Saturday, June 30, 2007

மேலாளர்களிடம் மனதில் உள்ளதை கொட்டலாமா?

வெற்றி பெற உதவும் புத்தகங்கள் மற்றும் சுய உதவி (Self help) புத்தகங்கள் அனைத்தும் தவறாமல் சொல்லும் அறிவுரை – “நன்றாக பேசுங்கள். உங்கள் பேசும் திறமை தான் உங்களுக்கு வெற்றி கொடுக்கும்”.

அலுவலகத்தில் புரமோஷன் கிடைப்பதற்கு வழி சொல்லும் புத்தகங்களும், செமினார் வழிகாட்டிகளும் “உங்களுக்கு யாருடனாவது பிரச்னை இருந்தால் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மேலாளருடன் பிரச்னை இருந்தாலும் அவருடன் one on one மீட்டிங்கில் உங்கள் பிரச்னைகளை தைரியமாக பேசுங்கள்” என்று தான் அறிவுரை கொடுக்கிறார்கள்.

இது போன்ற அறிவுரையை நம்பி தங்கள் மேலாளரிடம் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டி சிலர் வம்பில் மாட்டியிருக்கிறார்கள்!

சில புத்தகங்கள் கொடுக்கும் அறிவுரை – “உங்கள் மேனேஜரிடம் பேசும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் உதவி அவருக்கு தேவைப்படுகிறதா என்று கேளுங்கள். வேலையில் உங்களுக்கு அதிக ஈடுபாடு இருக்கிறது என்று அவர் புரிந்து கொள்வார்”.

இந்த அறிவுரையை ஜார்ஜ் ஃப்ராங்ஸ் தன் இதயத்தின் ஆழத்தில் சேமித்து விட்டார். ஒவ்வொரு முறை அவர் மேனேஜரிடம் பேசும் போதும் “உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் சொல்லுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். அவரின் மேனேஜர் வெறுத்துப் போய் ஒன்றும் தேராத புராஜக்ட்டுகளை ஜார்ஜ் தலையில் கட்டியது மட்டுமல்லாமல், ஜார்ஜை பார்ப்பதை தவிர்க்கவும் ஆரம்பித்து விட்டார்.

மற்றுமொரு அறிவுரை: “உங்கள் மேனேஜர் உங்களுக்கு வேலை கொடுக்கும் போது அவரின் வாக்கியங்களை paraphrase (ஒருவர் சொல்வதை அவரிடமே திரும்ப சொல்வது) செய்யுங்கள். கொடுக்கப்பட்ட வேலையை சரியாக புரிந்து கொள்ள இது உதவும்”.

கேன்டி ஃப்ரீசன் இந்த அறிவுரையை பின்பற்றி தன் மேனேஜரை எரிச்சல் படுத்தியது தான் மிச்சம்.

“Better Communication” என்பது ஒரு கலை, சிலருக்கு அது வரப்பிரசாதம். “வாயுள்ளவன் வங்காளம் வரை போவான்” என்பதும் மறுக்க முடியாதது. தற்போது வாயுள்ளவர்கள் வானம் வரை போகிறார்கள்! (ஹோவர்டு ஸ்டெர்ன் ஒரு மல்டி மில்லியன் டாலர் உதாரணம்)

ஆனாலும்… “உங்களை ஒருவருக்கு பிடிக்கவில்லையென்றால் அவரிடம் மனம் திறந்து பேசுவது உங்களுக்கு பாதகமாக முடியும்” என்று சொல்கிறார் புகழ் பெற்ற Tuck School of Business-ல் பேராசியராக இருக்கும் பால் அர்ஜென்டி.

“உங்களுக்கும் உங்கள் மேலாளருக்கும் நல்ல உறவு இருந்தாலும், மனதில் உள்ளதையெல்லாம் பேசக் கூடாது” என்றும் பால் அர்ஜென்டி எச்சரிக்கிறார்.

