Monday, April 23, 2007

தவறு மேல் தவறு செய்தால்…

ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய். அதை மறைக்க இன்னொன்று. இப்படி பல பொய்களினால் தன் மானம், மரியாதை இழந்து அமெரிக்க சிறையில் கஷ்டப்படுகிறார் அமர் மோசென் என்ற எகிப்திய அமெரிக்க விஞ்ஞானி.

அமர் நல்ல புத்திசாலி. CALTECH கல்லூரியில் Ph.D படிப்பை மிக சுலபமாக முடித்த அறிவாளி. 40 patent-களுக்கு சொந்தக்காரர். Intel நிறுவனத்தில் CMOS 256K RAM திட்டத்துக்கு தலைமை தாங்கி அதை வெற்றிகரமாக முடித்தார். Actel corporation என்ற நிறுவனத்தின் CEO-ஆக இருந்தார். 1989-ல் Aptix என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.

வெற்றி மேல் வெற்றி குவிந்தது. கலிபோர்னியாவில் லாஸ் கேட்டோஸ் என்ற நகரத்தில் 17 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய பங்களாவில் தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

1998-ல் Quickturn design systems என்ற நிறுவனம் தனக்கு சொந்தமான தனியுரிமை அதிகார பத்திரத்தை (Patent) மீறியதாக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தன் தரப்பு வாதத்தை பலப்படுத்துவதற்காக போர்ஜரி செய்தார். அவர் செய்த அந்த தவறு அவரின் வாழ்க்கை திசைமாற காரணமாகி விட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி அல்சப், வழக்கை தள்ளுபடி செய்ததோடில்லாமல் சாட்சிகளில் போர்ஜரி செய்தததை விசாரிக்கும்படி FBIக்கு உத்தரவிட்டார்.

அமர் மோசென் பயந்து போய் நாட்டை விட்டு ஓட முயற்சித்தார். $40,000 நோட்டுகளோடும் புது எகிப்திய பாஸ்போர்டோடும் அவர் தப்பிக்க முயன்றபோது FBI பிடித்து சிறையில் அடைத்து விட்டது.

ஜெயிலுக்கு போன புண்ணியவான் அங்கே வாயை மூடிக்கொண்டு சும்மா கிடக்காமல், “நீதிபதி அல்சப்பை கொல்ல எவ்வளவு செலவாகும்” என்று தன் சக கைதியிடம் விசாரித்திருக்கிறார்.

அந்த கைதி “$25,000 செலவாகும்” என்று சொன்னவுடன், “அடடே, அவ்வளவு காஸ்ட்லியா? $10,000 தான் செலவாகும் என்று கேள்விப்பட்டேனே!” என்று அலுத்துக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் பேசிக்கொண்டதை சிறையில் உள்ள வீடியோ கேமரா பதிவு செய்துவிட்டது!

ஜனவரி 5, 2007ல் அமர் மோசென் மீதான வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது -- 17 வருடம் சிறை தண்டனை.

அமர் போர்ஜரி செய்யாமல் இருந்திருந்தால் அவர் தன் வழக்கில் வெற்றி பெறாவிட்டாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருப்பார். தவறு செய்பவர்கள் தன் தவறை நினைத்து திருந்தாமல், திரும்ப திரும்ப தவறு செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு அமர் மோசென் ஒரு உதாரணம்.

Sunday, April 15, 2007

பறக்க விடப்பட்ட பதினைந்து மில்லியன் டாலர்கள்!

மிமி மோனிகா வாங் ஹாங்காங் HSBC வங்கியில் உயர்ந்த பதவியில் உள்ளவர். இந்த வங்கியின் பிரைவேட் பேங்க் பிரிவின் தலைமை அதிகாரி.

மோனிகாவுக்கு ரம்பாவின் மேல் அளவு கடந்த நாட்டம் உண்டு. ரம்பா இல்லையென்றால் தன் வாழ்வே இல்லை என்ற அளவுக்கு ஒரு obsession.

Rambha

மோனிகாவின் அபிமான ரம்பா இவரில்லை!

Rumba Dance

மோனிகாவுக்கு ரொம்ப பிடித்தது ரம்பா நடனம்.

ரம்பா என்ற லட்டீன் நடனத்தின் மேல் மோனிகாவுக்கு அளவு கடந்த காதல். அதை முறைப்படி கற்றுக் கொள்வதற்காக தன் குருவுக்கு அவர் கொடுத்த கட்டணம் US$15.4 மில்லியன்!

மோனிகாவின் குரு கேய்னர் பேர்வெதர். கேய்னர் ரம்பா நடன சேம்பியன். உலக அளவில் நடந்த லட்டீன் நடன போட்டிகளில் 15 முறை வென்றவர். அவரும் அவர் கணவர் மிர்கோவும் மோனிகாவுக்கு நடனம் சொல்லிக் கொடுத்தார்கள்.

நடனம் கற்றுக் கொள்வதற்காக 2004-ல் மோனிகா தன் குருவிடம் எட்டு வருட ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். எட்டு வருட வகுப்புகளுக்கு 15.4 மில்லியன் டாலர்கள் கொடுப்பதாக ஒப்பந்தம்! முன் பணமாக 8 மில்லியன் டாலர் மோனிகா கொடுத்து விட்டார்.

ஒப்பந்தம் போட்ட சில மாதங்களிலேயே ஒப்பந்தத்துக்கு சோதனை வந்து விட்டது. மோனிகா சில அசைவுகளை சரியாக செய்யாததால் அவரை “சோம்பேறி பசு மாடு” என்று மிர்கோ திட்டியிருக்கிறார். 15 மில்லியன் பணத்தையும் கொடுத்து இவனிடம் பசு மாடு என்று திட்டு வாங்க வேண்டியிருக்கிறதே என்று வெறுத்துப் போய் மோனிகா தன் வகுப்புகளை ரத்து செய்து விட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய சொல்லியிருக்கிறார்.

கேய்னரும் மிர்கோவும் அதற்கு சம்மதிக்காததால் மோனிகா கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். கேய்னர் பதிலுக்கு இன்னொரு வழக்கு தொடுத்து மீதமுள்ள 7.4 மில்லியன் டாலரும் ஒப்பந்தப்படி மோனிகா தர வேண்டும் என்று தகராறு செய்ய ஹாங்காங் பத்திரிகைகளுக்கு நல்ல தீனி கிடைத்தது.

செப்டம்பர் 2006-ல் ஹாங்காங் கோர்ட் மோனிகாவிற்கு சாதகமாக தீர்ப்பு கூறியது. கேய்னர் தான் வாங்கிய 8 மில்லியன் டாலரும் அதற்கான வட்டியும் சேர்த்து மோனிகாவுக்கு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

மோனிகா HSBC வங்கியில் தொடர்ந்து வேலை செய்து வருகிறார். தன் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை எப்படி சேமிப்பது அல்லது முதலீடு செய்வது என்று ஆலோசனை சொல்கிறார்! பிறருக்கு அறிவுரை சொல்வது சுலபம், அதை தான் பின்பற்றுவது தான் கடினம்!

ரம்பாவின் மேல் உள்ள காதல் இன்னும் போகவில்லை. மோனிகா தன் புது ஆசிரியருக்கு மாதம் US$21,000 கொடுக்கிறார்.

Wednesday, April 11, 2007

விக்ரம் பண்டிட்

திறமையான ஒருவரை வேலைக்கு எடுக்க வேண்டுமென்றால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். எவ்வளவு அதிகம் கொடுக்கலாம் என்ற கேள்விக்கு சிட்டி பேங்க் வித்தியாசமான பதிலை கொடுக்க இருக்கிறது.

விக்ரம் பண்டிட் என்ற திறமைசாலியை தன் வங்கியின் உயர் பதவியில் வைப்பதற்காக அவர் நடத்தும் நிறுவனத்தையே 600 மில்லியன் டாலருக்கு வாங்குவதற்காக சிட்டி பேங்க் பேச்சு வார்த்தை நடத்துகிறது!

மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்தவர் விக்ரம் பண்டிட். 2005-ல் அந்த நிறுவனத்தில் நடந்த அரசியல் வித்தைகள் பிடிக்காமல் வெளியே வந்து old lane என்ற ஹெட்ஜ் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

விக்ரம் பண்டிட் சிட்டி பேங்கில் சேர்ந்தால் அந்த வங்கியின் தலைமை பதவியை கூட சில வருடங்களில் அடையலாம் என்று வால் ஸ்ட்ரீட் வட்டாரங்கள் ஆருடம் கூறுகின்றன.

Related links: abcmoney, VC Circle

Tuesday, April 10, 2007

கனவு வேலை

சிலருக்கு கனவு காண்பதே வேலை. இந்த பதிவு அவர்களைப் பற்றியது அல்ல. Dream Job என்பதை தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.

உங்கள் நிறுவனத்தின் CEO சம்பளம் 40 கோடி ரூபாய். உங்கள் சம்பளம் 16 லட்ச ரூபாய். உங்கள் CEOவை விட பல மடங்கு புத்திசாலி நீங்கள். CEO முட்டாள் தனமாக எடுத்த முடிவுகளால் போன வருடம் மட்டும் நிறுவனத்துக்கு 10 கோடி நஷ்டம். நீங்கள் அந்த பொறுப்பில் இருந்திருந்தால் ஒரு பைசா நஷ்டமடைய விட்டிருக்க மாட்டீர்கள். இருந்தாலும் உங்கள் நிறுவனத்தின் CEO பதவியை நீங்கள் எட்டுவதற்கு பல வருடங்கள் ஆகலாம். “இந்த முட்டாளுக்கு 40 கோடி சம்பளமா? It’s not fair…” என்று கோபப்பட்டிருக்கிறீர்களா? Welcome to the club.

தன் தகுதிக்கு சமமாக அல்லது கீழே உள்ளவர்கள் தன்னை விட பல மடங்கு உயரத்தில் இருக்கும் போது கோபம் ஏற்படுவது இயல்பு. மேலே கண்ட உதாரணம் கற்பனையல்ல, பல நிறுவனங்களின் அன்றாட நிகழ்வு.

புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒரே வகுப்பில் பயின்றவர்களில் ஒரு சிலர் மட்டும் மிகச் சிறந்த வெற்றியடைகிறார்கள். மற்றவர்கள் சாதாரண வேலைகளில் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். ஏன்?

சில உதாரணங்கள்:

உதாரணம் 1:

என் நண்பர் ஐ.ஐ.டி. சென்னையில் மெக்கானிக்கல் படித்து விட்டு டாடாவில் Programmerஆக சேர்ந்தார், இப்போது கலிபோர்னியாவில் $90,000 சம்பளம் வாங்குகிறார். அவரின் வகுப்பு நண்பர் கம்ப்யூட்டர் துறையின் கவர்ச்சியில் மாட்டாமல் M.S. மெக்கானிக்கல் முடித்து போயிங் நிறுவனத்தில் சேர்ந்து பல மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கிறார்.

உதாரணம் 2:

அண்ணா பல்கலைக் கழகத்தின் கிண்டி கல்லூரியில் 1986-ல் பலர் B.E. படிப்பை முடித்தார்கள். அதில் சோமசேகர் மட்டும் எங்கேயோ போய் விட்டார்! மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறார். அவருடன் படித்த பெரும்பாலானோர் இது போன்ற பதவிகளில் இல்லை.

பெரும்பாலான உயர் பதவிகளில் bipolar pay structure இருக்கிறது என்று Salary.com தளத்தின் பில் கோல்மன் சொல்கிறார். வெகு சிலர் மட்டும் கோடி கோடியாக அள்ளி குவிக்கிறார்கள், பெரும்பாலானோர் சாதாரண வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும் சொல்கிறார்.

சினிமா அல்லது தியேட்டர் டைரக்டர்கள் சம்பளங்களில் கூட பெரிய வித்தியாசங்கள் உள்ளது. அமெரிக்காவில் ஒரு சினிமா/டிவி/தியேட்டர் டைரக்டரின் சராசரி சம்பளம் $28,000. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் போன வருட சம்பளம் $330 மில்லியன்!

உங்கள் கனவு வேலையை அடைய வேண்டுமானால் முக்கியமாக செய்ய வேண்டிய காரியம்: தங்கள் கனவு வேலையை அடைந்தவர்களின் வாழ்க்கையை படிப்பது.

அவர்கள் அனைவருக்கும் பொதுவான குணாதிசயங்கள் – திறமை, தான் செய்யும் வேலையில் அளவு கடந்த ஆர்வம் (passion), வெற்றியை அடைய வேண்டும் என்ற வெறி, ஒழுக்கம் மற்றும் தைரியம்.

இவற்றில் தைரியம் மிக முக்கியம் என்று சொல்கிறார், Vault.com தளத்தின் மார்க்.

கனவு வேலையை நோக்கி பயணம் செய்பவர்களை பலர் தடுத்து நிறுத்தப் பார்ப்பார்கள். கல்லூரியில் நண்பர்களுடன் ஊர் சுற்றாமல் GMATக்கு படிக்கும் போது “இருக்கிறதை விட்டு விட்டு பறக்கிறதை பிடிக்கப் போறியா?!” என்று கிண்டல் செய்வார்கள்.

“இன்னும் பத்து வருடங்களில் CEO பதவியை அடைவது தான் என் லட்சியம்” என்று நீங்கள் சொன்னால் அந்த பதவியை நீங்கள் ஏன் அடைய முடியாது என்று “அறிவுரை” கூற நிறைய பேர் இருப்பார்கள்.

இந்த கிண்டல்கள், உன்னால் முடியாது என்ற அறிவுரைகள் மற்றும் கூட இருந்தே குழி பறிப்பவர்கள் -- இவை அனைத்தும் “emotional impediment” என்று மார்க் சொல்கிறார். இவற்றை மீறி உங்கள் வேலையில் focus செய்வதற்கே நிறைய தைரியம் வேண்டும்.

உங்கள் கனவு வேலையை நீங்கள் அடையும் போது மறக்காமல் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். சோமசேகர் பற்றி எழுதியது போல உங்களைப் பற்றியும் எழுகிறேன்!

Related Posts Plugin for WordPress, Blogger...