Saturday, June 30, 2007

மேலாளர்களிடம் மனதில் உள்ளதை கொட்டலாமா?

வெற்றி பெற உதவும் புத்தகங்கள் மற்றும் சுய உதவி (Self help) புத்தகங்கள் அனைத்தும் தவறாமல் சொல்லும் அறிவுரை – “நன்றாக பேசுங்கள். உங்கள் பேசும் திறமை தான் உங்களுக்கு வெற்றி கொடுக்கும்”.

அலுவலகத்தில் புரமோஷன் கிடைப்பதற்கு வழி சொல்லும் புத்தகங்களும், செமினார் வழிகாட்டிகளும் “உங்களுக்கு யாருடனாவது பிரச்னை இருந்தால் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மேலாளருடன் பிரச்னை இருந்தாலும் அவருடன் one on one மீட்டிங்கில் உங்கள் பிரச்னைகளை தைரியமாக பேசுங்கள்” என்று தான் அறிவுரை கொடுக்கிறார்கள்.

இது போன்ற அறிவுரையை நம்பி தங்கள் மேலாளரிடம் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டி சிலர் வம்பில் மாட்டியிருக்கிறார்கள்!

சில புத்தகங்கள் கொடுக்கும் அறிவுரை – “உங்கள் மேனேஜரிடம் பேசும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் உதவி அவருக்கு தேவைப்படுகிறதா என்று கேளுங்கள். வேலையில் உங்களுக்கு அதிக ஈடுபாடு இருக்கிறது என்று அவர் புரிந்து கொள்வார்”.

இந்த அறிவுரையை ஜார்ஜ் ஃப்ராங்ஸ் தன் இதயத்தின் ஆழத்தில் சேமித்து விட்டார். ஒவ்வொரு முறை அவர் மேனேஜரிடம் பேசும் போதும் “உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் சொல்லுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். அவரின் மேனேஜர் வெறுத்துப் போய் ஒன்றும் தேராத புராஜக்ட்டுகளை ஜார்ஜ் தலையில் கட்டியது மட்டுமல்லாமல், ஜார்ஜை பார்ப்பதை தவிர்க்கவும் ஆரம்பித்து விட்டார்.

மற்றுமொரு அறிவுரை: “உங்கள் மேனேஜர் உங்களுக்கு வேலை கொடுக்கும் போது அவரின் வாக்கியங்களை paraphrase (ஒருவர் சொல்வதை அவரிடமே திரும்ப சொல்வது) செய்யுங்கள். கொடுக்கப்பட்ட வேலையை சரியாக புரிந்து கொள்ள இது உதவும்”.

கேன்டி ஃப்ரீசன் இந்த அறிவுரையை பின்பற்றி தன் மேனேஜரை எரிச்சல் படுத்தியது தான் மிச்சம்.

“Better Communication” என்பது ஒரு கலை, சிலருக்கு அது வரப்பிரசாதம். “வாயுள்ளவன் வங்காளம் வரை போவான்” என்பதும் மறுக்க முடியாதது. தற்போது வாயுள்ளவர்கள் வானம் வரை போகிறார்கள்! (ஹோவர்டு ஸ்டெர்ன் ஒரு மல்டி மில்லியன் டாலர் உதாரணம்)

ஆனாலும்… “உங்களை ஒருவருக்கு பிடிக்கவில்லையென்றால் அவரிடம் மனம் திறந்து பேசுவது உங்களுக்கு பாதகமாக முடியும்” என்று சொல்கிறார் புகழ் பெற்ற Tuck School of Business-ல் பேராசியராக இருக்கும் பால் அர்ஜென்டி.

“உங்களுக்கும் உங்கள் மேலாளருக்கும் நல்ல உறவு இருந்தாலும், மனதில் உள்ளதையெல்லாம் பேசக் கூடாது” என்றும் பால் அர்ஜென்டி எச்சரிக்கிறார்.

கிளாடியாவும் அவர் மேலாளரும் நல்ல நண்பர்கள். கிளாடியாவின் மேலாளர் அவருக்கு அடிக்கடி சொல்வது “மனதில் எதையும் வைத்துக் கொள்ளாதே. நம் டீமில் யாருக்கு என்ன பிரச்னை இருந்தாலும் அதை நான் சரி செய்கிறேன்”.

