Saturday, March 31, 2007

பல வருடங்களாக லாபம் சம்பாதிக்கும் பரஸ்பர நிதிகள்

அமெரிக்க சந்தையில் பங்குகளை ட்ரேட் செய்வதை விட பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கிறது. அமெரிக்காவில் 9,000க்கும் மேற்பட்ட பரஸ்பர நிதிகள் உள்ளன. இவற்றில் எதில் முதலீடு செய்வது?

பல வருடங்களாக தொடர்ந்து லாபம் சம்பாதிக்கும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது நல்லது. அப்படிப்பட்ட சில நிதிகள்:

FBR Small cap (FBRVX) -- 21.8%, 18%, 17.9%
Janus Overseas (JAOSX) -- 20.5%, 14.2%, 15.3%
CGM Realty (CGMRX) -- 35.8%, 20.3%, 20.5%
Baron Growth (BGRFX) -- 13.5%, 13.7%, 17.8%

இந்த பதிவில் MS Word-ல் உள்ள டேபிளை ஒட்ட முடியவில்லை. மேலே உள்ள லாப சதவிகிதங்களில் முதலாவது கடந்த 5 வருடத்துக்கான சராசரி வருட லாபத்தை குறிக்கிறது. இரண்டாவது 10 வருடத்துக்கான சராசரி வருட லாபம். மூன்றாவது நிதி ஆரம்பித்ததிலிருந்து கிடைத்த சராசரி வருட லாபம்.

இன்று 750 கோடி வீணடிக்கப்பட்டது

தமிழகத்தில் வழக்கம் போல பந்த் “அமைதியாக” நடந்து முடிந்தது. வியாபாரிகளும் வழக்கம் போல தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு ஒரு நாள் வருமானத்தை இழந்து வீட்டில் இருந்தார்கள்.

எதற்கு இந்த பந்த்? இதனால் மக்களுக்கு என்ன நன்மை? “இந்த நாடு உருப்படாது” என்று அடிக்கடி விரக்தியில் புலம்பும் நண்பன் எழுதிய பதிவை படித்தேன். “நம் அரசியல்வாதிகள் திருந்தவே மாட்டார்களா?” என்று புலம்ப தோன்றுகிறது.

பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னேற வேண்டும். அதில் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் தனக்கு மக்கள் தந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு அந்த மக்களின் கடைகளை மூடச் சொல்வது அயோக்கியத்தனம். ஒரு நாள் முழுதும் பஸ், ரயில்கள் ஓடக்கூடாது என்று சொல்வது ரவுடித்தனம்.

சுப்ரீம் கோர்ட்டை கண்டித்து பந்த் நடத்துவது கோர்ட் அவமதிப்புக்குள்ளாகும். இருந்தாலும் நம் அரசியல்வாதிகளை சுப்ரீம் கோர்ட் தண்டிக்காது. அருந்ததி ராய் போன்றவர்கள் சுப்ரீம் கோர்ட்டை கண்டித்து பேசினாலே சிறைக்கு செல்ல வேண்டும், ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் செய்த வேலைக்கு எந்த தண்டனையும் கிடையாது.

“மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காக இந்த பந்த் நடத்துகிறோம்” என்று கருணாநிதி கூறியுள்ளார். வெறுப்பு கலந்த சிரிப்பு தான் வருகிறது. CII-வின் கருத்துப்படி இன்றைய கடையடைப்பால் 750 கோடி வீணடிக்கப்பட்டிருக்கிறது.

ஜாதிகளை ஆரம்பித்து வைத்தவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினராக இருக்கலாம். ஆனால் அந்த ஜாதிகள் இன்னும் அழியாமல் இருப்பதற்கு இன்றைய அரசியல்வாதிகள் தான் காரணம். ஜாதிகள் காணாமல் போய்விட்டால் மருத்துவ குடிதாங்கிகளும், ஆறு மாதத்துக்கு ஒரு முறை கட்சி மாறும் விடுதலை சிறுத்தைகளும் காணாமல் போய் விடுவார்கள். மக்களே விரும்பினால் கூட ஜாதிகள் அழிவதற்கு சந்தர்ப்பமே இல்லை.

இட ஒதுக்கீடு என்பது வெறும் அரசியல் நாடகம். சென்னை அரசாங்க பள்ளியில் படித்து IIM வரை சென்ற சரத்பாபு சரியாக சொன்னார் – “இட ஒதுக்கீடு என்பது ஒரு தலைமுறைக்கு மட்டும் இருக்க வேண்டும்”.

