Wednesday, August 29, 2007

கடனை பாதுகாக்கும் நிதி சாதனங்கள் (Credit Derivatives)

Derivatives என்பது ரிஸ்க்கை குறைப்பதற்காக உருவாக்கப் பட்ட நிதி சாதனங்கள். ஆப்ஷன்களும் Derivatives வகையை சேர்ந்தது தான்.

Credit derivatives என்பது கடன் கொடுத்தவர்கள் தங்கள் கடனின் ரிஸ்க்கை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக உலக சந்தைகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிதி சாதனம் (financial instrument) இது.

Credit derivatives வகையில் பல சாதனங்கள் இருந்தாலும், Credit default swap என்ற derivative அதிக பாப்புலராகி விட்டது. வங்கிகள் தங்கள் கடன்களில் உள்ள ரிஸ்க்கை மற்றவர்களுக்கு விற்று விட இது உதவும்.

Credit default swap என்பது ஒரு இன்சூரன்ஸ் போல தான். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா DLF ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு 10,000 கோடி கடன் கொடுத்ததாக வைத்துக் கொள்வோம். இந்திய ரியல் எஸ்டேட் கீழே விழுந்து DLF நிறுவனத்துக்கு பெருத்த அடி ஏற்பட்டால், அந்த நிறுவனம் கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போய் விடும்.

அந்த ரிஸ்க்கை தவிர்ப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மெரில் லிஞ்ச் (Merrill Lynch) போன்ற நிறுவனத்துடன் Credit default swap செய்து கொள்ளலாம். தன் கடனை பாதுகாப்பதற்காக ஸ்டேட் பேங்க், மெரில் லிஞ்ச் நிறுவனத்திடம் இன்சூரன்ஸை வாங்கிக் கொள்கிறது.

இதில் மெரில் லிஞ்ச் நிறுவனத்திற்கு என்ன லாபம்? இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்களிடம் பிரீமியம் தொகையை வாங்குவது போல் மெரில் லிஞ்ச் நிறுவனமும் ஸ்டேட் பேங்கிடம் பிரீமியம் வாங்கும்.

10,000 கோடி கடனை பாதுகாப்பதற்கு மெரில் லிஞ்ச் 10 கோடி பிரீமியம் வாங்கும். (இதை பிரீமியம் என்று நடைமுறையில் குறிப்பிடுவதில்லை, சுலபமாக விளக்குவதற்காக இப்படி எழுதுகிறேன்) DLF நிறுவனம் அதிக ரிஸ்க் உள்ளதாக இருந்தால், இந்த பிரீமியம் இன்னும் உயரலாம்.

துரதிர்ஷ்டவசமாக DLF நிறுவனம் திவாலாகி விட்டால், ஸ்டேட் பேங்கிற்கு வர வேண்டிய 10,000 கோடி கடனையும் மெரில் லிஞ்ச் கொடுத்து விடும். இது போல நடப்பதற்கு probability அதிகம் கிடையாது. மெரில் லிஞ்ச் போன்ற நிறுவனங்கள், கடன் வாங்கிய DLF போன்ற நிறுவனங்களை தீர ஆராய்ந்த பிறகு தான் ஸ்டேட் பேங்க் போன்ற வங்கிகளுடன் credit default swap ஒப்பந்தம் போடுகிறார்கள்.

மெரில் லிஞ்ச் நிறுவனத்தின் கணிப்பு சரியாக இருந்து DLF நிறுவனம் நல்ல பிள்ளையாக கடனை திரும்ப கொடுத்து விட்டால், மெரில் லிஞ்ச் நிறுவனத்துக்கு 10 கோடி பிரீமியமும் லாபம்.

இது வரை பார்த்தது வெறும் கற்பனை தான். நம் நாட்டில் credit derivatives இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இன்னும் சில மாதங்களில் வரலாம்.

இந்திய வங்கிகள் கொடுத்த கடன்கள் கடந்த ஒரு வருடத்தில் 27% உயர்ந்திருக்கின்றது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் கடன்களை தாராளமாக கொடுக்கின்றன. இந்த கடன்களில் வெறும் 25 சதவிகிதம் வங்கிகளுக்கு திரும்ப கிடைக்காமல் போனாலே அது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும்.

நம் நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு credit derivatives அவசியம் வேண்டும். மின்னல் வேகத்தில் கடன் கொடுக்கும் வங்கிகளின் ரிஸ்க்கை கட்டுப்படுத்த credit default swap உதவும்.