தன் குழு உறுப்பினர்களுடன் பேசும் போது பிரச்னையே தன் மேலாளர் தான் என்று கிளாடியா உணர்ந்தார். “அவள் ஒரு சூனியக்காரி”, “அவளை கொன்றால் தான் என் ஆத்மா சாந்தியடையும்”, “அவள் ஒரு அலட்டல், நான் ஹலோ சொன்னால் பதிலுக்கு ஹலோ கூட சொல்ல மாட்டாள்” என்று ஒவ்வொரு டீம் மெம்பரும் சொல்ல கிளாடியாவுக்கு தன் டீமின் பிரச்னை என்ன என்று புரிந்தது.

தனக்கு கிடைத்த தகவல்களை சங்கடத்துடன் கிளாடியா தன் மேலாளரிடம் விளக்கமாக சொன்னார்.

மேலாளரின் reaction எப்படி இருந்தது?

“She almost fired me!” என்று புலம்புகிறார் கிளாடியா.

“உன் எல்லை என்ன என்று தெரியாமல் என்னிடம் விளையாடுகிறாய்” என்று கிளாடியாவின் மேலாளர் கடித்து குதறி விட்டார்!

நன்றாக பேசுவது நல்ல கலை. ஆனாலும் யாரிடம் என்ன பேசுவது என்று தெரிந்து வைத்திருப்பதும் மிக முக்கியம். சிலரிடம் பேசாமல் இருப்பதே மேல்!

Sunday, June 24, 2007

கம்ப்யூட்டர் நிபுணர்களை கடனிலிருந்திலிருந்து காப்பாற்றுங்கள்!

இப்படி ஒரு தலைப்பில் ஒரு மின்னஞ்சல் உலாவிக் கொண்டிருப்பதாக மனோ எழுதியிருக்கிறார். அந்த பதிவை http://mano.wiki.zoho.com/Save-the-IT-People-from-Debts.html என்ற பக்கத்தில் படியுங்கள்.

மின்னஞ்சலில் உள்ள விலை விபரங்கள் அல்லது லாஜிக் தவறாக இருப்பதாக உங்களுக்கு தோன்றினால், பின்னூட்டத்தில் விவாதத்தை ஆரம்பித்து வையுங்கள்!

இந்திய ரியல் எஸ்டேட் பற்றியும், புரோக்கர்களின் துர்போதனைகள் பற்றியும் பல முறை எழுதியுள்ளேன். சமீபத்தில் சென்னை நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது கேள்விப்பட்டது – Dr. G என்பவர் பற்றி.

இவர் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் Dr. No போன்றவர் போலிருக்கிறது. Dr. G. விருகம்பாக்கத்தில் வீட்டு ஏஜென்டாக இருப்பதாகவும் சென்னை ரியல் எஸ்டேட் விலைகள் தறிகெட்டு வானத்திற்கு போனதற்கு இவர் ஒரு முக்கிய காரணம் என்றும் நண்பர் சொன்னார். இதைப்பற்றிய உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள்.

Saturday, June 23, 2007

நான் வாங்கிய சில பரஸ்பர நிதிகள்

கடந்த பத்து நாட்களில் அலுவலக வேலை டென்ஷன் அளவுக்கு மேல் எகிறி விட்டது. முடிந்த வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு பதிவு எழுத முயற்சிக்கிறேன். கடந்த வாரம் அது முடியாமல் போய் விட்டது.

கடந்த ஒரு வருடத்தில் எனது IRA கணக்கில் வாங்கிய சில நிதிகளின் விபரம் கீழே கொடுத்திருக்கிறேன். முதலில் இருப்பது பரஸ்பர நிதியின் பெயர், அடுத்து இருப்பது கடந்த 10 – 12 மாதங்களில் நிதியின் லாப விகிதம்.

