Thursday, October 09, 2008

பங்கு சந்தைகளால் பாதிக்கப்படும் மனது

சில நாட்களுக்கு முன்னால், நண்பர் குமரனின் பின்னூட்டத்தின் உதவியால் லாஸ் ஏஞ்சலஸ் இந்தியர் கார்த்திக் ராஜாராம் பற்றிய செய்தியை தெரிந்து கொள்ள முடிந்தது.

கார்த்திக் ராஜாராம் தன்னுடன் தன் குடும்பத்தையும் கொன்ற செய்தி மிக சோகமானது. பங்கு சந்தையில் பெரிய இழப்பு ஏற்பட்டதால் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் கருதுகிறார்கள்.

Karthik Rajaram

Krishna Rajaram

பெற்றோரே குழந்தைகளை கொல்வதை போல கொடுமை வேறு எதுவுமில்லை. சில வருடங்களுக்கு முன்னால் அரசியல்வாதிகளின் (ஜெயலலிதா?) தொல்லை தாங்காமல் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் நண்பர் தன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட போதும் மிகவும் வருத்தப்பட்டேன். இவர்களெல்லாம் எனக்கு சிறிதும் அறிமுகம் இல்லாதபோது கூட மனம் வேதனை அடைகிறது. சிறு குழந்தைகள் என்ன தவறு செய்தன? அவர்களை கொல்ல எப்படி பெற்றோருக்கு மனது வந்தது?

நமக்கே இவ்வளவு வேதனை இருக்கும் போது தன் ஏழு வயது செல்ல மகனின் நெற்றியில் துப்பாக்கியை வைக்கும் போது கார்த்திக் ராஜாராமின் மனது என்ன பாடுபட்டிருக்கும்? சில வருடங்களுக்கு முன்னால் லண்டன் பத்திரிகைகளில் “வின்னர்” என்று குறிப்பிடப்பட்ட கார்த்திக்கின் நிலைமை ஏழே வருடத்தில் தலைகீழாக மாறியது வேதனைக்குரியது.

தானே போய் விட்டபிறகு குடும்பத்தை யார் பார்த்துக் கொள்வது என்று நினைத்து இவரே கொன்று விட்டார். செப்டம்பர் 16 அன்று துப்பாக்கி வாங்கிய போதே அவருக்கு இந்த எண்ணம் தீவிரமாக இருந்திருக்க வேண்டும். ஆனாலும் அவரது மனைவியும் குடும்பத்தினரும் அவருடைய பாதிக்கப்பட்ட மனநிலைமையை புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம்.

“that man is never relaxed” என்று பக்கத்து வீட்டு பெண்மணி கூறியிருக்கிறார். அது தான் பெரிய பிரச்னையே. மனது அமைதியாக இல்லாதபோது இது போல லாஜிக் இல்லாத முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது.

குறிப்பிட்ட அளவுக்கு மேலே பணம் இழந்தால் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், தன்னுடைய $500,000 முதலீடு $300,000-ஆக மாறும் போது அதை விற்று விட்டு பணத்தை எடுக்க மனது வருவதில்லை. “நான் எடுத்த முடிவு எப்படி தவறாகும்? நிச்சயமாக என் கணக்கு இன்னும் மூன்றே மாதத்தில் $500,000க்கு திரும்ப போகும்” என்று மனதுக்குள் சாத்தான் அறிவுரை சொல்லும். “stop loss என்பதெல்லாம் மூடர்களின் வாதம்” என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வோம்.

இதெல்லாம் எனக்கும் நடந்திருக்கிறது. 2001-ல் Stop loss போடாமல் Juniper Networks (JNPR) பங்கில் covered calls எழுதியிருந்தேன். சில நாட்களில் செப்டம்பர் 11 வந்தது. அடுத்த பத்து நாட்களில் என்னுடைய நஷ்டம் $5,000க்கு மேல். அப்போதும் விற்காமல் காத்திருந்தேன். வைதேகி காத்திருந்தாள் கதையாகி விட்டது. கடைசியில் மனது வந்து Juniper networksக்கு டாடா சொல்லும் போது $12,000 நஷ்டம்.

பங்கு சந்தைகளில் தான் போட்ட முதலீடு மூன்று மடங்கானதை பெருமையாக சொல்பவர்கள், தன் நஷ்டத்தைப் பற்றி பேசவே மாட்டார்கள். ஈகோ தான் காரணம். இதில் ஈகோவுக்கு வேலையே இல்லை. பங்கு சந்தையில் பல விஷயங்கள் நம் கையில் இல்லை. அதுதான் நிதர்சனமான உண்மை. பத்து பைசாவை பங்கு சந்தையில் போடும் முன்பே, அதில் நம் எதிர்பார்ப்பு என்ன, எவ்வளவு நஷ்டத்தை தாங்க முடியும், போட்ட முதலீட்டில் ஒன்றும் திரும்ப வராவிடில் அதன் consequences என்ன, எவ்வளவு லாபம் வந்தால் விற்கலாம் என்று யோசித்துத்தான் முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் விட்டதால் எனக்கு கிடைத்த பாடம் JNPR.

இந்தியாவில் intra-day என்ற பெயரில் சூதாட்டம் நடப்பது போல அமெரிக்காவில் day trading என்ற பெயரில் சூதாட்டம் நடக்கின்றது. அதை சொல்லிக் கொடுப்பதற்கு பலர் training institutes நடத்தி நல்ல லாபம் சம்பாதிக்கிறார்கள். என் குடும்ப நண்பர் ஒருவர் IBM நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தார். அவரின் மனைவி EDS நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தார். அவர்களுக்கு San Jose நகரத்தில் மலைப்பகுதியில் நல்ல பங்களா இருக்கிறது. தான் ரிடையரானவுடன் சும்மா இருக்க முடியாமல், day trading institutes-களில் சேர்ந்து பல்லாயிரம் டாலர்களை இழந்து விட்டார். Day trading கற்றுக் கொள்வதற்காக கலிபோர்னியாவிலிருந்து ஃபுளோரிடா வரை போயிருக்கிறார். சமீபத்தில் பார்த்த போது அவரின் முகத்தில் துளி சந்தோஷமில்லை. Day trading, short-term trading செய்பவர்கள்/செய்ய நினைப்பவர்கள் அடிக்கடி தங்கள் மனநிலைமையை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

1999ம் வருடத்தில் அட்லாண்டாவில் மார்க் பார்ட்டன் என்பவர் day trading நிலையத்தில் ஒன்பது பேரை சுட்டுக் கொன்று விட்டு தன்னையும் கொன்றார். அதன் பிறகு சில மாதங்களுக்கு day trading institutes அடக்கி வாசித்தார்கள். கடந்த சில வருடங்களாக வேதாளம் திரும்பவும் முருங்கை மரத்தில்.

பங்கு சந்தை முதலீட்டாளர்கள் எப்படி, எதில், எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பது அவரவரின் risk tolerance என்பதை பொறுத்திருக்கின்றது. என்ன செய்தாலும், உங்களின் மன அமைதியை இழந்து விடாதீர்கள். It’s not worth it, even if you make millions.

பங்கு சந்தையினால் ஏற்படும் மனச்சோர்வு தற்கொலையில் தான் முடியும் என்பதில்லை. தன்னைத் தானே மெதுவாக கொல்லும் slow poison-ஆகவும் மாறலாம். சமீப கால பங்கு சந்தை ஏற்றத்தாழ்வுகளால் (volatility) பலர் நாள் முழுதும், முக்கியமாக இரவில் தூங்கும்போது, பல்லை நற நறவென கடித்துக் கொண்டேயிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த பழக்கம் Temporomandibular Joint (TMJ) என்ற வியாதியில் முடியும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றார்கள். மனச்சோர்வினால் சிலருக்கு அல்சர் வரும், சிலருக்கு வயிற்றுப்போக்கு வரும், சிலருக்கு மாரடைப்பு வரும். வால் ஸ்ட்ரீட்டில் பலருக்கு TMJ வரும் என்று எச்சரிக்கிறார்கள்.

TMJ வியாதியால் மிக பாதிக்கப்பட்டால், வாயை திறந்தாலே உயிர் போகும் அளவுக்கு வலி இருக்கும் என்று சொல்கிறார்கள். நம்மையும் அறியாமல், பல்லை வேகமாக கடிக்கும் போது அது 300 பவுண்டு அழுத்தத்தை பல்களுக்கு கொடுக்கும் என்றும் சொல்கிறார்கள். தியானம், யோகா மட்டும் இதை குணப்படுத்தாது. பல் மருத்துவரிடம் சென்று, பல்களை அளவெடுத்து, Night guard செய்து அதை தூங்கும்போது மாட்டிக் கொண்டால் தான் குணமடையும்.

தற்போது உள்ள நிலைமையில் உலகில் பல முதலீட்டாளர்களுக்கு தீவிர மனச்சோர்வு உள்ளது. கார்த்திக் ராஜாராம் போன்றவர்கள் மனதுக்குள்ளே வேதனை சுமந்து கொண்டு அது ஒரு நாள் வெடித்து அவர் குடும்பமே அழிந்து போனது. தன் பண இழப்புக்கு Bankruptcy file செய்து விட்டு சிறிய அபார்ட்மென்டுக்கு மாறியிருந்தாலே அவரின் பணப்பிரச்னை அதிகமாக பாதித்திருக்காது. என்ன வேதனையாக இருந்தாலும், அதை நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டால் பாதி வேதனை குறையும். நெருங்கிய நண்பர்கள்/உறவினர்கள் யாருமே இல்லையென்றால், நாம் வாழும் வாழ்க்கைக்கே அர்த்தமில்லை. இதைச் சொன்னவர் சாம் பிட்ரோடா. அதைப்பற்றி தனி பதிவே எழுதலாம்.

இந்தியாவிலும் பல முதலீட்டாளர்கள் நிறைய பணத்தை இழந்திருக்கிறார்கள். என் குடும்ப நண்பர் பங்கு சந்தை ட்ரேடிங்கை மிக தீவிரமாக செய்து கொண்டிருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்னால் பேசும் போது “ஸ்டாக்கையெல்லாம் ஓரம் கட்டி விட்டு, இன்சூரன்ஸ் ஏஜன்டாக இருக்கிறேன்” என்கிறார்.

பங்கு சந்தை என்பது சூதாட்டம் கிடையாது. ஆனால் அதை சூதாட்டமாக விளையாடுபவர்கள் கோடிக்கணக்கானோர். முறைப்படி, ஒரு ஒழுக்கத்துடன் பங்கு சந்தையில் நல்ல பங்குகளையும்/பரஸ்பர நிதிகளையும் தேர்ந்தெடுத்து நீண்ட கால முதலீடு செய்பவர்கள் மிகப் பெரிய பணக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். Warren Buffet ஒரு உதாரணம். வால் மார்ட் (WMT) பங்குகளை இருபது வருடங்களாக வைத்திருப்பவரை பார்த்திருக்கிறேன். இந்தியாவில் வடக்கே ஒரு குக்கிராமத்தில் விப்ரோ பங்குகளை பல வருடங்களாக விற்காமல் ஒரு முதியவர் வைத்திருக்கிறார். அவற்றின் மதிப்பு பல கோடி. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

நீண்ட கால முதலீடு செய்தால் தான் நாம் நிம்மதியாக இருக்கலாம். குடும்பமும் நிம்மதியாக இருக்கும்.

7 comments:

தென்றல் said...

சமீபத்தில் படித்த வேதனையான சம்பவம்! இவரென்ன சைக்கோவா என்ற சந்தேகம்கூட வந்தது..;(

நம்ம ஊருல நினைச்சிபாருங்க.. எல்லாரும் பங்குச்சந்தைல பணம் சம்பாதிக்கிறாங்களேனு 'கண்ண மூடிகிட்டு' போட்டவங்க எத்தனைபேரு...

மிக...மிக எச்சரிக்கையான அருமையான பதிவு, பாரதி!

இதுபோன்ற உண்மைகளை படித்து, தெளிவு பெற வேண்டிய நேரமிது!!

மங்களூர் சிவா said...

//
நீண்ட கால முதலீடு செய்தால் தான் நாம் நிம்மதியாக இருக்கலாம். குடும்பமும் நிம்மதியாக இருக்கும்.
//

அருமையா சொன்னீங்க. நிறைய பேருக்கு இது தெரிஞ்சிருந்தாலும் முதலீட்டாளர்களா களத்தில் இறங்கி கால ஓட்டத்தில் சூதாடிகளாக மாறுபவர்கள் அதிகரித்தே வருகிறார்கள்.

கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI said...

பங்கு சந்தையில் முதலீடு செய்வர்கள் முதலில் தன்னம்பிக்கை உள்ளவராக இருக்கவேண்டும்
லாபம் நஷ்டம் என்பது தொழிலில் சகஜம் தானே...பாவம் படித்த முட்டாளாகி விட்டார்..
இது போன்ற நிகழ்வு இனி எந்த நாட்டிலும் நடக்க கூடாது ஆண்டவனிடம் வேண்டுகிறேன்...

-கிளியனூர் இஸ்மத் துபாய்

www.kiliyanur-ismath.blogspot.com

Thekkikattan|தெகா said...

பாரதி,

இது தொடர்ப லேமென் தொனியில ஒரு பதிவு போட்டுருக்கேன். உங்க பதிவு இன்னும் கொஞ்சம் ஆழமா பேசுறதுனாலே உங்க பதிவுவோட லிங்க் அங்கே கொடுக்கிறேன். அனுமதி வழங்குங்கோ. Thanks!

என்னோட பதிவு... பேராசையின் விளிம்பு நிலையில்:Greed - The Dead End!

Bharathi said...

தென்றல், சிவா, இஸ்மத், தெகா: வணக்கம். உங்கள் அனைவருக்கும் நன்றி.

தெகா: நிச்சயமாக. நன்றி.

Jayashree said...

இந்த நீர்குமிழி உடைந்து , பணம், மனம், குணம் எல்லாம் போய் பலரையும் பரிதவிக்க வைத்துவிட்டது. இதில் சிக்கி பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த அனுபவம் தந்த படிப்பினை இனிமேலும் இந்த மாதிரி இழப்புக்கள் வராம காப்பாத்தட்டும்.அடுத்த குமிழி (bubble)" Alternate Energy " (சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை)

Bharathi said...

நன்றி ஜெயஸ்ரீ. புயல் அடித்து ஓய்ந்த பிறகு திரும்பவும் நடுக்கடலுக்கு பலர் தற்காப்பில்லாமல் செல்வார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...