக்தியாக சிந்தித்தன. “அப்படிப்பட்ட கடன்களை ஏன் பாண்டுகளாக (Bonds) மாற்றி உள்நாட்டு/வெளிநாட்டு சந்தைகளில் விற்கக் கூடாது” என்று ஐடியா செய்து அதில் பல மில்லியன்கள் சம்பாதித்தன. அந்த பாண்டுகளுக்கு இன்னொரு பெயர் Collateralized Debt Obligation (CDO).
வீட்டு கடன்களை பங்குகளாகவும் பாண்டுகளாகவும் மாற்றி விற்பது அமெரிக்காவில் 1970லிருந்து இருக்கிறது. இது புதிதல்ல. ஆனால், சப்-பிரைம் கடன்களை பங்குகளாகவும் பாண்டுகளாகவும் வால் ஸ்ட்ரீட் வங்கிகள் மாற்றியது இது தான் முதல் முறை.
கேள்வி 1: அமெரிக்க வங்கிகளின் நிதி நெருக்கடி எவ்வாறு ஐரோப்பிய வங்கிகளைப் பாதித்தன?
வால் ஸ்ட்ரீட் வெளியிட்ட CDOக்களை உலக வங்கிகள் அனைத்தும் வாங்கின. ஐரோப்பிய வங்கிகள் உட்பட. அமெரிக்க வங்கிகள் மட்டும் அமெரிக்க வீட்டுகடன்களை வைத்து சூதாட்டம் நடத்தவில்லை. அதில் கூட்டாளிகளாக ஐரோப்பிய வங்கிகளிலும் பங்கு பெற்றன. அதனால் தான் இப்போது ஐரோப்பிய வங்கிகளும் விழுகின்றன.
வீட்டு கடன்களை வாங்கியவர்கள் அதை முறைப்படி திரும்பக் கொடுத்திருந்தால் வால் ஸ்ட்ரீட்டின் வங்கிகளின் கணக்கு சரியாக இருந்திருக்கும். ஆனால் சொற்ப வருமானம் உள்ளவர்களுக்கு அதிக வட்டியில் கடன் கொடுத்து அது முழுதாக திரும்ப வரும் என்று பகல் கனவு கண்டார்கள். அதனால் இன்று பல மக்களின் ரிடையர்மென்ட் கனவு பொய்த்துப் போனது.
ஐரோப்பிய வங்கிகள் விழுவதை தடுக்க முடியாமல் ஐரோப்பிய நாடுகள் தடுமாறுவதின் காரணத்தை ஜிம் ஜுபாக் வீடியோவில் விளக்குவதை இந்த பதிவில் காணலாம். 
கேள்வி 2: அமெரிக்க வங்கிகள் திவாலகிப் போனாலும் பணம் எப்படியோ அமெரிக்கப் பணச் சுற்றோட்டத்தில் தானே இருக்க வேண்டும். வங்கிகளில் இருந்து வெளியேறிய பணம் எங்கே சென்றுவிட்டன?
சுருக்கமாக சொல்வதென்றால் பெரும்பாலான பணம் காற்றில் கரைந்து விட்டன அல்லது வங்கி அதிகாரிகள் சுருட்டி கொண்டார்கள்.
கடனை திரும்ப கொடுக்க தகுதியில்லாதவர்களுக்கு பல லட்சம் டாலர்களை வங்கிகள் கடனாக கொடுத்தார்கள். அவர்களில் யாரும் வேண்டுமென்று ஏமாற்றவில்லையென்ற போதிலும் அவர்களுக்கு வேலை போன போது அல்லது வருமானம் குறைந்த போது, அவர்களால் வட்டி கட்டி முடியவில்லை. இது போல நாடு முழுதும் பரவலாக நடக்கும்போது அது வங்கிகளுக்கு பெரிய தலைவலியாக மாறி விட்டது.
காணாமல் போன பல பில்லியன் டாலர்களில் சில பில்லியன்கள் ரியல் எஸ்டேட் தரகர்களிடம் கமிஷனாக போய் விட்டன.
Lehman Brothers, Bear Stearns போன்ற வங்கிகளுக்கு எதிராக Goldman Sachs காயை நகர்த்தியதால், அந்த வங்கிகளின் நஷ்டம் Goldman Sachs-க்கு லாபம். அந்த வகையில் Goldmanக்கு பல பில்லியன் டாலர்கள் போய் விட்டது.
சில பில்லியன் டாலர்கள், காணாமல் போன வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு சம்பளவாகவும் போனஸாகவும் கொடுக்கப்பட்டது. இது பற்றிய விபரங்களை இங்கே படிக்கலாம்.
மண்ணில் விழுந்த வங்கிகளில் இனி என்ன பணம் மிச்சமிருந்தாலும், அந்த வங்கிகளின் bankruptcy வக்கீல்கள் அவற்றை ஃபீஸாக எடுத்துக் கொள்வார்கள்.
வங்கிகள் நடத்திய விளையாட்டில் வெற்றி பெற்றது Goldman Sachs மட்டும் தான். ஒரு வருடத்துக்கு முன்பே அவர்கள் உஷாராக சப்-பிரைமுக்கு எதிராக ட்ரேட் செய்தார்கள். இருந்தாலும், வங்கி செக்டர் மொத்தமாக அடி வாங்கியதால் அவர்களின் பங்கும் கீழே விழுந்து விட்டது. பங்குகளை short செய்பவர்கள் விளையாடியதும் இன்னொரு காரணம்.
இனி என்ன நடக்கும், இன்னும் எத்தனை வங்கிகள் விழும் என்று தெரியாது. ஆனாலும், என்னைப் பொறுத்த வரை, இந்த களேபரமெல்லாம் முடிந்த பிறகு Goldman Sachs முன்னை விட வலுமையாக வரும் என்று நினைக்கிறேன்.
தொடர்புள்ள வீடியோ:
CDO போன்ற நிதி சாதனங்கள் (Financial Instruments) எப்படி பொருளாதாரத்துக்கு சேதம் விளைவித்தன என்பதை ஒயின் பாட்டிலை வைத்து ஒருவர் அழகாக விளக்குகிறார் இங்கே.
மேலே உள்ள கட்டத்தில் வீடியோ தெரியாவிடில், அதை இங்கே பார்க்கலாம்.
Sunday, October 12, 2008
ICICI வங்கியின் விளம்பரம்
யாஹூ இந்தியாவில் நேற்று நான் பார்த்த விளம்பரம். 
Investing's never been so easy?! அட ஆண்டவா!
ஜிம் ஜுபாக் (Jim Jubak)
ஜிம் ஜுபாக் மைக்ரோசாப்டின் MSN தளத்திற்காக அருமையான விஷயங்களை எழுதுபவர். நல்ல அறிவாளி. அவருடைய மாடல் போர்ட்போலியோவும் விழுந்திருக்கிறது. அவரின் போர்ட்போலியோவை இங்கு பார்க்கலாம். அவர் தேர்ந்தெடுத்த பங்குகள் பெரும்பாலும் நஷ்டத்தில் இருப்பது எனக்கு தெரிந்து இது தான் முதல் முறை. உலகம் முழுதும் பரவும் பயம் ஜிம்மையும் விட்டு வைக்கவில்லை.
தேவையில்லாமல் பயப்படாதீர்கள் என்று ஜிம் ஒரு வீடியோவில் கூறுகிறார். அதை இங்கு பார்க்கலாம். ஐரோப்பிய சந்தைகள் ஏன் இப்படி விழுகின்றன என்பதற்கும் காரணங்களை இன்னொரு வீடியோவில் விளக்குகிறார். நேரமிருந்தால் அவசியம் இந்த வீடியோக்களை பார்க்கவும். நீங்கள் எந்த நாட்டில் முதலீடு செய்திருந்தாலும் இவை உதவியாக இருக்கும்.