கிளாடியாவும் அவர் மேலாளரும் நல்ல நண்பர்கள். கிளாடியாவின் மேலாளர் அவருக்கு அடிக்கடி சொல்வது “மனதில் எதையும் வைத்துக் கொள்ளாதே. நம் டீமில் யாருக்கு என்ன பிரச்னை இருந்தாலும் அதை நான் சரி செய்கிறேன்”.

தன் குழு உறுப்பினர்களுடன் பேசும் போது பிரச்னையே தன் மேலாளர் தான் என்று கிளாடியா உணர்ந்தார். “அவள் ஒரு சூனியக்காரி”, “அவளை கொன்றால் தான் என் ஆத்மா சாந்தியடையும்”, “அவள் ஒரு அலட்டல், நான் ஹலோ சொன்னால் பதிலுக்கு ஹலோ கூட சொல்ல மாட்டாள்” என்று ஒவ்வொரு டீம் மெம்பரும் சொல்ல கிளாடியாவுக்கு தன் டீமின் பிரச்னை என்ன என்று புரிந்தது.

தனக்கு கிடைத்த தகவல்களை சங்கடத்துடன் கிளாடியா தன் மேலாளரிடம் விளக்கமாக சொன்னார்.

மேலாளரின் reaction எப்படி இருந்தது?

“She almost fired me!” என்று புலம்புகிறார் கிளாடியா.

“உன் எல்லை என்ன என்று தெரியாமல் என்னிடம் விளையாடுகிறாய்” என்று கிளாடியாவின் மேலாளர் கடித்து குதறி விட்டார்!

நன்றாக பேசுவது நல்ல கலை. ஆனாலும் யாரிடம் என்ன பேசுவது என்று தெரிந்து வைத்திருப்பதும் மிக முக்கியம். சிலரிடம் பேசாமல் இருப்பதே மேல்!

8 comments:

லொடுக்கு said...

இடம் பொருள் ஏவல் பார்த்து பேச வேண்டும் என நினைக்கிறேன்.

செல்வேந்திரன் said...

நன்றாக பேசுவது நல்ல கலை. ஆனாலும் யாரிடம் என்ன பேசுவது என்று தெரிந்து வைத்திருப்பதும் மிக முக்கியம். சிலரிடம் பேசாமல் இருப்பதே மேல்! - பிரமாதம்

குமரன் (Kumaran) said...

தகுந்த நேரத்தில் நல்ல அறிவுரை. நாளைக்கு அலுவலகம் போய் என் மேலாளரின் மேலாளரிடம் அவரைப் பற்றிய என் வருத்தங்களைச் சொல்லலாம் என்று எண்ணியிருந்தேன். இந்த இடுகையைப் படித்தவுடன் அதைச் செய்யாமல் இருப்பதே மேல் என்று தோன்றுகிறது. :-)

Bharathi said...

லொடுக்கு, செல்வேந்திரன், குமரன்: நன்றி!

குமரன்: மேலாளரின் மேலாளரிடமா? அது இன்னும் டேஞ்சர்!


மேலாளரின் மேலாளரிடம் தன் மேனேஜரைப் பற்றி குறை சொல்வது சூப்பர் டேஞ்சர்!! இதை நான் சொல்லவில்லை. சொன்னது ஜாக் வெல்ச், GE நிறுவனத்தின் முன்னாள் CEO.

Bharathi said...

More info about Jack Welch's comment is here -> http://digitalbhoomi.in/blog/2007/05/25/complaining-to-bosss-boss/

நெல்லை காந்த் said...

Bharathi,
This is nice one and gives us lot of vital information to me. I have also planned to talk with my manager. your advice helpful me too.

Bharathi said...

Nellai Kanth: I am glad to hear that. All the best.

chenaa said...

நன்றாக பேசுவது நல்ல கலை. ஆனாலும் யாரிடம் என்ன பேசுவது என்று தெரிந்து வைத்திருப்பதும் மிக முக்கியம். சிலரிடம் பேசாமல் இருப்பதே மேல்.இடம் பொருள் ஏவல் பார்த்து பேச வேண்டும் என நினைக்கிறேன். - Chenaa Saravanan, csarava123@yahoo.co.in

Related Posts Plugin for WordPress, Blogger...