வளர்ந்த நாடுகளில் credit default swap சாதனத்தை பங்குகள் போல வாங்கி விற்கிறார்கள். மேலே கண்ட உதாரணத்தில் மெரில் லிஞ்ச் தன்னிடமுள்ள swap-ஐ கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்திற்கு லாபத்திற்கு விற்று விடலாம்.

அமெரிக்காவில் வீட்டு கடன்களை பல வங்கிகள் இப்படி தான் வாங்கி விற்று அதில் லாபம் சம்பாதித்தார்கள் – subprime பிரச்னையில் மாட்டிக் கொள்ளும் வரை.

Credit default swap என்பது பெரிய பிஸினஸ். 2006ம் வருட கடைசியில் உலகம் முழுவதும் இருந்த மொத்த credit default swaps-ன் மதிப்பு $34.423 டிரிலியன் டாலர்கள்!

Related Links: ISDA, வங்கிகளின் பேராசை

Monday, August 20, 2007

வங்கிகளின் பேராசை

கடந்த இரண்டு வாரங்களாக அடி மேல் அடி வாங்கிய பங்கு சந்தைகளை பார்த்த அமெரிக்க மத்திய வங்கியின் தலைமை அதிகாரி பென் பெர்னாங்க் வெறுத்துப் போய் வங்கிகளுக்கு கொடுக்கும் கடன் வட்டியை (discount rate) 0.5% குறைத்து விட்டார்.

வீட்டு கடன் கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்றான Countrywide திவாலாக போகிறது என்று வதந்தி பரவி, கலிபோர்னியாவில் அந்த வங்கிகளின் கிளைகளில் பெரிய க்யூவில் மக்கள் நின்றார்கள் – தங்கள் பணத்தை இப்போதே எடுக்காவிட்டால், இனிமேல் எப்போதுமே கிடைக்காது என்ற பயத்தில்.

Countrywide brochure for affordable mortgages

ஆடி தள்ளுபடிக்காக தி.நகரில் தென்படும் அளவிற்கு கூட்டம் இந்த வங்கியின் கிளைகளில் அலை மோதியது.

Subprime என்பதே “வழக்கமாக வழங்கப்படும் கடனை விட ஒரு படி கீழே” என்று தான் அர்த்தம். இருந்தாலும், அமெரிக்க ரியல் எஸ்டேட் boom இன்னும் பல வருடங்களுக்கு நீடிக்கும் என்று தப்புக்கணக்கு போட்டு, Countrywide போன்ற வங்கிகள் பல பில்லியன் டாலர்களை இழந்து விட்டன.

Countrywide

அமெரிக்காவில் கிரடிட் ரேட்டிங் முறை இருப்பதால், வாடிக்கையாளர்களில் யார் prime, யார் subprime என்று ஓரளவுக்காவது தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் அப்படிப்பட்ட கிரடிட் ரேட்டிங் முறை இல்லை.

இருந்தாலும், இந்தியாவில் பல வங்கிகளும் NBFC லோன் நிறுவனங்களும் லோன்களை அள்ளிக் கொடுக்கின்றன. வீடு விலைகள் கிடுகிடுவென்று உயர்ந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் கடன்களை அள்ளி வழங்குகின்றன.

கடந்த இரண்டு மாதங்களில் சென்னையில் வீட்டு விலை 20% குறைந்திருக்கிறது. இந்திய ரியல் எஸ்டேட் இன்னும் கீழே விழுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் போது, தாங்கள் கொடுத்த கடன்கள் திரும்ப வராமல் போனால் இந்திய வங்கிகள் எப்படி சமாளிக்கும்?

அமெரிக்காவில் subprime-ல் கடன் வாங்கிய சில வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டு சாவியை வங்கிகளிடம் கொடுத்து விட்டு ஊரை காலி செய்கிறார்கள். தாங்கள் வாங்கிய விலையை விட வீட்டின் மதிப்பு பல மடங்கு குறைந்து விட்டதால், foreclosure செய்வதை கூட வித்தியாசமாக இப்படி செய்கிறார்கள்!

உலக சந்தைகளில் இந்திய ரியல் எஸ்டேட் சந்தை மட்டும் வித்தியாசமானது என்று பலர் என்னிடம் கூறினர். அமெரிக்காவில் நடப்பது போல இங்கே நடக்காது என்று விவாதம் செய்கின்றனர். அது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை.

