Saturday, February 24, 2007

பணக்காரர்கள் திமிர் பிடித்தவர்களா?

தமிழ் படங்களில் வழக்கமாக வரும் திரைக்கதை இது. பணக்காரர்கள் வில்லனாக வருவார்கள், ஹீரோ ஏழையாக இருந்து ஒரே பாட்டில் பணக்காரராக மாறி வில்லனின் கொட்டத்தை அடக்குவார்.

பணம் ஒரு மனிதனை கெட்டவனாகவும் திமிர் பிடித்தவனாகவும் மாற்றுகிறதா என்று அமெரிக்காவிலும் கனடாவிலும் ஆராய்ச்சிகள் செய்து Science பத்திரிகையில் சில வாரங்களுக்கு முன்னால் வெளியிட்டிருந்தார்கள். இந்த ஆராய்ச்சியில் பங்கு பெற்ற அனைவரும் கல்லூரி மாணவர்கள்.

இந்த மாணவர்கள் கையில் பணத்தை கொடுத்து அதன் தாக்கம் என்ன என்று ஆராய்ச்சி நடத்தப்படவில்லை. புதுமையான முறையில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது – பணத்தை பற்றி “நினைப்பது” மனிதனின் மனதை மாற்றுகின்றதா என்று!

மொத்தம் ஒன்பது சோதனைகள் பல கல்லூரிகளில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு சோதனையிலும் மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். பணம் சம்பந்தப்பட்ட பிரிவு (money prime), நார்மல் பிரிவு (control group) என்று பெயரிடப்பட்டன. பணம் சம்பந்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு பணத்தை பற்றிய hints அடிக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தார்கள் – உதாரணமாக பணத்தை பற்றி வகுப்புகளில் அதிகம் பேசுவது, பணத்தை மையமாக வைத்து புதிர் விளையாட்டுகள் விளையாடுவது போன்றவை. நார்மல் பிரிவு மாணவர்களுக்கு இது போல பணம் பற்றிய சிந்தனை தூண்டவில்லை.

சில வாரங்கள் கழித்து, இரு பிரிவினரையும் பல்வேறு சோதனைகள் செய்தார்கள்.

1. இரு பிரிவினருக்கும் ஒரு புதிர் கொடுக்கப்பட்டது. உதவி தேவைப்பட்டால் தாராளமாக கேட்கலாம் என்று சொல்லப்பட்டது. நார்மல் பிரிவு மாணவர்கள் உதவி கேட்க தயங்கவில்லை. பணம் சம்பந்தப்பட்ட பிரிவு மாணவர்கள் மற்றவர்களிடம் உதவி கேட்பதை தாழ்வாக கருதினார்கள்.

2. இரு பிரிவு மாணவர்களிடமும் பல்வேறு தருணங்களில் பல விதமான உதவிகள் (அஸைன்மென்ட்டுக்கான உதவி, கல்லூரிக்கு நன்கொடை போன்றவை) கேட்கப்பட்டன. இந்த ஆராய்ச்சியில் நேரடியாக பங்கு பெறாத மற்ற மாணவர்களின் மூலம் இந்த உதவிகள் கேட்கப்பட்டன. பணம் சம்பந்தப்பட்ட பிரிவு மாணவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய தயங்கினார்கள். நார்மல் பிரிவு மாணவர்களுக்கு அந்த தயக்கம் இல்லை.

3. பணம் சம்பந்தப்பட்ட பிரிவு மாணவர்கள் பிறருடன் சேர்ந்து சுற்றாமல் தனியாக இருப்பதிலே அதிக ஆர்வம் காட்டினார்கள்.

இந்த ஆராய்ச்சி பதிவை எழுதிய கேத்லீன் வோஸ் (UM கார்ல்சன் மேனேஜ்மென்ட் கல்லூரி) என்ற பேராசிரியரின் முடிவு: “பணம் ஒரு மனிதனை திமிர் பிடித்தவனாக மாற்றுவதில்லை, ஆனால் சமூக சிந்தனையை குறைத்து விடுகின்றது”.

பணத்தை பற்றியே அதிகம் சிந்திப்பவர்களுக்கு கிடைப்பது Social Cluelessness என்று கேத்லீன் சொல்கிறார்.

