Monday, October 13, 2008

அமெரிக்க வங்கிகளால் ஏற்பட்ட நெருக்கடி

நேற்று ஜெர்மனியிலிருந்து திரு. சந்திரன் கேட்ட கேள்விகளுக்காக இந்த பதிவு.

அவர் கேட்ட கேள்விகள்:

1. அமெரிக்க வங்கிகளின் நிதி நெருக்கடி எவ்வாறு ஐரோப்பிய வங்கிகளைப் பாதித்தன?

2. அமெரிக்க வங்கிகள் திவாலகிப் போனாலும் பணம் எப்படியோ அமெரிக்கப் பணச் சுற்றோட்டத்தில் தானே இருக்க வேண்டும். வங்கிகளில் இருந்து வெளியேறிய பணம் எங்கே சென்றுவிட்டன?

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு முன்னால் ஒரு flashback.

2001-ல் டாட் காம் நீர்க்குமிழி வெடித்தவுடன் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை வெகுவாக குறைத்தது. செப்டம்பர் 11ல் நடந்த துயர சம்பவத்துக்குப்பிறகு வட்டி விகிதம் இன்னும் குறைந்தது.

U.S. Fed Fund Interest Rate Chart

2002-ல் அமெரிக்காவில் பல மாநிலங்களில் வீடு விலைகள் உயர ஆரம்பித்தன. பங்கு சந்தையிலிருந்து ஓடி வந்த அனைவரும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். சில டாக்டர்கள் கூட ரியல் எஸ்டேட் தொழில் செய்ய ஆரம்பித்தார்கள்.

வங்கிகள் நல்ல லாபத்தில் கொழித்தன. மத்திய வங்கியினிடம் குறைந்த வட்டியில் கடன் பெற்று மக்களிடம் 8% வட்டி வாங்கியதில் வீட்டு கடன் கொடுக்கும் வங்கிகளின் காட்டில் மழை. (அது இன்று சுனாமியாக மாறி விட்டது). வானத்திலிருந்து கொட்டும் பணத்தை கண்டு ருசி கண்ட சில வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக வீட்டு கடன் கேட்கும் அனைவருக்கும் கடன்களை வாரி வழங்கியது.

ரியல் எஸ்டேட் தரகர்களின் பங்கு இதில் மிக அதிகம். “வீட்டு விலையில் வெறும் 1% பணம் கொடுத்தால் போதும், நீங்கள் $500,000 வீடு வாங்கலாம்” என்று ரேடியோவில் விளம்பரம் கொடுத்தார்கள். சில மாதங்கள் கழித்து அந்த 1% down payment கூட தேவைப்படவில்லை. 100% கடனையும் சில வங்கிகள் அதிக வட்டியில் கொடுக்க ஆரம்பித்தன. அப்படித்தான் சப்-பிரைம் பிரச்னை உருவாகியது. 1% மற்றும் 0% downpayment கடன்கள் மிக ரிஸ்க்கானது என்று வங்கிகளுக்கும் தெரியும். அதனால் அது போன்ற கடன்களை மற்ற வங்கிகளுக்கு விற்று விடுவதில் ஆர்வம் காட்டினார்கள். ஏதாவது பிரச்னையானால் நாம் தப்பித்துக் கொள்வோம் என்ற புத்திசாலித்தனம்.

அப்படிப்பட்ட புத்திசாலிகளில் சிலர்: Indymac Bank, Countrywide Finacial and Washington Mutual. இவர்கள் அனைவரும் இன்று காணாமல் போய் விட்டார்கள்.

சப்-பிரைம் கடன்களை விற்பதற்கு Countrywide போன்ற வங்கிகள் முயற்சித்த போது அதைக் கேள்விப்பட்ட சில வால் ஸ்ட்ரீட் வங்கிகள் குயுக்தியாக சிந்தித்தன. “அப்படிப்பட்ட கடன்களை ஏன் பாண்டுகளாக (Bonds) மாற்றி உள்நாட்டு/வெளிநாட்டு சந்தைகளில் விற்கக் கூடாது” என்று ஐடியா செய்து அதில் பல மில்லியன்கள் சம்பாதித்தன. அந்த பாண்டுகளுக்கு இன்னொரு பெயர் Collateralized Debt Obligation (CDO).

வீட்டு கடன்களை பங்குகளாகவும் பாண்டுகளாகவும் மாற்றி விற்பது அமெரிக்காவில் 1970லிருந்து இருக்கிறது. இது புதிதல்ல. ஆனால், சப்-பிரைம் கடன்களை பங்குகளாகவும் பாண்டுகளாகவும் வால் ஸ்ட்ரீட் வங்கிகள் மாற்றியது இது தான் முதல் முறை.

கேள்வி 1: அமெரிக்க வங்கிகளின் நிதி நெருக்கடி எவ்வாறு ஐரோப்பிய வங்கிகளைப் பாதித்தன?

வால் ஸ்ட்ரீட் வெளியிட்ட CDOக்களை உலக வங்கிகள் அனைத்தும் வாங்கின. ஐரோப்பிய வங்கிகள் உட்பட. அமெரிக்க வங்கிகள் மட்டும் அமெரிக்க வீட்டுகடன்களை வைத்து சூதாட்டம் நடத்தவில்லை. அதில் கூட்டாளிகளாக ஐரோப்பிய வங்கிகளிலும் பங்கு பெற்றன. அதனால் தான் இப்போது ஐரோப்பிய வங்கிகளும் விழுகின்றன.