Saturday, October 11, 2008
கலையாத கவலை மேகங்கள்
Dow Jones குறீயீடு கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 1018 புள்ளிகள் மேலும் கீழும் போய் வந்தன. என்ன செய்வதென்று G7 மற்றும் G20 தலைவர்கள் கூடி விவாதிக்கிறார்கள். ஏதாவது செய்வோம் என்று கூறுகிறார்கள். என்ன செய்யப்போகிறோம் என்று திட்டம் எதுவும் அறிவிக்கவில்லை. இந்த நிலைமையில் திங்களன்றும் பங்கு சந்தைகள் விழலாம். உருப்படியான திட்டங்கள் அறிவிக்கப்பட்டால் பங்கு சந்தைகள் அதிகமாக இனி விழாது. 
வங்கிகளின் பிரச்னையையும் டெபாசிட் செய்தவர்களின் பிரச்னையயும் உலக அரசாங்கங்கள் மும்முரமாக இருந்து தீர்த்து வைக்கின்றன. அப்படி இருந்தும் பெரும்பாலான முதலீட்டாளர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடுகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு பிடித்த பங்குகளை வாங்குவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். நேற்று நான் வாங்கிய பங்குகள் அடுத்த வாரமே 10% லாபத்தை தரப்போவதில்லை. பங்குகள் போன மாத விலைக்கு வருவதற்கே இன்னும் பல மாதங்களாகலாம். இன்னும் மூன்று வருடத்துக்குள் உங்களுக்கு தேவைப்படும் எந்த பணத்தையும் பங்கு சந்தையில் போடாமலிருந்தால் நலம்.
பங்கு சந்தைகள் சரிவதற்கு பயம் மிக முக்கிய காரணம். அமெரிக்காவில் வீட்டு விலைகள் சரிந்ததாலும், வங்கிகளில் வேலை வாய்ப்பு போனதாலும் பலர் பணத்தை இழந்து விட்டார்கள். ஹாங்காங், ரஷ்யா போன்ற நாடுகளில் அப்படி நடக்க வில்லை. ஆனாலும் ஹாங்காங்கில் lehman brothers பாண்டுகளில் மறைமுகமாக முதலீடு செய்திருந்த பல ஹாங்காங் வங்கிகள் அங்குள்ள முதலீட்டாளர்களின் பணத்தை மொத்தமாக இழந்து விட்டது. பலர் தங்கள் மொத்த சேமிப்பையும் இழந்து தவிக்கிறார்கள்.
ரஷ்யாவில் நிலைமை வேறு. எண்ணெய் விலை சரிந்ததால் அங்கு பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது. ரஷ்ய பெண்மணி ஒருவர் “என் பணமெல்லாம் போய் விட்டது. வேலை போய் விட்டது. I don’t know what to do” என்று விரக்தியுடன் சிரித்துக் கொண்டு டெலிவிஷனில் பேட்டி கொடுக்கிறார்.
அடுத்ததாக தான் முதலீடு செய்திருக்கும் அல்லது டெபாசிட் செய்திருக்கும் வங்கிகள் திவாலாகி விடுமோ என்ற மக்களின் பயம் தான் பங்கு சந்தைகளை பாடாக படுத்துகிறது. புத்திசாலிகளால் நிர்வகிக்கப்படும் Morgan Stanley நிறுவனத்தின் பங்குகள் கடந்த வெள்ளியன்று பந்தாடப்பட்டதற்கு இது தான் காரணம்.
போகிற போக்கில், அமெரிக்க வங்கிகள் அனைத்தும் அரசுடமையாக்கப்படலாம். அந்த நிலைமை ஏற்பட்டால் சியாட்டில் நகரத்து வெல்ஸ் ஃபார்கோ வங்கி அதிகாரிகள் நம் ஊர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் போல வாடிக்கையாளர்களுக்கு தங்களின் திமிர் கலந்த சேவையை கொடுப்பார்கள். அதை நினைத்தால் கவலையாகத்தான் இருக்கிறது.