இந்த ஆராய்ச்சியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று கேத்லீன் எழுதியிருக்கிறார்.

» மேனேஜராக இருப்பவர்கள் தங்களிடம் வேலை பார்ப்பவர்களை உற்சாகப்படுத்த எப்போதும் பணத்தை மட்டும் உபயோகப்படுத்த கூடாது. உங்களிடன் வேலை செய்பவர்களின் கூட்டு முயற்சி (team work) உங்களுக்கு தேவைப்பட்டால் பணத்தை மோட்டிவேட்டராக பயன் படுத்தக்கூடாது. பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் team work இல்லாமல் போய்விடும்

» ஒரு சில வேலைகள் தனிப்பட்டவரின் திறமையால் மட்டுமே நடக்கும். உதாரணம்: டி.வி. நிருபர், ஒரு குறிப்பிட்ட பங்கை பற்றி மட்டும் ஆராய்ச்சி செய்பவர். இவர்களுக்கு பணத்தின் மூலம் ஊக்கத்தை கொடுக்கலாம்.

» பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அடிக்கடி பணத்தை பற்றி பேசுவது, ஆடம்பரமாக செலவு செய்வது போன்றவை அந்த குழந்தைகளின் சமூக சிந்தனையை குறைத்து விடும்.

Saturday, February 17, 2007

பணவீக்கம்

Inflation என்பதை தமிழில் பணவீக்கம் என்று சொல்கிறார்கள். விலைவீக்கம் என்பதே சரியான மொழிபெயர்ப்பு.

போன வருடம் ஒரு பொருள் 10 ரூபாய்க்கு விற்று, இன்று அதன் விலை 30 ரூபாயாக இருந்தால் Inflation எகிறி விட்டது என்று அர்த்தம். இது ஒரு simple definition. இதை முழுவதுமாக தமிழில் விளக்க சில பக்கங்கள் ஆகும்.

நம் நாட்டின் பணவீக்கம் போன வாரம் 6.58%க்கு எகிறி விட்டது. கடந்த இரு வருடங்களில் காணாத சதவிகிதம். இந்த வாரம் 6.7%க்கு போய் விட்டது. இந்திய பத்திரிகைகள் அனைத்தும் இப்போது இதை பெரிது செய்து எழுதுகின்றன. கடந்த பல வருடங்களாகவே நம் நாட்டில் பணவீக்கம் ஒரு பெரிய பிரச்னை.பணவீக்கம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே கவிழ்த்து விடும். பணவீக்கம் ஒரு அளவிற்கு மேல் போய் விட்டால் அதற்கு Hyperinflation என்று பெயர். அப்படிப்பட்ட சூழ்நிலையால் 1923ல் ஜெர்மன் நாட்டின் பொருளாதாரம் தலைகீழாக விழுந்தது.

ஜெர்மன் பெண்மணிகள் தங்கள் வீட்டின் அடுப்புகளில் விறகுகளை எரிப்பதற்கு பதிலாக ஜெர்மன் மார்க் நோட்டுகளை எரித்தார்கள். அவர்களின் சமையல் அப்படி தான் நடந்தது! விறகுகளின் விலை ஆகாயத்துக்கு போய் விட்டதால் விறகுகளை வாங்குவதை விட மார்க் நோட்டுகளை எரிப்பது சிக்கனமாக இருந்தது!

சென்னை, மும்பாய் போன்ற நகரங்களில் உள்ள பெரிய கடைகளில் உள்ளே போய் வெளியே வந்தால் சான் பிராசிஸ்கோவில் ஆகும் செலவாகின்றது. இன்னும் சில வருடங்களில் எப்படி இருக்குமோ, தெரியவில்லை.சென்னை நகரத்தின் வீட்டு வாடகை நிலைமையை கேட்டால் தலை சுற்றுகிறது. என் நண்பன் தன் மென்பொருள் நிறுவனத்துக்கு இடம் தேடிக் கொண்டிருக்கிறான். அடையாறில் 720 சதுர அடி இடத்துக்கு 40,000 ரூபாய் வாடகை கேட்டிருக்கிறார்கள். மனம் நொந்து போய் அவன் எழுதிய மின்னஞ்சலைப் பற்றி ஒரு தனி பதிவே போடலாம்.

