Saturday, March 31, 2007

இன்று 750 கோடி வீணடிக்கப்பட்டது

தமிழகத்தில் வழக்கம் போல பந்த் “அமைதியாக” நடந்து முடிந்தது. வியாபாரிகளும் வழக்கம் போல தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு ஒரு நாள் வருமானத்தை இழந்து வீட்டில் இருந்தார்கள்.

எதற்கு இந்த பந்த்? இதனால் மக்களுக்கு என்ன நன்மை? “இந்த நாடு உருப்படாது” என்று அடிக்கடி விரக்தியில் புலம்பும் நண்பன் எழுதிய பதிவை படித்தேன். “நம் அரசியல்வாதிகள் திருந்தவே மாட்டார்களா?” என்று புலம்ப தோன்றுகிறது.

பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னேற வேண்டும். அதில் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் தனக்கு மக்கள் தந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு அந்த மக்களின் கடைகளை மூடச் சொல்வது அயோக்கியத்தனம். ஒரு நாள் முழுதும் பஸ், ரயில்கள் ஓடக்கூடாது என்று சொல்வது ரவுடித்தனம்.

சுப்ரீம் கோர்ட்டை கண்டித்து பந்த் நடத்துவது கோர்ட் அவமதிப்புக்குள்ளாகும். இருந்தாலும் நம் அரசியல்வாதிகளை சுப்ரீம் கோர்ட் தண்டிக்காது. அருந்ததி ராய் போன்றவர்கள் சுப்ரீம் கோர்ட்டை கண்டித்து பேசினாலே சிறைக்கு செல்ல வேண்டும், ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் செய்த வேலைக்கு எந்த தண்டனையும் கிடையாது.

“மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காக இந்த பந்த் நடத்துகிறோம்” என்று கருணாநிதி கூறியுள்ளார். வெறுப்பு கலந்த சிரிப்பு தான் வருகிறது. CII-வின் கருத்துப்படி இன்றைய கடையடைப்பால் 750 கோடி வீணடிக்கப்பட்டிருக்கிறது.

ஜாதிகளை ஆரம்பித்து வைத்தவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினராக இருக்கலாம். ஆனால் அந்த ஜாதிகள் இன்னும் அழியாமல் இருப்பதற்கு இன்றைய அரசியல்வாதிகள் தான் காரணம். ஜாதிகள் காணாமல் போய்விட்டால் மருத்துவ குடிதாங்கிகளும், ஆறு மாதத்துக்கு ஒரு முறை கட்சி மாறும் விடுதலை சிறுத்தைகளும் காணாமல் போய் விடுவார்கள். மக்களே விரும்பினால் கூட ஜாதிகள் அழிவதற்கு சந்தர்ப்பமே இல்லை.

இட ஒதுக்கீடு என்பது வெறும் அரசியல் நாடகம். சென்னை அரசாங்க பள்ளியில் படித்து IIM வரை சென்ற சரத்பாபு சரியாக சொன்னார் – “இட ஒதுக்கீடு என்பது ஒரு தலைமுறைக்கு மட்டும் இருக்க வேண்டும்”.

தமிழ்நாட்டின் கிராம பள்ளிகள் பலவற்றில் ஆசிரியர்கள் வகுப்புக்கு வராமல் வட்டிக்கு பணம் விட்டு சம்பாதிக்கிறார்கள். பல பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்யவில்லை. கிராமங்களில் தரமான அடிப்படை கல்வியை அரசாங்கம் கொடுத்தாலே போதும், கிராம மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தேவைப்படாது. தற்போதைய மோசமான சூழ்நிலைகளில் கூட கஷ்டப்பட்டு படித்து நகர மாணவர்களுக்கு இணையாக கிராம மாணவர்கள் மதிப்பெண்கள் எடுக்கிறார்கள். நகரங்களில் உள்ள கல்வித்தரத்தை கிராமங்களில் கொடுத்தால் கிராம மாணவர்கள் ஒரு கலக்கு கலக்கி விடுவார்கள்.

IIT, IIM போன்ற தரம் வாய்ந்த கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கருணாநிதி போராடுகிறார். தமிழ்நாட்டில் பல நூறு அரசாங்க கல்லூரிகள் உள்ளன. அவற்றில் ஒரு சில கல்லூரிகளையாவது IIT தரத்தில் மாற்றலாமே?

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு அந்த அளவுக்கு திறமை கிடையாது. மத்திய அரசாங்கம் கஷ்டப்பட்டு உருவாக்கிய கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று அராஜக பந்த் நடத்தத்தான் தெரியும்.

பின் குறிப்பு: எட்டாம் வகுப்பு வரை நான் ஒரு கிராமத்தில் படித்தவன். கிராமங்களில் கிடைக்கும் தரமற்ற கல்வியின் தாக்கத்தை நேரடியாக உணர்ந்தவன். நான் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவன் என்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நான் ஒரு எதிரி என்றும் தவறாக புரிந்து கொண்டு எனக்கு வந்த hate-commentக்கு பதிலாக இந்த பின்குறிப்பு அவசியமாகிறது. இன்டர்நெட்டில் கூட நான் என்ன ஜாதி என்று சொன்னால் தான் எழுத விடுவார்கள் போல இருக்கிறது!

5 comments:

ranga said...

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் சன் டி வி யின் நிகழ்ச்சிகளோ
அவர்களது வருமானமோ ஒரு விதத்திலும் பாதிக்கப் படாமல்
தி மு க வும் அவர்களது தோழமைக் கட்சிகளும் பந்த் நடத்தி
வெற்றி கொண்டனர்.

வாழ்க இவர்களது சமுதாய அக்கறை.

பி.கு: சனிக் கிழமை சன் டி வி யில் காட்டிய படம் 'காசேதான் கடவுளடா'.

Bharathi said...

நன்றி ரங்கா! சன் டிவியின் அதிபதி கலாநிதி மாறன் சன் டிவி பங்குகளால் பில்லியனராகி விட்டார். அவரும் பிற்படுத்தப்பட்டவர் தான், கிராமங்களில் ஒரு வேளை சாப்பாட்டுக்கு அல்லாடுபவர்களும் பிற்படுத்தப்பட்டவர்கள் தான்.

உண்மையிலேயே பிற்படுத்தபட்டவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்தால் தான் அது சத்தியமான "சமூக நீதி".

IR Fan said...

இந்த பதிவிற்கு உங்களுக்கு வந்த hate comments - தனியாக ஒரு பதிவில் இடவும்.

Bharathi said...

IR Fan: மிக்க நன்றி. அந்த பின்னூட்டத்தை பிரசுரித்தால் சாதிகளை பற்றிய சர்ச்சை உருவாகும். அதை reject செய்து குப்பையில் போட்டு விட்டேன், அது போன்ற பின்னூட்டங்கள் இருக்க வேண்டிய இடம் அது தான்!

இளைய தலைமுறையினர் மனதில் கூட சாதி பற்றிய தாக்கங்கள் நிறைய உள்ளன. சாதிகள் ஒழிவதற்கு இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆகும் போல இருக்கிறது.

Maayan said...

முன்னறிவிப்பு இல்லாமல் பந்த் நடத்தப்படுவது நியாயமில்லாத விஷயம்.. உண்மையில் இந்த நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பவர்கள் சாதியில் அடிப்படையில் பிற்படுத்தப்படவில்லை... பொருளாதாரத்தின் அடிபடையில் பிற்படுத்தப்பட்டுள்ளனர்.

http://maayanpaarvai.blogspot.com/2007/03/blog-post_31.html

Related Posts Plugin for WordPress, Blogger...