எல்லாவற்றையும் தீர்மானிப்பது “Law of supply and demand”. இந்தியாவாக இருந்தாலும் சரி, இலங்கையாக இருந்தாலும் சரி அல்லது அமெரிக்காவாக இருந்தாலும் சரி. அதனால் இந்தியாவில் மட்டும் ரியல் எஸ்டேட் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்ற நாடுகளை விட மாறுபட்டு இருக்கும் என்ற விவாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பல ஆயிரம் கோடிகளை கடனாக கொடுத்த வங்கிகளுக்கு, சில ஆயிரம் கோடிகள் திரும்ப வராமல் போனாலே அது மிக பெரிய பிரச்னை.

இந்தியாவில் உள்ள வங்கிகள் அனைத்துமே கடன்களை கொடுப்பதில் தாராள மனதுடன் இருக்கின்றன. பெரும்பாலான வங்கிகளில் திறமை பெற்ற கிரடிட் அனலிஸ்ட்டுகள் உள்ளனர். அவர்கள் கொடுக்கும் எச்சரிக்கையையும் மீறி, பல வங்கிகள் 90% லோன் கொடுக்கின்றன. கேட்பவர்களுக்கெல்லாம் கிரடிட் கார்டுகளை கொடுக்கின்றனர்.

ரியல் எஸ்டேட் மார்க்கெட் சரிந்து தன் கடன் தொகையை விட வீட்டின் மதிப்பு குறைந்து விட்டால், பலர் கடனை அடைக்கப் போவதில்லை. அப்போது இந்திய வங்கிகள் பலவற்றுக்கு Countrywide வங்கியின் தற்போதைய நிலைமை வரலாம்.

வளர்ந்த நாடுகளில் இருப்பது போல “Credit derivatives” முறை நம் நாட்டில் இல்லை. விரைவில் இந்த முறையை அமுல்படுத்த போவதாக இரண்டு மாதங்களுக்கு முன்னால் RBI வங்கி ஒரு draft-ஐ வெளியிட்டது. இதே போல ஒரு draft மூன்று வருடங்களுக்கு முன்னாலும் வெளியிடப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.

Credit derivatives பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம். சுருக்கமாக சொல்லப் போனால், கடன் நஷ்டத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வங்கிகளுக்கு இது உதவும். தற்போதைய இந்திய சூழ்நிலைக்கு இது மிக அவசியம். நாம் பங்குகள் வாங்கினால் அதை “Put” ஆப்ஷன்கள் மூலம் பாதுகாப்பது போல வங்கிகளுக்கு credit derivatives ஹெட்ஜாக இருக்கும்.

நீங்கள் இந்திய வங்கிகளின் பங்குகளில் முதலீடு செய்திருந்தால், இந்திய ரியல் எஸ்டேட் மார்க்கெட்டின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். வங்கிகளின் பங்குகள் சரிவதற்கு முன் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

Wednesday, August 15, 2007

அறுபது வயது இளைஞன்

உங்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

நாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்து விட்டோமா என்று பல சமயம் விவாதம் செய்தாலும், நாம் சுதந்திரமாக வாழ்கிறோம் என்பதற்காகவே சந்தோஷப்படலாம்.

உலகில் இன்னும் பல நாடுகளில் மக்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. க்யூபா நாட்டிலிருந்து சீனா வரை பல கோடி மக்கள் அடக்கு முறையால் அவஸ்தைப்படுகிறார்கள். நாம் இந்தியாவில் பிறந்ததற்காக மகிழ்ச்சி கொள்ள வேண்டும்!

இந்த மகிழ்ச்சி இன்னும் பல மடங்காக நாம் எல்லோரும் முயற்சி செய்வோம்.

ஐ.டி. துறையை மட்டும் நம்பி இந்தியா இருக்காமல் மற்ற பல துறைகளிலும் நம் நாடு கவனம் செலுத்த வேண்டும். சமீபத்திய கணக்குப்படி இந்தியாவில் ஐ.டி. துறையில் வேலை செய்பவர்கள் வெறும் 16 லட்சம் பேர் தான். இவர்கள் மட்டும் பயனடையாமல் நாடு முழுதும் பயனடைய வேண்டும்.

மற்ற துறைகளை முன்னேற்றுவதற்கு Special Economic Zone (SEZ) அவசியம் வேண்டும். சீனா வேகமாக முன்னேறியதற்கு அடிப்படை காரணங்கள் இரண்டு: SEZ மற்றும் வெளிநாட்டில் வாழும் சீனர்கள்.