தமிழ்நாட்டின் கிராம பள்ளிகள் பலவற்றில் ஆசிரியர்கள் வகுப்புக்கு வராமல் வட்டிக்கு பணம் விட்டு சம்பாதிக்கிறார்கள். பல பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்யவில்லை. கிராமங்களில் தரமான அடிப்படை கல்வியை அரசாங்கம் கொடுத்தாலே போதும், கிராம மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தேவைப்படாது. தற்போதைய மோசமான சூழ்நிலைகளில் கூட கஷ்டப்பட்டு படித்து நகர மாணவர்களுக்கு இணையாக கிராம மாணவர்கள் மதிப்பெண்கள் எடுக்கிறார்கள். நகரங்களில் உள்ள கல்வித்தரத்தை கிராமங்களில் கொடுத்தால் கிராம மாணவர்கள் ஒரு கலக்கு கலக்கி விடுவார்கள்.

IIT, IIM போன்ற தரம் வாய்ந்த கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கருணாநிதி போராடுகிறார். தமிழ்நாட்டில் பல நூறு அரசாங்க கல்லூரிகள் உள்ளன. அவற்றில் ஒரு சில கல்லூரிகளையாவது IIT தரத்தில் மாற்றலாமே?

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு அந்த அளவுக்கு திறமை கிடையாது. மத்திய அரசாங்கம் கஷ்டப்பட்டு உருவாக்கிய கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று அராஜக பந்த் நடத்தத்தான் தெரியும்.

பின் குறிப்பு: எட்டாம் வகுப்பு வரை நான் ஒரு கிராமத்தில் படித்தவன். கிராமங்களில் கிடைக்கும் தரமற்ற கல்வியின் தாக்கத்தை நேரடியாக உணர்ந்தவன். நான் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவன் என்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நான் ஒரு எதிரி என்றும் தவறாக புரிந்து கொண்டு எனக்கு வந்த hate-commentக்கு பதிலாக இந்த பின்குறிப்பு அவசியமாகிறது. இன்டர்நெட்டில் கூட நான் என்ன ஜாதி என்று சொன்னால் தான் எழுத விடுவார்கள் போல இருக்கிறது!

Saturday, March 24, 2007

மனச்சோர்வு (Depression)

பிரச்னையில்லாத மனிதர்களே கிடையாது. பிரச்னைகளின் உச்சக்கட்டத்தில் மன நிலை பாதிக்கப்பட்டு பலர் கஷ்டப்படுகிறார்கள். Bipolar disorder என்ற வியாதியால் (சந்திரமுகி, அந்நியன் கதைகளின் கரு) பலர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். என் பழைய நண்பன் ஒருவன் அடிக்கடி தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறான். தன் சொந்த அம்மாவையே கொலை செய்ய முயற்சித்திருக்கிறான். என்னுடன் வேலை பார்த்த ஒரு அமெரிக்க பெண்மணி மதிய சாப்பாட்டு நேரத்தில் ஆப்பிள் நறுக்கும் கத்தியை எடுத்து தன் கை நரம்புகளை வெட்டி விட்டு ரத்தம் சொட்ட சொட்ட தன் இருக்கையிலே மயங்கி கிடந்தார். Bipolar வியாதியால் வந்த தற்கொலை எண்ணம் தான் காரணம்.

பைபோலாரினால் பாதிக்கப்பட்ட பலர் இருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் இது போன்ற வியாதிகள் இருந்தால் மனோதத்துவ நிபுணர்களை பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகளில் மனோதத்துவ மருத்துவர்களை பார்ப்பது கௌரவ குறைவாக கருதப்படுவதால், பலர் தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் தங்களையும் வருத்தி மற்றவர்களையும் டார்ச்சர் செய்கிறார்கள்.

பைபோலாரினால் பாதிக்கப்பட்ட சிலர் தங்கள் அனுபவங்களையும் தீர்வுகளையும் வலைப்பதிவுகளில் எழுதுகிறார்கள். அமெரிக்க வாரப்பத்திரிகை (Businessweek) பாராட்டி எழுதிய சில வலைப்பதிவுகள்:

http://tenminutefreefall.blogspot.com/

Blogs.HealthCentral.com/depression/deborah-grays-blog

NickMack.net

Monday, March 19, 2007

உலக சந்தைகள்

கடந்த இரண்டு வாரங்களில் உலக சந்தைகள் அனைத்தும் சரியான அடிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து வருகிறது. இது ஒரு சாதாரண correction தான், நீண்ட கால நோக்கோடு சந்தையில் முதலீடு செய்திருந்தால் கலங்க வேண்டிய அவசியமில்லை.

