Sunday, December 16, 2007

பத்தாயிரம் பத்தாதா?

இரண்டு வாரங்களுக்கு முன்னால் அவள் விகடனில் (07-12-07) ஒரு கட்டுரை படித்தேன். (?) விகடன்.காம் முகப்பு பக்கத்தில் “அயல் நாட்டு வாழ்க்கை – அதிர்ச்சி தரும் மறுபக்கம்” என்று ஒரு லிங்க் கொடுத்திருந்தார்கள்.

அவள் விகடனின் கட்டுரை ஜெனிதா என்ற பெண் அமெரிக்காவில் பட்ட வரதட்சணை கொடுமையை பற்றியது. தன் கணவன் கொடுமைப் படுத்தும் போது ஜெனிதா தன் வாழ்ந்த நகரத்து போலீஸ் நிலையத்துக்கு ஒரு போன் செய்திருந்தாலே அவர் கணவனின் கதை கந்தலாயிருக்கும். காரிலிருந்து கீழே தள்ளிவிடுமளவுக்கு போயிருக்காது. இப்படியும் சில பேராசை மனிதர்களா என்று ஆத்திரம் வருகிறது.

அவள் விகடன் கட்டுரையில் ஒரு பெண்மணி அமெரிக்க வாழ்க்கையை பற்றி பேட்டி கொடுத்திருந்தார்.

“அமெரிக்காவில் மாதம் பத்தாயிரம் டாலர் வாங்கினாலும் அவ்வளவும் செலவாகி விடும். சேமிப்பது கஷ்டம்”.

Wow! இந்த பெண்மணி அமெரிக்காவில் வசித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

தனக்கு மாதம் பத்தாயிரம் டாலர் சம்பளம் கிடைக்குமென்றால் அமெரிக்கர்கள் பலர் போட்டி போட்டுக் கொண்டு அந்த வேலையில் சேர்வார்கள். மாதம் பத்தாயிரம் டாலர் என்றால், வருடத்துக்கு $120,000. அமெரிக்காவில் இந்த அளவுக்கு சம்பளம் வாங்குபவர்களே குறைவு. அமெரிக்கர்களின் சராசரி வருட சம்பளம் $35,499.

மாதம் பத்தாயிரம் டாலர் வாங்கினால், அதில் குறைந்த பட்சம் $4,000 சேமிக்கலாம். புத்தம் புது கார்களை வாங்காமல், தினமும் Pizza Hut போகாமல், ஆடம்பரமாக செலவு செய்யாமல் இருந்தால் $5,000 சேமிக்கலாம்.

இந்திய நிறுவனங்களிலிருந்து அமெரிக்காவில் வேலைக்கு வரும் பல கணிணி நிபுணர்களுக்கு சராசரி மாத அலவன்ஸ் $2,000. அதிலேயே பலர் $1,000+ சேமிக்கிறார்கள்.

வெளிநாட்டில் சேமிப்பைப் பற்றி உங்கள் கருத்துகளை எழுதுங்கள். ஆரோக்கியமான விவாதமாக இருந்தால் நன்றாக இருக்கும். மாதம் பத்தாயிரம் டாலர் சம்பாதித்தும் சரியாக சேமிக்க முடியாமல் யாராவது இருந்தால் அவசியம் ஒரு Financial Advisor-ஐ பாருங்கள்!

Wednesday, December 12, 2007

TiE நிகழ்ச்சி: IBM நிறுவனத்தினுடன் பார்ட்னர் ஆகலாம்!

தொழில் நுட்ப துறையில் புத்திசாலித்தனமான புதுவிதமான ஐடியாக்களை முயற்சி செய்து பார்ப்பவர்களுக்கு IBM நிறுவனம் “partnership ecosystem” என்ற புரோகிராமின் மூலமாக உதவி செய்கிறது. Virtella, Persistant Systems, Paymate போன்ற நிறுவனங்கள் IBM நிறுவனத்தினால் பயனடைந்துள்ளன.

இது பற்றி விபரமாக பேசுவதற்காக IBM Global Business Partners பிரிவின் உயர் அதிகாரிகள் இன்று சான்டா கிளாரா நகரத்தில் தொழில் முனைபவர்களை சந்திக்கிறார்கள். சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று உங்களுக்கு தீராத தாகம் இருந்தால், TiE நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு போய் பாருங்கள். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக்கவும்.

Thursday, November 29, 2007

பங்கு சந்தை நிலவரங்கள்

வேலை நிமித்தமாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறேன். சுருக்கமாக ஒரு பதிவு.

இந்திய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவதற்கு வாய்ப்புகள் அதிகமில்லை. இன்று ஃபெட் தலைவரும் வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருக்கின்றது ஒரு குறிப்பு கொடுத்திருக்கிறார். இதனால் பங்கு சந்தை உயர்ந்தாலும் டாலர் மதிப்பு இன்னும் குறையும்.

தற்சமயம் டாலருக்கு 38.90 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. 35 ரூபாய்க்கு கீழே அது போனால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அது பெரும் பிரச்னை. அவர்களுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்பும் அனைத்து இந்தியர்களுக்கும் இது பிரச்னை தான்.

இரண்டு வாரத்துக்கு முன்னால் சரிந்த அனைத்து பங்குகளும் மேலே வந்து விட்டன. ஆப்பிள் பங்குகள் நியூட்டனின் புவியீர்ப்பு கொள்கையை பொய்ப்பித்து மேலே பறக்கின்றன. கிறிஸ்துமஸ் முடிந்த பிறகு ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் இன்னும் உயரலாம்.

Monday, November 19, 2007

TiE Interconnect (TiE தொண்டு நிறுவனத்தின் இன்டர்கனெக்ட் நிகழ்ச்சி)

TiE தொண்டு நிறுவனத்தைப் பற்றி ஏற்கனவே பல முறை எழுதியிருக்கிறேன். சொந்தமாக தொழில் தொடங்க ஆசைப்படும் இந்தியர்களின் கனவை நனவாக்க TiE உதவியாக இருக்கும்.

இந்தியாவின் பல நகரங்களிலும் TiE நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. சிலிகன் வாலியில் உள்ள TiE கிளையில் புதிதாக TiE Interconnect என்ற புரோகிராம் ஆரம்பித்துள்ளார்கள். தொழில் முனைபவர்களையும், சட்ட வல்லுனர்களையும் நிதி உதவி அளிப்பவர்களையும் ஒன்று சேர்க்கும் நிகழ்ச்சி அது.

இதன் முதல் கட்ட நிகழ்ச்சி அடுத்த புதன் அன்று Opus Capital நிறுவனத்தில் நடக்கவிருக்கிறது. நீங்கள் சான் பிராசிஸ்கோ பகுதியில் வசிப்பவராக இருந்தால் + உங்களுக்கு தொழில் தொடங்க தீராத ஆசை இருந்தால், TiE Interconnect நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.

இந்த நிகழ்ச்சி பற்றிய கேள்விகளுக்கு நிதி குப்தாவை nidhi.gupta@siliconvalley.tie.org என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

நிதி குப்தாவுக்கும் தமிழ் நிதிக்கும் எந்த தொடர்பும் கிடையாது ;-)

Thursday, November 08, 2007

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வலைப்பதிவுகளினால் அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள். இந்த தீபாவளி திருநாள் உங்கள் வாழ்வில் நஷ்டம் என்ற இருள் நீக்கி லாபம் என்ற ஒளி ஏற்ற வாழ்த்துகிறேன்!

Sunday, October 21, 2007

பாபி ஜிந்தால்

கேட்கவே மனதுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பாபி ஜிந்தால் லூசியானா மாநிலத்தின் கவர்னராகி விட்டார்.

இந்திய அமெரிக்கர் ஒருவர் அமெரிக்க கவர்னராவது இது தான் முதல் முறை. அதுவும் 36 வயதில்! Just Great!

இந்த செய்தியை கேட்கும் பெரும்பாலான இந்தியர்கள் ஆச்சரியப்படுவார்கள், சந்தோஷப்படுவார்கள், பெருமைப்படுவார்கள்.

இந்த வெற்றியை அடைவதற்கு பாபி ஜிந்தால் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்று அமெரிக்காவில் வாழும்/வாழ்ந்த இந்தியர்களுக்கு நன்றாக புரியும். அமெரிக்காவில் மட்டுமல்ல, எந்த ஒரு நாட்டிலும் வெளிநாட்டு வம்சாவளியினர் அரசியலில் உயர் பதவிக்கு வருவது மிக பெரிய சாதனை.

பிற்காலத்தில் பாபி ஜிந்தால் அமெரிக்க ஜனாதிபதியானால் கூட ஆச்சரியப்பட மாட்டேன். அந்த அளவுக்கு அமெரிக்க மக்களின் மனப்பக்குவம் மாறியிருக்குமா என்று தெரியாது.

மனதில் பலம் இருந்தால் எதையும் நடத்தி காட்டலாம். திரு. ஜிந்தாலுக்கு அது நிறையவே இருக்கிறது!

தொடர்புள்ள தளங்கள்:

பாபி ஜிந்தால்.காம்

பாபி ஜிந்தாலின் வலைப்பதிவு

பாபி ஜிந்தால் நல்லவர்!

பாபி ஜிந்தால் கெட்டவர்!

Tuesday, October 09, 2007

பயனுள்ள வலைப்பதிவு

யாஹூ தளத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையின் மூலம் "I will teach you to be rich" என்ற வலைப்பதிவு பற்றி தெரிய வந்தது.

20 - 30 வயது இளைஞர்களுக்கு இநத வலைப்பதிவு மிக உபயோகமாக இருக்கும். இதை எழுதுவது ஒரு இந்தியர், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

Thursday, October 04, 2007

வெற்றிகரமான வலைப்பதிவுகளை எழுதுவது எப்படி?

இந்த மாதிரி தடாலடியாக தலைப்பு கொடுப்பது ஒரு வழி. தலைப்பு மட்டும் கொடுத்தால் போதாது, உள்ளே விஷயமும் வேண்டுமே…!

இது போன்ற ப்ளாக் போஸ்ட்டை எழுதுவதற்கு எனக்கு தகுதி இருக்கின்றதா என்று தெரியவில்லை, இருந்தாலும் என்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழ்நிதியில் எனக்கு பெர்சனலாக பிடித்த பல பதிவுகளை எழுதியுள்ளேன், அவற்றுக்கெல்லாம் கிடைக்காத ஹிட்ஸ் சினிமா இசையமைப்பாளர் ரஹ்மானைப் பற்றி எழுதிய போது கிடைத்தது.

Rule # 1: சினிமா சம்பந்தப்பட்ட சுவையான செய்திகளை எழுதுங்கள்!

எனது ஆங்கில வலைப்பதிவில் இது வரை அதிக ஹிட்ஸ் கிடைத்தது சர்க்கரை நோய் பற்றிய e-book சம்பந்தமாக நான் எழுதிய பதிவிற்கு. கூகிளில் “Mark Anastasi” என்று தேடுங்கள். முதல் பக்கத்தில் ஏழாவது லிங்க் என் வலைப்பதிவிற்கு வழி காட்டும்.

Rule # 2: எல்லோருக்கும் பயன்படக்கூடிய, முடிந்தால் controversy உள்ள விஷயத்தை தேர்ந்தெடுத்து அதை பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி செய்து எழுதுங்கள். மற்ற செய்திகளிலிருந்து கட் & பேஸ்ட் செய்தால் சரி வராது.

இவை தவிர சில பொதுவான விதிகள்:

Rule # 3: பெரும்பாலான விசிட்டர்கள் ஒவ்வொரு வார்த்தையையும் படிப்பதில்லை. பொதுவாக skim செய்து அடுத்த பாராவுக்கு போய் விடுவார்கள். சொல்ல வந்த விஷயத்தை “நச்” என்று சொல்லி விட்டால், படிப்பவர்களுக்கு பிடிக்கும்.

Rule # 4: உங்கள் வலைப்பதிவை படிக்கும் அனைவருக்கும் பயன்படும்படியாக எழுதுங்கள்.


ஹிட்ஸ் வரலாம், ஆனால் அது பணமாக மாறுமா?! என்னுடைய அனுபவம் சொல்லும் பதில் – “இல்லை”!

வலைப்பதிவில் அறிமுகமான சில நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளும் போது கேட்கும் கேள்வி “பிளாக்குகளால் நிறைய பணம் சம்பாதிக்க முடியுமா?”.

நான் தமிழ்நிதி எழுத ஆரம்பித்த போது பணத்தை பற்றி யோசிக்கவே இல்லை. தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகி விட்டது… நண்பர்கள் மூலமாக தமிழில் பிளாக் எழுதுவது பற்றி கேள்விப்பட்டு அஞ்சல் மென்பொருளில் “தமிழ்” என்று அச்சடித்த போது த்ரில்லிங்காக இருந்தது.

மாதா மாதம் adsense-ல் கிடைக்கும் பணம் அவ்வளவு த்ரில்லிங்காக இல்லை! இரண்டு டாலரிலிருந்து மூன்று டாலர் வரை கூகிள் புண்ணியவான்கள் கொடுக்கிறார்கள், அந்த காசில் Starbucks காப்பி கூட கிடைக்காது.

தமிழ்நாட்டில் இன்னும் பல லட்சம் பேருக்கு இன்டர்நெட் வசதி கிடைக்கும் போது இந்த நிலைமை மாறலாம். மேலை நாடுகளில் சிலர் பிளாக் எழுதுவதை முழு நேர வேலையாக வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது.

சிறந்த உதாரணம்: மைக்கேல் ஆரிங்டன்

இந்தியாவில் சிறந்த உதாரணம்: அமித் அகர்வால்

கூகிள் போன்ற விளம்பர நிறுவனங்கள் தமிழ் பதிவுகளை புரிந்து கொண்டு அதற்கேற்றபடி விளம்பரங்கள் கொடுப்பதில்லை. பங்கு சந்தை பற்றி நான் எழுதினால் “Food for the brain” என்று விளம்பரம் கொடுக்கிறார்கள். அந்த விளம்பரத்தை யார் கிளிக் செய்வார்கள்?!

நீங்கள் வலைப்பதிவாளராக இருந்தால், உங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பின்னூட்டத்தில் எழுதுங்கள்.

Tuesday, September 25, 2007

இது ஒரு நிலாக்காலம்

இந்தியாவில் பங்கு வர்த்தகம் சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு நிலாக்காலம்!

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்ப்பதை விட இந்திய பங்கு வர்த்தக நிறுவனங்களில் வேலை பார்ப்பது புத்திசாலித்தனமாக உள்ளது. ஹாங்காங் நாட்டின் CLSA நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த வாசுதேவ் ஜகன்னாத் இந்தியா இன்போலைன் நிறுவனத்தில் சேர்ந்ததால் அவர் பாக்கெட்டில் இப்போது 89 கோடி ரூபாய்!

வேலையில் சேர்வதற்கான signing bonus மட்டுமே 2.7 மில்லியன் டாலர்கள்! இந்திய பங்கு சந்தை வானத்தில் பறக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

வெளிநாட்டு பங்கு வர்த்தக நிறுவனங்களில் (Goldman, J.P.Morgan, etc.,) உயர் பதவியில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு திரும்ப ஆசைப்பட்டால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்புள்ள தளம்: Indian brokers ditch big names

கொசுறு செய்தி: சமீபத்தில் என்னை யோசிக்க வைத்த ஒரு தளம். இந்த செய்தி சம்பந்தமான உங்கள் கருத்துகளை அந்த தளத்தில் எழுதுங்கள்.

Thursday, September 13, 2007

மென்பொருள் வணிகத்திற்கான நல்ல ஐடியா உங்களிடம் உள்ளதா?

உங்களிடம் நல்ல ஐடியா இருந்து அதை செயல்படுத்த தேவையான பணம் இல்லாவிடில், இவர்களை தொடர்பு கொண்டு பாருங்கள்.

இந்த விளம்பரத்தை பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டேன். எல்லோரும் கம்ப்யூட்டர் துறையில் வியாபாரம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

என்னைப் பொறுத்த வரையில் கம்ப்யூட்டர் துறையை விட டெக்ஸ்டைல்ஸ் பெட்டராக தெரிகிறது! பத்து வருடங்கள் கழித்து கம்ப்யூட்டர் துறை நிபுணர்கள் அதிகமாக தேவைப்படாமல் போகலாம். உடுத்த உடை தேவைப்படாமல் போகாது!

Tuesday, September 11, 2007

இருபதாயிரம் டாலருக்கு வீடுகள்!

அமெரிக்காவில் வீடு விலைகள் சரிந்த பிறகும் உங்களால் வீடு வாங்க முடியவில்லையென்றால், கொஞ்சம் வடக்குப் பக்கமாய் தேடிப் பாருங்கள். கனடா நாட்டில் உள்ள Newfoundland மாகாணத்தில் நான்கு அறைகள் கொண்ட வீடு $20,000க்கு (8 லட்ச ரூபாய்) கிடைக்கிறதாம்!

ஒரு கார் வாங்கும் விலைக்கு ஒரு வீடா?! உண்மை தான்.

செப்டம்பர் 11, 2001-ல் நடந்த தீவிரவாத தாக்குதலினால் அமெரிக்க விமான நிலையங்கள் அன்று காலை மூடப்பட்டு விட்டன. அதனால் அமெரிக்காவுக்கு வர வேண்டிய 38 விமானங்கள் Newfoundland மாகாணத்தில் உள்ள Gander என்ற விமான நிலையத்தில் இறக்கப் பட்டன. அதில் பயணம் செய்த 7000 பயணிகள் வேறெங்கும் செல்ல முடியாமல் இந்த மாகாணத்தில் ஒரு வாரம் காத்துக் கிடந்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்கு இந்த மாகாண மக்கள் காட்டிய பரிவும் அன்பும் இந்த மாகாணத்தின் புகழை பரப்ப உதவியது.

இந்த மக்களின் நல்ல உள்ளங்கள் மட்டுமல்லாது இயற்கையான சூழ்நிலையும் பலரை கவர்ந்திருக்கிறது. அமெரிக்கர்கள் பலர் இங்கு வீடு வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

Newfoundland

இந்த மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் வீடு விலை குறைவாகத்தான் இருக்கிறது. கடலோர பகுதிகளில் உள்ள வீடுகள் $40,000க்கு (16 லட்ச ரூபாய்) கிடைக்கிறதாம்!

ஒரு பக்கம் இது பற்றிய செய்தி படிக்கும் போது மறுபக்கம் அமெரிக்க ரியல் எஸ்டேட்டால் பாதிக்கப்பட்ட சிலரை பற்றி படிக்க நேர்ந்தது. அமெரிக்க ரியல் எஸ்டேட் கீழே விழாது என்ற குருட்டு நம்பிக்கையில் பணம், மானம் இரண்டையும் இழந்த சூதாட்டக்காரரை பற்றி படித்து ஆச்சரியப்பட்டேன். இவர்கள் மாதிரி ஆட்களுக்கு கடன் கொடுத்தால் வங்கிகள் திவாலாகாமல் என்ன செய்யும்?