தற்போதுள்ள நிலைமையில் வங்கிகளின் பங்குகளை நான் தொடப்போவதில்லை. Goldman Sachs பங்குகளின் விலை மலிவாக இருக்கிறது. ஆனாலும் இன்னும் மலிவாகவோ அல்லது மரித்தோ போய்விடும் என்ற கவலையும் இருக்கிறது.
Related Link: உலகம் முழுவதும் பரவும் பயம்
Friday, October 10, 2008
சிங்கப்பூரின் பொருளாதார சரிவு
சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதாரமும் சரிந்து வருகின்றன. விபரங்களை இங்கே படிக்கலாம்.
ஆசிய நாடுகள் பலவற்றிலும் பங்கு சந்தைகள் மீண்டும் உயர வேண்டுமென்று மக்கள் கடவுளை பிரார்த்தனை செய்கிறார்கள். உலக அரசியல் தலைவர்களும் பொருளாதார நிபுணர்களும் எதிர்பார்த்ததை விட மிக அதிக பயம் உலகம் முழுதும் பரவி இருக்கிறது. டாட் காம் நீர்க்குமிழி உடைந்த போது இருந்த ஆபத்தை விட இப்போது அதிக ஆபத்து என்று பல நிபுணர்க்ள எச்சரிக்கிறார்கள்.
அமெரிக்காவில் நிலைமை சரியாவதற்கு 2009-ஏப்ரல் மாதமாவது ஆகும் என்று பரவலான கருத்து இருக்கிறது. நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யாருமே அதிக மெஜாரிட்டி பெறாவிடில், இன்னும் ரொம்ப கஷ்டம்.
அதிக கடனில் இருந்தால்…
கடன் சுமை அதிகமாக இருந்தால் அதை எப்படி சமாளிப்பது என்று யாஹூவில் எழுதியிருக்கிறார்கள். விபரங்கள் இங்கே. இது அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
கிரடிட் ரிப்போர்ட், balance transfer போன்ற சமாசாரங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும் பொருந்தும்.
Related Link: பங்கு சந்தைகளால் பாதிக்கப்படும் மனது
Thursday, October 09, 2008
பங்கு சந்தைகளால் பாதிக்கப்படும் மனது
சில நாட்களுக்கு முன்னால், நண்பர் குமரனின் பின்னூட்டத்தின் உதவியால் லாஸ் ஏஞ்சலஸ் இந்தியர் கார்த்திக் ராஜாராம் பற்றிய செய்தியை தெரிந்து கொள்ள முடிந்தது.
கார்த்திக் ராஜாராம் தன்னுடன் தன் குடும்பத்தையும் கொன்ற செய்தி மிக சோகமானது. பங்கு சந்தையில் பெரிய இழப்பு ஏற்பட்டதால் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் கருதுகிறார்கள். 

பெற்றோரே குழந்தைகளை கொல்வதை போல கொடுமை வேறு எதுவுமில்லை. சில வருடங்களுக்கு முன்னால் அரசியல்வாதிகளின் (ஜெயலலிதா?) தொல்லை தாங்காமல் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் நண்பர் தன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட போதும் மிகவும் வருத்தப்பட்டேன். இவர்களெல்லாம் எனக்கு சிறிதும் அறிமுகம் இல்லாதபோது கூட மனம் வேதனை அடைகிறது. சிறு குழந்தைகள் என்ன தவறு செய்தன? அவர்களை கொல்ல எப்படி பெற்றோருக்கு மனது வந்தது?
நமக்கே இவ்வளவு வேதனை இருக்கும் போது தன் ஏழு வயது செல்ல மகனின் நெற்றியில் துப்பாக்கியை வைக்கும் போது கார்த்திக் ராஜாராமின் மனது என்ன பாடுபட்டிருக்கும்? சில வருடங்களுக்கு முன்னால் லண்டன் பத்திரிகைகளில் “வின்னர்” என்று குறிப்பிடப்பட்ட கார்த்திக்கின் நிலைமை ஏழே வருடத்தில் தலைகீழாக மாறியது வேதனைக்குரியது.
தானே போய் விட்டபிறகு குடும்பத்தை யார் பார்த்துக் கொள்வது என்று நினைத்து இவரே கொன்று விட்டார். செப்டம்பர் 16 அன்று துப்பாக்கி வாங்கிய போதே அவருக்கு இந்த எண்ணம் தீவிரமாக இருந்திருக்க வேண்டும். ஆனாலும் அவரது மனைவியும் குடும்பத்தினரும் அவருடைய பாதிக்கப்பட்ட மனநிலைமையை புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம்.
“that man is never relaxed” என்று பக்கத்து வீட்டு பெண்மணி கூறியிருக்கிறார். அது தான் பெரிய பிரச்னையே. மனது அமைதியாக இல்லாதபோது இது போல லாஜிக் இல்லாத முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது.
குறிப்பிட்ட அளவுக்கு மேலே பணம் இழந்தால் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், தன்னுடைய $500,000 முதலீடு $300,000-ஆக மாறும் போது அதை விற்று விட்டு பணத்தை எடுக்க மனது வருவதில்லை. “நான் எடுத்த முடிவு எப்படி தவறாகும்? நிச்சயமாக என் கணக்கு இன்னும் மூன்றே மாதத்தில் $500,000க்கு திரும்ப போகும்” என்று மனதுக்குள் சாத்தான் அறிவுரை சொல்லும். “stop loss என்பதெல்லாம் மூடர்களின் வாதம்” என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வோம்.
இதெல்லாம் எனக்கும் நடந்திருக்கிறது. 2001-ல் Stop loss போடாமல் Juniper Networks (JNPR) பங்கில் covered calls எழுதியிருந்தேன். சில நாட்களில் செப்டம்பர் 11 வந்தது. அடுத்த பத்து நாட்களில் என்னுடைய நஷ்டம் $5,000க்கு மேல். அப்போதும் விற்காமல் காத்திருந்தேன். வைதேகி காத்திருந்தாள் கதையாகி விட்டது. கடைசியில் மனது வந்து Juniper networksக்கு டாடா சொல்லும் போது $12,000 நஷ்டம்.
பங்கு சந்தைகளில் தான் போட்ட முதலீடு மூன்று மடங்கானதை பெருமையாக சொல்பவர்கள், தன் நஷ்டத்தைப் பற்றி பேசவே மாட்டார்கள். ஈகோ தான் காரணம். இதில் ஈகோவுக்கு வேலையே இல்லை. பங்கு சந்தையில் பல விஷயங்கள் நம் கையில் இல்லை. அதுதான் நிதர்சனமான உண்மை. பத்து பைசாவை பங்கு சந்தையில் போடும் முன்பே, அதில் நம் எதிர்பார்ப்பு என்ன, எவ்வளவு நஷ்டத்தை தாங்க முடியும், போட்ட முதலீட்டில் ஒன்றும் திரும்ப வராவிடில் அதன் consequences என்ன, எவ்வளவு லாபம் வந்தால் விற்கலாம் என்று யோசித்துத்தான் முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் விட்டதால் எனக்கு கிடைத்த பாடம் JNPR.
