Friday, September 29, 2006

60 நாட்களில் 25% லாபம்!

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். 60 நாட்களில் 25% லாபம் கிடைக்குமா? முடியும், ஆனால் மிக கடினம். 60 நாட்களில் 25% லாபம் கிடைத்தால் ஒரு வருடத்தில் 150% லாபம் கிடைக்கும். நீங்கள் 10,000 ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் 25,000 ரூபாய் திரும்ப கிடைக்கும்! இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் படித்தவர்கள் கூட பணத்தை இழந்து தவிக்கிறார்கள்.

ஜார்ஜியா மாநிலத்தில் அட்லாண்டா நகரில் பின்னாக்கிள் டெவலப்மென்ட் என்ற நிறுவனம் உள்ளது. கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகள் பலவற்றிலும் “அறுபதே நாட்களில் 25% லாபம்” என்று இவர்கள் விளம்பரம் கொடுத்தார்கள். “Foreclosure செய்யப்பட்ட வீடுகளை வாங்கி அதை புதுப்பித்து சில நாட்களில் விற்று வருகின்றோம். இவற்றில் சூப்பர் லாபம் உள்ளது. உங்கள் பணத்தை எங்களிடம் முதலீடு செய்தால் அறுபதே நாட்களில் 25% லாபம் கிடைக்கும்” என்பது அவர்கள் விளம்பரத்தின் சாராம்சம். ரியல் எஸ்டேட்டில் பணத்தை அள்ள வேண்டும் என்ற ஆசையில் உள்ளவர்கள் தங்கள் பணத்தை கோடிக்கணக்கில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள்.

அவ்வளவு பணமும் கோவிந்தா… பின்னாக்கிள் நிறுவனம் சில வீடுகளை வாங்கி அதை தனக்கே விற்று விட்டு லாபம் வந்ததாக பாவ்லா காட்டி வந்திருக்கின்றது. உதாரணமாக அட்லாண்டாவில் ஒரு அபார்ட்மென்ட்டை டிசம்பர் 2005-ல் $300,000க்கு வாங்கியது. மூன்று மாதங்கள் கழித்து $389,000க்கு அந்த வீட்டை விற்றது. வாங்கியவர் பின்னாக்கிள் நிறுவனத்தை சேர்ந்தவர். இது போன்று நிறைய வீடுகளை வாங்கி அதிக விலைக்கு விற்றதாக கணக்கு காட்டி வந்திருக்கின்றார்கள். சில வீடுகளை $450,000க்கு வாங்கி பல மில்லியன்களுக்கு விற்றதாகவும் கணக்கு காட்டியிருக்கிறார்கள்.

இந்த fraud scheme-ல் ஆரம்பித்தில் முதலீடு செய்தவர்களுக்கு 25% லாபம் கொடுத்திருக்கிறார்கள். இவர்களுக்கு பின் சேர்ந்தவர்கள் கொடுத்த பணத்தை எடுத்து முதலில் சேர்ந்தவர்களுக்கு லாபமாக கணக்கு காட்டி கொடுத்திருக்கிறார்கள். இது சட்ட விரோதமானது. இப்படி செய்வதற்கு Ponzi Scheme என்று பெயர். பெரும்பாலான நாடுகளில் Ponzi கிரிமினல் குற்றம்.

பின்னாக்கிள் நிறுவனத்தை FBI மற்றும் பல மாநில சட்ட துறைகள் விசாரணை செய்து வருகின்றன. இந்த நிறுவனத்தின் முதலாளிகளுக்கு தண்டனை கிடைக்கும், ஆனால் முதலீட்டாளர்களின் பணம் திரும்ப கிடைக்குமா? சந்தேகம் தான்.

2 comments:

dondu(#4800161) said...

மல்டி லெவல் மார்க்கெட்டிங் கூட இது போலத்தான் செயல்பட்டு வருகிறது. முதலில் வந்தவர்களுக்கு கிடைத்த லாபத்தைப் பார்த்து பின்னால் பலர் வந்து விழ எல்லோருக்கும் கோவிந்தா.

மோதி மல்டிலெவல் மார்க்கெட்டிங் கூட்டம் ஒன்று சமீபத்தில் 2003-ல் நடந்தது. அமெரிக்காவிலிருந்து ஒருவர் வந்து அமெரிக்க ஆங்கிலத்தில் பேசி அசத்தினார். அதனால் யாருக்கு என்ன லாபம் கிடைத்ததோ இல்லையோ, ஒருவன் மட்டும் அப்போது 6 மணி நேரம் வேலை செய்து 3600 ரூபாய் பெற்று சென்றான். அவன்தான் மொழிபெயர்ப்பாளன் டோண்டு ராகவன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Bharathi said...

நன்றி. ஆம்வே போன்ற MLM-களிலும் நிறைய பேர் ஏமாந்து போகிறார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...