வங்கிகளின் குறுக்கு புத்தியாலும், வங்கிகளை கட்டுப்படுத்த தவறிய அரசாங்க விதிமுறைகளாலும் இப்போது அமெரிக்க பொருளாதாரமே லேசாக ஆட்டம் காண்கின்றது.

தன் தகுதிக்கு மீறி வீடுகளை வாங்கியவர்களை பாதுகாப்பதற்கு எங்கள் வரிப்பணத்தை வாரி இறைக்கலாமா என்று பலர் கோபத்தில் இருக்கின்றனர். அவர்களின் கண்ணோட்டத்தை இங்கு பாருங்கள். அந்த கோபத்தில் நியாயம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. உங்களின் கருத்துகளை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.

Related Link: LA Land

பின் குறிப்பு: கடந்த பல "மாதங்களாக" தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட ஒரு வலைதளத்தின் ஸ்பாம் தொல்லை தாங்காமல், அனானிமஸ் பின்னூட்டங்களை off செய்ய வேண்டியதாகி விட்டது. மன்னிக்கவும்.

Wednesday, August 29, 2007

கடனை பாதுகாக்கும் நிதி சாதனங்கள் (Credit Derivatives)

Derivatives என்பது ரிஸ்க்கை குறைப்பதற்காக உருவாக்கப் பட்ட நிதி சாதனங்கள். ஆப்ஷன்களும் Derivatives வகையை சேர்ந்தது தான்.

Credit derivatives என்பது கடன் கொடுத்தவர்கள் தங்கள் கடனின் ரிஸ்க்கை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக உலக சந்தைகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிதி சாதனம் (financial instrument) இது.

Credit derivatives வகையில் பல சாதனங்கள் இருந்தாலும், Credit default swap என்ற derivative அதிக பாப்புலராகி விட்டது. வங்கிகள் தங்கள் கடன்களில் உள்ள ரிஸ்க்கை மற்றவர்களுக்கு விற்று விட இது உதவும்.

Credit default swap என்பது ஒரு இன்சூரன்ஸ் போல தான். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா DLF ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு 10,000 கோடி கடன் கொடுத்ததாக வைத்துக் கொள்வோம். இந்திய ரியல் எஸ்டேட் கீழே விழுந்து DLF நிறுவனத்துக்கு பெருத்த அடி ஏற்பட்டால், அந்த நிறுவனம் கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போய் விடும்.

அந்த ரிஸ்க்கை தவிர்ப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மெரில் லிஞ்ச் (Merrill Lynch) போன்ற நிறுவனத்துடன் Credit default swap செய்து கொள்ளலாம். தன் கடனை பாதுகாப்பதற்காக ஸ்டேட் பேங்க், மெரில் லிஞ்ச் நிறுவனத்திடம் இன்சூரன்ஸை வாங்கிக் கொள்கிறது.

இதில் மெரில் லிஞ்ச் நிறுவனத்திற்கு என்ன லாபம்? இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்களிடம் பிரீமியம் தொகையை வாங்குவது போல் மெரில் லிஞ்ச் நிறுவனமும் ஸ்டேட் பேங்கிடம் பிரீமியம் வாங்கும்.

10,000 கோடி கடனை பாதுகாப்பதற்கு மெரில் லிஞ்ச் 10 கோடி பிரீமியம் வாங்கும். (இதை பிரீமியம் என்று நடைமுறையில் குறிப்பிடுவதில்லை, சுலபமாக விளக்குவதற்காக இப்படி எழுதுகிறேன்) DLF நிறுவனம் அதிக ரிஸ்க் உள்ளதாக இருந்தால், இந்த பிரீமியம் இன்னும் உயரலாம்.

துரதிர்ஷ்டவசமாக DLF நிறுவனம் திவாலாகி விட்டால், ஸ்டேட் பேங்கிற்கு வர வேண்டிய 10,000 கோடி கடனையும் மெரில் லிஞ்ச் கொடுத்து விடும். இது போல நடப்பதற்கு probability அதிகம் கிடையாது. மெரில் லிஞ்ச் போன்ற நிறுவனங்கள், கடன் வாங்கிய DLF போன்ற நிறுவனங்களை தீர ஆராய்ந்த பிறகு தான் ஸ்டேட் பேங்க் போன்ற வங்கிகளுடன் credit default swap ஒப்பந்தம் போடுகிறார்கள்.

மெரில் லிஞ்ச் நிறுவனத்தின் கணிப்பு சரியாக இருந்து DLF நிறுவனம் நல்ல பிள்ளையாக கடனை திரும்ப கொடுத்து விட்டால், மெரில் லிஞ்ச் நிறுவனத்துக்கு 10 கோடி பிரீமியமும் லாபம்.

இது வரை பார்த்தது வெறும் கற்பனை தான். நம் நாட்டில் credit derivatives இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இன்னும் சில மாதங்களில் வரலாம்.

இந்திய வங்கிகள் கொடுத்த கடன்கள் கடந்த ஒரு வருடத்தில் 27% உயர்ந்திருக்கின்றது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் கடன்களை தாராளமாக கொடுக்கின்றன. இந்த கடன்களில் வெறும் 25 சதவிகிதம் வங்கிகளுக்கு திரும்ப கிடைக்காமல் போனாலே அது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும்.

நம் நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு credit derivatives அவசியம் வேண்டும். மின்னல் வேகத்தில் கடன் கொடுக்கும் வங்கிகளின் ரிஸ்க்கை கட்டுப்படுத்த credit default swap உதவும்.

வளர்ந்த நாடுகளில் credit default swap சாதனத்தை பங்குகள் போல வாங்கி விற்கிறார்கள். மேலே கண்ட உதாரணத்தில் மெரில் லிஞ்ச் தன்னிடமுள்ள swap-ஐ கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்திற்கு லாபத்திற்கு விற்று விடலாம்.

அமெரிக்காவில் வீட்டு கடன்களை பல வங்கிகள் இப்படி தான் வாங்கி விற்று அதில் லாபம் சம்பாதித்தார்கள் – subprime பிரச்னையில் மாட்டிக் கொள்ளும் வரை.

Credit default swap என்பது பெரிய பிஸினஸ். 2006ம் வருட கடைசியில் உலகம் முழுவதும் இருந்த மொத்த credit default swaps-ன் மதிப்பு $34.423 டிரிலியன் டாலர்கள்!

Related Links: ISDA, வங்கிகளின் பேராசை

Monday, August 20, 2007

வங்கிகளின் பேராசை

கடந்த இரண்டு வாரங்களாக அடி மேல் அடி வாங்கிய பங்கு சந்தைகளை பார்த்த அமெரிக்க மத்திய வங்கியின் தலைமை அதிகாரி பென் பெர்னாங்க் வெறுத்துப் போய் வங்கிகளுக்கு கொடுக்கும் கடன் வட்டியை (discount rate) 0.5% குறைத்து விட்டார்.

வீட்டு கடன் கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்றான Countrywide திவாலாக போகிறது என்று வதந்தி பரவி, கலிபோர்னியாவில் அந்த வங்கிகளின் கிளைகளில் பெரிய க்யூவில் மக்கள் நின்றார்கள் – தங்கள் பணத்தை இப்போதே எடுக்காவிட்டால், இனிமேல் எப்போதுமே கிடைக்காது என்ற பயத்தில்.

Countrywide brochure for affordable mortgages

ஆடி தள்ளுபடிக்காக தி.நகரில் தென்படும் அளவிற்கு கூட்டம் இந்த வங்கியின் கிளைகளில் அலை மோதியது.

Subprime என்பதே “வழக்கமாக வழங்கப்படும் கடனை விட ஒரு படி கீழே” என்று தான் அர்த்தம். இருந்தாலும், அமெரிக்க ரியல் எஸ்டேட் boom இன்னும் பல வருடங்களுக்கு நீடிக்கும் என்று தப்புக்கணக்கு போட்டு, Countrywide போன்ற வங்கிகள் பல பில்லியன் டாலர்களை இழந்து விட்டன.

Countrywide

அமெரிக்காவில் கிரடிட் ரேட்டிங் முறை இருப்பதால், வாடிக்கையாளர்களில் யார் prime, யார் subprime என்று ஓரளவுக்காவது தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் அப்படிப்பட்ட கிரடிட் ரேட்டிங் முறை இல்லை.

இருந்தாலும், இந்தியாவில் பல வங்கிகளும் NBFC லோன் நிறுவனங்களும் லோன்களை அள்ளிக் கொடுக்கின்றன. வீடு விலைகள் கிடுகிடுவென்று உயர்ந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் கடன்களை அள்ளி வழங்குகின்றன.

கடந்த இரண்டு மாதங்களில் சென்னையில் வீட்டு விலை 20% குறைந்திருக்கிறது. இந்திய ரியல் எஸ்டேட் இன்னும் கீழே விழுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் போது, தாங்கள் கொடுத்த கடன்கள் திரும்ப வராமல் போனால் இந்திய வங்கிகள் எப்படி சமாளிக்கும்?

அமெரிக்காவில் subprime-ல் கடன் வாங்கிய சில வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டு சாவியை வங்கிகளிடம் கொடுத்து விட்டு ஊரை காலி செய்கிறார்கள். தாங்கள் வாங்கிய விலையை விட வீட்டின் மதிப்பு பல மடங்கு குறைந்து விட்டதால், foreclosure செய்வதை கூட வித்தியாசமாக இப்படி செய்கிறார்கள்!

உலக சந்தைகளில் இந்திய ரியல் எஸ்டேட் சந்தை மட்டும் வித்தியாசமானது என்று பலர் என்னிடம் கூறினர். அமெரிக்காவில் நடப்பது போல இங்கே நடக்காது என்று விவாதம் செய்கின்றனர். அது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை.

எல்லாவற்றையும் தீர்மானிப்பது “Law of supply and demand”. இந்தியாவாக இருந்தாலும் சரி, இலங்கையாக இருந்தாலும் சரி அல்லது அமெரிக்காவாக இருந்தாலும் சரி. அதனால் இந்தியாவில் மட்டும் ரியல் எஸ்டேட் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்ற நாடுகளை விட மாறுபட்டு இருக்கும் என்ற விவாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பல ஆயிரம் கோடிகளை கடனாக கொடுத்த வங்கிகளுக்கு, சில ஆயிரம் கோடிகள் திரும்ப வராமல் போனாலே அது மிக பெரிய பிரச்னை.

இந்தியாவில் உள்ள வங்கிகள் அனைத்துமே கடன்களை கொடுப்பதில் தாராள மனதுடன் இருக்கின்றன. பெரும்பாலான வங்கிகளில் திறமை பெற்ற கிரடிட் அனலிஸ்ட்டுகள் உள்ளனர். அவர்கள் கொடுக்கும் எச்சரிக்கையையும் மீறி, பல வங்கிகள் 90% லோன் கொடுக்கின்றன. கேட்பவர்களுக்கெல்லாம் கிரடிட் கார்டுகளை கொடுக்கின்றனர்.

ரியல் எஸ்டேட் மார்க்கெட் சரிந்து தன் கடன் தொகையை விட வீட்டின் மதிப்பு குறைந்து விட்டால், பலர் கடனை அடைக்கப் போவதில்லை. அப்போது இந்திய வங்கிகள் பலவற்றுக்கு Countrywide வங்கியின் தற்போதைய நிலைமை வரலாம்.

வளர்ந்த நாடுகளில் இருப்பது போல “Credit derivatives” முறை நம் நாட்டில் இல்லை. விரைவில் இந்த முறையை அமுல்படுத்த போவதாக இரண்டு மாதங்களுக்கு முன்னால் RBI வங்கி ஒரு draft-ஐ வெளியிட்டது. இதே போல ஒரு draft மூன்று வருடங்களுக்கு முன்னாலும் வெளியிடப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.

Credit derivatives பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம். சுருக்கமாக சொல்லப் போனால், கடன் நஷ்டத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வங்கிகளுக்கு இது உதவும். தற்போதைய இந்திய சூழ்நிலைக்கு இது மிக அவசியம். நாம் பங்குகள் வாங்கினால் அதை “Put” ஆப்ஷன்கள் மூலம் பாதுகாப்பது போல வங்கிகளுக்கு credit derivatives ஹெட்ஜாக இருக்கும்.

நீங்கள் இந்திய வங்கிகளின் பங்குகளில் முதலீடு செய்திருந்தால், இந்திய ரியல் எஸ்டேட் மார்க்கெட்டின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். வங்கிகளின் பங்குகள் சரிவதற்கு முன் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

Wednesday, August 15, 2007

அறுபது வயது இளைஞன்

உங்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

நாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்து விட்டோமா என்று பல சமயம் விவாதம் செய்தாலும், நாம் சுதந்திரமாக வாழ்கிறோம் என்பதற்காகவே சந்தோஷப்படலாம்.

உலகில் இன்னும் பல நாடுகளில் மக்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. க்யூபா நாட்டிலிருந்து சீனா வரை பல கோடி மக்கள் அடக்கு முறையால் அவஸ்தைப்படுகிறார்கள். நாம் இந்தியாவில் பிறந்ததற்காக மகிழ்ச்சி கொள்ள வேண்டும்!

இந்த மகிழ்ச்சி இன்னும் பல மடங்காக நாம் எல்லோரும் முயற்சி செய்வோம்.

ஐ.டி. துறையை மட்டும் நம்பி இந்தியா இருக்காமல் மற்ற பல துறைகளிலும் நம் நாடு கவனம் செலுத்த வேண்டும். சமீபத்திய கணக்குப்படி இந்தியாவில் ஐ.டி. துறையில் வேலை செய்பவர்கள் வெறும் 16 லட்சம் பேர் தான். இவர்கள் மட்டும் பயனடையாமல் நாடு முழுதும் பயனடைய வேண்டும்.

மற்ற துறைகளை முன்னேற்றுவதற்கு Special Economic Zone (SEZ) அவசியம் வேண்டும். சீனா வேகமாக முன்னேறியதற்கு அடிப்படை காரணங்கள் இரண்டு: SEZ மற்றும் வெளிநாட்டில் வாழும் சீனர்கள்.

நம் ஊரில் சில அரசியல்வாதிகள் நல்லதும் செய்யாமல், நல்லது செய்பவர்களையும் விடாமல் SEZ, துணைநகரம் போன்றவை வராமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். யாரைப்பற்றியும் கவலைப்படாமல் SEZ போன்ற நல்ல திட்டங்களை இந்தியா முழுதும் கொண்டு வந்தால் தான் ஐ.டி. துறையை மட்டும் சார்ந்திராமல் நாம் சுபிட்சம் பெற முடியும்.

இன்று செங்கோட்டையில் நம் பிரதமர் நாடு முன்னேறுவதற்கு ஆதாரம் கல்வி என்று பேசியிருக்கிறார். மறுக்க முடியாத உண்மை. மிகச் சிறந்த தரமுள்ள ஆறாயிரம் புது பள்ளிக்கூடங்களை ஆரம்பிக்க போவதாக கூறியிருக்கிறார். ஏற்கனவே இருக்கும் பல்லாயிரம் பள்ளிக்கூடங்களையும் நல்ல தரத்துக்கு கொண்டு வந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

தொடர்புள்ள பதிவுகள்: Where are we?

Sunday, August 12, 2007

பாடாய் படுத்தும் பங்கு சந்தைகள்

கடந்த இரண்டு வாரங்களில் பெரும்பாலான உலக சந்தைகள் சாமியாட்டம் ஆடி விட்டன. எங்கு திரும்பினாலும் களேபரம் ஆகி விட்டது.

Wall Street

அமெரிக்க சந்தை 400 புள்ளிகள் சரிகிறது. இந்திய சந்தை 500 புள்ளிகள் விழுகிறது. நிலைமை உண்மையிலேயே அவ்வளவு மோசமா?

இல்லை.

Subprime lending பிரச்னை பல மாதங்களாக இருந்து வருகிறது. ஒரு சில வங்கிகள் மட்டும் இந்த வம்பில் மாட்டியதாக முதலீட்டாளர்கள் நினைத்திருந்தனர். இப்போது ஆளாளுக்கு confession செய்து கொண்டிருக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டு வங்கிக்கும் அமெரிக்க subprime கடனுக்கும் என்ன சம்பந்தம்?! எல்லாம் ஆசை தான்.

கோல்ட்மென் போன்ற சூப்பர் ஸ்டார் வங்கிகளும் சப்-பிரைம் வம்பில் மாட்டிக் கொண்டதாக சில நாட்கள் முன்னால் வதந்தி வந்தது.

Bear Sterns, Goldman போன்ற பிரபல வங்கிகளின் ஹெட்ஜ் நிதிகள் (Hedge Funds) சப்-பிரைம் பிரச்னையால் பெரும் நஷ்டம் அடைந்துள்ளன. இவர்கள் நஷ்டத்தால் பங்கு சந்தைகள் மூழ்கப் போவதில்லை.

இருந்தாலும், முதலீட்டாளர்கள் “fear of unknown” உபாதையால் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடுகிறார்கள்.

பங்குகளும் பரஸ்பர நிதிகளும் வாங்குவதற்கு இது சரியான சந்தர்ப்பம். பங்கு சந்தை இன்னும் சரிந்தால் நன்றாக இருக்கும், நல்ல விலைக்கு பங்குகளை வாங்கலாம்.

போன வாரம் பங்கு சந்தைகள் சரியும் போது FAIRX நிதியை 401K கணக்கில் வாங்கினேன். Short-term ட்ரேடிங் செய்பவர்கள் சில வாரங்கள் பங்கு சந்தைக்கு உள்ளே வராமல் இருப்பது நல்லது. நான் இப்போது வாங்கும் பங்குகள்/நிதிகள் அனைத்தும் அடுத்த சில வருடங்களாவது என் கணக்கில் இருக்கும்.

கடந்த இரண்டு வாரங்களில் சில புத்திசாலித்தனமான Quant-fund நிறுவனங்களும் நஷ்டமடைந்துள்ளன. இந்த வகை நிதிகள் ஒரு விதமான கணித முறையை பின்பற்றி நடத்தப் படுகிறது. பங்குகளை வாங்குவது/விற்பது அனைத்தும் கம்ப்யூட்டர் புரோகிராமினால் நிச்சயிக்கப் படுகிறது. மனிதர்களின் வேலை கம்ப்யூட்டருக்கு அல்காரிதம் கொடுக்க வேண்டியது தான்.

அனைத்து குவான்ட் நிதிகளும் (quant funds) நாளொன்றுக்கு பல மில்லியன் டாலர்களை சந்தையில் ட்ரேடு செய்கின்றன. ட்ரேடுகள் அனைத்தும் கம்ப்யூட்டர்கள் மூலம் செய்யப் படுகின்றன. இந்த கம்ப்யூட்டர் புரோகிராமின் அல்காரிதத்தை வடிவு செய்ய Ph.D. முடித்த பல கணித வல்லுனர்கள் இருக்கின்றனர்.

ஸ்டான்போர்டு போன்ற புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவர்களுக்கு கூட இந்த quant நிதி நிறுவனங்களில் வேலை கிடைப்பது கஷ்டம்.

சிறந்த கணித மேதைகள் இருந்தும் கூட பெரும்பாலான குவான்ட் நிதிகள் கடந்த இரண்டு வாரங்களில் நஷ்டமடைந்து விட்டன.

“10,000 வருடத்துக்கு ஒரு முறை தான் இப்படி நடக்க சாத்தியம் (probability) என்று எங்கள் குவான்ட் மாடல் சொல்கிறது. ஆனாலும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எங்கள் மாடலால் கணிக்க முடியாத அளவுக்கு சந்தை எங்களுக்கு தண்ணீர் காட்டி விட்டது” என்று சொல்கிறார் ஒரு குவான்ட் நிதியின் உயர் அதிகாரி.

பங்கு சந்தை கீழே விழுவதும் மேலே உயர்வதும் சகஜம். நல்ல நிறுவனங்களின் பங்குகளையும், பரஸ்பர நிதிகளையும் வாங்குவதற்கு இது தான் நல்ல நேரம்.

Wednesday, August 08, 2007

இந்தியாவா, சீனாவா?

பன்னாட்டு நிறுவனங்கள் பலவற்றின் பெரிய dilemma இது தான். தங்கள் வியாபாரத்தை விரிவு படுத்தும் போது, “இந்தியாவிற்கு செல்வதா அல்லது சீனாவுக்கு செல்வதா?” என்ற கேள்விக்கு விடை தெரியாமல் பல நிறுவனங்கள் கன்சல்டன்சி நிறுவனங்களை தேடி செல்கின்றன.

இந்தியாவா, சீனாவா என்று குழம்பாமல் இரு நாடுகளிலும் வியாபாரத்தை விரிவு படுத்துவது தான் புத்திசாலித்தனம் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர். “இந்தியா அல்லது சீனா” என்றில்லாமல் “இந்தியா & சீனா” என்று strategy அமைப்பதற்கு மூன்று காரணங்களை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

1. இரு நாடுகளும் பல துறைகளில் அபரீத வளர்ச்சி அடைந்திருக்கின்றன. இந்த வளர்ச்சி இன்னும் தொடரும். உதாரணத்துக்கு சீனாவில் 450 மில்லியன் செல் போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர், இந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் 150 மில்லியன் செல் போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒரு மாதத்துக்கு 60 லட்சம் புது வாடிக்கையாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர்! (ஏற்கனவே தவறுதலாக 24 கோடி என்று எழுதியிருந்தேன், Sorry..)

2. இந்தியாவும் சீனாவும் மாறுபட்ட துறைகளில் வல்லுனர்களாக உள்ளனர். உற்பத்தி துறைகளில் (manufacturing) சீனாவும் மென்பொருள் மற்றும் ஐ.டி. துறைகளில் இந்தியாவும் முண்ணணியில் இருப்பதால் இரு நாடுகளிலிருந்தும் பயனடையலாம்.

3. காப்புரிமையை (Intellectual Property) பாதுகாப்பதற்கு இரு நாடுகளிலும் வேலைகளை பகிர்ந்து கொடுப்பது நல்லது.

எந்த நாடானாலும் சரி, அந்த நாட்டின் கலாசாரத்துக்கு தகுந்தாற்போல தன் வியாபார உத்தியை மாற்றியமைத்தால் தான் நிறுவனங்கள் வெற்றியடைய முடியும்.

அப்படி செயல்பட்டதால் தான் Haier நிறுவனம் சீனாவில் பெரும் வெற்றியடைந்தது. கிராமங்களில் Haier விற்கும் வாஷிங் மெஷின்களில் துணிகளை மட்டுமல்லாது காய்கறிகளையும் வாஷ் செய்யலாம்!

நகரங்களில் Haier விற்கும் ஒரு குறிப்பிட்ட மாடல் வாஷிங் மெஷின்/ட்ரையர் ஒரு செட் துணியை மட்டும் சலவை செய்யக்கூடிய அளவுக்கு சிறிய வடிவில் உள்ளது. பதினைந்து நிமிடத்தில் சலவை முடிந்துவிடும்.

இப்படிப்பட்ட வாஷிங் மெஷின்கள் சீனாவில் பெரிய ஹிட்.

இந்தியாவில் டிஸ்னி சேனல் வித்தியாசமான உத்திகளால் வெற்றி பெறுகிறது. அமெரிக்காவில் பெரும் வெற்றியடைந்த High School Musicals படத்தை இந்தியாவில் ஹிந்தியில் தயாரிக்கிறது. அமெரிக்க படத்தில் கதாநாயகன் கூடைப்பந்து வீரன். இந்திய படத்தில் கிரிக்கெட் விளையாடுகிறார்.

இவர்களைப் போன்று Fox (Star TV) நிறுவனமும் “24” சீரியலை ஹிந்தியிலும் தமிழிலும் தயாரிக்கலாம். அழுகை மெகா சீரியல்களை பார்த்து சோகத்தில் வாடும் என் இனிய தமிழ் மக்களுக்கு ஒரு மாறுதலாக இருக்கும்.

Wednesday, August 01, 2007

தூக்கம்

இரவில் உங்களுக்கு நன்றாக தூக்கம் வந்தால், உங்களின் அதிர்ஷ்டத்தை நினைத்து சந்தோஷப்படுங்கள். தூக்கம் வராமல் நிறைய பேர் கஷ்டப்படுகிறார்கள் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மன அழுத்தம் தான் முக்கியமாக தூக்கத்தை கெடுக்கின்றது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனாலும் மன அழுத்தம் உள்ளவர்கள் அதற்கான சிகிச்சை எடுக்காமல் தூக்க மாத்திரை சாப்பிட்டு தூக்கத்தை செயற்கையாக வரவழைக்கிறார்கள். இரண்டு வேலியம் சாப்பிட்டும் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இருக்கிறார்கள்.

இவர்களுக்காக CPAP என்ற ஒரு சிகிச்சை முறை பல வருடங்களாக இருக்கிறது. இதன் மூலம் தூக்கத்தை சுலபமாக வரவழைக்கலாம். ஆனாலும், அந்த தூக்கம் வருவதற்காக E.R. வார்டில் படுத்திருப்பது போல முகத்தில் ஒரு குழாயுடன் படுத்திருக்க வேண்டும்.

CPAP

இந்த ஒரு காரணத்துக்காக பலர் CPAP முறையை விரும்புவதில்லை.

மனிதனின் மூச்சுக் குழாயை (airway) நாக்கு அடிக்கடி தடுப்பதால் தான் தூக்கம் வருவது கடினமாக இருக்கிறது என்று பல் மருத்துவர்கள் கருதுகிறார்கள். அதனால் நாம் தூங்கும் போது நாக்கும் நல்ல பிள்ளையாக தூங்குவதற்காக சில சாதனங்களை கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த வகை சாதனத்தை உறங்க போகும் போது வாயில் மாட்டிக் கொள்ள வேண்டும்.

என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்மணி இப்படி ஒரு கிளிப்பை வாயில் மாட்டிக் கொண்டு தான் உறங்குகிறார். ஆரம்பத்தில் வித்தியாசமாக இருந்தாலும் இப்போது பழகி விட்டது என்கிறார். வாயில் பெரிய கிளிப் இருப்பதால் எச்சில் நிறைய உற்பத்தியாவதால் சிலருக்கு ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கலாம்.

பங்கு சந்தைகள் கொடுக்கும் டென்ஷனால், தூங்கும் போது பற்களை கடித்து அவஸ்தைப்படுவர்களுக்கும் இந்த வகை கிளிப்புகள் உதவியாக இருக்கும்.

இந்த சிகிச்சைகளின் விலை 200 டாலரிலிருந்து 8000 டாலர் வரை. தூக்கமின்மையை குணப்படுத்துவதற்காகவே சில மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் சிகிச்சைக்காக இன்னும் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இவ்வளவு செலவுகள், அவஸ்தைகள் இல்லாமல் நிம்மதியாக தூங்குவதற்கு ஒரு எளிய வழி உள்ளது. அதன் பெயர் “ஆழ்நிலை தியானம்”.

Wednesday, July 25, 2007

குப்பையிலிருந்து இன்னுமொரு கோடீஸ்வரன்

முன்னேற துடிக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் இன்னொரு வெற்றி கதையை இங்கே படியுங்கள். இந்த செய்தியை முழுமையாக தமிழில் மொழி பெயர்க்க நேரமில்லை, மன்னிக்கவும்.என் அபிமான எழுத்தாளர் எம்.எஸ். உதயமூர்த்தி சொல்வது போல “எண்ணங்கள் தான் ஒரு மனிதனை உயர்த்துகின்றன”.

வெற்றி அடைய வேண்டும் என்ற வெறி, தீர்க்கமான உந்துதல், கடின உழைப்பு இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கிறிஸ் கார்ட்னரை மேலே உயர்த்தியிருக்கின்றன.

வாழ்க்கையில் எவ்வளவு உயரே நாம் போனாலும், இது போன்ற செய்திகளை படிக்கும் போது மனதில் மேலும் ஊக்கம், உற்சாகம் ஏற்படுகிறது.

தொடர்புள்ள பதிவு: குப்பையிலிருந்து ஒரு கோடீஸ்வரன்

Monday, July 23, 2007

குப்பையிலிருந்து ஒரு கோடீஸ்வரன்

கத்ரீனா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் ஜெரோம் பாய்கின்னும் ஒருவர். புயலால் தன் வீடு சேதமடைந்ததால் தன் பெற்றோர்களுடன் லூசியானாவில் தங்கியிருந்தார்.

ஒரு நாள் இரவு 12 மணிக்கு ஜெரோமின் அப்பா அவரை ஒரு ஷாப்பிங் மால் பார்க்கிங் லாட்டுக்கு கூட்டிச் சென்றார். அந்த இடத்தை சுத்தம் செய்யும் பெரிய டிரக்கை காண்பித்து “இந்த பிஸினஸ் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டிருக்கிறார்.

“சான்ஸே இல்லை!” என்று ஜெரோம் ஓடி விட்டாலும், அவர் அப்பா தொடர்ந்து இது பற்றி பேசியிருக்கிறார். வால் மார்ட் போன்ற ஒரு பெரிய கடையை சுத்தம் செய்தால் மாதத்துக்கு $3800 கிடைக்கும் என்று நம்பரை காண்பித்தவுடன் ஜெரோமின் தலையில் ஒரு பிரகாசமான லைட் பல்ப்!ஒரு வால் மார்ட் கடையில் ஆரம்பித்து இன்று ஒன்பது வால் மார்ட் கடைகளின் காண்ட்ராக்ட் இவர் கையில். அவை தவிர ஹோம் டிப்போ, டார்கெட் போன்ற கடைகளின் காண்ட்ராக்டுகளும் இவர் கையில்.

இப்போது சராசரியாக மாதம் $45,000 சம்பாதிக்கிறார்!

ஜெரோம் பற்றிய முழு விபரங்களை இங்கு படியுங்கள்.

Sunday, July 22, 2007

இன்ட்ர்நெட்டில் கடன்

பல வருடங்களாக அறிமுகவானவர்களே கடனை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். முன் பின் தெரியாத ஆசாமிகளுக்கு கடன் கொடுத்து அதை வட்டியுடன் திரும்பி வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையுடன் சில இணைய தளங்கள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன.

Prosper.com தளத்தில் கடன் கொடுத்தால், 8%லிருந்து 12% வரை வட்டி கிடைக்கும் என்று அந்த தளத்தை நடத்துவர்கள் கூறுகிறார்கள். போட்ட முதலே திரும்பி வராவிட்டால்? That’s your risk!

Prosper தளத்தின் மூலமாக மட்டுமே இது வரை 60 மில்லியன் டாலர்கள் கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. எத்தனை மில்லியன் டாலர்கள் கடன் திரும்பி செலுத்தப்பட்டிருக்கிறது என்ற விபரங்கள் தெரியவில்லை.

2010 வருடத்தில் ஆன்லைன் கடன் மார்க்கெட் ஒரு பில்லியன் டாலரை எட்டும் என்று ஆன்லைன் பேங்கிங் ரிப்போர்ட் சொல்கிறது.

Prosper போன்ற மற்ற இணைய தளங்கள்:
Lending Club
Zopa

இதே போன்ற இணைய தளங்களை இந்தியாவில் ஆரம்பிக்கலாமா?! அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒருவரின் கிரடிட் ரிப்போர்ட்டை பார்த்து அவர் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பாரா என்று “ஒரளவு” தெரிந்து கொள்ளலாம். அதிலேயே பலர் ஃபிராடு செய்து பல வங்கிகளையே ஆட்டி வைக்கிறார்கள்.

இந்தியாவில் இது போன்ற தளங்களை ஆரம்பித்தால், போட்ட முதல் திரும்ப வந்தாலே அதிசயம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Monday, July 16, 2007

சில நேரங்களில் சில மனிதர்கள்

ஹோல் ஃபுட் நிறுவனத்தின் (Whole Foods Market Inc) தலைமை அதிகாரி ஜான் மேக்கி. மிகவும் திறமையாக தன் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

சுற்று சூழலை பாதுகாக்கும் பல தொண்டு நிறுவனங்களின் அபிமான தலைவர் இவர். இவருக்கென்று ஒரு தனி மரியாதை இருந்தது.

John Mackey
ஹோல் ஃபுட் நிறுவனத்தின் முக்கிய போட்டி நிறுவனம் Wild Oats. அந்த நிறுவனத்தைப் பற்றி முதலீடு சம்பந்தமான பல இணைய தளங்களில் ஜான் விமர்சனங்கள் எழுதி வந்திருக்கிறார். தன் பெயரில் அல்ல, rahodeb என்ற புனைப்பெயரில்.

ஒவ்வொரு முறையும் வைல்ட் ஓட்ஸ் நிறுவனத்தைப் பற்றி மட்டமாக எழுதி, அந்த நிறுவனம் விரைவில் திவாலாகி விடும் என்று எழுதி வந்திருக்கிறார். தனக்கும் ஹோல் ஃபுட் நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பை அவர் வெளிப்படுத்தவில்லை.

ஓட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5 டாலருக்கு கீழே விற்கும் என்றும் அப்படி நடக்கும் போது அந்த நிறுவனம் விற்கப்படும் என்றும் ஆருடம் சொல்லி வந்திருக்கிறார்.

65 டாலர் விற்ற ஓட்ஸ் பங்குகள் 45 டாலருக்கு சரிந்தவுடன், கடந்த பிப்ரவரியில் Wild Oats நிறுவனத்தை 565 மில்லியன் டாலருக்கு ஒரு நிறுவனம் வாங்கியது.

அந்த நிறுவனம்… ஜான் தலைமை அதிகாரியாக இருக்கும் ஹோல் ஃபுட் நிறுவனம்!

ஜானின் இணைய தள வித்தைகள் இப்போது வெளிச்சத்துக்கு வந்தவுடன், அமெரிக்காவின் SEC இது பற்றி விசாரணை நடத்த ஆரம்பித்திருக்கிறது.

ஜான் தன் போட்டி நிறுவனத்தின் பங்கு விலையை manipulate செய்தார் என்பது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு சிறை நிச்சயம். சட்ட ரீதியாக அப்படி நிரூபிப்பது கஷ்டம். அவருக்கு தண்டனை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், ஹோல் ஃபுட் நிறுவனத்துக்கு இது ஒரு அவமானம்.

ஜான் மேக்கி பற்றி பல வருடங்களாக படித்திருக்கிறேன். அவர் செய்த தில்லுமுல்லு பற்றி படிக்கும் போது அவரா இப்படி செய்தார் என்று அதிர்ச்சியெல்லாம் இல்லை. “இவர்களில் யார் யோக்கியர்கள் என்று புரியவில்லையே” என்ற விரக்தி கலந்த சிரிப்பு தான் வருகிறது.

Related Links:

Whole Foods Vs Wild Oats

Regulators Eye Whole Foods CEO Postings

Saturday, July 07, 2007

கறுப்பு பணத்தை அழிக்கும் “சிவாஜி”

சிவாஜி படத்தின் அமோக வசூலை பற்றி உலகெங்கும் பேச்சு. “அமெரிக்காவில் சிவாஜி படத்தால் டிராபிக் ஜாம் ஆச்சாமே?” என்று போன் போட்டு கேட்கிறார்கள். இலங்கையில் ஒரு நாளைக்கு 8 காட்சிகள் காட்டினார்கள் என்று தகவல், 24 மணி நேரத்தில் 8 காட்சிகள் எப்படி காட்ட முடியும்?! காலை நான்கு மணிக்கு கூட ஒரு ஷோ போட்டிருப்பார்கள் போலிருக்கிறது.

நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை. ஆனாலும் படத்தின் கதை பற்றி கேள்விப்பட்டேன். கறுப்பு பணத்தை கதாநாயகன் அழிக்கிறார்.

ஆங்கிலத்தில் irony என்று சொல்வார்கள். தமிழில் வேடிக்கை என்று சொல்லலாமா? கறுப்பு பணத்தை அழிப்பதாக கதை உள்ள படத்தால் தமிழ்நாட்டில் கறுப்பு பணம் அதிகமாகி விட்டதாக ஒரு தகவல்.

சினிமா துறையில் உள்ள ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன தகவல்களை கீழே கொடுத்துள்ளேன். “நீ நேரே இருந்து பார்த்தாயா?” என்று விவகாரமான கேள்வியெல்லாம் கேட்க கூடாது!

சிவாஜி படம் எடுத்த ஏ.வி.எம். நிறுவனம் படத்துக்காக கடன் வாங்கிய தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பணமாக வாங்கப்பட்டது. அந்த பணம் கறுப்பு பணம். (மீதம் கடன் செக் மூலம் வழங்கப்பட்டது)

படம் வெளியான முதல் வாரத்தில் தியேட்டர் உரிமையாளர்களே டிக்கெட்டுகளை அமோக விலைக்கு பிளாக்கில் விற்றார்கள். ஒரு டிக்கட் 1500 ரூபாய்க்கு கூட விற்றது. ஹிந்து பத்திரிகையிலும் இது பற்றி செய்தி வந்தது. இப்படி கிடைத்த வருமானம் அனைத்தும் கறுப்பு.

படம் வெளியான இரண்டாவது வாரத்திலேயே தியேட்டர் அதிபர்களுக்கு போட்ட முதல் திரும்ப கிடைத்து விட்டது. கறுப்பில் கிடைத்த பணத்தை கேஷாகவே படத்தயாரிப்பாளருக்கு கொடுத்து விடுகிறார்கள். தயாரிப்பாளரும் தான் கேஷாக வாங்கிய கடனுக்கு இந்த கறுப்பு பணத்தை வட்டியுடன் கொடுத்து விடுகிறார்.

படத்தின் வசூல் அதிகமாக அதிகமாக அதில் கறுப்பு பணத்தின் பங்கும், தொகையும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

சினிமாவில் லாஜிக் பார்க்கக்கூடாது. Just enjoy it. சினிமாவுக்கு வெளியேயும் லாஜிக் பார்க்கக்கூடாது போலிருக்கிறது!

Saturday, June 30, 2007

மேலாளர்களிடம் மனதில் உள்ளதை கொட்டலாமா?

வெற்றி பெற உதவும் புத்தகங்கள் மற்றும் சுய உதவி (Self help) புத்தகங்கள் அனைத்தும் தவறாமல் சொல்லும் அறிவுரை – “நன்றாக பேசுங்கள். உங்கள் பேசும் திறமை தான் உங்களுக்கு வெற்றி கொடுக்கும்”.

அலுவலகத்தில் புரமோஷன் கிடைப்பதற்கு வழி சொல்லும் புத்தகங்களும், செமினார் வழிகாட்டிகளும் “உங்களுக்கு யாருடனாவது பிரச்னை இருந்தால் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மேலாளருடன் பிரச்னை இருந்தாலும் அவருடன் one on one மீட்டிங்கில் உங்கள் பிரச்னைகளை தைரியமாக பேசுங்கள்” என்று தான் அறிவுரை கொடுக்கிறார்கள்.

இது போன்ற அறிவுரையை நம்பி தங்கள் மேலாளரிடம் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டி சிலர் வம்பில் மாட்டியிருக்கிறார்கள்!

சில புத்தகங்கள் கொடுக்கும் அறிவுரை – “உங்கள் மேனேஜரிடம் பேசும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் உதவி அவருக்கு தேவைப்படுகிறதா என்று கேளுங்கள். வேலையில் உங்களுக்கு அதிக ஈடுபாடு இருக்கிறது என்று அவர் புரிந்து கொள்வார்”.

இந்த அறிவுரையை ஜார்ஜ் ஃப்ராங்ஸ் தன் இதயத்தின் ஆழத்தில் சேமித்து விட்டார். ஒவ்வொரு முறை அவர் மேனேஜரிடம் பேசும் போதும் “உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் சொல்லுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். அவரின் மேனேஜர் வெறுத்துப் போய் ஒன்றும் தேராத புராஜக்ட்டுகளை ஜார்ஜ் தலையில் கட்டியது மட்டுமல்லாமல், ஜார்ஜை பார்ப்பதை தவிர்க்கவும் ஆரம்பித்து விட்டார்.

மற்றுமொரு அறிவுரை: “உங்கள் மேனேஜர் உங்களுக்கு வேலை கொடுக்கும் போது அவரின் வாக்கியங்களை paraphrase (ஒருவர் சொல்வதை அவரிடமே திரும்ப சொல்வது) செய்யுங்கள். கொடுக்கப்பட்ட வேலையை சரியாக புரிந்து கொள்ள இது உதவும்”.

கேன்டி ஃப்ரீசன் இந்த அறிவுரையை பின்பற்றி தன் மேனேஜரை எரிச்சல் படுத்தியது தான் மிச்சம்.

“Better Communication” என்பது ஒரு கலை, சிலருக்கு அது வரப்பிரசாதம். “வாயுள்ளவன் வங்காளம் வரை போவான்” என்பதும் மறுக்க முடியாதது. தற்போது வாயுள்ளவர்கள் வானம் வரை போகிறார்கள்! (ஹோவர்டு ஸ்டெர்ன் ஒரு மல்டி மில்லியன் டாலர் உதாரணம்)

ஆனாலும்… “உங்களை ஒருவருக்கு பிடிக்கவில்லையென்றால் அவரிடம் மனம் திறந்து பேசுவது உங்களுக்கு பாதகமாக முடியும்” என்று சொல்கிறார் புகழ் பெற்ற Tuck School of Business-ல் பேராசியராக இருக்கும் பால் அர்ஜென்டி.

“உங்களுக்கும் உங்கள் மேலாளருக்கும் நல்ல உறவு இருந்தாலும், மனதில் உள்ளதையெல்லாம் பேசக் கூடாது” என்றும் பால் அர்ஜென்டி எச்சரிக்கிறார்.

கிளாடியாவும் அவர் மேலாளரும் நல்ல நண்பர்கள். கிளாடியாவின் மேலாளர் அவருக்கு அடிக்கடி சொல்வது “மனதில் எதையும் வைத்துக் கொள்ளாதே. நம் டீமில் யாருக்கு என்ன பிரச்னை இருந்தாலும் அதை நான் சரி செய்கிறேன்”.

தன் குழு உறுப்பினர்களுடன் பேசும் போது பிரச்னையே தன் மேலாளர் தான் என்று கிளாடியா உணர்ந்தார். “அவள் ஒரு சூனியக்காரி”, “அவளை கொன்றால் தான் என் ஆத்மா சாந்தியடையும்”, “அவள் ஒரு அலட்டல், நான் ஹலோ சொன்னால் பதிலுக்கு ஹலோ கூட சொல்ல மாட்டாள்” என்று ஒவ்வொரு டீம் மெம்பரும் சொல்ல கிளாடியாவுக்கு தன் டீமின் பிரச்னை என்ன என்று புரிந்தது.

தனக்கு கிடைத்த தகவல்களை சங்கடத்துடன் கிளாடியா தன் மேலாளரிடம் விளக்கமாக சொன்னார்.

மேலாளரின் reaction எப்படி இருந்தது?

“She almost fired me!” என்று புலம்புகிறார் கிளாடியா.

“உன் எல்லை என்ன என்று தெரியாமல் என்னிடம் விளையாடுகிறாய்” என்று கிளாடியாவின் மேலாளர் கடித்து குதறி விட்டார்!

நன்றாக பேசுவது நல்ல கலை. ஆனாலும் யாரிடம் என்ன பேசுவது என்று தெரிந்து வைத்திருப்பதும் மிக முக்கியம். சிலரிடம் பேசாமல் இருப்பதே மேல்!

Sunday, June 24, 2007

கம்ப்யூட்டர் நிபுணர்களை கடனிலிருந்திலிருந்து காப்பாற்றுங்கள்!

இப்படி ஒரு தலைப்பில் ஒரு மின்னஞ்சல் உலாவிக் கொண்டிருப்பதாக மனோ எழுதியிருக்கிறார். அந்த பதிவை http://mano.wiki.zoho.com/Save-the-IT-People-from-Debts.html என்ற பக்கத்தில் படியுங்கள்.

மின்னஞ்சலில் உள்ள விலை விபரங்கள் அல்லது லாஜிக் தவறாக இருப்பதாக உங்களுக்கு தோன்றினால், பின்னூட்டத்தில் விவாதத்தை ஆரம்பித்து வையுங்கள்!

இந்திய ரியல் எஸ்டேட் பற்றியும், புரோக்கர்களின் துர்போதனைகள் பற்றியும் பல முறை எழுதியுள்ளேன். சமீபத்தில் சென்னை நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது கேள்விப்பட்டது – Dr. G என்பவர் பற்றி.

இவர் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் Dr. No போன்றவர் போலிருக்கிறது. Dr. G. விருகம்பாக்கத்தில் வீட்டு ஏஜென்டாக இருப்பதாகவும் சென்னை ரியல் எஸ்டேட் விலைகள் தறிகெட்டு வானத்திற்கு போனதற்கு இவர் ஒரு முக்கிய காரணம் என்றும் நண்பர் சொன்னார். இதைப்பற்றிய உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள்.

Saturday, June 23, 2007

நான் வாங்கிய சில பரஸ்பர நிதிகள்

கடந்த பத்து நாட்களில் அலுவலக வேலை டென்ஷன் அளவுக்கு மேல் எகிறி விட்டது. முடிந்த வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு பதிவு எழுத முயற்சிக்கிறேன். கடந்த வாரம் அது முடியாமல் போய் விட்டது.

கடந்த ஒரு வருடத்தில் எனது IRA கணக்கில் வாங்கிய சில நிதிகளின் விபரம் கீழே கொடுத்திருக்கிறேன். முதலில் இருப்பது பரஸ்பர நிதியின் பெயர், அடுத்து இருப்பது கடந்த 10 – 12 மாதங்களில் நிதியின் லாப விகிதம்.

FIGRX (Fidelity Intl Discovery), 21.21%

FNARX (Fidelity Select Natural Resources), 31.63%

HFTFX (Hennessy Focus 30 Fund), 19.8%

JAOSX (Janus Overseas), 31.12%

JETAX (Julius Baer Intl Equity), 23.41%

LZOEX (Lazard Emerging Markets), 34.26%

MAKOX (Matthews Korea Fund), 31.93%

RSVAX (RS Value Fund), 15.15%

கொரியா நிதியில் நான் போட்ட முதலீட்டை விட RSVAX-ல் போட்ட முதலீடு அதிகம். கொரியா போன்ற நாடுகளில் லாபம் பெரிதாக இருக்காது என்று நினைத்தேன். நான் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக, RSVAX-ஐ விட கொரியா நிதி இரண்டு மடங்கு லாபம் கொடுத்திருக்கிறது.

FNARX லாபத்திற்கு முக்கிய காரணம் சீனா. அந்த நாட்டின் கனிம உலோகத்தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

மேலே குறிப்பிட்ட பரஸ்பர நிதிகளில் பெரும்பாலான நிதிகள் இந்திய, சீன நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கின்றன.

வளர்ந்து வரும் நாடுகளில் (Emerging Markets) இனிமேல் பெரிதாக ஒன்றும் லாபம் கிடைக்காது என்று போன வருடம் பல நிபுணர்கள் எச்சரித்தார்கள். அப்படி இருந்தும் LZOEX கடந்த ஒரு வருடத்தில் 44 சதவிகிதம் லாபம் கொடுத்திருக்கிறது. நான் வாங்கி இன்னும் ஒரு வருடம் ஆகாததால் 34.26 சதவிகித லாபம் தான் என் கணக்கில். இந்த லாபங்கள் இனி மேலும் தொடருமா என்று தெரியாது.

Account Snapshot

என் கணக்கில் இருப்பதிலேயே பாதுகாப்பான நிதி HFTFX ஒன்று தான். மற்ற நிதிகள் அனைத்தும் சில வாரங்களிலேயே தலைகீழாக மாற வாய்ப்பு உள்ளது!

அமெரிக்க பொருளாதாரம் ஓரளவு பலவீனமடைந்தாலும், அமெரிக்க பங்கு சந்தையின் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. அடுத்த வருடம் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஒரு முக்கியமான காரணம். தேர்தல் நடக்கவிருக்கும் வருடத்திலும் அதன் முந்தைய வருடத்திலும் அமெரிக்க பங்கு சந்தை நல்ல லாபத்தை கொடுப்பது வழக்கமாக நடந்து வரும் ஒன்று.

நம் ஊர் அரசியல்வாதிகளை போலவே அமெரிக்க அரசியல்வாதிகளும் தேர்தல் வருவதற்கு முன் புதிதாக பல திட்டங்களை அறிவிக்கிறார்கள். வெறும் அறிவிப்போடு நிறுத்தி விடாமல், அதை செயல்படுத்தவும் செய்கிறார்கள். நாட்டின் பல துறைகளில் முன்னேற்றம் வரும் வாய்ப்பு இருக்கும் போது பங்கு சந்தையும் உயர்கிறது.

இந்த பதிவிற்கு தொடர்புள்ள பதிவு: எமர்ஜிங் மார்க்கெட் பற்றிய என் முதல் பதிவு. இதை நான் எழுதி 20 மாதங்களாகி விட்டது! இதில் நான் குறிப்பிட்ட அனைத்து பரஸ்பர நிதிகளும் நல்ல லாபத்தை கொடுத்திருக்கின்றன, thank god!

Sunday, June 10, 2007

சென்னை ரியல் எஸ்டேட்

என் நண்பர்கள் சிலர் சென்னையில் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கிறார்கள். ஒருவர் பில்டர் - சாதாரண ஆளாக இருந்தவர், எங்கேயோ போய் விட்டார். வருடத்துக்கு பல கோடிகள் வருமானம்.

நண்பர்களுடன் பேசும் போது தவறாமல் நான் விவாதிக்கும் விஷயம் – ரியல் எஸ்டேட், குறிப்பாக தமிழ் நாடு ரியல் எஸ்டேட். நான் “bubble” என்ற வார்த்தையை சொன்னாலே என்னை கிண்டல் செய்வார்கள். சமீபத்தில் அவர்களே சென்னை ரியல் எஸ்டேட் நிதானத்துக்கு வந்திருப்பதாக ஒப்புக் கொள்கிறார்கள்.

விற்பனைக்கு இருக்கும் வீடுகளுக்கு டிமான்ட் குறைந்திருக்கிறது. வீடு/அபார்ட்மென்ட் விற்பனைகளும் குறைந்திருக்கிறது. வீடு விலைகள் குறையவில்லை, ஆனாலும் வீடு வாங்க ஆசைப்படுவர்களுக்கு உள்ள சாய்ஸ் கூடியிருக்கிறது.

இன்னும் சில மாதங்களில் வீடு விலை குறைவதற்கான அறிகுறிகள் இவை. அப்படியே குறைந்தாலும், ஒரு கோடிக்கு விற்கப்படும் வீட்டின் விலை ஐம்பது லட்சமாக குறையப் போவதில்லை. ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.

இந்தியாவின் I.T.Boom-ல் கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்களை விட “மிக அதிக” அளவில் லாபம் அடைந்தவர்கள் ரியல் எஸ்டேட் துறையை சார்ந்தவர்கள் தான். Fortune இதழ் சமீபத்தில் வெளியிட்ட பெரும் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பெரும்பாலான புது பில்லியனர்கள் ரியல் எஸ்டேட் துறையில் உள்ளனர்.

இந்திய ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் வெளி நாட்டு நிறுவனங்கள் பணத்தை அள்ளிக் கொட்டும் வரை இந்திய ரியல் எஸ்டேட் சரிய போவதில்லை. ஆனாலும் பிரச்னை என்று வரும் போது இந்த வெளி நாட்டு நிறுவனங்கள் தான் முதலில் தன் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடுவார்கள்.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் பல கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து ரியல் எஸ்டேட் நிபுணர்களை வேலைக்கு வைத்திருக்கிறது. இந்தியாவில் ரியல் எஸ்டேட்டில் இனி மேல் பெரிய லாபம் கிடையாது என்று இவர்கள் தீர்மானித்தால், கிடைக்கும் விலைக்கு தன்னிடம் உள்ளவற்றை விற்று விற்று விட்டு அடுத்த நாட்டிற்கு தாவி விடுவார்கள்.

“இந்தியாவில் வீடு விலை குறைந்ததாக சரித்திரமே இல்லை” என்று வசனம் பேசி ஒரு கிரவுண்டு நிலத்தை 3 கோடிக்கு வாங்குபவர்களின் கதி?

சமீபத்தில் வெளியான ஒரு ரிப்போர்ட்டின் படி அமெரிக்காவில் ஒரு ஏக்கர் விளை நிலத்தின் சராசரி விலை $1,900 (Rs. 76,000) மட்டுமே! சென்னை OMR-ல் ஒரு ஏக்கர் விளை நிலத்தின் விலை 50 லட்சம்! (அந்த நிலத்தின் சொந்தக்காரருக்கு கிடைப்பது 30 லட்சம் தான், மீதம் 20 லட்சத்தை இடைத்தரகர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்)

இந்திய ரியல் எஸ்டேட் சாதாரண மனிதனின் affordability-ஐ விட்டு வெகு தூரம் செல்வது ஒரு பக்கம் இருக்க, இந்திய ரியல் எஸ்டேட் விலையேற்றத்தின் காரணமான I.T. Boom-ஐ அசைத்துப் பார்க்கும் ஒரு ரிப்போர்ட்டை BusinessWeek பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.

Outsourcing செய்வதால் தங்களுக்கு பெரிய லாபம் என்று பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் பிஸினஸ் வீக் ரிப்போர்ட்டின் படி அமெரிக்க பொருளாதாரத்துக்கு அது பெரிய நஷ்டம் என்று நிச்சயமானால், அரசியல் ரீதியாக outsourcing நிறுவனங்களுக்கு பிரச்னைகள் வரும்.

அப்படி பிரச்னைகள் வரும் போது, இந்திய நிறுவனங்களுக்கு கிடைக்கும் outsourcing ஒப்பந்தங்கள் குறையும். அதன் தாக்கம் இந்திய ரியல் எஸ்டேட்டிலும் தெரியும்.

Related Links:

இந்திய ரியல் எஸ்டேட் நீர்க்குமிழியை பற்றி ஒரு சுவாரசியமான விவாதம்

என்னுடைய பழைய பதிவு

Monday, June 04, 2007

அமெரிக்கர்களின் சேமிப்பு - Follow up

என் பக்கம் வீசிய தென்றலின் பின்னூட்டத்திற்காக இந்த பதிவு.

சேமிப்பதற்கு நிறைய வழிகள் உள்ளன. சுய கட்டுப்பாடு இருந்தால் குறைவாக சம்பளம் வாங்கினாலும் சேமிக்கலாம். இந்த பிளாக்கில் “சேமிப்பு” என்ற லேபிளில் பல பதிவுகள் உள்ளன. அவை உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால், DSP (Direct stock purchase) மற்றும் DRP (Dividend reinvestment plans) திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் சேமிக்கலாம். இந்த திட்டங்களின் கீழ் டார்கெட், காஸ்ட்கோ போன்ற நிறுவனங்களின் பங்குகளை அவர்களிடமிருந்தே நேரடியாக வாங்கலாம். உதாரணமாக, நீங்கள் டார்கெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்பினால், இந்த இணைப்பில் நேரடியாக வாங்கலாம்.

பல நிறுவனங்கள் தங்கள் வலைத்தளத்தில் “Investors” என்ற பிரிவில் DSP பற்றிய விபரங்களை கொடுத்திருப்பார்கள். நேரடியாக பங்குகளை வாங்குவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. புரோக்கர்களிடம் கொடுக்க வேண்டிய கமிஷன் மிச்சமாகும். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியிலிருந்து நேரடியாக DSP-ல் முதலீடு செய்யவும் வசதி உள்ளது.

மெலான் முதலீட்டாளர் நிறுவனத்தின் மூலமாகவும் நிறுவனங்களின் பங்குகளை நேரடியாக வாங்கலாம். எந்த நிறுவனங்களில் DSP வசதி உள்ளது என்பதை இந்த இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

DSP திட்டத்தை போல DRP என்ற திட்டமும் உள்ளது. DRP முதலீட்டில் கிடைக்கும் டிவிடென்ட்டுகள் திரும்பவும் பங்குகளில் முதலீடு செய்யப்படும். டிவிடென்ட் தொகை ஆரம்பத்தில் சிறியதாக தோன்றினாலும், 20 வருடங்கள் கழித்து பார்க்கும் போது பெரிய தொகையாக வளர்ந்திருக்கும்.

Sharebuilder, buyandhold போன்ற தளங்களில் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட சேமிப்பை முதலீடு செய்யலாம். உங்கள் சேமிப்பு 500 டாலரை எட்டும்போது நல்ல பங்குகள் சிலவற்றை குறைந்த கமிஷனில் வாங்கலாம். உங்கள் சேமிப்பை வைத்து ட்ரேட் செய்யாமல், நல்ல பங்குகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். விற்பதை பற்றி 10 வருடங்கள் கழித்து யோசிக்கலாம்.

Sharebuilder போன்ற தளங்களில் ETF போன்ற பங்குகளையும் வாங்கலாம். ETF என்பது “கிட்டத்தட்ட” பரஸ்பர நிதியை போன்றது, ஆனால் அதிக செலவில்லாதது. ETF பற்றி விளக்குவதற்கு ஒரு தனி பதிவு போட வேண்டும்.

உங்கள் பரஸ்பர நிதிகள் அனுமதித்தால், மாதா மாதம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து $100லிருந்து $500 வரை முதலீடு செய்யுங்கள். $500 முதலீட்டை ஐந்தாக பிரித்து ஐந்து நிதிகளில் முதலீடு செய்வது நல்லது. பணம் உங்கள் கைக்கு வராமல் முதலீடாக மாறுவது உங்களுக்கும் உங்கள் போர்ட்போலியோவுக்கும் சுய கட்டுப்பாட்டை கொடுக்கும். ஒளிமயமான எதிர்காலத்தையும் கொடுக்கும்.

Monday, May 28, 2007

அமெரிக்கர்களின் சேமிப்பு

வருடத்துக்கு எழுபதாயிரம் டாலர் சம்பளம் வாங்கும் அமெரிக்கர்களை “நீங்கள் மாதத்துக்கு எவ்வளவு மிச்சப்படுத்துகிறீர்கள்” என்று கேட்டால், “மாதம் 500 டாலர் சேமிப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது” என்று அலுத்துக் கொள்கிறார்கள். “என் சம்பளம் மட்டும் இரு மடங்கானால் இன்னும் பல மடங்கு சேமிப்பேன்” என்று பெருமூச்சு விடுகிறார்கள்.

வருடத்துக்கு 250,000 டாலர் சம்பாதிக்கும் கணவான்களை கேட்டாலும் இதே பதில் தான் வருகிறது!!

அமெரிக்கர்கள் பணத்தை அதிகம் சேமிப்பதில்லை என்பது உலகமறிந்த விஷயம். நடுத்தர மக்கள் மட்டும் இல்லாமல் பணக்காரர்களும் பணத்தை சேமிப்பதற்கு கஷ்டப்படுகிறார்கள் என்று HSBC வங்கி நடத்திய சர்வே கூறுகிறது.

இது கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், உலகம் முழுதும் இது நடைமுறையான விஷயம். தங்களின் வருமானம் உயர உயர, மக்கள் தங்கள் தேவைகளையும் உயர்த்திக் கொள்கிறார்கள்.

சான் பிராசிஸ்கோவில் 70,000 டாலர் சம்பளம் வாங்கும் வங்கி அதிகாரி, ஹோண்டா கார் வாங்கும் போது சந்தோஷப்படுகிறார். பதவி உயர்வு கிடைத்து உயர் அதிகாரியாக 200,000 டாலர் சம்பளத்தில் நியூயார்க் நகருக்கு செல்லும்போது, ஹோண்டா காரை வைத்திருப்பது கௌரவ குறைச்சலாக தெரிகிறது! BMW, பென்ஸ் கார்களை வாங்கினால் தான் தனக்கு மரியாதை என்று தோன்றுகிறது. சம்பளம் உயர உயர செலவும் வானத்தை நோக்கி செல்கிறது!

அமெரிக்கர்களின் சேமிப்பு சதவிகிதம் 2005-ல் பூஜ்யமாகி விட்டது! தற்சமயம் அது நெகட்டிவ் நம்பரில் இருப்பதாக தகவல்.

HSBC வங்கியின் சர்வேயில் 250,000 டாலர் வருமானம் உள்ளவர்களில் 10 சதவிகிதம் பேர் “வருகிற வருமானத்தால் ஏதோ குடும்பத்தை ஓட்ட முடிகிறது” என்று அலுத்துக் கொண்டிருக்கிறார்கள். அட பாவிகளா!

அதே பிரிவில் 49 சதவிகிதம் பேர் “சேமிக்க வேண்டும் என்று அவசியமில்லை. செலவு செய்வதற்கு தான் சம்பாதிப்பதே” என்று கூறுகிறார்கள்.

வருடத்துக்கு 50,000 டாலரிலிருந்து 100,000 டாலர் வரை சம்பாதிப்பவர்கள் சேமிப்பதை விட, 250,000 டாலர் சம்பாதிப்பவர்கள் சேமிப்பது குறைவாக இருக்கிறது என்று HSBC வங்கி கூறுகிறது.

இது போன்ற நிலைமை அமெரிக்காவில் மட்டும் இல்லை. உலகம் முழுதும் இது போன்ற trend இருக்கிறது.

நமக்கு பதவி உயர்வு கிடைக்கும் போது அல்லது வருமானம் கூடும் போது, கிடைக்கும் அதிக வருமானத்தில் குறைந்தது 60 சதவிகிதத்தை முதலீடு செய்ய வேண்டும். வங்கி கணக்கிலிருந்து நேரடியாக பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது சிறந்தது. அமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால், அதிக வருமானத்தை 401k திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது.

நம் கையில் பணம் கிடைத்தால் தான் செலவு செய்யத் தோன்றும். வங்கியிலிருந்து ஒவ்வொரு மாதமும் சேமிப்பு/முதலீட்டு கணக்குக்கு டைரக்ட் டெபாசிட் செய்து விட்டால் உங்கள் சேமிப்பை ஆட்டோ பைலட்டில் போட்டது போலாகி விடும். சேமிப்பதற்கு அது தான் சிறந்த வழி!

Sunday, May 20, 2007

அமெரிக்காவில் நல்ல டாக்டர்களை கண்டு பிடிப்பது எப்படி?

நீங்கள் குடும்பஸ்தராக இருந்து அமெரிக்காவுக்கு முதல் முறையாக வந்தாலோ அல்லது வேலை நிமித்தமாக வேறு மாநிலத்துக்கு மாறினாலோ, வழக்கம் போல பல வேலைகள் இருக்கும் – வீடு வாடகைக்கு பிடிப்பதிலிருந்து கார் வாங்குவது வரை. உங்கள் குடும்ப டாக்டரை தேர்ந்தெடுக்க நேரமும் இருக்காது, அது ஒரு பெரிய விஷயமாகவும் தெரியாது.

அவசரமாக டாக்டரிடம் போக வேண்டிய நிலை வரும் போது “Yellow pages”-ஐ கிழித்துக்கொண்டிருக்காமல் அருகிலுள்ள டாக்டர்கள் பற்றிய விபரங்களை முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

நீங்கள் போகும் ஊரில் உங்கள் நண்பர்கள் இருந்தால், அவர்களிடம் டாக்டர்கள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாத புது இடத்தில் யாரை கேட்பது?

அமெரிக்க உடல் நல துறை மருத்துவமனைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக ஒரு வலைத்தளத்தை நடத்தி வருகிறது. இந்த தளம் இலவசம். உங்கள் வீட்டுக்கு பக்கத்திலுள்ள பல மருத்துவமனைகளை தரம் பார்த்து படத்துடன் ரிப்போர்ட் கொடுக்கிறது. ஒரு சில குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் ரிப்போர்ட் கிடைத்தாலும், மருத்துவமனையின் பொதுவான தரத்தை அறிந்து கொள்ள இந்த தளம் உதவும்.

லீப் பிராக் தொண்டு நிறுவனமும் இதே போன்ற சேவையை நடத்துகிறது.

ஒரு குறிப்பிட்ட மருத்துவரைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள docinfo, healthgrades, Consumers’ checkbook போன்ற தளங்கள் உதவும். இந்த தளங்கள் அனைத்தும் இலவசம் இல்லை. 10 டாலரிலிருந்து 25 டாலர் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இவை தவிர மெடிக்கல் போர்டு நடத்தும் இலவச வலைத்தளத்தில் உங்களின் மருத்துவர் உண்மையிலியே மருத்துவர் தானா, ஏதாவது தப்பு தண்டா செய்திருக்கிறாரா என்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் இது போன்ற வலைத்தளங்கள் இருந்தால், தயவு செய்து பின்னூட்டத்தில் எழுதுங்கள். இந்த பதிவில் சேர்த்து விடுகிறேன்.

Friday, May 18, 2007

ஜாதி - அமெரிக்கர்கள் பார்வையில்

Wall Street Journal பத்திரிக்கையில் வந்த கார்ட்டூன்.

Wall Street Journal

Monday, May 14, 2007

தயாநிதி மாறன்

“அஞ்சா நெஞ்சன் அழகிரி” செய்த கொலைகளுக்கு தயாநிதி மாறன் பழி வாங்கப்பட்டிருக்கிறார்.

நம் வாழ்நாளில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் attitude மாறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது. தன் பதவி வெறிக்காக அப்பாவி மக்களை உயிரோடு கொளுத்துபவர்களை போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தெலுங்கு டப்பிங் படத்தை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அந்த கதைகளில் வரும் அராஜகத்தை விட அதிகப்படியாக தாண்டவமாடியிருக்கிறார்கள்.

தயாநிதி மாறனுக்காக தினகரன் கருத்து கணிப்பை வெளியிட்டதாக சொல்வது அபத்தமாக இருக்கிறது. வெறும் 20 சதவிகிதம் பேர் தான் “மற்றவர்களுக்கு” வாக்களித்திருக்கிறார்கள். அந்த “மற்றவர்கள்” மாறன்களாக இருந்தால், அதை வெளியிடுவதில் மாறன்களுக்கு என்ன பெருமை?

தயாநிதி மாறன் ஒரு திறமையான அமைச்சர். அரசியல் வாரிசு சண்டையில் அவர் பதவி பறிபோனது வேதனை.

“தி.மு.க.வில் வாரிசு அரசியல் கிடையாது” என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருப்பது இந்த வருட சிறந்த ஜோக்.

Related Links: மாறனின் பதவி யாருக்கு, மாறன் மீது பொறாமை

Tuesday, May 08, 2007

இந்திய பங்கு சந்தை இன்னும் உயருமா?

இந்திய நிறுவனங்களுக்கு இது ஒரு பொற்காலம். மற்றுமொரு லாபகரமான குவார்ட்டரை முடித்து விட்டு பார்ட்டிகள் நடக்கின்றன. நிறுவன உயர் அதிகாரிகளின் net worth வானம் நோக்கி போவதால், அளவு கடந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களில் இந்திய sensex இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்திய பங்கு சந்தை இதற்கு மேல் ஏறுவது கடினம் என்று பங்கு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உயரும் வட்டி விகிதம், வலுவான ரூபாய் இவை இரண்டும் இந்திய நிறுவனங்களின் லாபத்தில் கை வைக்கும் என்று பலர் கருத்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

Bombay Stock Exchangeஇந்திய பொருளாதாரம் கடந்த மூன்று வருடங்களில் ஆண்டுக்கு 8 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு இந்திய பங்கு சந்தையில் அதிக மாற்றம் ஏற்படாது என்று பங்கு வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆறு மாதங்களுக்கு பிறகு நிறுவனங்களின் லாப கணக்குகளை பொறுத்து பங்கு சந்தை சரியக்கூடும்.

ஒரு டாலருக்கு 44 ரூபாய் இருந்த காலம் போய், ரூபாய் 40.60 தான் இப்போது கிடைக்கிறது. இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ் போன்ற நிறுவனங்களை இது பாதிக்கும்.

இந்தியாவில் வட்டி விகிதம் தற்போது 7.75 சதவிகிதமாக இருக்கிறது. பெரும்பாலான வங்கிகள் டெபாசிட்டுகளுக்கு 9 சதவிகித வட்டி கொடுப்பதால் இந்திய முதலீட்டாளர்கள் ரிஸ்க் இல்லாமல் 9 சதவிகிதம் சம்பாதிக்கலாம். (அமெரிக்க பரஸ்பர நிதிகளில் பாதிக்கு மேல் 9 சதவிகித லாபம் கூட கொடுப்பதில்லை!) அதனால் இந்திய பங்கு சந்தையிலிருந்து பணம் வெளியேறி வங்கிகளில் டெபாசிட்டாக மாற வாய்ப்பிருக்கிறது.

இந்திய மற்றும் சீன பங்கு சந்தைகள் இன்னும் 12 மாதங்களில் சரியும் என்ற பரவலான எண்ணம் பல வங்கி அதிகாரிகளிடம் உள்ளது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சி குறைந்தால் இந்திய மற்றும் சீன பங்கு சந்தைகளில் வெளி நாட்டினர் முதலீடு குறையும். அப்படி நடந்தால் பங்கு சந்தைகள் மேலும் சரியும்.

இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் இந்திய வட்டி விகிதம், ரூபாயின் மதிப்பு, அமெரிக்க பொருளாதாரம் இவற்றில் ஒரு கண் வைத்திருங்கள். இவை அனைத்திற்கும் உங்கள் பங்கு சந்தை லாபத்தை மாற்றக்கூடிய சக்தி உள்ளது.

Monday, April 23, 2007

தவறு மேல் தவறு செய்தால்…

ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய். அதை மறைக்க இன்னொன்று. இப்படி பல பொய்களினால் தன் மானம், மரியாதை இழந்து அமெரிக்க சிறையில் கஷ்டப்படுகிறார் அமர் மோசென் என்ற எகிப்திய அமெரிக்க விஞ்ஞானி.

அமர் நல்ல புத்திசாலி. CALTECH கல்லூரியில் Ph.D படிப்பை மிக சுலபமாக முடித்த அறிவாளி. 40 patent-களுக்கு சொந்தக்காரர். Intel நிறுவனத்தில் CMOS 256K RAM திட்டத்துக்கு தலைமை தாங்கி அதை வெற்றிகரமாக முடித்தார். Actel corporation என்ற நிறுவனத்தின் CEO-ஆக இருந்தார். 1989-ல் Aptix என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.

வெற்றி மேல் வெற்றி குவிந்தது. கலிபோர்னியாவில் லாஸ் கேட்டோஸ் என்ற நகரத்தில் 17 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய பங்களாவில் தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

1998-ல் Quickturn design systems என்ற நிறுவனம் தனக்கு சொந்தமான தனியுரிமை அதிகார பத்திரத்தை (Patent) மீறியதாக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தன் தரப்பு வாதத்தை பலப்படுத்துவதற்காக போர்ஜரி செய்தார். அவர் செய்த அந்த தவறு அவரின் வாழ்க்கை திசைமாற காரணமாகி விட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி அல்சப், வழக்கை தள்ளுபடி செய்ததோடில்லாமல் சாட்சிகளில் போர்ஜரி செய்தததை விசாரிக்கும்படி FBIக்கு உத்தரவிட்டார்.

அமர் மோசென் பயந்து போய் நாட்டை விட்டு ஓட முயற்சித்தார். $40,000 நோட்டுகளோடும் புது எகிப்திய பாஸ்போர்டோடும் அவர் தப்பிக்க முயன்றபோது FBI பிடித்து சிறையில் அடைத்து விட்டது.

ஜெயிலுக்கு போன புண்ணியவான் அங்கே வாயை மூடிக்கொண்டு சும்மா கிடக்காமல், “நீதிபதி அல்சப்பை கொல்ல எவ்வளவு செலவாகும்” என்று தன் சக கைதியிடம் விசாரித்திருக்கிறார்.

அந்த கைதி “$25,000 செலவாகும்” என்று சொன்னவுடன், “அடடே, அவ்வளவு காஸ்ட்லியா? $10,000 தான் செலவாகும் என்று கேள்விப்பட்டேனே!” என்று அலுத்துக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் பேசிக்கொண்டதை சிறையில் உள்ள வீடியோ கேமரா பதிவு செய்துவிட்டது!

ஜனவரி 5, 2007ல் அமர் மோசென் மீதான வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது -- 17 வருடம் சிறை தண்டனை.

அமர் போர்ஜரி செய்யாமல் இருந்திருந்தால் அவர் தன் வழக்கில் வெற்றி பெறாவிட்டாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருப்பார். தவறு செய்பவர்கள் தன் தவறை நினைத்து திருந்தாமல், திரும்ப திரும்ப தவறு செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு அமர் மோசென் ஒரு உதாரணம்.

Sunday, April 15, 2007

பறக்க விடப்பட்ட பதினைந்து மில்லியன் டாலர்கள்!

மிமி மோனிகா வாங் ஹாங்காங் HSBC வங்கியில் உயர்ந்த பதவியில் உள்ளவர். இந்த வங்கியின் பிரைவேட் பேங்க் பிரிவின் தலைமை அதிகாரி.

மோனிகாவுக்கு ரம்பாவின் மேல் அளவு கடந்த நாட்டம் உண்டு. ரம்பா இல்லையென்றால் தன் வாழ்வே இல்லை என்ற அளவுக்கு ஒரு obsession.

Rambha

மோனிகாவின் அபிமான ரம்பா இவரில்லை!

Rumba Dance

மோனிகாவுக்கு ரொம்ப பிடித்தது ரம்பா நடனம்.

ரம்பா என்ற லட்டீன் நடனத்தின் மேல் மோனிகாவுக்கு அளவு கடந்த காதல். அதை முறைப்படி கற்றுக் கொள்வதற்காக தன் குருவுக்கு அவர் கொடுத்த கட்டணம் US$15.4 மில்லியன்!

