Friday, September 29, 2006

60 நாட்களில் 25% லாபம்!

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். 60 நாட்களில் 25% லாபம் கிடைக்குமா? முடியும், ஆனால் மிக கடினம். 60 நாட்களில் 25% லாபம் கிடைத்தால் ஒரு வருடத்தில் 150% லாபம் கிடைக்கும். நீங்கள் 10,000 ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் 25,000 ரூபாய் திரும்ப கிடைக்கும்! இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் படித்தவர்கள் கூட பணத்தை இழந்து தவிக்கிறார்கள்.

ஜார்ஜியா மாநிலத்தில் அட்லாண்டா நகரில் பின்னாக்கிள் டெவலப்மென்ட் என்ற நிறுவனம் உள்ளது. கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகள் பலவற்றிலும் “அறுபதே நாட்களில் 25% லாபம்” என்று இவர்கள் விளம்பரம் கொடுத்தார்கள். “Foreclosure செய்யப்பட்ட வீடுகளை வாங்கி அதை புதுப்பித்து சில நாட்களில் விற்று வருகின்றோம். இவற்றில் சூப்பர் லாபம் உள்ளது. உங்கள் பணத்தை எங்களிடம் முதலீடு செய்தால் அறுபதே நாட்களில் 25% லாபம் கிடைக்கும்” என்பது அவர்கள் விளம்பரத்தின் சாராம்சம். ரியல் எஸ்டேட்டில் பணத்தை அள்ள வேண்டும் என்ற ஆசையில் உள்ளவர்கள் தங்கள் பணத்தை கோடிக்கணக்கில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள்.

அவ்வளவு பணமும் கோவிந்தா… பின்னாக்கிள் நிறுவனம் சில வீடுகளை வாங்கி அதை தனக்கே விற்று விட்டு லாபம் வந்ததாக பாவ்லா காட்டி வந்திருக்கின்றது. உதாரணமாக அட்லாண்டாவில் ஒரு அபார்ட்மென்ட்டை டிசம்பர் 2005-ல் $300,000க்கு வாங்கியது. மூன்று மாதங்கள் கழித்து $389,000க்கு அந்த வீட்டை விற்றது. வாங்கியவர் பின்னாக்கிள் நிறுவனத்தை சேர்ந்தவர். இது போன்று நிறைய வீடுகளை வாங்கி அதிக விலைக்கு விற்றதாக கணக்கு காட்டி வந்திருக்கின்றார்கள். சில வீடுகளை $450,000க்கு வாங்கி பல மில்லியன்களுக்கு விற்றதாகவும் கணக்கு காட்டியிருக்கிறார்கள்.

இந்த fraud scheme-ல் ஆரம்பித்தில் முதலீடு செய்தவர்களுக்கு 25% லாபம் கொடுத்திருக்கிறார்கள். இவர்களுக்கு பின் சேர்ந்தவர்கள் கொடுத்த பணத்தை எடுத்து முதலில் சேர்ந்தவர்களுக்கு லாபமாக கணக்கு காட்டி கொடுத்திருக்கிறார்கள். இது சட்ட விரோதமானது. இப்படி செய்வதற்கு Ponzi Scheme என்று பெயர். பெரும்பாலான நாடுகளில் Ponzi கிரிமினல் குற்றம்.

பின்னாக்கிள் நிறுவனத்தை FBI மற்றும் பல மாநில சட்ட துறைகள் விசாரணை செய்து வருகின்றன. இந்த நிறுவனத்தின் முதலாளிகளுக்கு தண்டனை கிடைக்கும், ஆனால் முதலீட்டாளர்களின் பணம் திரும்ப கிடைக்குமா? சந்தேகம் தான்.

Wednesday, September 20, 2006

ஆப்ஷனால் அழிந்தது ஐந்து பில்லியன் டாலர்கள்

ஆப்ஷனில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தெரிந்தாலும் தன் மேல் உள்ள அதீத நம்பிக்கையால் பணத்தை இழப்பவர்கள் நிறைய பேர். சமீபத்திய உதாரணம் பிரையன் ஹன்டர். இவர் அமெரிக்காவில் இருக்கும் அமராந்த் என்ற நிறுவனத்தின் Energy trading desk-ன் தலைவர். 32 வயது தான் ஆகிறது. போன வாரத்தில் மட்டும் 5 பில்லியன் டாலர் இழந்திருக்கிறார். கிட்டத்தட்ட 22500 கோடி!

