Tuesday, April 22, 2008

எங்கே போனது மனித நேயம்?

தேர்தலில் தான் அடைந்த தோல்விக்கு பழி வாங்குவதற்காக, இளந்தளிர்களை ஒரு சூனியக்கிழவி சூறையாடியிருக்கிறாள். இது போன்ற மனிதர்களை நடுத்தெருவில் வைத்து சுட்டு தள்ள வேண்டும்.

இந்த கொடுமையை பற்றிய சில விபரங்கள் இங்கே. அரசியல், கொலை பாதகம், வஞ்சம் என்ற எதுவுமே அறியாத மொட்டுக்களின் வாழ்வை நாசம் செய்திருக்கிறார்கள். பழி வாங்கும் முயற்சியில் சில மனிதர்கள் மிருகத்தை விட கேவலமாக மாறி விடுகிறார்கள்.

Sunday, April 13, 2008

சமூக பிணைப்பு (Social Networking)

முதலில் உங்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! அரசியல்வாதிகளுக்கு தமிழ் புத்தாண்டு தை ஒன்றில் தொடங்கினாலும் பரவாயில்லை, நமக்கு இன்று தான் தமிழ் புத்தாண்டு.

சோஷியல் நெட்வொர்க்கிங் என்ற ஒரு hype இந்தியாவிலும் பரவலாகி விட்டது. Myspace, Facebook மற்றும் Friendster போன்ற தளங்களின் பல பில்லியன் டாலர்கள் மதிப்பை பார்த்து பல வலைத்தளங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Fropper தளம் எந்த வருமானமும் இல்லாமல் பல கோடி ரூபாய்களை HBO, STAR MOVIES சேனல்களில் அள்ளி வீசி விளம்பரம் செய்கின்றது. விட்ட பத்து கோடியை சில வருடங்களில் ஆயிரம் கோடியாக அள்ளி விடலாம் என்ற நம்பிக்கை தான். Bharatstudent போன்ற தளங்கள் மாணவர்களை வளைத்து போடுவதற்காக அனைத்து தந்திரங்களும் செய்கிறார்கள். ஆனால் மாணவர்கள் யாரும் orkut தளத்தை விட்டு வெளியே வருவது போல தெரியவில்லை. ibibo தளம் வெறித்தனமாக பணத்தை தண்ணீராக செலவு செய்து வருகிறது. Bigadda, Indyarocks போன்ற தளங்களும் ரேஸில் சேர்ந்து விட்டன.

இந்த தளங்கள் அனைத்துக்கும் ஒரு common thread உள்ளது -- "சினிமா, காதல், கவர்ச்சி, செக்ஸ், சினிமா இசை, சினிமா நடிகர்கள்/நடிகைகள் பற்றிய விபரங்கள்". இந்த தளங்கள் அனைத்தும் இப்படி தான் இளைஞர்களை கவர்ந்து இழுக்கின்றன. சமூக பிணைப்புக்கும் ஷாருக்கானுக்கும் என்ன சம்பந்தம்? ஷாருக்கான் படத்தை பார்க்க வாருங்கள் என்று தான் big adda விளம்பரம் கொடுக்கிறது. இந்தியாவை பொறுத்த வரை சினிமாவை வைத்து தான் மக்களை கவர்ந்திழுக்க முடியும் என்று முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது. அமெரிக்கா ஆன்லைன் தளத்தின் இந்திய பிரிவு கூட "தமிழில் சினிமா பற்றிய சூடான செய்திகள்" என்று தான் விளம்பரம் செய்கிறார்கள்.

என்னை பொறுத்த வரைக்கும் சோஷியல் நெட்வொர்க்கிங் என்பது just hype. 14 - 24 வயதினருக்கு டைம் பாஸ். என் தெருவில் இருக்கும் ஒரு சிடுமூஞ்சி myspace மற்றும் facebook தளங்களில் நண்பர்களை தேடிப் பார்க்கிறார். ஆனால் தெருவில் இருக்கும் எல்லோருடனும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். நம்மை சுற்றியுள்ளவர்களுடன் சந்தோஷமாக வாழ்வது தான் உண்மையான சோஷியல் நெட்வொர்க்கிங்.