மோனிகாவின் குரு கேய்னர் பேர்வெதர். கேய்னர் ரம்பா நடன சேம்பியன். உலக அளவில் நடந்த லட்டீன் நடன போட்டிகளில் 15 முறை வென்றவர். அவரும் அவர் கணவர் மிர்கோவும் மோனிகாவுக்கு நடனம் சொல்லிக் கொடுத்தார்கள்.

நடனம் கற்றுக் கொள்வதற்காக 2004-ல் மோனிகா தன் குருவிடம் எட்டு வருட ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். எட்டு வருட வகுப்புகளுக்கு 15.4 மில்லியன் டாலர்கள் கொடுப்பதாக ஒப்பந்தம்! முன் பணமாக 8 மில்லியன் டாலர் மோனிகா கொடுத்து விட்டார்.

ஒப்பந்தம் போட்ட சில மாதங்களிலேயே ஒப்பந்தத்துக்கு சோதனை வந்து விட்டது. மோனிகா சில அசைவுகளை சரியாக செய்யாததால் அவரை “சோம்பேறி பசு மாடு” என்று மிர்கோ திட்டியிருக்கிறார். 15 மில்லியன் பணத்தையும் கொடுத்து இவனிடம் பசு மாடு என்று திட்டு வாங்க வேண்டியிருக்கிறதே என்று வெறுத்துப் போய் மோனிகா தன் வகுப்புகளை ரத்து செய்து விட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய சொல்லியிருக்கிறார்.

கேய்னரும் மிர்கோவும் அதற்கு சம்மதிக்காததால் மோனிகா கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். கேய்னர் பதிலுக்கு இன்னொரு வழக்கு தொடுத்து மீதமுள்ள 7.4 மில்லியன் டாலரும் ஒப்பந்தப்படி மோனிகா தர வேண்டும் என்று தகராறு செய்ய ஹாங்காங் பத்திரிகைகளுக்கு நல்ல தீனி கிடைத்தது.

செப்டம்பர் 2006-ல் ஹாங்காங் கோர்ட் மோனிகாவிற்கு சாதகமாக தீர்ப்பு கூறியது. கேய்னர் தான் வாங்கிய 8 மில்லியன் டாலரும் அதற்கான வட்டியும் சேர்த்து மோனிகாவுக்கு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

மோனிகா HSBC வங்கியில் தொடர்ந்து வேலை செய்து வருகிறார். தன் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை எப்படி சேமிப்பது அல்லது முதலீடு செய்வது என்று ஆலோசனை சொல்கிறார்! பிறருக்கு அறிவுரை சொல்வது சுலபம், அதை தான் பின்பற்றுவது தான் கடினம்!

ரம்பாவின் மேல் உள்ள காதல் இன்னும் போகவில்லை. மோனிகா தன் புது ஆசிரியருக்கு மாதம் US$21,000 கொடுக்கிறார்.

Wednesday, April 11, 2007

விக்ரம் பண்டிட்

திறமையான ஒருவரை வேலைக்கு எடுக்க வேண்டுமென்றால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். எவ்வளவு அதிகம் கொடுக்கலாம் என்ற கேள்விக்கு சிட்டி பேங்க் வித்தியாசமான பதிலை கொடுக்க இருக்கிறது.

விக்ரம் பண்டிட் என்ற திறமைசாலியை தன் வங்கியின் உயர் பதவியில் வைப்பதற்காக அவர் நடத்தும் நிறுவனத்தையே 600 மில்லியன் டாலருக்கு வாங்குவதற்காக சிட்டி பேங்க் பேச்சு வார்த்தை நடத்துகிறது!

மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்தவர் விக்ரம் பண்டிட். 2005-ல் அந்த நிறுவனத்தில் நடந்த அரசியல் வித்தைகள் பிடிக்காமல் வெளியே வந்து old lane என்ற ஹெட்ஜ் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

விக்ரம் பண்டிட் சிட்டி பேங்கில் சேர்ந்தால் அந்த வங்கியின் தலைமை பதவியை கூட சில வருடங்களில் அடையலாம் என்று வால் ஸ்ட்ரீட் வட்டாரங்கள் ஆருடம் கூறுகின்றன.

Related links: abcmoney, VC Circle

Tuesday, April 10, 2007

கனவு வேலை

சிலருக்கு கனவு காண்பதே வேலை. இந்த பதிவு அவர்களைப் பற்றியது அல்ல. Dream Job என்பதை தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.

உங்கள் நிறுவனத்தின் CEO சம்பளம் 40 கோடி ரூபாய். உங்கள் சம்பளம் 16 லட்ச ரூபாய். உங்கள் CEOவை விட பல மடங்கு புத்திசாலி நீங்கள். CEO முட்டாள் தனமாக எடுத்த முடிவுகளால் போன வருடம் மட்டும் நிறுவனத்துக்கு 10 கோடி நஷ்டம். நீங்கள் அந்த பொறுப்பில் இருந்திருந்தால் ஒரு பைசா நஷ்டமடைய விட்டிருக்க மாட்டீர்கள். இருந்தாலும் உங்கள் நிறுவனத்தின் CEO பதவியை நீங்கள் எட்டுவதற்கு பல வருடங்கள் ஆகலாம். “இந்த முட்டாளுக்கு 40 கோடி சம்பளமா? It’s not fair…” என்று கோபப்பட்டிருக்கிறீர்களா? Welcome to the club.

தன் தகுதிக்கு சமமாக அல்லது கீழே உள்ளவர்கள் தன்னை விட பல மடங்கு உயரத்தில் இருக்கும் போது கோபம் ஏற்படுவது இயல்பு. மேலே கண்ட உதாரணம் கற்பனையல்ல, பல நிறுவனங்களின் அன்றாட நிகழ்வு.

புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒரே வகுப்பில் பயின்றவர்களில் ஒரு சிலர் மட்டும் மிகச் சிறந்த வெற்றியடைகிறார்கள். மற்றவர்கள் சாதாரண வேலைகளில் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். ஏன்?

சில உதாரணங்கள்:

உதாரணம் 1:

என் நண்பர் ஐ.ஐ.டி. சென்னையில் மெக்கானிக்கல் படித்து விட்டு டாடாவில் Programmerஆக சேர்ந்தார், இப்போது கலிபோர்னியாவில் $90,000 சம்பளம் வாங்குகிறார். அவரின் வகுப்பு நண்பர் கம்ப்யூட்டர் துறையின் கவர்ச்சியில் மாட்டாமல் M.S. மெக்கானிக்கல் முடித்து போயிங் நிறுவனத்தில் சேர்ந்து பல மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கிறார்.

உதாரணம் 2:

அண்ணா பல்கலைக் கழகத்தின் கிண்டி கல்லூரியில் 1986-ல் பலர் B.E. படிப்பை முடித்தார்கள். அதில் சோமசேகர் மட்டும் எங்கேயோ போய் விட்டார்! மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறார். அவருடன் படித்த பெரும்பாலானோர் இது போன்ற பதவிகளில் இல்லை.

பெரும்பாலான உயர் பதவிகளில் bipolar pay structure இருக்கிறது என்று Salary.com தளத்தின் பில் கோல்மன் சொல்கிறார். வெகு சிலர் மட்டும் கோடி கோடியாக அள்ளி குவிக்கிறார்கள், பெரும்பாலானோர் சாதாரண வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும் சொல்கிறார்.

சினிமா அல்லது தியேட்டர் டைரக்டர்கள் சம்பளங்களில் கூட பெரிய வித்தியாசங்கள் உள்ளது. அமெரிக்காவில் ஒரு சினிமா/டிவி/தியேட்டர் டைரக்டரின் சராசரி சம்பளம் $28,000. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் போன வருட சம்பளம் $330 மில்லியன்!

உங்கள் கனவு வேலையை அடைய வேண்டுமானால் முக்கியமாக செய்ய வேண்டிய காரியம்: தங்கள் கனவு வேலையை அடைந்தவர்களின் வாழ்க்கையை படிப்பது.

அவர்கள் அனைவருக்கும் பொதுவான குணாதிசயங்கள் – திறமை, தான் செய்யும் வேலையில் அளவு கடந்த ஆர்வம் (passion), வெற்றியை அடைய வேண்டும் என்ற வெறி, ஒழுக்கம் மற்றும் தைரியம்.

இவற்றில் தைரியம் மிக முக்கியம் என்று சொல்கிறார், Vault.com தளத்தின் மார்க்.

கனவு வேலையை நோக்கி பயணம் செய்பவர்களை பலர் தடுத்து நிறுத்தப் பார்ப்பார்கள். கல்லூரியில் நண்பர்களுடன் ஊர் சுற்றாமல் GMATக்கு படிக்கும் போது “இருக்கிறதை விட்டு விட்டு பறக்கிறதை பிடிக்கப் போறியா?!” என்று கிண்டல் செய்வார்கள்.

“இன்னும் பத்து வருடங்களில் CEO பதவியை அடைவது தான் என் லட்சியம்” என்று நீங்கள் சொன்னால் அந்த பதவியை நீங்கள் ஏன் அடைய முடியாது என்று “அறிவுரை” கூற நிறைய பேர் இருப்பார்கள்.

இந்த கிண்டல்கள், உன்னால் முடியாது என்ற அறிவுரைகள் மற்றும் கூட இருந்தே குழி பறிப்பவர்கள் -- இவை அனைத்தும் “emotional impediment” என்று மார்க் சொல்கிறார். இவற்றை மீறி உங்கள் வேலையில் focus செய்வதற்கே நிறைய தைரியம் வேண்டும்.

உங்கள் கனவு வேலையை நீங்கள் அடையும் போது மறக்காமல் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். சோமசேகர் பற்றி எழுதியது போல உங்களைப் பற்றியும் எழுகிறேன்!

Saturday, March 31, 2007

பல வருடங்களாக லாபம் சம்பாதிக்கும் பரஸ்பர நிதிகள்

அமெரிக்க சந்தையில் பங்குகளை ட்ரேட் செய்வதை விட பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கிறது. அமெரிக்காவில் 9,000க்கும் மேற்பட்ட பரஸ்பர நிதிகள் உள்ளன. இவற்றில் எதில் முதலீடு செய்வது?

பல வருடங்களாக தொடர்ந்து லாபம் சம்பாதிக்கும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது நல்லது. அப்படிப்பட்ட சில நிதிகள்:

FBR Small cap (FBRVX) -- 21.8%, 18%, 17.9%
Janus Overseas (JAOSX) -- 20.5%, 14.2%, 15.3%
CGM Realty (CGMRX) -- 35.8%, 20.3%, 20.5%
Baron Growth (BGRFX) -- 13.5%, 13.7%, 17.8%

இந்த பதிவில் MS Word-ல் உள்ள டேபிளை ஒட்ட முடியவில்லை. மேலே உள்ள லாப சதவிகிதங்களில் முதலாவது கடந்த 5 வருடத்துக்கான சராசரி வருட லாபத்தை குறிக்கிறது. இரண்டாவது 10 வருடத்துக்கான சராசரி வருட லாபம். மூன்றாவது நிதி ஆரம்பித்ததிலிருந்து கிடைத்த சராசரி வருட லாபம்.

இன்று 750 கோடி வீணடிக்கப்பட்டது

தமிழகத்தில் வழக்கம் போல பந்த் “அமைதியாக” நடந்து முடிந்தது. வியாபாரிகளும் வழக்கம் போல தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு ஒரு நாள் வருமானத்தை இழந்து வீட்டில் இருந்தார்கள்.

எதற்கு இந்த பந்த்? இதனால் மக்களுக்கு என்ன நன்மை? “இந்த நாடு உருப்படாது” என்று அடிக்கடி விரக்தியில் புலம்பும் நண்பன் எழுதிய பதிவை படித்தேன். “நம் அரசியல்வாதிகள் திருந்தவே மாட்டார்களா?” என்று புலம்ப தோன்றுகிறது.

பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னேற வேண்டும். அதில் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் தனக்கு மக்கள் தந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு அந்த மக்களின் கடைகளை மூடச் சொல்வது அயோக்கியத்தனம். ஒரு நாள் முழுதும் பஸ், ரயில்கள் ஓடக்கூடாது என்று சொல்வது ரவுடித்தனம்.

சுப்ரீம் கோர்ட்டை கண்டித்து பந்த் நடத்துவது கோர்ட் அவமதிப்புக்குள்ளாகும். இருந்தாலும் நம் அரசியல்வாதிகளை சுப்ரீம் கோர்ட் தண்டிக்காது. அருந்ததி ராய் போன்றவர்கள் சுப்ரீம் கோர்ட்டை கண்டித்து பேசினாலே சிறைக்கு செல்ல வேண்டும், ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் செய்த வேலைக்கு எந்த தண்டனையும் கிடையாது.

“மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காக இந்த பந்த் நடத்துகிறோம்” என்று கருணாநிதி கூறியுள்ளார். வெறுப்பு கலந்த சிரிப்பு தான் வருகிறது. CII-வின் கருத்துப்படி இன்றைய கடையடைப்பால் 750 கோடி வீணடிக்கப்பட்டிருக்கிறது.

ஜாதிகளை ஆரம்பித்து வைத்தவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினராக இருக்கலாம். ஆனால் அந்த ஜாதிகள் இன்னும் அழியாமல் இருப்பதற்கு இன்றைய அரசியல்வாதிகள் தான் காரணம். ஜாதிகள் காணாமல் போய்விட்டால் மருத்துவ குடிதாங்கிகளும், ஆறு மாதத்துக்கு ஒரு முறை கட்சி மாறும் விடுதலை சிறுத்தைகளும் காணாமல் போய் விடுவார்கள். மக்களே விரும்பினால் கூட ஜாதிகள் அழிவதற்கு சந்தர்ப்பமே இல்லை.

இட ஒதுக்கீடு என்பது வெறும் அரசியல் நாடகம். சென்னை அரசாங்க பள்ளியில் படித்து IIM வரை சென்ற சரத்பாபு சரியாக சொன்னார் – “இட ஒதுக்கீடு என்பது ஒரு தலைமுறைக்கு மட்டும் இருக்க வேண்டும்”.

தமிழ்நாட்டின் கிராம பள்ளிகள் பலவற்றில் ஆசிரியர்கள் வகுப்புக்கு வராமல் வட்டிக்கு பணம் விட்டு சம்பாதிக்கிறார்கள். பல பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்யவில்லை. கிராமங்களில் தரமான அடிப்படை கல்வியை அரசாங்கம் கொடுத்தாலே போதும், கிராம மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தேவைப்படாது. தற்போதைய மோசமான சூழ்நிலைகளில் கூட கஷ்டப்பட்டு படித்து நகர மாணவர்களுக்கு இணையாக கிராம மாணவர்கள் மதிப்பெண்கள் எடுக்கிறார்கள். நகரங்களில் உள்ள கல்வித்தரத்தை கிராமங்களில் கொடுத்தால் கிராம மாணவர்கள் ஒரு கலக்கு கலக்கி விடுவார்கள்.

IIT, IIM போன்ற தரம் வாய்ந்த கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கருணாநிதி போராடுகிறார். தமிழ்நாட்டில் பல நூறு அரசாங்க கல்லூரிகள் உள்ளன. அவற்றில் ஒரு சில கல்லூரிகளையாவது IIT தரத்தில் மாற்றலாமே?

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு அந்த அளவுக்கு திறமை கிடையாது. மத்திய அரசாங்கம் கஷ்டப்பட்டு உருவாக்கிய கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று அராஜக பந்த் நடத்தத்தான் தெரியும்.

பின் குறிப்பு: எட்டாம் வகுப்பு வரை நான் ஒரு கிராமத்தில் படித்தவன். கிராமங்களில் கிடைக்கும் தரமற்ற கல்வியின் தாக்கத்தை நேரடியாக உணர்ந்தவன். நான் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவன் என்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நான் ஒரு எதிரி என்றும் தவறாக புரிந்து கொண்டு எனக்கு வந்த hate-commentக்கு பதிலாக இந்த பின்குறிப்பு அவசியமாகிறது. இன்டர்நெட்டில் கூட நான் என்ன ஜாதி என்று சொன்னால் தான் எழுத விடுவார்கள் போல இருக்கிறது!

Saturday, March 24, 2007

மனச்சோர்வு (Depression)

பிரச்னையில்லாத மனிதர்களே கிடையாது. பிரச்னைகளின் உச்சக்கட்டத்தில் மன நிலை பாதிக்கப்பட்டு பலர் கஷ்டப்படுகிறார்கள். Bipolar disorder என்ற வியாதியால் (சந்திரமுகி, அந்நியன் கதைகளின் கரு) பலர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். என் பழைய நண்பன் ஒருவன் அடிக்கடி தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறான். தன் சொந்த அம்மாவையே கொலை செய்ய முயற்சித்திருக்கிறான். என்னுடன் வேலை பார்த்த ஒரு அமெரிக்க பெண்மணி மதிய சாப்பாட்டு நேரத்தில் ஆப்பிள் நறுக்கும் கத்தியை எடுத்து தன் கை நரம்புகளை வெட்டி விட்டு ரத்தம் சொட்ட சொட்ட தன் இருக்கையிலே மயங்கி கிடந்தார். Bipolar வியாதியால் வந்த தற்கொலை எண்ணம் தான் காரணம்.

பைபோலாரினால் பாதிக்கப்பட்ட பலர் இருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் இது போன்ற வியாதிகள் இருந்தால் மனோதத்துவ நிபுணர்களை பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகளில் மனோதத்துவ மருத்துவர்களை பார்ப்பது கௌரவ குறைவாக கருதப்படுவதால், பலர் தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் தங்களையும் வருத்தி மற்றவர்களையும் டார்ச்சர் செய்கிறார்கள்.

பைபோலாரினால் பாதிக்கப்பட்ட சிலர் தங்கள் அனுபவங்களையும் தீர்வுகளையும் வலைப்பதிவுகளில் எழுதுகிறார்கள். அமெரிக்க வாரப்பத்திரிகை (Businessweek) பாராட்டி எழுதிய சில வலைப்பதிவுகள்:

http://tenminutefreefall.blogspot.com/

Blogs.HealthCentral.com/depression/deborah-grays-blog

NickMack.net

Monday, March 19, 2007

உலக சந்தைகள்

கடந்த இரண்டு வாரங்களில் உலக சந்தைகள் அனைத்தும் சரியான அடிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து வருகிறது. இது ஒரு சாதாரண correction தான், நீண்ட கால நோக்கோடு சந்தையில் முதலீடு செய்திருந்தால் கலங்க வேண்டிய அவசியமில்லை.

குறுகிய கால நோக்கோடு day-trading செய்வது அதிக ரிஸ்க்கான சமாசாரம் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. என்னுடன் வேலை பார்த்த வங்கி நண்பர் ஒரே நாளில் 10,000 டாலரை AHS பங்கில் இழந்து விட்டார். Short-term option-ல் விளையாடினார், சந்தை அவருடன் விளையாடி விட்டது.