குறுகிய கால நோக்கோடு day-trading செய்வது அதிக ரிஸ்க்கான சமாசாரம் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. என்னுடன் வேலை பார்த்த வங்கி நண்பர் ஒரே நாளில் 10,000 டாலரை AHS பங்கில் இழந்து விட்டார். Short-term option-ல் விளையாடினார், சந்தை அவருடன் விளையாடி விட்டது.

உலக சந்தைகள் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. சீனாவில் கரன்சி மதிப்பு உயர்ந்தால், உலகம் முழுதும் அது பிரதிபலிக்கிறது. இந்தியாவில் தேர்தல் முடிவுகள் மாறியமைந்தால் உலக சந்தைகள் ஆட்டம் காண்கின்றது. ஜப்பானில் வட்டி விகிதம் உயர்ந்தால், அமெரிக்கர்கள் பலருக்கு வயிற்றுப்போக்கு உண்டாகிறது.

கடந்த வார சந்தை சரிவுகளுக்கு இரண்டு முக்கியமான காரணங்கள்.

நான் பலமுறை எழுதியுள்ளபடி அமெரிக்க ரியல் எஸ்டேட் சரிந்து கொண்டே போகிறது. அதிக ரிஸ்க்கான வாடிக்கையாளர்களுக்கு கண்களை மூடிக்கொண்டு கடன் கொடுத்த வங்கிகளுக்கு பல பில்லியன் டாலர்கள் நஷ்டம். அந்த வங்கிகளின் பங்குகள் தானும் சரிந்து உலக சந்தைகளையும் கவிழ்த்து விட்டது.

இரண்டாவது காரணம் Carry-trade. இது ஒரு சுவாரசியமான விஷயம்.

ஜப்பானில் பல வருடங்களாக வட்டி விகிதம் பூஜ்யமாக இருந்தது! வெறும் பூஜ்யம் தான்! பிறகு அதை கொஞ்சமாக உயர்த்தினார்கள். தற்போதைய வட்டி வெறும் 0.5 சதவிகிதம் தான்!

ஜப்பானில் வட்டி இவ்வளவு குறைவாக இருக்கும்போது அங்கிருந்து கடன் வாங்கி அமெரிக்க வங்கிகளில் 6% வட்டிக்கு டெபாசிட் போட்டால் ஒரு வருடத்துக்கு 5.5 சதவிகிதம் லாபம் கிடைக்குமே? அவ்வளவு லாபமும் எந்த முதலீடும் இல்லாமல் கிடைக்கும் பணமல்லவா?!

இந்த கேள்விகள் பல பேர் கண்களில் டாலர்களை ஊஞ்சலாட வைத்தது. பல வங்கிகள் மற்றும் hedge-funds போன்ற நிதி நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக ஜப்பானில் கடன் வாங்கி அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகளில் அதை முதலீடு செய்து லாபம் பார்த்து வந்தன.

இப்படி செய்வது ரிஸ்க் இல்லாத விஷயம் அல்ல. ஒரு நாட்டிலிருந்து கடன் வாங்கி இன்னொரு நாட்டில் முதலீடு செய்யும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் – கரன்சிகளின் மதிப்பு.

ஜப்பானிய கரன்சியின் மதிப்பும் அமெரிக்க கரன்சியின் மதிப்பும் தினமும் மாறுகின்றது. சில நேரங்களில் ஜப்பானிய கரன்சியில் கடன் வாங்கி அமெரிக்க வங்கியின் டெபாசிட்டில் கிடைக்கும் லாபத்தை விட ஜப்பான் கரன்சியின் மதிப்பு மாறுவதால் ஏற்படும் நஷ்டம் அதிகமாக இருக்கும். சில வங்கிகள் currency-futures ஒப்பந்தங்கள் மூலமாக நஷ்டத்தை கட்டுப்படுத்துகிறார்கள். சிலர் அதீத தன்னம்பிக்கை காரணமாக முழு முதலீடையும் இழந்து விடுகிறார்கள்.