இந்தியாவில் intra-day என்ற பெயரில் சூதாட்டம் நடப்பது போல அமெரிக்காவில் day trading என்ற பெயரில் சூதாட்டம் நடக்கின்றது. அதை சொல்லிக் கொடுப்பதற்கு பலர் training institutes நடத்தி நல்ல லாபம் சம்பாதிக்கிறார்கள். என் குடும்ப நண்பர் ஒருவர் IBM நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தார். அவரின் மனைவி EDS நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தார். அவர்களுக்கு San Jose நகரத்தில் மலைப்பகுதியில் நல்ல பங்களா இருக்கிறது. தான் ரிடையரானவுடன் சும்மா இருக்க முடியாமல், day trading institutes-களில் சேர்ந்து பல்லாயிரம் டாலர்களை இழந்து விட்டார். Day trading கற்றுக் கொள்வதற்காக கலிபோர்னியாவிலிருந்து ஃபுளோரிடா வரை போயிருக்கிறார். சமீபத்தில் பார்த்த போது அவரின் முகத்தில் துளி சந்தோஷமில்லை. Day trading, short-term trading செய்பவர்கள்/செய்ய நினைப்பவர்கள் அடிக்கடி தங்கள் மனநிலைமையை பரிசோதித்துக் கொள்வது நல்லது.
1999ம் வருடத்தில் அட்லாண்டாவில் மார்க் பார்ட்டன் என்பவர் day trading நிலையத்தில் ஒன்பது பேரை சுட்டுக் கொன்று விட்டு தன்னையும் கொன்றார். அதன் பிறகு சில மாதங்களுக்கு day trading institutes அடக்கி வாசித்தார்கள். கடந்த சில வருடங்களாக வேதாளம் திரும்பவும் முருங்கை மரத்தில்.
பங்கு சந்தை முதலீட்டாளர்கள் எப்படி, எதில், எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பது அவரவரின் risk tolerance என்பதை பொறுத்திருக்கின்றது. என்ன செய்தாலும், உங்களின் மன அமைதியை இழந்து விடாதீர்கள். It’s not worth it, even if you make millions.
பங்கு சந்தையினால் ஏற்படும் மனச்சோர்வு தற்கொலையில் தான் முடியும் என்பதில்லை. தன்னைத் தானே மெதுவாக கொல்லும் slow poison-ஆகவும் மாறலாம். சமீப கால பங்கு சந்தை ஏற்றத்தாழ்வுகளால் (volatility) பலர் நாள் முழுதும், முக்கியமாக இரவில் தூங்கும்போது, பல்லை நற நறவென கடித்துக் கொண்டேயிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த பழக்கம் Temporomandibular Joint (TMJ) என்ற வியாதியில் முடியும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றார்கள். மனச்சோர்வினால் சிலருக்கு அல்சர் வரும், சிலருக்கு வயிற்றுப்போக்கு வரும், சிலருக்கு மாரடைப்பு வரும். வால் ஸ்ட்ரீட்டில் பலருக்கு TMJ வரும் என்று எச்சரிக்கிறார்கள்.
TMJ வியாதியால் மிக பாதிக்கப்பட்டால், வாயை திறந்தாலே உயிர் போகும் அளவுக்கு வலி இருக்கும் என்று சொல்கிறார்கள். நம்மையும் அறியாமல், பல்லை வேகமாக கடிக்கும் போது அது 300 பவுண்டு அழுத்தத்தை பல்களுக்கு கொடுக்கும் என்றும் சொல்கிறார்கள். தியானம், யோகா மட்டும் இதை குணப்படுத்தாது. பல் மருத்துவரிடம் சென்று, பல்களை அளவெடுத்து, Night guard செய்து அதை தூங்கும்போது மாட்டிக் கொண்டால் தான் குணமடையும்.
தற்போது உள்ள நிலைமையில் உலகில் பல முதலீட்டாளர்களுக்கு தீவிர மனச்சோர்வு உள்ளது. கார்த்திக் ராஜாராம் போன்றவர்கள் மனதுக்குள்ளே வேதனை சுமந்து கொண்டு அது ஒரு நாள் வெடித்து அவர் குடும்பமே அழிந்து போனது. தன் பண இழப்புக்கு Bankruptcy file செய்து விட்டு சிறிய அபார்ட்மென்டுக்கு மாறியிருந்தாலே அவரின் பணப்பிரச்னை அதிகமாக பாதித்திருக்காது. என்ன வேதனையாக இருந்தாலும், அதை நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டால் பாதி வேதனை குறையும். நெருங்கிய நண்பர்கள்/உறவினர்கள் யாருமே இல்லையென்றால், நாம் வாழும் வாழ்க்கைக்கே அர்த்தமில்லை. இதைச் சொன்னவர் சாம் பிட்ரோடா. அதைப்பற்றி தனி பதிவே எழுதலாம்.