Monday, April 07, 2008

பொருளாதார சரிவு – 2008

வங்கிகள் வாங்கிய அடியால் அடியேனும் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி எழுத முடியவில்லை. சமீபத்தில் வலையுலக நண்பர் மின்னஞ்சல் அனுப்பி ஞாபகப்படுத்தியதால், அவருக்கு நான் அனுப்பிய பதிலையே இந்த பதிவாக எழுதியிருக்கிறேன்.

மத்திய வங்கியின் தலைவரே சொல்லிவிட்டார், பொருளாதார சரிவு வந்து விடும் என்று. சில வாரங்களுக்கு முன்னால் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை நடத்திய கருத்துக் கணிப்பில் பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் பொருளாதார சரிவு ஏற்கனவே ஆரம்பித்து விட்டது என்று கருத்து கூறியுள்ளார்கள். வேலை இழந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது நாம் தற்போது பொருளாதார சரிவின் காலத்தில் தான் இருப்பது போல தோன்றுகிறது.

இந்திய சந்தைகளும் அமெரிக்க பொருளாதார சரிவு மற்றும் அமெரிக்க வங்கி குளறுபடிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்திய சந்தைகளின் சமீப கால அபார லாபங்கள் இனி மேல் தொடராது என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. இந்திய சந்தை மட்டுமல்ல, பொதுவாக “emerging markets” அனைத்துமே இனி மேல் பெரிதாக லாபம் கொடுக்காது என்று பல நிபுணர்கள் கணிக்கிறார்கள். நான் இந்த வலைப்பதிவை ஆரம்பிக்கும் போது என் முதல் பதிவு emerging markets பற்றியது. அக்டோபர் 2005-லிருந்து இரண்டு வருடங்களாக சக்கை போடு போட்ட emerging market பரஸ்பர நிதிகள் தற்சமயம் நிதானமாக நடை போடுகின்றன. உங்களின் கணக்கில் இப்படிப்பட்ட பரஸ்பர நிதிகள் இருந்தால் அவற்றின் விகிதங்களை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.

பிரேசிலும் ரஷ்யாவும் இன்னும் வீறு நடை போடுகின்றன. இந்திய மற்றும் சீன சந்தைகளின் முதலீட்டாளர்களுக்கு பயம் வந்திருக்கிறது. போன வருடம் வரை தங்களின் பங்குகள் கீழே விழாது என்று அதீத நம்பிக்கையில் இருந்தவர்கள் தற்சமயம் உண்மை நிலைமையை புரிந்து கொண்டிருக்கிறார்கள். தாய்லாந்து நாட்டில் புத்த மத துறவிகள் மந்திரித்து கொடுத்த தாயத்துக்களை கட்டிக் கொண்டு பங்கு சந்தையில் விளையாடினால் நஷ்டம் வராது என்று சூதாடி தாய்லாந்து நாட்டவர் பலர் இன்று கடனிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள். போன வருடம் இந்த தாயத்துக்களின் மார்க்கெட் 1.5 பில்லியன் டாலர்கள் என்று தாய்லாந்து வங்கி புள்ளி விபரம் சொல்கிறது.

தாய்லாந்து நாட்டு தாயத்துக்கள்

இந்த வருடம் பொருளாதார சரிவிலிருந்து அமெரிக்க பங்கு சந்தை மீளும்போது தொழில் நுட்ப பங்குகள் நல்ல லாபம் கொடுக்கும் என்று பரவலான கருத்து இருக்கிறது. கீழ்க்கண்ட டெக் பரஸ்பர நிதிகள் கடந்த காலங்களில் நல்ல லாபம் கொடுத்திருக்கின்றன. இவற்றின் மேல் ஒரு கண் வைத்திருங்கள்.

Columbia Technology (CMTFX)
Fidelity Select Computers (FDCPX)
Matthews Asian (MATFX)
Fidelity Select Software (FSCSX)

கீழ்க்கண்ட பரஸ்பர நிதிகளும் வருங்காலத்தில் பிரகாசிக்கலாம். இவை மீது உங்களின் இன்னொரு கண்ணை வைத்திருங்கள்!

Amana Growth (AMAGX)
Fairholme (FAIRX)
USAA precious metals (USAGX)

Related Posts Plugin for WordPress, Blogger...