நம் ஊரில் சில அரசியல்வாதிகள் நல்லதும் செய்யாமல், நல்லது செய்பவர்களையும் விடாமல் SEZ, துணைநகரம் போன்றவை வராமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். யாரைப்பற்றியும் கவலைப்படாமல் SEZ போன்ற நல்ல திட்டங்களை இந்தியா முழுதும் கொண்டு வந்தால் தான் ஐ.டி. துறையை மட்டும் சார்ந்திராமல் நாம் சுபிட்சம் பெற முடியும்.

இன்று செங்கோட்டையில் நம் பிரதமர் நாடு முன்னேறுவதற்கு ஆதாரம் கல்வி என்று பேசியிருக்கிறார். மறுக்க முடியாத உண்மை. மிகச் சிறந்த தரமுள்ள ஆறாயிரம் புது பள்ளிக்கூடங்களை ஆரம்பிக்க போவதாக கூறியிருக்கிறார். ஏற்கனவே இருக்கும் பல்லாயிரம் பள்ளிக்கூடங்களையும் நல்ல தரத்துக்கு கொண்டு வந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

தொடர்புள்ள பதிவுகள்: Where are we?

Sunday, August 12, 2007

பாடாய் படுத்தும் பங்கு சந்தைகள்

கடந்த இரண்டு வாரங்களில் பெரும்பாலான உலக சந்தைகள் சாமியாட்டம் ஆடி விட்டன. எங்கு திரும்பினாலும் களேபரம் ஆகி விட்டது.

Wall Street

அமெரிக்க சந்தை 400 புள்ளிகள் சரிகிறது. இந்திய சந்தை 500 புள்ளிகள் விழுகிறது. நிலைமை உண்மையிலேயே அவ்வளவு மோசமா?

இல்லை.

Subprime lending பிரச்னை பல மாதங்களாக இருந்து வருகிறது. ஒரு சில வங்கிகள் மட்டும் இந்த வம்பில் மாட்டியதாக முதலீட்டாளர்கள் நினைத்திருந்தனர். இப்போது ஆளாளுக்கு confession செய்து கொண்டிருக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டு வங்கிக்கும் அமெரிக்க subprime கடனுக்கும் என்ன சம்பந்தம்?! எல்லாம் ஆசை தான்.

கோல்ட்மென் போன்ற சூப்பர் ஸ்டார் வங்கிகளும் சப்-பிரைம் வம்பில் மாட்டிக் கொண்டதாக சில நாட்கள் முன்னால் வதந்தி வந்தது.

Bear Sterns, Goldman போன்ற பிரபல வங்கிகளின் ஹெட்ஜ் நிதிகள் (Hedge Funds) சப்-பிரைம் பிரச்னையால் பெரும் நஷ்டம் அடைந்துள்ளன. இவர்கள் நஷ்டத்தால் பங்கு சந்தைகள் மூழ்கப் போவதில்லை.

இருந்தாலும், முதலீட்டாளர்கள் “fear of unknown” உபாதையால் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடுகிறார்கள்.

பங்குகளும் பரஸ்பர நிதிகளும் வாங்குவதற்கு இது சரியான சந்தர்ப்பம். பங்கு சந்தை இன்னும் சரிந்தால் நன்றாக இருக்கும், நல்ல விலைக்கு பங்குகளை வாங்கலாம்.

போன வாரம் பங்கு சந்தைகள் சரியும் போது FAIRX நிதியை 401K கணக்கில் வாங்கினேன். Short-term ட்ரேடிங் செய்பவர்கள் சில வாரங்கள் பங்கு சந்தைக்கு உள்ளே வராமல் இருப்பது நல்லது. நான் இப்போது வாங்கும் பங்குகள்/நிதிகள் அனைத்தும் அடுத்த சில வருடங்களாவது என் கணக்கில் இருக்கும்.

கடந்த இரண்டு வாரங்களில் சில புத்திசாலித்தனமான Quant-fund நிறுவனங்களும் நஷ்டமடைந்துள்ளன. இந்த வகை நிதிகள் ஒரு விதமான கணித முறையை பின்பற்றி நடத்தப் படுகிறது. பங்குகளை வாங்குவது/விற்பது அனைத்தும் கம்ப்யூட்டர் புரோகிராமினால் நிச்சயிக்கப் படுகிறது. மனிதர்களின் வேலை கம்ப்யூட்டருக்கு அல்காரிதம் கொடுக்க வேண்டியது தான்.