வீட்டு கடன்களை வாங்கியவர்கள் அதை முறைப்படி திரும்பக் கொடுத்திருந்தால் வால் ஸ்ட்ரீட்டின் வங்கிகளின் கணக்கு சரியாக இருந்திருக்கும். ஆனால் சொற்ப வருமானம் உள்ளவர்களுக்கு அதிக வட்டியில் கடன் கொடுத்து அது முழுதாக திரும்ப வரும் என்று பகல் கனவு கண்டார்கள். அதனால் இன்று பல மக்களின் ரிடையர்மென்ட் கனவு பொய்த்துப் போனது.

ஐரோப்பிய வங்கிகள் விழுவதை தடுக்க முடியாமல் ஐரோப்பிய நாடுகள் தடுமாறுவதின் காரணத்தை ஜிம் ஜுபாக் வீடியோவில் விளக்குவதை இந்த பதிவில் காணலாம்.

Euro

கேள்வி 2: அமெரிக்க வங்கிகள் திவாலகிப் போனாலும் பணம் எப்படியோ அமெரிக்கப் பணச் சுற்றோட்டத்தில் தானே இருக்க வேண்டும். வங்கிகளில் இருந்து வெளியேறிய பணம் எங்கே சென்றுவிட்டன?

சுருக்கமாக சொல்வதென்றால் பெரும்பாலான பணம் காற்றில் கரைந்து விட்டன அல்லது வங்கி அதிகாரிகள் சுருட்டி கொண்டார்கள்.

கடனை திரும்ப கொடுக்க தகுதியில்லாதவர்களுக்கு பல லட்சம் டாலர்களை வங்கிகள் கடனாக கொடுத்தார்கள். அவர்களில் யாரும் வேண்டுமென்று ஏமாற்றவில்லையென்ற போதிலும் அவர்களுக்கு வேலை போன போது அல்லது வருமானம் குறைந்த போது, அவர்களால் வட்டி கட்டி முடியவில்லை. இது போல நாடு முழுதும் பரவலாக நடக்கும்போது அது வங்கிகளுக்கு பெரிய தலைவலியாக மாறி விட்டது.

காணாமல் போன பல பில்லியன் டாலர்களில் சில பில்லியன்கள் ரியல் எஸ்டேட் தரகர்களிடம் கமிஷனாக போய் விட்டன.

Lehman Brothers, Bear Stearns போன்ற வங்கிகளுக்கு எதிராக Goldman Sachs காயை நகர்த்தியதால், அந்த வங்கிகளின் நஷ்டம் Goldman Sachs-க்கு லாபம். அந்த வகையில் Goldmanக்கு பல பில்லியன் டாலர்கள் போய் விட்டது.

சில பில்லியன் டாலர்கள், காணாமல் போன வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு சம்பளவாகவும் போனஸாகவும் கொடுக்கப்பட்டது. இது பற்றிய விபரங்களை இங்கே படிக்கலாம்.

மண்ணில் விழுந்த வங்கிகளில் இனி என்ன பணம் மிச்சமிருந்தாலும், அந்த வங்கிகளின் bankruptcy வக்கீல்கள் அவற்றை ஃபீஸாக எடுத்துக் கொள்வார்கள்.

வங்கிகள் நடத்திய விளையாட்டில் வெற்றி பெற்றது Goldman Sachs மட்டும் தான். ஒரு வருடத்துக்கு முன்பே அவர்கள் உஷாராக சப்-பிரைமுக்கு எதிராக ட்ரேட் செய்தார்கள். இருந்தாலும், வங்கி செக்டர் மொத்தமாக அடி வாங்கியதால் அவர்களின் பங்கும் கீழே விழுந்து விட்டது. பங்குகளை short செய்பவர்கள் விளையாடியதும் இன்னொரு காரணம்.

இனி என்ன நடக்கும், இன்னும் எத்தனை வங்கிகள் விழும் என்று தெரியாது. ஆனாலும், என்னைப் பொறுத்த வரை, இந்த களேபரமெல்லாம் முடிந்த பிறகு Goldman Sachs முன்னை விட வலுமையாக வரும் என்று நினைக்கிறேன்.


தொடர்புள்ள வீடியோ:

CDO போன்ற நிதி சாதனங்கள் (Financial Instruments) எப்படி பொருளாதாரத்துக்கு சேதம் விளைவித்தன என்பதை ஒயின் பாட்டிலை வைத்து ஒருவர் அழகாக விளக்குகிறார் இங்கே.

மேலே உள்ள கட்டத்தில் வீடியோ தெரியாவிடில், அதை இங்கே பார்க்கலாம்.

2 comments:

eswaran said...

இந்த சிறிய கட்டுரையை படித்தபோது தமிழில் ஒரு நல்ல
பொருளாதார கட்டுரை படித்த நிறைவு ஏற்பட்டது.
அமெரிக்காவில் மிகு உற்பத்தி எந்த துறைகளில் எற்பட்டு-
ள்ளது என்பதை அறிய ஆவலாக உள்ளேன்

Bharathi said...

ஈஸ்வரன்: மிக்க நன்றி.

ராணுவம், பாதுகாப்பு, விமான நுட்பங்கள், கணிணி போன்ற துறைகளில் அமெரிக்காவில் அதிக உற்பத்தி இருப்பதாக தகவல். இவை ஒவ்வொரு வருடமும் மாறுபடுகிறது -- அரசியல் சுழற்சிகளுக்கு ஏற்றபடி.

Related Posts Plugin for WordPress, Blogger...