Saturday, February 24, 2007

பணக்காரர்கள் திமிர் பிடித்தவர்களா?

தமிழ் படங்களில் வழக்கமாக வரும் திரைக்கதை இது. பணக்காரர்கள் வில்லனாக வருவார்கள், ஹீரோ ஏழையாக இருந்து ஒரே பாட்டில் பணக்காரராக மாறி வில்லனின் கொட்டத்தை அடக்குவார்.

பணம் ஒரு மனிதனை கெட்டவனாகவும் திமிர் பிடித்தவனாகவும் மாற்றுகிறதா என்று அமெரிக்காவிலும் கனடாவிலும் ஆராய்ச்சிகள் செய்து Science பத்திரிகையில் சில வாரங்களுக்கு முன்னால் வெளியிட்டிருந்தார்கள். இந்த ஆராய்ச்சியில் பங்கு பெற்ற அனைவரும் கல்லூரி மாணவர்கள்.

இந்த மாணவர்கள் கையில் பணத்தை கொடுத்து அதன் தாக்கம் என்ன என்று ஆராய்ச்சி நடத்தப்படவில்லை. புதுமையான முறையில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது – பணத்தை பற்றி “நினைப்பது” மனிதனின் மனதை மாற்றுகின்றதா என்று!

மொத்தம் ஒன்பது சோதனைகள் பல கல்லூரிகளில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு சோதனையிலும் மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். பணம் சம்பந்தப்பட்ட பிரிவு (money prime), நார்மல் பிரிவு (control group) என்று பெயரிடப்பட்டன. பணம் சம்பந்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு பணத்தை பற்றிய hints அடிக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தார்கள் – உதாரணமாக பணத்தை பற்றி வகுப்புகளில் அதிகம் பேசுவது, பணத்தை மையமாக வைத்து புதிர் விளையாட்டுகள் விளையாடுவது போன்றவை. நார்மல் பிரிவு மாணவர்களுக்கு இது போல பணம் பற்றிய சிந்தனை தூண்டவில்லை.

சில வாரங்கள் கழித்து, இரு பிரிவினரையும் பல்வேறு சோதனைகள் செய்தார்கள்.

1. இரு பிரிவினருக்கும் ஒரு புதிர் கொடுக்கப்பட்டது. உதவி தேவைப்பட்டால் தாராளமாக கேட்கலாம் என்று சொல்லப்பட்டது. நார்மல் பிரிவு மாணவர்கள் உதவி கேட்க தயங்கவில்லை. பணம் சம்பந்தப்பட்ட பிரிவு மாணவர்கள் மற்றவர்களிடம் உதவி கேட்பதை தாழ்வாக கருதினார்கள்.

2. இரு பிரிவு மாணவர்களிடமும் பல்வேறு தருணங்களில் பல விதமான உதவிகள் (அஸைன்மென்ட்டுக்கான உதவி, கல்லூரிக்கு நன்கொடை போன்றவை) கேட்கப்பட்டன. இந்த ஆராய்ச்சியில் நேரடியாக பங்கு பெறாத மற்ற மாணவர்களின் மூலம் இந்த உதவிகள் கேட்கப்பட்டன. பணம் சம்பந்தப்பட்ட பிரிவு மாணவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய தயங்கினார்கள். நார்மல் பிரிவு மாணவர்களுக்கு அந்த தயக்கம் இல்லை.

3. பணம் சம்பந்தப்பட்ட பிரிவு மாணவர்கள் பிறருடன் சேர்ந்து சுற்றாமல் தனியாக இருப்பதிலே அதிக ஆர்வம் காட்டினார்கள்.

இந்த ஆராய்ச்சி பதிவை எழுதிய கேத்லீன் வோஸ் (UM கார்ல்சன் மேனேஜ்மென்ட் கல்லூரி) என்ற பேராசிரியரின் முடிவு: “பணம் ஒரு மனிதனை திமிர் பிடித்தவனாக மாற்றுவதில்லை, ஆனால் சமூக சிந்தனையை குறைத்து விடுகின்றது”.

பணத்தை பற்றியே அதிகம் சிந்திப்பவர்களுக்கு கிடைப்பது Social Cluelessness என்று கேத்லீன் சொல்கிறார்.

இந்த ஆராய்ச்சியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று கேத்லீன் எழுதியிருக்கிறார்.

» மேனேஜராக இருப்பவர்கள் தங்களிடம் வேலை பார்ப்பவர்களை உற்சாகப்படுத்த எப்போதும் பணத்தை மட்டும் உபயோகப்படுத்த கூடாது. உங்களிடன் வேலை செய்பவர்களின் கூட்டு முயற்சி (team work) உங்களுக்கு தேவைப்பட்டால் பணத்தை மோட்டிவேட்டராக பயன் படுத்தக்கூடாது. பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் team work இல்லாமல் போய்விடும்

» ஒரு சில வேலைகள் தனிப்பட்டவரின் திறமையால் மட்டுமே நடக்கும். உதாரணம்: டி.வி. நிருபர், ஒரு குறிப்பிட்ட பங்கை பற்றி மட்டும் ஆராய்ச்சி செய்பவர். இவர்களுக்கு பணத்தின் மூலம் ஊக்கத்தை கொடுக்கலாம்.

» பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அடிக்கடி பணத்தை பற்றி பேசுவது, ஆடம்பரமாக செலவு செய்வது போன்றவை அந்த குழந்தைகளின் சமூக சிந்தனையை குறைத்து விடும்.

3 comments:

குமரன் (Kumaran) said...

ஆராய்ச்சி முடிவு நல்லா இருக்கே. இது என்னவோ உண்மை தான்னு நினைக்கிறேன்.

Bharathi said...

;-) நன்றி குமரன்!

இவன் said...

பணத்தை பற்றியே சிந்திப்பதனால்தான் நம் அரசியல்வாதிகளுக்கு சமூக சிந்தனையே இல்லாமல் போய்விட்டதா ?

Related Posts Plugin for WordPress, Blogger...