உலக சந்தைகள் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. சீனாவில் கரன்சி மதிப்பு உயர்ந்தால், உலகம் முழுதும் அது பிரதிபலிக்கிறது. இந்தியாவில் தேர்தல் முடிவுகள் மாறியமைந்தால் உலக சந்தைகள் ஆட்டம் காண்கின்றது. ஜப்பானில் வட்டி விகிதம் உயர்ந்தால், அமெரிக்கர்கள் பலருக்கு வயிற்றுப்போக்கு உண்டாகிறது.

கடந்த வார சந்தை சரிவுகளுக்கு இரண்டு முக்கியமான காரணங்கள்.

நான் பலமுறை எழுதியுள்ளபடி அமெரிக்க ரியல் எஸ்டேட் சரிந்து கொண்டே போகிறது. அதிக ரிஸ்க்கான வாடிக்கையாளர்களுக்கு கண்களை மூடிக்கொண்டு கடன் கொடுத்த வங்கிகளுக்கு பல பில்லியன் டாலர்கள் நஷ்டம். அந்த வங்கிகளின் பங்குகள் தானும் சரிந்து உலக சந்தைகளையும் கவிழ்த்து விட்டது.

இரண்டாவது காரணம் Carry-trade. இது ஒரு சுவாரசியமான விஷயம்.

ஜப்பானில் பல வருடங்களாக வட்டி விகிதம் பூஜ்யமாக இருந்தது! வெறும் பூஜ்யம் தான்! பிறகு அதை கொஞ்சமாக உயர்த்தினார்கள். தற்போதைய வட்டி வெறும் 0.5 சதவிகிதம் தான்!

ஜப்பானில் வட்டி இவ்வளவு குறைவாக இருக்கும்போது அங்கிருந்து கடன் வாங்கி அமெரிக்க வங்கிகளில் 6% வட்டிக்கு டெபாசிட் போட்டால் ஒரு வருடத்துக்கு 5.5 சதவிகிதம் லாபம் கிடைக்குமே? அவ்வளவு லாபமும் எந்த முதலீடும் இல்லாமல் கிடைக்கும் பணமல்லவா?!

இந்த கேள்விகள் பல பேர் கண்களில் டாலர்களை ஊஞ்சலாட வைத்தது. பல வங்கிகள் மற்றும் hedge-funds போன்ற நிதி நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக ஜப்பானில் கடன் வாங்கி அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகளில் அதை முதலீடு செய்து லாபம் பார்த்து வந்தன.

இப்படி செய்வது ரிஸ்க் இல்லாத விஷயம் அல்ல. ஒரு நாட்டிலிருந்து கடன் வாங்கி இன்னொரு நாட்டில் முதலீடு செய்யும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் – கரன்சிகளின் மதிப்பு.

ஜப்பானிய கரன்சியின் மதிப்பும் அமெரிக்க கரன்சியின் மதிப்பும் தினமும் மாறுகின்றது. சில நேரங்களில் ஜப்பானிய கரன்சியில் கடன் வாங்கி அமெரிக்க வங்கியின் டெபாசிட்டில் கிடைக்கும் லாபத்தை விட ஜப்பான் கரன்சியின் மதிப்பு மாறுவதால் ஏற்படும் நஷ்டம் அதிகமாக இருக்கும். சில வங்கிகள் currency-futures ஒப்பந்தங்கள் மூலமாக நஷ்டத்தை கட்டுப்படுத்துகிறார்கள். சிலர் அதீத தன்னம்பிக்கை காரணமாக முழு முதலீடையும் இழந்து விடுகிறார்கள்.

Carry-trade செய்த சில வங்கிகள் ஜப்பான் கரன்சியின் சமீபத்திய volatility-ஐ பார்த்து பயந்து போய் அவர்களிடமிருந்த அனைத்து பங்குகளையும் விற்று ஜப்பானியர்களிடம் வாங்கிய கடனை அடைத்ததால், பங்கு சந்தை கீழே விழுந்து விட்டது.

மேலே கண்ட இரண்டு காரணங்களும் இன்னும் சில மாதங்களுக்கு இருக்கத்தான் போகிறது. Subprime வீட்டுக்கடன் கொடுத்த சில வங்கிகளின் நிலைமை தான் வெளியே தெரிகிறது. இன்னும் சில வாரங்களில் மற்ற வங்கிகளின் நிலைமையும் சந்தையில் தெரியும்.

Carry-trade போன்ற சமாசாரங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், பல மில்லியன் டாலர்கள் தேவைப்படும். இருந்தாலும் நம்மை போன்ற சிறு முதலீட்டாளர்களுக்காக Deutsche வங்கி "PowerShares DB G10 Currency Harvest Fund" என்ற ETF-ஐ துவங்கியிருக்கிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ETF என்பதால் கவனமாக முதலீடு செய்யவும்.

Saturday, March 10, 2007

பறக்கும் அரண்மனை

ஒரு பக்கம் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் மக்கள். இன்னொரு பக்கம் தனது விமானத்தில் என்னென்ன வசதிகள் இருந்தால் கௌரவம் என்று பட்டியல் போடும் சிலர்…

அமெரிக்காவில் 10,000 தனியார் விமானங்கள் உள்ளன. இவை அனைத்தும் நல்ல வசதிகளுடனும் பாதுகாப்புடனும் செய்யப்பட்டவை. இந்த விமானங்களில் 10 – 20 பேர் பயணம் செய்யலாம். இந்த வசதிகள் போதாதென்று சிலர் பெரிய விமானங்களை ஆர்டர் செய்திருக்கிறார்கள்.

தனியாருக்கான பெரிய விமானங்களை செய்வதற்காக போயிங் நிறுவனம் இது வரை 11 ஆர்டர்களை எடுத்திருக்கிறது. ஒரு விமானத்தின் விலை உத்தேசமாக 660 கோடி ரூபாய்! விமானத்தின் உட்புறம் செய்யும் அலங்கார வேலைகளை (Interior decoration) சேர்த்தால் 700 கோடியை தாண்டும்.

660 கோடி விமானத்தின் சினிமா தியேட்டர்
1936 கோடி விமானத்தின் டைனிங் ஏரியா

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல சமீபத்தில் அரபு நாட்டிலிருந்து ஒருவர் ஏர்-பஸ் நிறுவனத்திற்கு 1936 கோடி ரூபாய்க்கு விமானம் செய்வதற்காக (Just ஒரு விமானம் தான்) ஆர்டர் கொடுத்திருக்கிறார். இந்த விமானத்திற்கு “Flying palace” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த விமானத்தில் இரண்டு டைனிங் ஏரியா, 600 சதுர அடி படுக்கையறை, அராபிய பாலைவனம் போன்ற lounge, ஹாட் டப் மற்றும் Missile defence systems இருக்கும்.

இந்த விமானத்தை ஆர்டர் செய்த புண்ணியவானின் பெயரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். ஒரு அரபு நாட்டின் அதிபதி என்று பேச்சு அடிபடுகிறது.

கொடுத்து வைச்ச மகராசா!

Sunday, March 04, 2007

ஒரு கம்பானியனின் கதை

இன்றைய தினமலரில் வந்துள்ள விளம்பரம் இது.

“ஏராளமான சொத்துக்களுக்கு ஒரே வாரிசான, எம்.எஸ்.சி. முடித்த, விவாகரத்தான பெண்ணுக்கு தன் தந்தையின் வியாபாரத்தை நிர்வாகம் செய்யக் கூடிய, சமையல் தெரிந்த, சொந்த பந்தங்கள் எதுவும் இல்லாத, வீட்டோடு இருக்க கூடிய ‘கம்பானியன்’ தேவை”

நாம் பத்திரிகைகளில் அடிக்கடி படிக்கும் “சமையல்கார கணவன்” பற்றிய ஜோக்குகளில் உண்மை இருக்கிறது போல!

இந்த பெண்ணுக்கு “மணமகன்” தேவையில்லை, “கம்பானியன்” தேவை. நம் நாடு மிக வேகமாக முன்னேறி வருகின்றது, எல்லா விதத்திலும்.

Saturday, February 24, 2007

பணக்காரர்கள் திமிர் பிடித்தவர்களா?

தமிழ் படங்களில் வழக்கமாக வரும் திரைக்கதை இது. பணக்காரர்கள் வில்லனாக வருவார்கள், ஹீரோ ஏழையாக இருந்து ஒரே பாட்டில் பணக்காரராக மாறி வில்லனின் கொட்டத்தை அடக்குவார்.

பணம் ஒரு மனிதனை கெட்டவனாகவும் திமிர் பிடித்தவனாகவும் மாற்றுகிறதா என்று அமெரிக்காவிலும் கனடாவிலும் ஆராய்ச்சிகள் செய்து Science பத்திரிகையில் சில வாரங்களுக்கு முன்னால் வெளியிட்டிருந்தார்கள். இந்த ஆராய்ச்சியில் பங்கு பெற்ற அனைவரும் கல்லூரி மாணவர்கள்.

இந்த மாணவர்கள் கையில் பணத்தை கொடுத்து அதன் தாக்கம் என்ன என்று ஆராய்ச்சி நடத்தப்படவில்லை. புதுமையான முறையில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது – பணத்தை பற்றி “நினைப்பது” மனிதனின் மனதை மாற்றுகின்றதா என்று!

மொத்தம் ஒன்பது சோதனைகள் பல கல்லூரிகளில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு சோதனையிலும் மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். பணம் சம்பந்தப்பட்ட பிரிவு (money prime), நார்மல் பிரிவு (control group) என்று பெயரிடப்பட்டன. பணம் சம்பந்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு பணத்தை பற்றிய hints அடிக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தார்கள் – உதாரணமாக பணத்தை பற்றி வகுப்புகளில் அதிகம் பேசுவது, பணத்தை மையமாக வைத்து புதிர் விளையாட்டுகள் விளையாடுவது போன்றவை. நார்மல் பிரிவு மாணவர்களுக்கு இது போல பணம் பற்றிய சிந்தனை தூண்டவில்லை.

சில வாரங்கள் கழித்து, இரு பிரிவினரையும் பல்வேறு சோதனைகள் செய்தார்கள்.

1. இரு பிரிவினருக்கும் ஒரு புதிர் கொடுக்கப்பட்டது. உதவி தேவைப்பட்டால் தாராளமாக கேட்கலாம் என்று சொல்லப்பட்டது. நார்மல் பிரிவு மாணவர்கள் உதவி கேட்க தயங்கவில்லை. பணம் சம்பந்தப்பட்ட பிரிவு மாணவர்கள் மற்றவர்களிடம் உதவி கேட்பதை தாழ்வாக கருதினார்கள்.

2. இரு பிரிவு மாணவர்களிடமும் பல்வேறு தருணங்களில் பல விதமான உதவிகள் (அஸைன்மென்ட்டுக்கான உதவி, கல்லூரிக்கு நன்கொடை போன்றவை) கேட்கப்பட்டன. இந்த ஆராய்ச்சியில் நேரடியாக பங்கு பெறாத மற்ற மாணவர்களின் மூலம் இந்த உதவிகள் கேட்கப்பட்டன. பணம் சம்பந்தப்பட்ட பிரிவு மாணவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய தயங்கினார்கள். நார்மல் பிரிவு மாணவர்களுக்கு அந்த தயக்கம் இல்லை.

3. பணம் சம்பந்தப்பட்ட பிரிவு மாணவர்கள் பிறருடன் சேர்ந்து சுற்றாமல் தனியாக இருப்பதிலே அதிக ஆர்வம் காட்டினார்கள்.

இந்த ஆராய்ச்சி பதிவை எழுதிய கேத்லீன் வோஸ் (UM கார்ல்சன் மேனேஜ்மென்ட் கல்லூரி) என்ற பேராசிரியரின் முடிவு: “பணம் ஒரு மனிதனை திமிர் பிடித்தவனாக மாற்றுவதில்லை, ஆனால் சமூக சிந்தனையை குறைத்து விடுகின்றது”.

பணத்தை பற்றியே அதிகம் சிந்திப்பவர்களுக்கு கிடைப்பது Social Cluelessness என்று கேத்லீன் சொல்கிறார்.

இந்த ஆராய்ச்சியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று கேத்லீன் எழுதியிருக்கிறார்.

» மேனேஜராக இருப்பவர்கள் தங்களிடம் வேலை பார்ப்பவர்களை உற்சாகப்படுத்த எப்போதும் பணத்தை மட்டும் உபயோகப்படுத்த கூடாது. உங்களிடன் வேலை செய்பவர்களின் கூட்டு முயற்சி (team work) உங்களுக்கு தேவைப்பட்டால் பணத்தை மோட்டிவேட்டராக பயன் படுத்தக்கூடாது. பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் team work இல்லாமல் போய்விடும்

» ஒரு சில வேலைகள் தனிப்பட்டவரின் திறமையால் மட்டுமே நடக்கும். உதாரணம்: டி.வி. நிருபர், ஒரு குறிப்பிட்ட பங்கை பற்றி மட்டும் ஆராய்ச்சி செய்பவர். இவர்களுக்கு பணத்தின் மூலம் ஊக்கத்தை கொடுக்கலாம்.

» பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அடிக்கடி பணத்தை பற்றி பேசுவது, ஆடம்பரமாக செலவு செய்வது போன்றவை அந்த குழந்தைகளின் சமூக சிந்தனையை குறைத்து விடும்.

Saturday, February 17, 2007

பணவீக்கம்

Inflation என்பதை தமிழில் பணவீக்கம் என்று சொல்கிறார்கள். விலைவீக்கம் என்பதே சரியான மொழிபெயர்ப்பு.

போன வருடம் ஒரு பொருள் 10 ரூபாய்க்கு விற்று, இன்று அதன் விலை 30 ரூபாயாக இருந்தால் Inflation எகிறி விட்டது என்று அர்த்தம். இது ஒரு simple definition. இதை முழுவதுமாக தமிழில் விளக்க சில பக்கங்கள் ஆகும்.

நம் நாட்டின் பணவீக்கம் போன வாரம் 6.58%க்கு எகிறி விட்டது. கடந்த இரு வருடங்களில் காணாத சதவிகிதம். இந்த வாரம் 6.7%க்கு போய் விட்டது. இந்திய பத்திரிகைகள் அனைத்தும் இப்போது இதை பெரிது செய்து எழுதுகின்றன. கடந்த பல வருடங்களாகவே நம் நாட்டில் பணவீக்கம் ஒரு பெரிய பிரச்னை.பணவீக்கம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே கவிழ்த்து விடும். பணவீக்கம் ஒரு அளவிற்கு மேல் போய் விட்டால் அதற்கு Hyperinflation என்று பெயர். அப்படிப்பட்ட சூழ்நிலையால் 1923ல் ஜெர்மன் நாட்டின் பொருளாதாரம் தலைகீழாக விழுந்தது.

ஜெர்மன் பெண்மணிகள் தங்கள் வீட்டின் அடுப்புகளில் விறகுகளை எரிப்பதற்கு பதிலாக ஜெர்மன் மார்க் நோட்டுகளை எரித்தார்கள். அவர்களின் சமையல் அப்படி தான் நடந்தது! விறகுகளின் விலை ஆகாயத்துக்கு போய் விட்டதால் விறகுகளை வாங்குவதை விட மார்க் நோட்டுகளை எரிப்பது சிக்கனமாக இருந்தது!

சென்னை, மும்பாய் போன்ற நகரங்களில் உள்ள பெரிய கடைகளில் உள்ளே போய் வெளியே வந்தால் சான் பிராசிஸ்கோவில் ஆகும் செலவாகின்றது. இன்னும் சில வருடங்களில் எப்படி இருக்குமோ, தெரியவில்லை.சென்னை நகரத்தின் வீட்டு வாடகை நிலைமையை கேட்டால் தலை சுற்றுகிறது. என் நண்பன் தன் மென்பொருள் நிறுவனத்துக்கு இடம் தேடிக் கொண்டிருக்கிறான். அடையாறில் 720 சதுர அடி இடத்துக்கு 40,000 ரூபாய் வாடகை கேட்டிருக்கிறார்கள். மனம் நொந்து போய் அவன் எழுதிய மின்னஞ்சலைப் பற்றி ஒரு தனி பதிவே போடலாம்.

நம் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நல்ல திறமைசாலி. ஆனால் Inflation விஷயத்தில் அவர் சரியான முடிவுகள் எடுக்கவில்லையோ என்று தோன்றுகிறது. போன வாரம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை கூட்டியது. இருந்தாலும் வீட்டு கடன்களுக்கு மட்டும் வட்டி விகிதத்தை அதிகரிக்க கூடாது என்று அனைத்து வங்கிகளுக்கும் ப. சிதம்பரம் உத்தரவிட்டார். That’s weird. அதை கண்டு கொள்ளாமல் பல வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி விட்டன. வட்டி விகிதத்தை உயர்த்துவது பணவீக்கத்தை கட்டுப்படுத்த சிறந்த வழி.

ப. சிதம்பரம் & கம்பெனி திறமையுடன் செயல்பட்டு பணவீக்கத்தை கட்டுப்படுத்தினால் தான் இந்திய பொருளாதாரம் இன்னும் சிறப்பாக இருக்கும். Super Power ஆக வேண்டும் என்ற நம் கனவும் மெய்ப்படும்.

Related Links:

http://www.usagold.com/GermanNightmare.html
http://www.uri.edu/artsci/newecn/Classes/Art/INT1/Mac/1930s/1930sAA.html

Sunday, February 11, 2007

காதலர் தினம்

Valentine’s day என்பதை நம் ஊரில் காதலர் தினம் என்று மொழி பெயர்த்து விட்டார்கள். ஆங்கிலத்தில் அதை lovers day என்றோ அல்லது அதன் பொருள்படும்படியாகவா அதை கொண்டாடுகிறார்கள்?!

இங்குள்ள ஆரம்ப பள்ளிகளில் இந்த தினத்தை நட்புக்கும் அன்புக்கும் உரிய தினமாக கொண்டாடுகிறார்கள். தமிழ் நாட்டில் FM ரேடியோ முதல் Sun Music வரை இப்போது முக்கியமான கேள்விகள் “உங்கள் காதலிக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்?”, “முத்தம் தான் சிறந்த பரிசா?”. நம் நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது!

நானும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவன் தான். ஆனாலும் இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள், அதுவும் நம் ஊரில், வித்தியாசமாக தெரிகிறது.