Carry-trade செய்த சில வங்கிகள் ஜப்பான் கரன்சியின் சமீபத்திய volatility-ஐ பார்த்து பயந்து போய் அவர்களிடமிருந்த அனைத்து பங்குகளையும் விற்று ஜப்பானியர்களிடம் வாங்கிய கடனை அடைத்ததால், பங்கு சந்தை கீழே விழுந்து விட்டது.

மேலே கண்ட இரண்டு காரணங்களும் இன்னும் சில மாதங்களுக்கு இருக்கத்தான் போகிறது. Subprime வீட்டுக்கடன் கொடுத்த சில வங்கிகளின் நிலைமை தான் வெளியே தெரிகிறது. இன்னும் சில வாரங்களில் மற்ற வங்கிகளின் நிலைமையும் சந்தையில் தெரியும்.

Carry-trade போன்ற சமாசாரங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், பல மில்லியன் டாலர்கள் தேவைப்படும். இருந்தாலும் நம்மை போன்ற சிறு முதலீட்டாளர்களுக்காக Deutsche வங்கி "PowerShares DB G10 Currency Harvest Fund" என்ற ETF-ஐ துவங்கியிருக்கிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ETF என்பதால் கவனமாக முதலீடு செய்யவும்.

Saturday, March 10, 2007

பறக்கும் அரண்மனை

ஒரு பக்கம் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் மக்கள். இன்னொரு பக்கம் தனது விமானத்தில் என்னென்ன வசதிகள் இருந்தால் கௌரவம் என்று பட்டியல் போடும் சிலர்…

அமெரிக்காவில் 10,000 தனியார் விமானங்கள் உள்ளன. இவை அனைத்தும் நல்ல வசதிகளுடனும் பாதுகாப்புடனும் செய்யப்பட்டவை. இந்த விமானங்களில் 10 – 20 பேர் பயணம் செய்யலாம். இந்த வசதிகள் போதாதென்று சிலர் பெரிய விமானங்களை ஆர்டர் செய்திருக்கிறார்கள்.

தனியாருக்கான பெரிய விமானங்களை செய்வதற்காக போயிங் நிறுவனம் இது வரை 11 ஆர்டர்களை எடுத்திருக்கிறது. ஒரு விமானத்தின் விலை உத்தேசமாக 660 கோடி ரூபாய்! விமானத்தின் உட்புறம் செய்யும் அலங்கார வேலைகளை (Interior decoration) சேர்த்தால் 700 கோடியை தாண்டும்.

660 கோடி விமானத்தின் சினிமா தியேட்டர்
1936 கோடி விமானத்தின் டைனிங் ஏரியா

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல சமீபத்தில் அரபு நாட்டிலிருந்து ஒருவர் ஏர்-பஸ் நிறுவனத்திற்கு 1936 கோடி ரூபாய்க்கு விமானம் செய்வதற்காக (Just ஒரு விமானம் தான்) ஆர்டர் கொடுத்திருக்கிறார். இந்த விமானத்திற்கு “Flying palace” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த விமானத்தில் இரண்டு டைனிங் ஏரியா, 600 சதுர அடி படுக்கையறை, அராபிய பாலைவனம் போன்ற lounge, ஹாட் டப் மற்றும் Missile defence systems இருக்கும்.

இந்த விமானத்தை ஆர்டர் செய்த புண்ணியவானின் பெயரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். ஒரு அரபு நாட்டின் அதிபதி என்று பேச்சு அடிபடுகிறது.

கொடுத்து வைச்ச மகராசா!

Sunday, March 04, 2007

ஒரு கம்பானியனின் கதை

இன்றைய தினமலரில் வந்துள்ள விளம்பரம் இது.

“ஏராளமான சொத்துக்களுக்கு ஒரே வாரிசான, எம்.எஸ்.சி. முடித்த, விவாகரத்தான பெண்ணுக்கு தன் தந்தையின் வியாபாரத்தை நிர்வாகம் செய்யக் கூடிய, சமையல் தெரிந்த, சொந்த பந்தங்கள் எதுவும் இல்லாத, வீட்டோடு இருக்க கூடிய ‘கம்பானியன்’ தேவை”

நாம் பத்திரிகைகளில் அடிக்கடி படிக்கும் “சமையல்கார கணவன்” பற்றிய ஜோக்குகளில் உண்மை இருக்கிறது போல!

இந்த பெண்ணுக்கு “மணமகன்” தேவையில்லை, “கம்பானியன்” தேவை. நம் நாடு மிக வேகமாக முன்னேறி வருகின்றது, எல்லா விதத்திலும்.

Related Posts Plugin for WordPress, Blogger...