Wednesday, August 15, 2007

அறுபது வயது இளைஞன்

உங்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

நாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்து விட்டோமா என்று பல சமயம் விவாதம் செய்தாலும், நாம் சுதந்திரமாக வாழ்கிறோம் என்பதற்காகவே சந்தோஷப்படலாம்.

உலகில் இன்னும் பல நாடுகளில் மக்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. க்யூபா நாட்டிலிருந்து சீனா வரை பல கோடி மக்கள் அடக்கு முறையால் அவஸ்தைப்படுகிறார்கள். நாம் இந்தியாவில் பிறந்ததற்காக மகிழ்ச்சி கொள்ள வேண்டும்!

இந்த மகிழ்ச்சி இன்னும் பல மடங்காக நாம் எல்லோரும் முயற்சி செய்வோம்.

ஐ.டி. துறையை மட்டும் நம்பி இந்தியா இருக்காமல் மற்ற பல துறைகளிலும் நம் நாடு கவனம் செலுத்த வேண்டும். சமீபத்திய கணக்குப்படி இந்தியாவில் ஐ.டி. துறையில் வேலை செய்பவர்கள் வெறும் 16 லட்சம் பேர் தான். இவர்கள் மட்டும் பயனடையாமல் நாடு முழுதும் பயனடைய வேண்டும்.

மற்ற துறைகளை முன்னேற்றுவதற்கு Special Economic Zone (SEZ) அவசியம் வேண்டும். சீனா வேகமாக முன்னேறியதற்கு அடிப்படை காரணங்கள் இரண்டு: SEZ மற்றும் வெளிநாட்டில் வாழும் சீனர்கள்.

நம் ஊரில் சில அரசியல்வாதிகள் நல்லதும் செய்யாமல், நல்லது செய்பவர்களையும் விடாமல் SEZ, துணைநகரம் போன்றவை வராமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். யாரைப்பற்றியும் கவலைப்படாமல் SEZ போன்ற நல்ல திட்டங்களை இந்தியா முழுதும் கொண்டு வந்தால் தான் ஐ.டி. துறையை மட்டும் சார்ந்திராமல் நாம் சுபிட்சம் பெற முடியும்.

இன்று செங்கோட்டையில் நம் பிரதமர் நாடு முன்னேறுவதற்கு ஆதாரம் கல்வி என்று பேசியிருக்கிறார். மறுக்க முடியாத உண்மை. மிகச் சிறந்த தரமுள்ள ஆறாயிரம் புது பள்ளிக்கூடங்களை ஆரம்பிக்க போவதாக கூறியிருக்கிறார். ஏற்கனவே இருக்கும் பல்லாயிரம் பள்ளிக்கூடங்களையும் நல்ல தரத்துக்கு கொண்டு வந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

தொடர்புள்ள பதிவுகள்: Where are we?

1 comment:

K.R.அதியமான். 13230870032840655763 said...

நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது

இந்தியர்களான நாம், நேர்மை மற்றும் உண்மை போன்ற மிக முக்கிய குண நலன்களை, சுதந்திரத்திற்குப் பிறகு இழந்துள்ளோம். ஊழல் பெருகியுள்ளது. அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. வாக்களிக்கும் பொதுமக்கள் பணம் மற்றும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு வாக்குகளை விற்கின்றனர். மக்களுக்க ஏற்ற அரசாங்கமே அமையும் என்பது பொது விதி.

சோசியலிசக் கொள்கைகள், உயர்ந்த லட்சியம் உள்ள தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. சித்தாந்தம் என்பது வேறு, நடைமுறை என்பது வேறு. "நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தானாலும் உண்டாகிறது" என்பது ஒரு பழமொழி.

பணக்காரர்கள் மீது மிகக் கடுமையான வரி விதித்து அதை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் செலவு செய்ய முயன்ற சோசியலிஸக் காலங்களில் உச்சக்கட்டமாக 98 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டது (1971). மனிதனின் இயல்பான குணம் சுயநலம். தனக்கு ஒரு லாபம் அல்லது ஆதாயம் முழுமையாகக் கிடைத்தால் மட்டுமே ஒரு செயலை முழு மனதுடனும், ஊக்கத்துடனும் செய்வான். அச்செயலினால் கிடைக்கும் லாபத்தைப் பாதுகாக்க சட்டத்தை மீற முற்படுவான். அதனால் நேர்மை குறையும்.

அதுதான் இங்கு நடந்தது. வருமான மற்றும் உற்பத்தி வரிகளை ஏய்க்க முற்பட்டனர் முதலாளிகள். அதிகாரிகள் அதற்குத் துணை போயினர். பெர்மிட், லைசன்சு தருவதற்கு லஞ்சம் கேட்டனர் அரசியல்வாதிகள். கடமையை செய்யாமல் உரிமையை மட்டும் கருத்தாக கேட்டனர் அமைப்பு சார்ந்த மற்றும் அரசாங்க அமைப்புகளைச் சார்ந்த தொழிலாளர்கள். லைசன்ஸ் மற்றும் கட்டுப்பாடுகளால் கடுமையான பற்றாக்குறை உண்டானது. சிமிண்டு இன்று எளிதாக கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் சிமண்ட் உற்பத்தியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததால் கடும் பற்றாக்குறை. கருப்பு மார்க்கெட், லஞ்சம், பதுக்கல், கடத்தல், இன்று கேட்க தமாஸாக இருக்கிறதா? பழையக் கருப்பு வெள்ளைப் படங்களில் வில்லன்கள் சிமிண்ட், சர்க்கரை மற்றும் பருத்தி நூல் பேல்களை பதுக்கி வைப்பர். கடத்துவார்கள்!

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தனியார் உற்பத்தி வேண்டிய அளவு பெருக தாரளமாக அனுமதிக்கப்பட்டவுடன் இன்று அந்த மாதிரியான தமாஸ் காட்சிகள் இல்லை. உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்தி விடலாம். ஆனால் இழந்த குணங்களை மீண்டும் உயிர்ப்பிக்க பல காலமும் பல தலைமுறைகளும் பிடிக்கும் போல் தெரிகிறது.

சர்வ சாதாரணமாக நாம் அனைவரும் அரசாங்க விதிகளையும் சட்டங்களையும் மீறும் தன்மையைப் பெற்று விட்டோம். அளவுக்கு அதிகமான வருமான வரியை ஏமாற்ற ஆரம்பித்து இன்று அனைத்து வரிகளையும் ஏமாற்றுவதை ஒரு கலையாகக் கற்றுள்ளோம். சாலை விதிகள், மென்பொருள் மற்றும் சினிமா துறைகளின் காப்புரிமை விதிகளை மீறுகின்றோம். திருட்டு விசிடி, மென்பொருள்களையும் பயமின்றி கூச்சமின்று பயன்படுத்துகிறோம்.

வேலை செய்யாமலேயே ஊதியம், தகுதி இல்லாமலும் மான்யம், இலவசங்களுக்காக தன்மானத்தையும் நேர்மையையும் இழந்துள்ளோம். பிச்சைக்காரப் புத்தி மிகவும் அதிகரித்துள்ளது. ஓசியில் கிடைச்சா பினாயிலைக் கூட குடிக்கத் தயாராக உள்ளோம். ஒரு LPG சிலிண்டருக்கு அரசாங்கம் நமக்கு ரூபாய் 200 மான்யமாக, இனாமாக தருவதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். குறைக்க முற்பட்டால் எதிர்க்கிறோம்...

http://nellikkani.blogspot.com/

Related Posts Plugin for WordPress, Blogger...