Monday, February 18, 2008

தமிழ் நிதி டாக்கீஸ்

“பங்கு சந்தையில் பணம் போட்டு விளையாடி வெறுத்துப் போயிருக்குமே, சினிமா எடுத்துப் பார்க்கலாமே” என்று சென்னை நண்பர் ஒருவர் ஆசை காண்பித்துக் கொண்டிருந்தார். பல வருடங்களாகவே எனக்குள் இருந்த ஆசை இது. என் சொந்தக்காரர்கள் பலர் சினிமாவில் விட்ட பணத்தை நினைத்து ஒதுங்கி விடுவேன்.

சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது பிரபல இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் என்னிடம் கதை சொல்ல வந்திருந்தார். பல கதைகளில் இது போன்ற சம்பவங்களை படித்திருந்தாலும், சினிமா ஸ்கிரிப்டை தயாரிப்பாளராக (!) இருந்து கேட்பது இது முதல் முறை. “கதை தானே சொல்லப் போகிறார், 15 நிமிஷத்திற்குள் சொல்லி விடுவார்” என்று தவறாக நினைத்து விட்டேன்.

மதியம் 2 மணிக்கு கதை சொல்ல ஆரம்பித்தார், கதை முடிக்கும் போது 5 மணி. மேட்னி ஷோ பார்த்தது போல இருந்தது. அவர் சொன்ன கதையில் ஆபாசத்திற்கும் இரட்டை வசனங்களுக்கும் பஞ்சமில்லை. “இந்த கதை எனக்கு பிடிக்க வில்லை. செல்வ ராகவன், S.J. சூர்யா போன்றவர்கள் எடுக்கக் கூடிய படம் இது. எனக்கு சரி வராது” என்று ஒதுங்கி விட்டேன்.

அதற்கு கதாசிரியர் கூறிய பதில்: “சார், தமிழ் நாட்டின் நிலைமையை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை. இது போல படம் எடுத்தால் தான் சார் ஓடும். இப்பல்லாம் யார் தியேட்டருக்கு வராங்க? காலேஜை கட் செய்து விட்டு ஸ்டூடன்ஸ் தான் வராங்க. வேறே யாரும் தியேட்டருக்கு வரதே கிடையாது. இந்த பசங்கள அட்ராக்ட் செய்யனும் சார்”

என்ன கொடுமை சார் இது?!

இது போல தான் படங்கள் எடுக்க வேண்டும் என்றால் ரமணா, கஜினி, சம்திங் சம்திங், மொழி போன்ற படங்கள் எப்படி மாபெரும் வெற்றி பெற்றன?

இது போன்ற கதைகளை கேட்ட பிறகு படம் எடுக்கும் ஆசையே போய் விட்டது. இந்த கதையை படமாக எடுத்தால் அதில் வளர்ந்து வரும் நடிகர்கள் நடித்தாலே 1.5 கோடி ரூபாய் செலவாகுமாம். படம் ஆரம்பிக்கும் முன்பே 1.5 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டால், படம் முடியும் போது குறைந்தது இரண்டு கோடி ரூபாய்க்கு குறையாது. கிட்டத்தட்ட $500,000. இந்தப் பணத்தில் வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து ஹாலிவுட் படமே எடுக்கலாம்.

கொசுறு செய்தி/கேள்வி: “பதினாறு வயதினிலே” படம் எடுக்க எவ்வளவு செலவானது என்று உங்களுக்கு தெரியுமா? பதில் அடுத்த பதிவில்.

4 comments:

கார்த்திக் said...

//இது போல படம் எடுத்தால் தான் சார் ஓடும். இப்பல்லாம் யார் தியேட்டருக்கு வராங்க? காலேஜை கட் செய்து விட்டு ஸ்டூடன்ஸ் தான் வராங்க. வேறே யாரும் தியேட்டருக்கு வரதே கிடையாது.//

அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது.
இது காதல் வரும் பருவம்னு ஒரு படம் அவர் சொன்னது போலவே.2 நாள் கூட ஓடல.
வாலி,குஷி கப்புறம் SJ சூர்யா படம் ஏதும் ஓடவில்லை.
நல்லபடமா எடுங்க.

குமரன் (Kumaran) said...

அம்புட்டு பணம் வச்சிருக்கீங்களா? உங்க அட்ரஸை சொல்லுங்க தல. ஒரு தடவை உங்க வீட்டுக்கு வந்து பாக்கணும். :-)

ச்சும்ம்மா

Bharathi said...

நன்றி கார்த்திக்!

குமரன்: எனது முகவரி மொபைல் முகவரியாகி விட்டது. உங்கள் ஊர் பக்கம் வரும் போது நானே வந்து பார்க்கிறேன். செய்த நிதியெல்லாம் அந்த ஆண்டவனும் ஆப்ஷனும் கொடுத்தது :-)

மங்களூர் சிவா said...

அடடா நான்கூட நல்ல கதை வெச்சிருக்கேன் தமிழ்நிதி!!

மங்களூர் பக்கமும் வாங்க!!

:-))))))))