அனைத்து குவான்ட் நிதிகளும் (quant funds) நாளொன்றுக்கு பல மில்லியன் டாலர்களை சந்தையில் ட்ரேடு செய்கின்றன. ட்ரேடுகள் அனைத்தும் கம்ப்யூட்டர்கள் மூலம் செய்யப் படுகின்றன. இந்த கம்ப்யூட்டர் புரோகிராமின் அல்காரிதத்தை வடிவு செய்ய Ph.D. முடித்த பல கணித வல்லுனர்கள் இருக்கின்றனர்.

ஸ்டான்போர்டு போன்ற புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவர்களுக்கு கூட இந்த quant நிதி நிறுவனங்களில் வேலை கிடைப்பது கஷ்டம்.

சிறந்த கணித மேதைகள் இருந்தும் கூட பெரும்பாலான குவான்ட் நிதிகள் கடந்த இரண்டு வாரங்களில் நஷ்டமடைந்து விட்டன.

“10,000 வருடத்துக்கு ஒரு முறை தான் இப்படி நடக்க சாத்தியம் (probability) என்று எங்கள் குவான்ட் மாடல் சொல்கிறது. ஆனாலும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எங்கள் மாடலால் கணிக்க முடியாத அளவுக்கு சந்தை எங்களுக்கு தண்ணீர் காட்டி விட்டது” என்று சொல்கிறார் ஒரு குவான்ட் நிதியின் உயர் அதிகாரி.

பங்கு சந்தை கீழே விழுவதும் மேலே உயர்வதும் சகஜம். நல்ல நிறுவனங்களின் பங்குகளையும், பரஸ்பர நிதிகளையும் வாங்குவதற்கு இது தான் நல்ல நேரம்.

Wednesday, August 08, 2007

இந்தியாவா, சீனாவா?

பன்னாட்டு நிறுவனங்கள் பலவற்றின் பெரிய dilemma இது தான். தங்கள் வியாபாரத்தை விரிவு படுத்தும் போது, “இந்தியாவிற்கு செல்வதா அல்லது சீனாவுக்கு செல்வதா?” என்ற கேள்விக்கு விடை தெரியாமல் பல நிறுவனங்கள் கன்சல்டன்சி நிறுவனங்களை தேடி செல்கின்றன.

இந்தியாவா, சீனாவா என்று குழம்பாமல் இரு நாடுகளிலும் வியாபாரத்தை விரிவு படுத்துவது தான் புத்திசாலித்தனம் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர். “இந்தியா அல்லது சீனா” என்றில்லாமல் “இந்தியா & சீனா” என்று strategy அமைப்பதற்கு மூன்று காரணங்களை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

1. இரு நாடுகளும் பல துறைகளில் அபரீத வளர்ச்சி அடைந்திருக்கின்றன. இந்த வளர்ச்சி இன்னும் தொடரும். உதாரணத்துக்கு சீனாவில் 450 மில்லியன் செல் போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர், இந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் 150 மில்லியன் செல் போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒரு மாதத்துக்கு 60 லட்சம் புது வாடிக்கையாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர்! (ஏற்கனவே தவறுதலாக 24 கோடி என்று எழுதியிருந்தேன், Sorry..)

2. இந்தியாவும் சீனாவும் மாறுபட்ட துறைகளில் வல்லுனர்களாக உள்ளனர். உற்பத்தி துறைகளில் (manufacturing) சீனாவும் மென்பொருள் மற்றும் ஐ.டி. துறைகளில் இந்தியாவும் முண்ணணியில் இருப்பதால் இரு நாடுகளிலிருந்தும் பயனடையலாம்.

3. காப்புரிமையை (Intellectual Property) பாதுகாப்பதற்கு இரு நாடுகளிலும் வேலைகளை பகிர்ந்து கொடுப்பது நல்லது.

எந்த நாடானாலும் சரி, அந்த நாட்டின் கலாசாரத்துக்கு தகுந்தாற்போல தன் வியாபார உத்தியை மாற்றியமைத்தால் தான் நிறுவனங்கள் வெற்றியடைய முடியும்.

அப்படி செயல்பட்டதால் தான் Haier நிறுவனம் சீனாவில் பெரும் வெற்றியடைந்தது. கிராமங்களில் Haier விற்கும் வாஷிங் மெஷின்களில் துணிகளை மட்டுமல்லாது காய்கறிகளையும் வாஷ் செய்யலாம்!