இயற்கை எரிவாயு (Natural Gas) விலை எங்கே போகும் என்று அனுமானித்து பல கோடி பந்தயம் கட்டுவது தான் பிரையனின் வேலை. இயற்கை வாயுவின் விலை மேலே எகிறும் என்று பல பில்லியன்களை வைத்து விளையாடியிருக்கிறார். போன வாரம் விலை சறுக்கி விட்டதால் 5 பில்லியன் டாலர் நஷ்டம்.

இவ்வளவு நஷ்டமும் அமராந்த் நிறுவனத்துக்கு தான். இந்த நிறுவனம் பிரையனை இன்னும் வேலையிலிருந்து தூக்கவில்லை. அவர் எப்படி இவ்வளவு பணம் இழந்தார் என்ற விசாரணை முடிந்த பிறகு அவர் கதி என்ன என்று தெரியும். எது நடந்தாலும் பிரையனுக்கு அதிக கவலையிருக்காது, ஏனென்றால் அவரின் போன வருட சம்பளம் மட்டுமே 75 மில்லியன் டாலர்கள்!

Friday, September 15, 2006

அமெரிக்க ரியல் எஸ்டேட்

அமெரிக்க ரியல் எஸ்டேட் நீர்க்குமிழி உடைந்து விட்டது. இது உடையும் நேரம் வந்து விட்டது என்று 11 மாதங்களுக்கு முன்னால் எழுதியிருந்தேன். அமெரிக்கா முழுதும் Foreclosures (இந்த வார்த்தைக்கு தமிழ் வார்த்தை கண்டு பிடிக்க முடியவில்லை, வீட்டுக்கு கொடுக்கப்படும் மஞ்சள் கடிதாசி என்று சொல்லலாம் – ஆனால் அது கொச்சையாக உள்ளது) அதிகமாகி உள்ளது.

கலிபோர்னியா, இர்வின் நகரில் உள்ள RealtyTrac என்ற நிறுவனத்தின் புள்ளிவிபரப்படி 115,292 வீட்டு சொந்தக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் Foreclosures செய்திருக்கிறார்கள். ஜூலை மாதத்தில் செய்யப்பட்ட Foreclosures-ஐ விட இது 24% அதிகம். ஆகஸ்ட் 2005 ல் செய்யப்பட்ட Foreclosures-ஐ விட இது 53% அதிகம்.

உங்களிடம் முதலீடு செய்ய பணமிருந்தால் Foreclosure ஆகியிருக்கும் அல்லது Foreclosure-ல் நுழையும் வீட்டை வாங்கி அதை புதுப்பித்து விற்றால் நல்ல காசு பார்க்கலாம். Foreclosure ஆகும் வீடுகளின் விலை குறைவாக இருக்கும். உதாரணமாக சான் பிரான்ஸிஸ்கோவில் 1000 சதுர அடி வீடு $700,000 விலைக்கு விற்கிறது. அதே ஏரியாவில் Foreclosure-ல் இருக்கும் 1000 சதுர அடி வீட்டை $450,000 - $500,000 விலைக்கு வாங்கலாம்.

Foreclosure பற்றி இது வரை நீங்கள் கேள்விப்படாமலிருந்தால் இந்த முதலீட்டில் விளையாடாமல் இருப்பது நல்லது. இதை பற்றி உங்களுக்கு விபரம் தெரிந்திருந்து உங்கள் லோக்கல் மார்க்கெட் பற்றியும் அறிந்திருந்தால் தைரியமாக இறங்கலாம். Foreclosure.com போன்ற தளங்கள் உங்கள் ஊரில் உள்ள Foreclosures பற்றி மேலும் விபரங்கள் தரும்.