FIGRX (Fidelity Intl Discovery), 21.21%

FNARX (Fidelity Select Natural Resources), 31.63%

HFTFX (Hennessy Focus 30 Fund), 19.8%

JAOSX (Janus Overseas), 31.12%

JETAX (Julius Baer Intl Equity), 23.41%

LZOEX (Lazard Emerging Markets), 34.26%

MAKOX (Matthews Korea Fund), 31.93%

RSVAX (RS Value Fund), 15.15%

கொரியா நிதியில் நான் போட்ட முதலீட்டை விட RSVAX-ல் போட்ட முதலீடு அதிகம். கொரியா போன்ற நாடுகளில் லாபம் பெரிதாக இருக்காது என்று நினைத்தேன். நான் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக, RSVAX-ஐ விட கொரியா நிதி இரண்டு மடங்கு லாபம் கொடுத்திருக்கிறது.

FNARX லாபத்திற்கு முக்கிய காரணம் சீனா. அந்த நாட்டின் கனிம உலோகத்தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

மேலே குறிப்பிட்ட பரஸ்பர நிதிகளில் பெரும்பாலான நிதிகள் இந்திய, சீன நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கின்றன.

வளர்ந்து வரும் நாடுகளில் (Emerging Markets) இனிமேல் பெரிதாக ஒன்றும் லாபம் கிடைக்காது என்று போன வருடம் பல நிபுணர்கள் எச்சரித்தார்கள். அப்படி இருந்தும் LZOEX கடந்த ஒரு வருடத்தில் 44 சதவிகிதம் லாபம் கொடுத்திருக்கிறது. நான் வாங்கி இன்னும் ஒரு வருடம் ஆகாததால் 34.26 சதவிகித லாபம் தான் என் கணக்கில். இந்த லாபங்கள் இனி மேலும் தொடருமா என்று தெரியாது.

Account Snapshot

என் கணக்கில் இருப்பதிலேயே பாதுகாப்பான நிதி HFTFX ஒன்று தான். மற்ற நிதிகள் அனைத்தும் சில வாரங்களிலேயே தலைகீழாக மாற வாய்ப்பு உள்ளது!

அமெரிக்க பொருளாதாரம் ஓரளவு பலவீனமடைந்தாலும், அமெரிக்க பங்கு சந்தையின் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. அடுத்த வருடம் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஒரு முக்கியமான காரணம். தேர்தல் நடக்கவிருக்கும் வருடத்திலும் அதன் முந்தைய வருடத்திலும் அமெரிக்க பங்கு சந்தை நல்ல லாபத்தை கொடுப்பது வழக்கமாக நடந்து வரும் ஒன்று.

நம் ஊர் அரசியல்வாதிகளை போலவே அமெரிக்க அரசியல்வாதிகளும் தேர்தல் வருவதற்கு முன் புதிதாக பல திட்டங்களை அறிவிக்கிறார்கள். வெறும் அறிவிப்போடு நிறுத்தி விடாமல், அதை செயல்படுத்தவும் செய்கிறார்கள். நாட்டின் பல துறைகளில் முன்னேற்றம் வரும் வாய்ப்பு இருக்கும் போது பங்கு சந்தையும் உயர்கிறது.

இந்த பதிவிற்கு தொடர்புள்ள பதிவு: எமர்ஜிங் மார்க்கெட் பற்றிய என் முதல் பதிவு. இதை நான் எழுதி 20 மாதங்களாகி விட்டது! இதில் நான் குறிப்பிட்ட அனைத்து பரஸ்பர நிதிகளும் நல்ல லாபத்தை கொடுத்திருக்கின்றன, thank god!

Sunday, June 10, 2007

சென்னை ரியல் எஸ்டேட்

என் நண்பர்கள் சிலர் சென்னையில் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கிறார்கள். ஒருவர் பில்டர் - சாதாரண ஆளாக இருந்தவர், எங்கேயோ போய் விட்டார். வருடத்துக்கு பல கோடிகள் வருமானம்.

நண்பர்களுடன் பேசும் போது தவறாமல் நான் விவாதிக்கும் விஷயம் – ரியல் எஸ்டேட், குறிப்பாக தமிழ் நாடு ரியல் எஸ்டேட். நான் “bubble” என்ற வார்த்தையை சொன்னாலே என்னை கிண்டல் செய்வார்கள். சமீபத்தில் அவர்களே சென்னை ரியல் எஸ்டேட் நிதானத்துக்கு வந்திருப்பதாக ஒப்புக் கொள்கிறார்கள்.

விற்பனைக்கு இருக்கும் வீடுகளுக்கு டிமான்ட் குறைந்திருக்கிறது. வீடு/அபார்ட்மென்ட் விற்பனைகளும் குறைந்திருக்கிறது. வீடு விலைகள் குறையவில்லை, ஆனாலும் வீடு வாங்க ஆசைப்படுவர்களுக்கு உள்ள சாய்ஸ் கூடியிருக்கிறது.

இன்னும் சில மாதங்களில் வீடு விலை குறைவதற்கான அறிகுறிகள் இவை. அப்படியே குறைந்தாலும், ஒரு கோடிக்கு விற்கப்படும் வீட்டின் விலை ஐம்பது லட்சமாக குறையப் போவதில்லை. ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.

இந்தியாவின் I.T.Boom-ல் கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்களை விட “மிக அதிக” அளவில் லாபம் அடைந்தவர்கள் ரியல் எஸ்டேட் துறையை சார்ந்தவர்கள் தான். Fortune இதழ் சமீபத்தில் வெளியிட்ட பெரும் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பெரும்பாலான புது பில்லியனர்கள் ரியல் எஸ்டேட் துறையில் உள்ளனர்.

இந்திய ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் வெளி நாட்டு நிறுவனங்கள் பணத்தை அள்ளிக் கொட்டும் வரை இந்திய ரியல் எஸ்டேட் சரிய போவதில்லை. ஆனாலும் பிரச்னை என்று வரும் போது இந்த வெளி நாட்டு நிறுவனங்கள் தான் முதலில் தன் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடுவார்கள்.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் பல கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து ரியல் எஸ்டேட் நிபுணர்களை வேலைக்கு வைத்திருக்கிறது. இந்தியாவில் ரியல் எஸ்டேட்டில் இனி மேல் பெரிய லாபம் கிடையாது என்று இவர்கள் தீர்மானித்தால், கிடைக்கும் விலைக்கு தன்னிடம் உள்ளவற்றை விற்று விற்று விட்டு அடுத்த நாட்டிற்கு தாவி விடுவார்கள்.

“இந்தியாவில் வீடு விலை குறைந்ததாக சரித்திரமே இல்லை” என்று வசனம் பேசி ஒரு கிரவுண்டு நிலத்தை 3 கோடிக்கு வாங்குபவர்களின் கதி?

சமீபத்தில் வெளியான ஒரு ரிப்போர்ட்டின் படி அமெரிக்காவில் ஒரு ஏக்கர் விளை நிலத்தின் சராசரி விலை $1,900 (Rs. 76,000) மட்டுமே! சென்னை OMR-ல் ஒரு ஏக்கர் விளை நிலத்தின் விலை 50 லட்சம்! (அந்த நிலத்தின் சொந்தக்காரருக்கு கிடைப்பது 30 லட்சம் தான், மீதம் 20 லட்சத்தை இடைத்தரகர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்)

இந்திய ரியல் எஸ்டேட் சாதாரண மனிதனின் affordability-ஐ விட்டு வெகு தூரம் செல்வது ஒரு பக்கம் இருக்க, இந்திய ரியல் எஸ்டேட் விலையேற்றத்தின் காரணமான I.T. Boom-ஐ அசைத்துப் பார்க்கும் ஒரு ரிப்போர்ட்டை BusinessWeek பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.

Outsourcing செய்வதால் தங்களுக்கு பெரிய லாபம் என்று பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் பிஸினஸ் வீக் ரிப்போர்ட்டின் படி அமெரிக்க பொருளாதாரத்துக்கு அது பெரிய நஷ்டம் என்று நிச்சயமானால், அரசியல் ரீதியாக outsourcing நிறுவனங்களுக்கு பிரச்னைகள் வரும்.

அப்படி பிரச்னைகள் வரும் போது, இந்திய நிறுவனங்களுக்கு கிடைக்கும் outsourcing ஒப்பந்தங்கள் குறையும். அதன் தாக்கம் இந்திய ரியல் எஸ்டேட்டிலும் தெரியும்.