நகரங்களில் Haier விற்கும் ஒரு குறிப்பிட்ட மாடல் வாஷிங் மெஷின்/ட்ரையர் ஒரு செட் துணியை மட்டும் சலவை செய்யக்கூடிய அளவுக்கு சிறிய வடிவில் உள்ளது. பதினைந்து நிமிடத்தில் சலவை முடிந்துவிடும்.

இப்படிப்பட்ட வாஷிங் மெஷின்கள் சீனாவில் பெரிய ஹிட்.

இந்தியாவில் டிஸ்னி சேனல் வித்தியாசமான உத்திகளால் வெற்றி பெறுகிறது. அமெரிக்காவில் பெரும் வெற்றியடைந்த High School Musicals படத்தை இந்தியாவில் ஹிந்தியில் தயாரிக்கிறது. அமெரிக்க படத்தில் கதாநாயகன் கூடைப்பந்து வீரன். இந்திய படத்தில் கிரிக்கெட் விளையாடுகிறார்.

இவர்களைப் போன்று Fox (Star TV) நிறுவனமும் “24” சீரியலை ஹிந்தியிலும் தமிழிலும் தயாரிக்கலாம். அழுகை மெகா சீரியல்களை பார்த்து சோகத்தில் வாடும் என் இனிய தமிழ் மக்களுக்கு ஒரு மாறுதலாக இருக்கும்.

Wednesday, August 01, 2007

தூக்கம்

இரவில் உங்களுக்கு நன்றாக தூக்கம் வந்தால், உங்களின் அதிர்ஷ்டத்தை நினைத்து சந்தோஷப்படுங்கள். தூக்கம் வராமல் நிறைய பேர் கஷ்டப்படுகிறார்கள் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மன அழுத்தம் தான் முக்கியமாக தூக்கத்தை கெடுக்கின்றது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனாலும் மன அழுத்தம் உள்ளவர்கள் அதற்கான சிகிச்சை எடுக்காமல் தூக்க மாத்திரை சாப்பிட்டு தூக்கத்தை செயற்கையாக வரவழைக்கிறார்கள். இரண்டு வேலியம் சாப்பிட்டும் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இருக்கிறார்கள்.

இவர்களுக்காக CPAP என்ற ஒரு சிகிச்சை முறை பல வருடங்களாக இருக்கிறது. இதன் மூலம் தூக்கத்தை சுலபமாக வரவழைக்கலாம். ஆனாலும், அந்த தூக்கம் வருவதற்காக E.R. வார்டில் படுத்திருப்பது போல முகத்தில் ஒரு குழாயுடன் படுத்திருக்க வேண்டும்.

CPAP

இந்த ஒரு காரணத்துக்காக பலர் CPAP முறையை விரும்புவதில்லை.

மனிதனின் மூச்சுக் குழாயை (airway) நாக்கு அடிக்கடி தடுப்பதால் தான் தூக்கம் வருவது கடினமாக இருக்கிறது என்று பல் மருத்துவர்கள் கருதுகிறார்கள். அதனால் நாம் தூங்கும் போது நாக்கும் நல்ல பிள்ளையாக தூங்குவதற்காக சில சாதனங்களை கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த வகை சாதனத்தை உறங்க போகும் போது வாயில் மாட்டிக் கொள்ள வேண்டும்.

என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்மணி இப்படி ஒரு கிளிப்பை வாயில் மாட்டிக் கொண்டு தான் உறங்குகிறார். ஆரம்பத்தில் வித்தியாசமாக இருந்தாலும் இப்போது பழகி விட்டது என்கிறார். வாயில் பெரிய கிளிப் இருப்பதால் எச்சில் நிறைய உற்பத்தியாவதால் சிலருக்கு ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கலாம்.

பங்கு சந்தைகள் கொடுக்கும் டென்ஷனால், தூங்கும் போது பற்களை கடித்து அவஸ்தைப்படுவர்களுக்கும் இந்த வகை கிளிப்புகள் உதவியாக இருக்கும்.

இந்த சிகிச்சைகளின் விலை 200 டாலரிலிருந்து 8000 டாலர் வரை. தூக்கமின்மையை குணப்படுத்துவதற்காகவே சில மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் சிகிச்சைக்காக இன்னும் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இவ்வளவு செலவுகள், அவஸ்தைகள் இல்லாமல் நிம்மதியாக தூங்குவதற்கு ஒரு எளிய வழி உள்ளது. அதன் பெயர் “ஆழ்நிலை தியானம்”.

Related Posts Plugin for WordPress, Blogger...