நம் நாட்டில் காதல் கல்யாணங்கள் அதிகம் நடந்தால், அதனால் ஜாதி பேதம் அழிய வாய்ப்பிருக்கிறது. இந்த வாரம் விகடனில் திரு.ஞாநி அவர்களும் இதே கருத்தை எழுதியிருந்தார். ராமதாஸ் போன்றவர்கள் காதலை எதிர்ப்பதற்கு தன் ஜாதி அரசியல் பாதிக்குமோ என்று அச்சப்படுவதாக எழுதியிருந்தார். காதலர்கள் மூலம் ஏதாவது நல்லது நடந்தால் சரிதான்!

ஆதலால் காதல் செய்யுங்கள்… முக்கியமாக கலப்பு திருமணம் செய்யுங்கள்!

Thursday, February 08, 2007

தாமிரபரணி சினிமா பாட்டு

என் சிறு வயதிலிருந்து பல நூறு தடவை கேட்ட பாடல் – “கற்பூர நாயகியே கனக வள்ளி…” அந்த பாட்டை உல்டா செய்து “கருப்பான கையாலே என்னை பிடிச்சான்” என்று ஒரு குத்துப்பாட்டு பாடியிருக்கிறார்கள்.

இந்த பாடலும் கேட்க நன்றாக தான் இருக்கிறது. இருந்தாலும் பிரபலமான பக்திப்பாடலை இப்படி கொலை செய்வது சரியா? பல வருடங்களுக்கு முன்னால் சூரியன் படத்தில் கந்த சஷ்டி கவசத்தை கடித்து குதறி ஒரு ரொமான்டிக் பாடலை தேவா இசையமைத்தார். இப்போது யுவன் சங்கர் ராஜா ஒரு காவியம் படைத்துள்ளார்.

இதே போல ரஹ்மான் செய்திருந்தால் அதற்கு மத சாயம் பூசி தமிழ் பெருங்குடி மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தியிருப்பார்கள்.

பின் குறிப்பு: தமிழ் நிதிக்கும் தாமிரபரணிக்கும் என்ன சம்பந்தம்? ஒரு சம்பந்தமுமில்லை! பணம் சம்பாதிப்பது பற்றி நான் எழுதும் பயனுள்ள பதிவுகளுக்கு வராத விசிட்ஸ் சினிமா பற்றிய பதிவுகளுக்கு வருகிறது, அதனால் தான். ;-)

Monday, February 05, 2007

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு

பாடகி அனுராதா இப்படி பாடினாலும் உண்மையிலேயே அவருக்கு கருப்பு கலர் பிடிக்குமா என்பது சந்தேகம் தான். தோலின் நிறத்தை பார்த்து ஒருவரின் அறிவையும் திறமையையும் எடை போட கூடாது என்று தெரிந்தாலும் நிறைய பேர் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

என் நண்பன் சென்னையில் Siemens நிறுவனத்தின் மேலாளராக இருந்தான். “சிவப்பு தோல் இருந்தால் போதும், இந்த கம்பெனியில் வேலைக்கு எடுத்து கொள்வார்கள்” என்று அவன் சொல்வான். நான் வேலை செய்த கம்பெனிகளிலும் இதை உணர்ந்ததுண்டு. ஆனாலும், நான் வேலை செய்த இடங்களில் சிவப்பு நிறத்தை மட்டும் காரணமாக வைத்து யாரையும் வேலைக்கு எடுத்ததில்லை. அவர்கள் அப்படி செய்திருந்தால், என்னைப் போன்ற ஆட்களுக்கு வேலையே கிடைத்திருக்காது.

நமக்கு உணர்வு பூர்வமாக தெரிவதை விஞ்ஞான ரீதியாக நிருபிப்பது அமெரிக்கர்களின் வேலை. Vanderbilt பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியர் Joni Hersch இதைப்பற்றிய ஆராய்ச்சி செய்திருக்கிறார். அவரின் கட்டுரையிலிருந்து சில குறிப்புகள்.

1. கருப்பு நிறத்தில் உள்ளவர்களை விட மாநிறத்தில் உள்ளவர்கள் 8 – 15% கூடுதல் சம்பளம் வாங்குகிறார்கள்.
2. மாநிறத்தில் உள்ளவர்களை விட வெள்ளை நிறத்தில் உள்ளவர்கள் 8 – 15% கூடுதல் சம்பளம் வாங்குகிறார்கள்.
3. ஒரு shade கலர் தூக்கலாக இருப்பது ஒரு வருடம் அதிகம் படித்ததற்கு சமம்.
4. உயரமானவர்கள் குள்ளமானவர்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். (Michael Fox போன்றவர்கள் மட்டும் விதிவிலக்கு!)

அமெரிக்காவில் கருப்பின மக்கள் அதிகம் முன்னேறாமல் இருப்பதற்கு அவர்கள் சொல்லும் முக்கிய காரணம் – “நாங்கள் கருப்பாக இருப்பதால் வெள்ளைக்காரர்கள் எங்களை முன்னேற விடாமல் தடுக்கிறார்கள்”. அதில் ஓரளவு உண்மையிருந்தாலும், அது மட்டும் காரணமல்ல. கருப்பின மக்களில் பெரும்பாலானோர் முழு சோம்பேறிகள். அந்த சோம்பேறித்தனம் தான் அவர்களை முன்னேற விடாமல் தடுக்கிறது.

அமெரிக்க கருப்பின மக்கள் தங்கள் இனத்தவரிடமே நிற பாகுபாடு பார்ப்பதாக போன வருடம் நடத்தப்பட்ட சர்வே கூறுகிறது! அதிகமாக கருப்பாக உள்ளவர்களிடமிருந்து கொஞ்சம் மாநிறமாக உள்ள கருப்பினத்தவர்கள் ஒதுங்கியே இருப்பதாக அந்த ஆராய்ச்சி கூறுகிறது.

Friday, January 26, 2007

கலக்கப் போவது யாரு?

சன் டி.வி.யை விட விஜய் டிவியில் புதுவிதமான முயற்சிகள் எடுக்கிறார்கள். பெரும்பாலான முயற்சிகள் புத்திசாலித்தனமாக உள்ளன. நம்மை மனம் விட்டு சிரிக்க வைக்கும் நிகழ்ச்சி - “கலக்கப் போவது யாரு?”.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட ஜோக்…

ஜப்பான் நாட்டின் அரசியல்வாதி லல்லு பிரசாத் யாதவை சந்திக்கிறார்.

ஜப்பானியர்: பீகாரை ஜப்பானிடம் ஒப்படையுங்கள். ஆறே மாதத்தில் பீகாரை ஜப்பானாக மாற்றிக் காட்டுகிறோம்.

லல்லு: என்னிடம் ஜப்பானை ஒப்படையுங்கள். இரண்டே மாதத்தில் அதை பீகாராக மாற்றிக் காட்டுகிறேன்.

Tuesday, January 23, 2007

இந்தியாவை நோக்கி...

இந்தியாவை நோக்கி மேலும் பல கோடி டாலர்கள் வரப்போகிறது. சிட்டி பேங்கின் முன்னாள் உயர் அதிகாரிகள் இருவர் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் முதலீடு செய்ய புதிதாக ஒரு Private Equity fund ஆரம்பித்திருக்கிறார்கள்.

ராபர்ட் விள்ளம்ஸ்டாட் சிட்டி பேங்கின் முன்னாள் பிரசிடென்ட். மார்ஜோரி மாக்னர் என்பவர் head of Global consumer operations என்ற பதவியில் இருந்தார். இவர்கள் இருவரும் சிட்டி பேங்கில் சரியான அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் ராஜினாமா செய்து விட்டார்கள்.

President, Global head… இதற்கு மேல் என்ன அங்கீகாரம் வேண்டும்?! ஒரு நிறுவனத்தில் வேலை சேரும் போது பக்கத்து கியூபில் உள்ளவர்களை விட நாம் ஒரு படி மேலே உயர்ந்தால் அது கௌரவம். ஆனால் Global head என்ற நிலைக்கு வரும் போது அடுத்த குறி CFO, COO போன்றது தான். அது கிடைக்காத போது மனது வேதனைப்படுகின்றது. அதுவும் தன்னை விட வயதும் அனுபவமும் குறைந்த ஒருவருக்கு தான் விரும்பிய பதவி கிடைக்கும் போது மேலும் மன உளைச்சல்.

இவர்கள் இருவரும் சிட்டி பேங்கை விட்டு வெளியே வந்ததற்கு முக்கிய காரணம் – சாலி கிராசெக். 42 வயதான சாலி ஜெட் வேகத்தில் சிட்டி பேங்கின் படிகளில் ஏறினார், இவர் CFO பதவிக்கு உயர்த்தப்பட்டதும் ராபர்ட்டும் (வயது 61), மார்ஜோரியும் (வயது 57) சிட்டி பேங்கிலிருந்து வெளியேறி விட்டனர். இரண்டு நாட்களுக்கு முன்னால் சாலியும் வேறு பதவிக்கு மாற்றப்பட்டு விட்டார்.

Back to the point: ராபர்ட், மார்ஜோரி இருவரும் சேர்ந்து Brysam global partners என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர். தங்களது செல்வாக்கினால் ஒரு பில்லியன் டாலர்கள் (4500 கோடி ரூபாய்) முதலீடு வாங்கியிருக்கிறார்கள். சிட்டி பேங்கின் முக்கிய எதிரி ஜே.பி.மார்கன் அதிகமான முதலீடு செய்துள்ளது.

இந்த நிறுவனம் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனாவில் வங்கிகளிலும் நிதி சம்பந்தப்பட்ட துறைகளிலும் முதலீடு செய்யப் போகின்றது. இந்தியாவில் உள்ள சிறு வங்கிகள் இதன் மூலம் பயன் பெறும்.

Saturday, January 20, 2007

கேளுங்கள்… கொடுக்கப்படும்

நீங்கள் எப்போதாவது பேரம் பேசி பொருள்களின் விலையை குறைத்திருக்கிறீர்களா? அது ஒரு தனி திறமை, சிலருக்கு அது கை வந்த கலை. முன்பெல்லாம் அடிக்கடி பேரம் பேசுவோம். இப்போது நிலைமை மாறிவிட்டது.

எல்லா நாடுகளிலும் சூப்பர் மார்க்கெட்டுகள் பல வந்து விட்டதால், அவர்கள் கேட்கும் பணத்துக்கு கிரடிட் கார்டில் சார்ஜ் செய்து விடுவதால் முன்பை போல பேரம் பேசுவதற்கு அவ்வளவு வழியில்லை. இருந்தாலும், பேரம் பேசி விலைகளை குறைப்பதற்கு சில வழிகள் உள்ளன.

விடுமுறைக்காக ஹோட்டல்களில் தங்கும் போது 10%லிருந்து 25% வரை தள்ளுபடி செய்வதற்கு பெரும்பாலான ஹோட்டல்களின் கிளர்க்குகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் மேனேஜரை பார்த்து பேச வேண்டும் என்ற அவசியமில்லை. விளம்பரம் செய்யப்பட்ட கட்டணத்திலிருந்து குறைந்தது 10% தள்ளுபடி வேண்டும் என்று கேட்டுப்பாருங்கள், கொடுக்கப்படும்.

Caveat: இது இந்தியாவில் சாத்தியமா என்று தெரியவில்லை. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது சாத்தியம்.

சூப்பர் மார்க்கெட்டுகளில் ஷாப்பிங் செய்யும்போது “என்னிடம் AAA கார்டு இருக்கிறது, அதற்கு 10% தள்ளுபடி கிடைக்கும் என்று கேள்விப்பட்டேன்” என்று எடுத்து விடுங்கள். AAA போன்ற கார்டுகளை அவர்கள் எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலும், அப்படியே பேச்சுவாக்கில் குறைந்தது 10% தள்ளுபடி கேளுங்கள். இப்படி பேசினால் விலையை குறைக்கலாம் என்று அனுபவஸ்தர்கள் கூறுகிறார்கள்.

Healthfood கடைகளில் கிரடிட் கார்டு கொடுக்காமல் பணமாக கொடுத்தால் 5% தள்ளுபடி கொடுக்கிறார்கள்.

உங்கள் போன் கம்பெனி மற்றும் கேபிள் கம்பெனிகளின் பில் கட்டணத்தை குறைப்பதற்கு ஒரு வழி: அவர்களை கூப்பிட்டு வேறு கம்பெனிக்கு மாறுவது பற்றி யோசித்து கொண்டிருப்பதாக கூறுங்கள், பெரும்பாலான நேரங்களில் retention-desk அலுவலர் உங்களிடம் பேசி புதிதாக சில தள்ளுபடிகள் கொடுக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. Don’t overdo it! “வேறு கம்பெனிக்கு மாறுவதாக இருந்தால் பரவாயில்லை, எப்போது போன் கனெக்ஷனை துண்டிக்க வேண்டும்?” என்று கேட்டு விடுவார்கள்.

இந்த உத்தி இந்தியாவில் உதவாது. BSNL ஆட்களை கூப்பிட்டு Airtelக்கு மாறப்போவதாக சொன்னால், கொஞ்சம் கூட அசர மாட்டார்கள்!

எந்த ஹோட்டலுக்கு போனாலும், சூப்பர் மார்க்கெட்டுக்கு போனாலும் “இப்போது நிச்சயமாக ஏதாவது promotional offer உங்களிடம் இருக்குமே?" என்று விசாரியுங்கள். பெரும்பாலான நேரங்களில் நிச்சயமாக விலை தள்ளுபடி கிடைக்கும் என்று டோபிள் என்ற நிபுணர் கூறுகிறார். இவர் “Savvy Discounts” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் முழுதும் பேரம் பேசும் உத்திகள் பற்றி தான்!

Monday, January 08, 2007

ரியல் எஸ்டேட் ஏஜன்டுகள்

வீடுகளை வாங்க விற்க உதவும் ஏஜன்டாக வேலை செய்வது பற்றி சிலர், குறிப்பாக திருமணமான இந்திய பெண்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதுவும் சான் பிரான்சிஸ்கோ ஏரியாவில் இது கொஞ்சம் பிரபலமாக இருக்கிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு சில மணி நேரம் மட்டும் வேலை செய்து பல ஆயிரம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. நம் ஊர் (பழைய) நடிகை ஒருவர் இதை தான் இங்கு பல வருடமாக செய்து வருகிறார். Hint: “தென்றல் வந்து என்னை தொடும்” – இளையராஜாவின் அற்புதமான பாடல் ஞாபகத்தில் உள்ளதா?

வீட்டு பெண்மணிகளை தவிர சில ஆண்களுக்கும் ஏஜன்டாக சம்பாதிக்கும் கனவு இருக்கிறது. என் நண்பரின் நண்பர் IT நிறுவனத்தின் மேனேஜராக உள்ளார். சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டும் ஏஜன்டாக வேலை செய்வதற்காக படித்து வருகிறார். கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு exam எழுதி பாஸ் செய்தால் தான் ஏஜன்டாக வேலை செய்ய முடியும்.

வீடு வாங்க விற்க உதவும் ஏஜன்டுகள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? அவர்களது சராசரி வருட சம்பளம் $37,600. சிலர் $70,000 வரை சம்பாதிக்கிறார்கள். இந்த சம்பாத்தியம் முழுதும் உண்மையிலேயே வியர்வை சிந்தி சம்பாதிப்பது தான். வீட்டு பொறுப்புகளையும் கவனித்துக் கொண்டு, ஏஜன்டாகவும் இருப்பது ரொம்ப சிரமம்.

உங்களுக்கு தெரிந்தவர்கள்/நண்பர்கள் உங்கள் ஊரில் நிறைய பேர் இருந்தால், இதை செய்யலாம். ஏஜன்டுகளுக்கு முக்கிய தேவை – Networking. கூச்ச சுபாவம் உள்ளவர்கள் வேறு ஏதாவது பகுதிநேர வேலை பார்ப்பது தான் நல்லது.

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு சீன ஏஜன்ட் ஒரு மாதத்துக்கு பல கோடி சம்பாதிக்கிறார். அவர் மகன் ஒரு டாக்டர், தன் டாக்டர் தொழிலை விட்டு விட்டு தன் அப்பாவின் நிறுவனத்தில் வேலை செய்கிறார்! இது போன்ற சிலரும் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் பல வருடங்களாக கஷ்டப்பட்டு முன்னேறியிருக்கிறார்கள்.

Wednesday, January 03, 2007

அதிக வெப்பம் காத்திருக்கிறது!

இது வரை கண்டிராத அதிக வெப்பம் நமக்காக இந்த வருடம் காத்திருக்கிறது என்று லண்டன் வானிலை ஆராய்ச்சிக்கூடம் எச்சரித்திருக்கிறது. உலக சராசரி வெப்ப நிலை 14 டிகிரி செல்சியஸிலிருந்து 14.54 டிகிரியாக மாறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

வெறும் 0.54 டிகிரி தானே என்று அலட்சியப்படுத்தாதீர்கள். இதே நிலைமை நீடித்தால் இந்த நூற்றாண்டில் சராசரி வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் கூடும். இப்படியே தொடர்ந்தால் கடல் மட்டம் உயரும், துருவ பனி மலைகள் உருகும். அவை உலகின் பல பாகங்களில் வெள்ளங்களையும், புயல்களையும் உருவாக்கி உயிர்சேதம் ஏற்படுத்தும்.

உலக வெப்பம் கூடுதல் (Global warming) என்பது பற்றி பல வருடங்களாக வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள். அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் வானத்தில் தள்ளி விடும் நச்சு வாயுக்கள் தான் இந்த வெப்ப நிலைக்கு முக்கிய காரணம். அந்த நாடுகள் வரிசையில் இந்தியாவும் இப்போது சேர்ந்து விட்டது.

வெப்பம் கூடுதலை தடுப்பதற்கு அவசரமாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று பல நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் G8 மாநாட்டில் ஒரு நல்ல முடிவெடுக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. பல வருடங்களுக்கு முன்னால் Kyoto Protocol என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு அதை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் அலட்சியப்படுத்தி விட்டன. G8 மாநாட்டில் தயாரிக்கப்படும் திட்டங்கள் எப்படி அமுல்படுத்தப்படுகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சென்னை, திருச்சி, ஹைதராபாத் போன்ற நகரங்களில் ஏற்கனவே வெயில் தொல்லை தாங்கவில்லை. சென்னையில் ஹெல்மெட் போட்டு 15 நிமிடம் பைக் ஓட்டினாலே தலை தொப்பலாகி விடுகிறது. உலக வெப்பநிலை இன்னும் கூடினால் குளிர்சாதனத்துடன் கூடிய ஹெல்மெட்டை தான் போட்டுக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஹெல்மெட் எனக்கு தெரிந்த வரை இல்லை, யாராவது கண்டுபிடியுங்களேன்… உலக வெப்பம் கூட கூட உங்கள் பேங்க் பேலன்ஸும் கூடும்!

Related Posts Plugin for WordPress, Blogger...