இந்தியாவிலும் பல முதலீட்டாளர்கள் நிறைய பணத்தை இழந்திருக்கிறார்கள். என் குடும்ப நண்பர் பங்கு சந்தை ட்ரேடிங்கை மிக தீவிரமாக செய்து கொண்டிருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்னால் பேசும் போது “ஸ்டாக்கையெல்லாம் ஓரம் கட்டி விட்டு, இன்சூரன்ஸ் ஏஜன்டாக இருக்கிறேன்” என்கிறார்.
பங்கு சந்தை என்பது சூதாட்டம் கிடையாது. ஆனால் அதை சூதாட்டமாக விளையாடுபவர்கள் கோடிக்கணக்கானோர். முறைப்படி, ஒரு ஒழுக்கத்துடன் பங்கு சந்தையில் நல்ல பங்குகளையும்/பரஸ்பர நிதிகளையும் தேர்ந்தெடுத்து நீண்ட கால முதலீடு செய்பவர்கள் மிகப் பெரிய பணக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். Warren Buffet ஒரு உதாரணம். வால் மார்ட் (WMT) பங்குகளை இருபது வருடங்களாக வைத்திருப்பவரை பார்த்திருக்கிறேன். இந்தியாவில் வடக்கே ஒரு குக்கிராமத்தில் விப்ரோ பங்குகளை பல வருடங்களாக விற்காமல் ஒரு முதியவர் வைத்திருக்கிறார். அவற்றின் மதிப்பு பல கோடி. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
நீண்ட கால முதலீடு செய்தால் தான் நாம் நிம்மதியாக இருக்கலாம். குடும்பமும் நிம்மதியாக இருக்கும்.
Wednesday, October 08, 2008
வட்டி விகிதம் குறைக்கப்பட்டது
உலக மத்திய வங்கிகள் ஒன்று சேர்ந்து வட்டி விகிதத்தை குறைத்திருக்கின்றன. அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, கனடா நாடுகளுடன் சீனாவும் வட்டி விகிதத்தை குறைத்திருக்கின்றது. இருந்தாலும், பங்கு சந்தைகளின் futures கீழே விழுந்து கொண்டிருக்கிறது.
உலக நாடுகள் பல சேர்ந்து வட்டி விகிதத்தை குறைத்திருப்பது நல்ல செய்தி. நீண்ட கால முதலீடு செய்பவர்கள் நல்ல பங்குகளை வாங்குவதற்கு இது சரியான நேரம். Short-term trading செய்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். You may lose all… just like that.
Lehman brothers-ன் தாக்கம் ஹாங்காங் நாட்டிலும் தெரிகின்றது. தங்கள் பணத்தை lehman bonds-களில் இழந்த மக்கள் போராட்டம் நடத்துகின்றார்கள்.


Related Link:
உலகம் முழுவதும் பரவும் பயம்
Tuesday, October 07, 2008
உலகம் முழுவதும் பரவும் பயம்
வால் ஸ்ட்ரீட்டின் பயம் உலகம் முழுதும் எதிரொலிக்கின்றது. சில மணி நேரங்களுக்கு முன்னால் ஆஸ்திரேலிய மத்திய வங்கி 1% வட்டி விகிதத்தை குறைத்திருக்கின்றது. ஆஸ்திரேலிய வங்கி அதிகாரிகள் நிச்சயமாக மற்ற நாடுகளின் மத்திய வங்கி உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி தான் இந்த முடிவை எடுத்திருப்பார்கள். இன்னும் சில நாடுகளில் வட்டி விகிதக் குறைப்பை எதிர்பார்க்கலாம். 