நம் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நல்ல திறமைசாலி. ஆனால் Inflation விஷயத்தில் அவர் சரியான முடிவுகள் எடுக்கவில்லையோ என்று தோன்றுகிறது. போன வாரம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை கூட்டியது. இருந்தாலும் வீட்டு கடன்களுக்கு மட்டும் வட்டி விகிதத்தை அதிகரிக்க கூடாது என்று அனைத்து வங்கிகளுக்கும் ப. சிதம்பரம் உத்தரவிட்டார். That’s weird. அதை கண்டு கொள்ளாமல் பல வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி விட்டன. வட்டி விகிதத்தை உயர்த்துவது பணவீக்கத்தை கட்டுப்படுத்த சிறந்த வழி.

ப. சிதம்பரம் & கம்பெனி திறமையுடன் செயல்பட்டு பணவீக்கத்தை கட்டுப்படுத்தினால் தான் இந்திய பொருளாதாரம் இன்னும் சிறப்பாக இருக்கும். Super Power ஆக வேண்டும் என்ற நம் கனவும் மெய்ப்படும்.

Related Links:

http://www.usagold.com/GermanNightmare.html
http://www.uri.edu/artsci/newecn/Classes/Art/INT1/Mac/1930s/1930sAA.html

Sunday, February 11, 2007

காதலர் தினம்

Valentine’s day என்பதை நம் ஊரில் காதலர் தினம் என்று மொழி பெயர்த்து விட்டார்கள். ஆங்கிலத்தில் அதை lovers day என்றோ அல்லது அதன் பொருள்படும்படியாகவா அதை கொண்டாடுகிறார்கள்?!

இங்குள்ள ஆரம்ப பள்ளிகளில் இந்த தினத்தை நட்புக்கும் அன்புக்கும் உரிய தினமாக கொண்டாடுகிறார்கள். தமிழ் நாட்டில் FM ரேடியோ முதல் Sun Music வரை இப்போது முக்கியமான கேள்விகள் “உங்கள் காதலிக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்?”, “முத்தம் தான் சிறந்த பரிசா?”. நம் நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது!

நானும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவன் தான். ஆனாலும் இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள், அதுவும் நம் ஊரில், வித்தியாசமாக தெரிகிறது.

நம் நாட்டில் காதல் கல்யாணங்கள் அதிகம் நடந்தால், அதனால் ஜாதி பேதம் அழிய வாய்ப்பிருக்கிறது. இந்த வாரம் விகடனில் திரு.ஞாநி அவர்களும் இதே கருத்தை எழுதியிருந்தார். ராமதாஸ் போன்றவர்கள் காதலை எதிர்ப்பதற்கு தன் ஜாதி அரசியல் பாதிக்குமோ என்று அச்சப்படுவதாக எழுதியிருந்தார். காதலர்கள் மூலம் ஏதாவது நல்லது நடந்தால் சரிதான்!

ஆதலால் காதல் செய்யுங்கள்… முக்கியமாக கலப்பு திருமணம் செய்யுங்கள்!

Thursday, February 08, 2007

தாமிரபரணி சினிமா பாட்டு

என் சிறு வயதிலிருந்து பல நூறு தடவை கேட்ட பாடல் – “கற்பூர நாயகியே கனக வள்ளி…” அந்த பாட்டை உல்டா செய்து “கருப்பான கையாலே என்னை பிடிச்சான்” என்று ஒரு குத்துப்பாட்டு பாடியிருக்கிறார்கள்.

இந்த பாடலும் கேட்க நன்றாக தான் இருக்கிறது. இருந்தாலும் பிரபலமான பக்திப்பாடலை இப்படி கொலை செய்வது சரியா? பல வருடங்களுக்கு முன்னால் சூரியன் படத்தில் கந்த சஷ்டி கவசத்தை கடித்து குதறி ஒரு ரொமான்டிக் பாடலை தேவா இசையமைத்தார். இப்போது யுவன் சங்கர் ராஜா ஒரு காவியம் படைத்துள்ளார்.