Foreclosures-ல் லாபமிருப்பதால் இது பற்றி training கொடுப்பதாக கூறி நிறைய பேர் காசு பறிக்கிறார்கள். அவர்களிடம் மாட்டி விடாதீர்கள். வீடுகளை கவனமாக பார்த்து வாங்குங்கள். வாங்கிய சில வாரங்களில் விற்று விட்டால் நல்லது. உங்களுக்கு சொந்தமாக வீடு தேவைப்பட்டால் Foreclosure ஆன வீட்டை வாங்கி புதுப்பித்து கொண்டால் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

Microsoft, Google போன்ற அதிக பளு உள்ள நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் இந்த விளையாட்டில் இறங்க வேண்டாம். உங்களுக்கு நேரமே இருக்காது. Foreclosure பற்றி training கொடுக்கும் அத்தனை பேரும் சொல்வது “நீங்கள் வாரத்துக்கு 4 மணி நேரம் இதில் வேலை செய்தால் போதும், பணம் மழையாக கொட்டும்” என்பது தான். உலக மகா பொய் அது. வாரத்துக்கு குறைந்தது 16 மணி நேரம் இதில் உழைக்க வேண்டும்.

அதெல்லாம் சரி, சொந்தமாக இப்போது வீடு வாங்கலாமா, இல்லையா? அமெரிக்க வட்டி விகிதம் இனி மேலும் கூடுவதற்கு வாய்ப்புகள் குறைவு. நீங்கள் வாங்க போகும் வீட்டில் குறைந்த பட்சம் மூன்று வருடங்கள் இருப்பதாக இருந்தால் வாங்கலாம். இல்லாவிடில் வாடகைக்கு இருப்பது தான் நல்லது.

Monday, September 04, 2006

பணத்தை சேமிக்க பல வழிகள்

இதில் உள்ள பெரும்பாலான கருத்துக்கள் உலகம் முழுதும் பொருந்தும். அமெரிக்காவிற்கு மட்டும் பொருந்த கூடிய கருத்துகளில் (US) என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

1. தேவையில்லாத கட்டணங்களை தவிர்த்து விடுங்கள். உதாரணமாக உங்கள் ATM network-க்கு வெளியே உள்ள ATM-லிருந்து பணம் எடுக்காதீர்கள். உங்கள் வங்கி மாதாந்திர கட்டணம் வசூலித்தால் அது போன்ற கட்டணம் இல்லாத கணக்குக்கு மாறுங்கள் அல்லது வங்கியை மாற்றுங்கள்.

2. உங்கள் வங்கியில் automatic bill pay வசதி இருந்தால் பயன்படுத்தி கொள்ளுங்கள். பெரும்பாலான வங்கிகளில் இந்த வ்சதி இலவசம். கிரடிட் கார்டு late fee-ஐ தவிர்க்கலாம்.

3. உங்கள் வீட்டுக்கு loan வாங்கியிருந்தால் refinance செய்வதன் மூலம் வட்டி விகிதத்தை குறைக்க முடியுமா என்று பாருங்கள்.

4. உங்களுக்கு கல்லூரி லோன் பல வங்கிகளில் இருந்தால் அத்தனை லோன்களையும் ஒரே லோனாக ஒரு வங்கியில் வாங்குவதன் மூலம் பணம் மிச்சமாகும்.

5. கிரடிட் கார்டு பில், வங்கி ஸ்டேட்மென்ட் போன்றவற்றை அப்படியே குப்பையில் போடாதீர்கள். Shredder-ல் போட்டால் identity theft-ஐ தவிர்க்கலாம். உங்களிடம் shredder இல்லையென்றால், முக்கியமான பேப்பர்களை எட்டு பங்காக கிழித்து அவற்றை வெவ்வேறு குப்பை கூடைகளில் போடுங்கள். (இந்த தொல்லைக்கு பேசாமல் shredder-ஐ வாங்கி விடலாம்)

6. உங்களுக்கு தேவையில்லாமல் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் பழைய சாமான்களை விற்று விடுங்கள். Garage sale போடலாம் அல்லது Classifieds இணைய தளங்களில் விற்கலாம்.

7. உபயோகம் செய்யாத நேரங்களில் லைட் பல்புகளை off செய்யுங்கள்.

8. உங்கள் TV Cable-க்கு எவ்வளவு செலவாகிறது என்று கணக்கு பாருங்கள். 100 சேனல்களை வைத்துக் கொண்டு வெறும் CNBC மட்டும் பார்த்து கொண்டிருந்தால் உங்கள் cable plan-ஐ மாற்றி பணத்தை மிச்சப்படுத்துங்கள்.

9. செல் போனில் குறைவாக பேசுங்கள். குறிப்பாக SMS அனுப்பும் முன் எவ்வளவு கட்டணம் என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்தியாவில் சில டிவி சேனல்களுக்கு அனுப்பும் SMS-களின் கட்டணம் அதிகம்.