அமெரிக்காவில் இன்னும் 0.75% வட்டி விகிதம் குறைக்க வேண்டும் என்று பில் கிராஸ் உட்பட பலர் வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஜப்பான் போல 0% வட்டி வந்தால் தான் இவர்கள் சும்மா இருப்பார்கள் போல தோன்றுகிறது. அமெரிக்காவில் தற்போது இருக்கும் பணவீக்க நிலைக்கு வட்டி விகிதத்தை குறைப்பது நல்லதல்ல. இருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், புஷ் வட்டி விகிதத்தை குறைத்து நல்ல பெயர் வாங்க முயற்சிப்பார்.
சரியாக செயல்படாமல் மக்களின் பணத்தை ஏப்பம் விட்ட வங்கிகளுக்கு மட்டும் உதவாமல், அமெரிக்காவில் வியாபாரிகளுக்கு குறைந்த கால கடன்களை (short term business loans) வழங்குவதற்கு அமெரிக்க மத்திய வங்கி முயற்சி எடுத்து வருகின்றது.
700 பில்லியன் டாலர் பில் நிறைவேற்றப்பட்டாலும், முதலீட்டாளர்களுக்கு இன்னும் திருப்தி வரவில்லை. சப்-பிரைம் பிரச்னையாக ஆரம்பித்த தலைவலி இன்று “யாரை நம்புவது (fundamental question of trust)” என்ற நிலைமைக்கு வந்து நிற்கின்றது. வியாபாரம் செய்பவர்களால் கடன் வாங்க முடியவில்லை. கடன் கொடுக்கும் வங்கிகள் தான் யாரிடம் கடன் வாங்குவது என்று யோசிக்கின்றன. தற்போது உள்ள நிலைமையில் அமெரிக்காவில் வட்டிக்கடைகளின் (pawn shops) காட்டில் மழை. Cash advance, payday advance என்ற பெயரில் அதிக வட்டிக்கு பணம் விட்டு சம்பாதிக்கிறார்கள்.
ஐரோப்பிய நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளுக்கு உத்திரவாதம் கொடுக்கின்றது. மக்களிடம் பரவும் பயத்தை கட்டுப்படுத்துவது மிக முக்கியமாகி விட்டது. பல நாட்டு மத்திய வங்கிகள் இன்று வட்டி விகிதத்தை குறைத்தால் பங்கு சந்தைகள் மீண்டும் உயரும். ஆனாலும் அது ஒரு தற்காலிக band-aid தான்.
வங்கிகளின் மீதும் அரசாங்கத்தின் மீதும் மக்களுக்கு முழு நம்பிக்கை வரும் வரை இந்த ரோலர் கோஸ்டர் பயணம் தொடரும்.
Related Links:
பொருளாதார சரிவு – 2008
செப்டம்பர் 15, 2008
Monday, October 06, 2008
ஹிந்தி சினிமாவும் அமெரிக்க பொருளாதார சரிவும்
அமெரிக்காவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால், அது பாலிவுட் படத்தயாரிப்பாளர்களையும் பாதிக்கின்றது. இது பற்றிய விபரங்கள் இங்கே.
இது படிக்க வேடிக்கையாக தெரிந்தாலும் உண்மை. ஒரு காலத்தில் அரபு நாட்டினர் பாலிவுட் படங்களுக்கு பண உதவி செய்தனர். இப்போதும் அவர்கள் நிழல் மனிதர்களாக செயல் படுகின்றார்கள். ஆனால் சட்ட ரீதியாக, சினிமாவை ஒரு தொழில்துறையாக பாவித்து அதில் லண்டன்/அமெரிக்கா முதலீட்டாளர்கள் பல கோடிகளை முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். இப்போது அதிலும் அடி.