இதே போல ரஹ்மான் செய்திருந்தால் அதற்கு மத சாயம் பூசி தமிழ் பெருங்குடி மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தியிருப்பார்கள்.

பின் குறிப்பு: தமிழ் நிதிக்கும் தாமிரபரணிக்கும் என்ன சம்பந்தம்? ஒரு சம்பந்தமுமில்லை! பணம் சம்பாதிப்பது பற்றி நான் எழுதும் பயனுள்ள பதிவுகளுக்கு வராத விசிட்ஸ் சினிமா பற்றிய பதிவுகளுக்கு வருகிறது, அதனால் தான். ;-)

Monday, February 05, 2007

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு

பாடகி அனுராதா இப்படி பாடினாலும் உண்மையிலேயே அவருக்கு கருப்பு கலர் பிடிக்குமா என்பது சந்தேகம் தான். தோலின் நிறத்தை பார்த்து ஒருவரின் அறிவையும் திறமையையும் எடை போட கூடாது என்று தெரிந்தாலும் நிறைய பேர் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

என் நண்பன் சென்னையில் Siemens நிறுவனத்தின் மேலாளராக இருந்தான். “சிவப்பு தோல் இருந்தால் போதும், இந்த கம்பெனியில் வேலைக்கு எடுத்து கொள்வார்கள்” என்று அவன் சொல்வான். நான் வேலை செய்த கம்பெனிகளிலும் இதை உணர்ந்ததுண்டு. ஆனாலும், நான் வேலை செய்த இடங்களில் சிவப்பு நிறத்தை மட்டும் காரணமாக வைத்து யாரையும் வேலைக்கு எடுத்ததில்லை. அவர்கள் அப்படி செய்திருந்தால், என்னைப் போன்ற ஆட்களுக்கு வேலையே கிடைத்திருக்காது.

நமக்கு உணர்வு பூர்வமாக தெரிவதை விஞ்ஞான ரீதியாக நிருபிப்பது அமெரிக்கர்களின் வேலை. Vanderbilt பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியர் Joni Hersch இதைப்பற்றிய ஆராய்ச்சி செய்திருக்கிறார். அவரின் கட்டுரையிலிருந்து சில குறிப்புகள்.

1. கருப்பு நிறத்தில் உள்ளவர்களை விட மாநிறத்தில் உள்ளவர்கள் 8 – 15% கூடுதல் சம்பளம் வாங்குகிறார்கள்.
2. மாநிறத்தில் உள்ளவர்களை விட வெள்ளை நிறத்தில் உள்ளவர்கள் 8 – 15% கூடுதல் சம்பளம் வாங்குகிறார்கள்.
3. ஒரு shade கலர் தூக்கலாக இருப்பது ஒரு வருடம் அதிகம் படித்ததற்கு சமம்.
4. உயரமானவர்கள் குள்ளமானவர்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். (Michael Fox போன்றவர்கள் மட்டும் விதிவிலக்கு!)

அமெரிக்காவில் கருப்பின மக்கள் அதிகம் முன்னேறாமல் இருப்பதற்கு அவர்கள் சொல்லும் முக்கிய காரணம் – “நாங்கள் கருப்பாக இருப்பதால் வெள்ளைக்காரர்கள் எங்களை முன்னேற விடாமல் தடுக்கிறார்கள்”. அதில் ஓரளவு உண்மையிருந்தாலும், அது மட்டும் காரணமல்ல. கருப்பின மக்களில் பெரும்பாலானோர் முழு சோம்பேறிகள். அந்த சோம்பேறித்தனம் தான் அவர்களை முன்னேற விடாமல் தடுக்கிறது.

அமெரிக்க கருப்பின மக்கள் தங்கள் இனத்தவரிடமே நிற பாகுபாடு பார்ப்பதாக போன வருடம் நடத்தப்பட்ட சர்வே கூறுகிறது! அதிகமாக கருப்பாக உள்ளவர்களிடமிருந்து கொஞ்சம் மாநிறமாக உள்ள கருப்பினத்தவர்கள் ஒதுங்கியே இருப்பதாக அந்த ஆராய்ச்சி கூறுகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...