Related Links:

இந்திய ரியல் எஸ்டேட் நீர்க்குமிழியை பற்றி ஒரு சுவாரசியமான விவாதம்

என்னுடைய பழைய பதிவு

Monday, June 04, 2007

அமெரிக்கர்களின் சேமிப்பு - Follow up

என் பக்கம் வீசிய தென்றலின் பின்னூட்டத்திற்காக இந்த பதிவு.

சேமிப்பதற்கு நிறைய வழிகள் உள்ளன. சுய கட்டுப்பாடு இருந்தால் குறைவாக சம்பளம் வாங்கினாலும் சேமிக்கலாம். இந்த பிளாக்கில் “சேமிப்பு” என்ற லேபிளில் பல பதிவுகள் உள்ளன. அவை உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால், DSP (Direct stock purchase) மற்றும் DRP (Dividend reinvestment plans) திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் சேமிக்கலாம். இந்த திட்டங்களின் கீழ் டார்கெட், காஸ்ட்கோ போன்ற நிறுவனங்களின் பங்குகளை அவர்களிடமிருந்தே நேரடியாக வாங்கலாம். உதாரணமாக, நீங்கள் டார்கெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்பினால், இந்த இணைப்பில் நேரடியாக வாங்கலாம்.

பல நிறுவனங்கள் தங்கள் வலைத்தளத்தில் “Investors” என்ற பிரிவில் DSP பற்றிய விபரங்களை கொடுத்திருப்பார்கள். நேரடியாக பங்குகளை வாங்குவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. புரோக்கர்களிடம் கொடுக்க வேண்டிய கமிஷன் மிச்சமாகும். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியிலிருந்து நேரடியாக DSP-ல் முதலீடு செய்யவும் வசதி உள்ளது.

மெலான் முதலீட்டாளர் நிறுவனத்தின் மூலமாகவும் நிறுவனங்களின் பங்குகளை நேரடியாக வாங்கலாம். எந்த நிறுவனங்களில் DSP வசதி உள்ளது என்பதை இந்த இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

DSP திட்டத்தை போல DRP என்ற திட்டமும் உள்ளது. DRP முதலீட்டில் கிடைக்கும் டிவிடென்ட்டுகள் திரும்பவும் பங்குகளில் முதலீடு செய்யப்படும். டிவிடென்ட் தொகை ஆரம்பத்தில் சிறியதாக தோன்றினாலும், 20 வருடங்கள் கழித்து பார்க்கும் போது பெரிய தொகையாக வளர்ந்திருக்கும்.

Sharebuilder, buyandhold போன்ற தளங்களில் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட சேமிப்பை முதலீடு செய்யலாம். உங்கள் சேமிப்பு 500 டாலரை எட்டும்போது நல்ல பங்குகள் சிலவற்றை குறைந்த கமிஷனில் வாங்கலாம். உங்கள் சேமிப்பை வைத்து ட்ரேட் செய்யாமல், நல்ல பங்குகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். விற்பதை பற்றி 10 வருடங்கள் கழித்து யோசிக்கலாம்.

Sharebuilder போன்ற தளங்களில் ETF போன்ற பங்குகளையும் வாங்கலாம். ETF என்பது “கிட்டத்தட்ட” பரஸ்பர நிதியை போன்றது, ஆனால் அதிக செலவில்லாதது. ETF பற்றி விளக்குவதற்கு ஒரு தனி பதிவு போட வேண்டும்.

உங்கள் பரஸ்பர நிதிகள் அனுமதித்தால், மாதா மாதம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து $100லிருந்து $500 வரை முதலீடு செய்யுங்கள். $500 முதலீட்டை ஐந்தாக பிரித்து ஐந்து நிதிகளில் முதலீடு செய்வது நல்லது. பணம் உங்கள் கைக்கு வராமல் முதலீடாக மாறுவது உங்களுக்கும் உங்கள் போர்ட்போலியோவுக்கும் சுய கட்டுப்பாட்டை கொடுக்கும். ஒளிமயமான எதிர்காலத்தையும் கொடுக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...