உலக பொருளாதாரத்தை பயமுறுத்திய புயல் கரை கடந்து விட்டது போல தான் தோன்றுகிறது. அமெரிக்க தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலைமையில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை மேலும் 0.5 சதவிகிதம் குறைத்திருக்கிறது. டிசம்பரில் இன்னும் 0.5 சதவிகிதம் குறைய வேண்டும் என்று பலர் பிரார்த்தனை செய்கிறார்கள்.
உலகம் முழுவதும் வங்கிகளின் நிலைமை பல மடங்கு பரவாயில்லை. உலக வங்கிகள் மற்ற வங்கிகளுடன் கடன் பரிவர்த்தனை செய்யும் போது அவர்கள் பொதுவாக LIBOR என்று செல்லமாக அழைக்கப்படும் London Interbank Overnight Lending Rate-ல் கடன் கொடுத்து/வாங்குகிறார்கள். வங்கிகள் செப்டம்பரில் கண் பிதுங்கி அடி வாங்கும் போது LIBOR 2.8 சதவிகிதத்திலிருந்து 4.8 சதவிகிதம் உயர்ந்தது. அதனால் வங்கிகள் வாங்கிய கடன்களின் வட்டி உயர்ந்தது. 
இப்போது LIBOR 3.03 சதவிகிதத்துக்கு குறைந்து விட்டதால் வங்கிகள் சுலபமாக கடன் கொடுத்து/வாங்க முடிகிறது. உலகம் முழுவதும் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்ததாலும், தோல்வியடைந்த வங்கிகளுக்கு தோள் கொடுத்ததாலும், வங்கிகளின் நிலைமை ஓரளவுக்கு சரியாகி வருகிறது. அதனால் தான் இன்று அமெரிக்க பங்கு சந்தையில் வங்கிகளின் பங்குகள் உயர்ந்தது.
இது தவிர வங்கிகள் “மிக” குறைந்த வட்டிக்கு மத்திய வங்கியிடமிருந்து கடன் வாங்கி அதிக வட்டிக்கு தன் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பதால் வங்கிகள் கணிசமான லாபத்தை சம்பாதிக்க ஆரம்பித்திருக்கின்றன. இதை எதிர்பார்த்து தான் மத்திய வங்கியும் மிக தாராள மனதுடன் பல சலுகைகளை வங்கிகளுக்கு கொடுத்தது. அமெரிக்க மத்திய வங்கி எதிர்பார்த்தது போல சில நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன. மக்களின் மனதில் முழு நம்பிக்கை வர இன்னும் பல வாரங்களாகும்.
அடுத்த வாரம் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுபவர் மெஜாரிட்டி வாக்குகள் பெற்று வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும். 2000-ல் நடந்தது போல குழப்பமாகி விட்டால் பங்கு சந்தை மறுபடியும் விழும். சமீபத்திய கருத்து கணிப்புகளை பார்க்கும் போது ஒபாமா பெரும்பாலான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் போல தான் தோன்றுகிறது.
Related Link:
Libor Falls on Rate Cuts
Friday, October 31, 2008
உலக வங்கிகளின் நிலவரம்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment