Monday, April 07, 2008

பொருளாதார சரிவு – 2008

வங்கிகள் வாங்கிய அடியால் அடியேனும் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி எழுத முடியவில்லை. சமீபத்தில் வலையுலக நண்பர் மின்னஞ்சல் அனுப்பி ஞாபகப்படுத்தியதால், அவருக்கு நான் அனுப்பிய பதிலையே இந்த பதிவாக எழுதியிருக்கிறேன்.

மத்திய வங்கியின் தலைவரே சொல்லிவிட்டார், பொருளாதார சரிவு வந்து விடும் என்று. சில வாரங்களுக்கு முன்னால் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை நடத்திய கருத்துக் கணிப்பில் பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் பொருளாதார சரிவு ஏற்கனவே ஆரம்பித்து விட்டது என்று கருத்து கூறியுள்ளார்கள். வேலை இழந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது நாம் தற்போது பொருளாதார சரிவின் காலத்தில் தான் இருப்பது போல தோன்றுகிறது.

இந்திய சந்தைகளும் அமெரிக்க பொருளாதார சரிவு மற்றும் அமெரிக்க வங்கி குளறுபடிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்திய சந்தைகளின் சமீப கால அபார லாபங்கள் இனி மேல் தொடராது என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. இந்திய சந்தை மட்டுமல்ல, பொதுவாக “emerging markets” அனைத்துமே இனி மேல் பெரிதாக லாபம் கொடுக்காது என்று பல நிபுணர்கள் கணிக்கிறார்கள். நான் இந்த வலைப்பதிவை ஆரம்பிக்கும் போது என் முதல் பதிவு emerging markets பற்றியது. அக்டோபர் 2005-லிருந்து இரண்டு வருடங்களாக சக்கை போடு போட்ட emerging market பரஸ்பர நிதிகள் தற்சமயம் நிதானமாக நடை போடுகின்றன. உங்களின் கணக்கில் இப்படிப்பட்ட பரஸ்பர நிதிகள் இருந்தால் அவற்றின் விகிதங்களை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.

பிரேசிலும் ரஷ்யாவும் இன்னும் வீறு நடை போடுகின்றன. இந்திய மற்றும் சீன சந்தைகளின் முதலீட்டாளர்களுக்கு பயம் வந்திருக்கிறது. போன வருடம் வரை தங்களின் பங்குகள் கீழே விழாது என்று அதீத நம்பிக்கையில் இருந்தவர்கள் தற்சமயம் உண்மை நிலைமையை புரிந்து கொண்டிருக்கிறார்கள். தாய்லாந்து நாட்டில் புத்த மத துறவிகள் மந்திரித்து கொடுத்த தாயத்துக்களை கட்டிக் கொண்டு பங்கு சந்தையில் விளையாடினால் நஷ்டம் வராது என்று சூதாடி தாய்லாந்து நாட்டவர் பலர் இன்று கடனிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள். போன வருடம் இந்த தாயத்துக்களின் மார்க்கெட் 1.5 பில்லியன் டாலர்கள் என்று தாய்லாந்து வங்கி புள்ளி விபரம் சொல்கிறது.

தாய்லாந்து நாட்டு தாயத்துக்கள்

இந்த வருடம் பொருளாதார சரிவிலிருந்து அமெரிக்க பங்கு சந்தை மீளும்போது தொழில் நுட்ப பங்குகள் நல்ல லாபம் கொடுக்கும் என்று பரவலான கருத்து இருக்கிறது. கீழ்க்கண்ட டெக் பரஸ்பர நிதிகள் கடந்த காலங்களில் நல்ல லாபம் கொடுத்திருக்கின்றன. இவற்றின் மேல் ஒரு கண் வைத்திருங்கள்.

Columbia Technology (CMTFX)
Fidelity Select Computers (FDCPX)
Matthews Asian (MATFX)
Fidelity Select Software (FSCSX)

கீழ்க்கண்ட பரஸ்பர நிதிகளும் வருங்காலத்தில் பிரகாசிக்கலாம். இவை மீது உங்களின் இன்னொரு கண்ணை வைத்திருங்கள்!

Amana Growth (AMAGX)
Fairholme (FAIRX)
USAA precious metals (USAGX)

3 comments:

கார்த்திக் said...

இனிமேல் நம்ம மார்க்கெட் நிலை எப்படிஇருக்கும்

செல்வராஜ் (R.Selvaraj) said...

பாரதி, உங்களது இடுகைகளை எப்போதும் படித்துவருகிறேன். அவை பயனுள்ளவை. உங்களுக்கும் உண்டான பாதிப்பிற்கு எனது வருத்தம்.

பொதுவாகவே எங்கு திரும்பினாலும் சரிவு தான் என்னும் நிலை அவ்வளவாய் நல்லதல்ல தான். விரைவில் திடநிலையை அடையும் என எதிர்பார்ப்போம். இந்தக் காலாண்டின் 401K அறிக்கையைப் பார்த்தால் பத்து % சரிவு என்றுள்ளது!

Bharathi said...

செல்வராஜ்: நன்றி. நான் சொல்ல வந்தது என்னவென்றால் வங்கியில் வேலை பார்ப்பதால் இந்த காலக்கட்டத்தில் வேலைகள் அதிகம். என் போர்ட்ஃபோலியோவும் கணிசமான அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. போர்ட்ஃபோலியோ விழுவதும் திரும்ப எழுவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது!

கார்த்திக்: இந்திய சந்தை இனி நிதானமாக உயரும். இன்னும் ஒரு முறை பலத்த அடி வாங்கி (capitulation) அதன் பிறகு திரும்பவும் நல்ல உயரத்துக்கு இந்திய சந்தை போவதற்கு வாய்ப்புள்ளது.

அடுத்த வாரம் அமெரிக்க வங்கிகள் லாப கண்க்கு சமர்ப்பிக்க போகிறார்கள். அதில் ஏதாவது "மிக கெட்ட செய்தி" இருந்தால் உலக சந்தைகள் மீண்டும் விழலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...