10. மருந்துகளை மாதக்கணக்கிற்கு வாங்குவதாக இருந்தால் mail-order prescription program மூலம் வாங்குங்கள். (US)

11. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் முன் Comparison shopping sites-களில் ஆராய்ச்சி செய்து எந்த கம்பெனியில் குறைவான விலை என்று பார்த்து வாங்குங்கள். இது போன்ற தளங்களில் வாடிக்கையாளர்களின் feedback-ம் இருப்பதால் நிறுவனங்களின் சேவை தரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

12. Best Buy, Tiger direct போன்ற கடைகளின் online coupons-ன் மூலமாக குறைந்தது 5% மிச்சப்படுத்தலாம். இந்த தளங்களிலேயே கூப்பன் உள்ளது. இல்லாவிடில் கூகிளில் தேடிப்பாருங்கள். (US)

13. கிரடிட் கார்டை தேர்ந்தெடுக்கும் போது rewards உள்ள கார்டுகளை வைத்துக் கொள்வது நல்லது. பல வருடங்களாக Yahoo Visa கார்டை வைத்திருக்கிறேன். ஒவ்வொரு டாலருக்கும் ஒரு பாய்ன்ட் தருகிறார்கள். 10,000 பாய்ன்ட்கள் சேர்ந்தால் 100 டாலருக்கான கூப்பன் இலவசம். கடந்த சில வருடங்களில் நான் வாங்கிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சில இந்த கிரடிட் கார்டு மூலம் இலவசமாக கிடைத்தவை.

14. விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முன் Consumer Reports போன்ற பத்திரிகைகளை படித்து தரமுள்ள பொருட்களை வாங்குங்கள். (US)

15. பசியுடன் இருக்கும் போது shopping செய்யாதீர்கள். கண்ணில் படும் அத்தனை சாப்பாட்டு பொருட்களை வாங்க தோன்றும்.

16. இந்த கருத்தை சம்பந்தப் பட்டவர்கள் அலட்சியப் படுத்த போகீறார்கள். இருந்தாலும் சொல்கிறேன்: சிகரெட், ஆல்கஹால் போன்றவற்றை நிறுத்தினாலே வருடத்திற்கு பல்லாயிரம் ரூபாய்களை மிச்சப்படுத்தலாம்.

17. There is no free lunch. இருந்தாலும் free lunchக்கு ஒரு வழி உள்ளது. US-ல் 0% வட்டி கிரடிட் கார்டுகள் சில உள்ளது. இவற்றில் ஒன்றை வாங்கி கிரடிட் கார்டிலிருந்து பேலன்ஸ் டிரான்ஸ்பர் செய்து Netbank போன்ற வங்கிகளில் CD-ல் முதலீடு செய்தால் கிடைக்கும் அத்தனை வட்டியும் லாபம். Discover card ஒன்று 0% வட்டிக்கு ஒரு வருடத்துக்கு கிடைத்தது. $8,000 லிமிட் கொடுத்தார்கள். அந்த எட்டாயிரம் டாலரையும் பேலன்ஸ் டிரான்ஸ்பர் செக் மூலம் என் வங்கி கணக்குக்கு மாற்றிக் கொண்டேன். NetBank-ல் ஒரு வருட CDக்கு 4.85% வட்டி கொடுத்தார்கள். Discover card-லிருந்து கிடைத்த எட்டாயிரத்துக்கு வேறு எந்த கட்டணமும் (Ex: Balance transfer fee) கிடையாது. இதில் ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால் ஒரு வருடம் முடியும் போது மொத்த பணத்தையும் மறக்காமல் Discover card-க்கு கட்டி விட வேண்டும். இல்லையென்றால் வட்டி விகிதம் 0% லிருந்து 18%க்கு எகிறி போய் விடும்.

18. சம்பளத்திலிருந்து பணத்தை நேரடியாக சேமிப்பில் போடுங்கள். US-ல் வசிப்பவராக இருந்தால் 401kல் பணத்தை முதலீடு செய்யுங்கள். நம்மவர்கள் அதிகமாக இருக்கும் பெரும்பாலான நாடுகளில் automatic investment plans உள்ளது. இவற்றின் மூலம் பணம் நம் கைக்கு வராமல் நேராக சேமிப்புக்கு அல்லது முதலீட்டுக்கு போய் விடும்.

Related Posts Plugin for WordPress, Blogger...