Friday, March 31, 2006

ஒளிமயமான எதிர்காலம்

நான் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற தீராத ஆசை உண்டு. கல்லூரி முடித்த சில மாதங்களில் சென்னை சோழாவில் "சிங்கப்பூரில் வியாபாரம் செய்து வெற்றி பெறுவது எப்படி?" என்று ஒரு கருத்தரங்கம் நடந்தது. மூன்று நாட்கள் கருத்தரங்கத்தில் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். நான் சிங்கப்பூரில் எந்த தொழிலும் தொடங்க வில்லை. ஆனாலும் வியாபாரத்திலும் வாழ்க்கையிலும் வெற்றி பெற துடிப்பவர்களுடன் சேர்ந்து சில விஷயங்களை கற்றுக் கொண்டது பிற்காலத்தில் உபயோகமாக இருந்தது.

இப்போது காலம் மாறி விட்டது. இந்தியாவில் வியாபாரம் செய்வது பற்றி சிங்கப்பூரில் கருத்தரங்கம் நடத்துகிறார்கள்.இந்தியாவின் எதிர்காலம் மிக பிரகாசகமாக இருக்கும் என்று உலகத்தில் உள்ள அத்தனை கன்சல்டன்ஸிகளும் ஒருமித்த குரல் கொடுத்திருப்பதால் வந்த நம்பிக்கை. பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சந்தோஷமாக இருக்கிறது.

கலிபோர்னியா மாநிலத்தில் சான்டா கிளாரா நகரத்தில் இன்று (ஏப்ரல் 6) இதே போன்ற ஒரு கருத்தரங்கம் (“Next Generation Outsourcing & the Coming Wave in India”) நடந்தது. டிக்கெட்டுகள் அத்தனையும் திங்களன்றே விற்று விட்டது!

Friday, March 24, 2006

சக்தி கொடு!

இன்னும் சில வருடங்களில் உலகம் முழுதும் இருக்க போகிற பிரச்னைகள் - தண்ணீர் & மின் சக்தி. இவற்றை உற்பத்தி செய்யும் அல்லது வினியோகிக்கும் நிறுவனங்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. மின்சக்தியை உற்பத்தி செய்ய புது உத்திகள் கண்டுபிடிப்பவர்களுக்கு இன்னும் சிறப்பான எதிர்காலம் உண்டு. அப்படிப்பட்டவர்களை கண்டுபிடிக்க சிகாகோ பல்கலைக்கழகம் முயற்சி எடுத்தது. அவர்களுக்கு வந்த விண்ணப்பங்களை இங்கு பார்க்கலாம்.

நம் ஊர்க்காரரான ராஜ் பாண்டியனின் கண்டு பிடிப்பும் இதில் இடம் பெற்றுள்ளது. குழந்தைகள் விளையாடும் Seesaw-லிருந்து மின் சக்தியை உருவாக்கும் உத்தியை கண்டு பிடித்துள்ளார். விளக்கங்கள் இங்கே. இவை போல Seesaw-க்களை நம் ஊர் கிராமங்களில் ஆங்காங்கே வைத்து விட்டால்,

"மாலை முழுதும் விளையாட்டு
நாள் முழுதும் வெளிச்சம்"

இது போன்ற முயற்சிகளால் தமிழக அரசுக்கு ஒன்றும் செலவு அதிகமாகாது. குக்கிராமங்களுக்கு மின் கம்பிகளை இணைப்பதை விட ராஜ் பாண்டியனின் ஐடியாவை உபயோகித்தால் செலவு மிக குறைவானது.

மேலே குறிப்பிட்ட முதல் இணைப்பில் இன்னும் சில நல்ல ஐடியாக்கள் உள்ளன. சில விசித்திரமான ஐடியாக்களும் உள்ளன. உடற்பயிற்சி நிலையத்தில் உள்ள சாதனங்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஐடியா வேடிக்கையாக இருந்தாலும் பிராக்டிகலானது.

எனக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. நம் ஊர்களில் எந்த வேலையும் பார்க்காமல் வெட்டித்தனமாக ஊர் மேய்ந்து கொண்டிருக்கும் ஆட்களை ஊஞ்சல் ஆட வைத்து அதில் மின் சக்தி உருவாக்கலாம்!

Friday, March 10, 2006

தமிழ் நாட்டின் தலைவிதி

புரட்சி தலைவி ஜெயலலிதாவிடம் அவர் சிறையிட்ட வை.கோ. கூட்டணி அமைத்து விட்டார். அரசியலில் moral, ethics என்று எதுவும் கிடையாது என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வை.கோ.மீது எனக்கு நிறைய மரியாதை இருந்தது உண்டு. நடந்ததை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. கருணாநிதி போன்ற தலைவர்கள் குடும்ப அரசியல் நடத்தாமல் இருந்திருந்தால் வை.கோ. தனிக்கட்சி ஆரம்பித்திருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

இந்த கலாட்டாக்களைப் பற்றி பத்திரிகைகளில் படித்த போது ஒரு செய்தி: ஜெயலலிதா திருமாவளவனிடம் கூட்டணி அமைப்பதற்கு முன்னால் அவரின் ஜாதகத்தை ஜோசியரிடம் காண்பித்து அவரிடம் கூட்டு சேர்ந்தால் அ.தி.மு.க. வெற்றி பெறுமா, எத்தனை தொகுதிகள் அவருக்கு கொடுக்கலாம் என்றெல்லாம் கணித்தார்களாம். திருவாளர் ஜோசியர் திருமாவளவனின் அதிர்ஷ்ட எண் ஒன்பது என்று சொன்னதால் அவருக்கு ஒன்பது தொகுதிகள் கொடுக்கப்பட்டது. அதே போல வை.கோ.வின் அதிர்ஷ்ட எண் எட்டு என்பதால் அவருக்கு 35 தொகுதிகள் கொடுக்கப்பட்டதாம்.

இப்படிப்பட்ட மூட நம்பிக்கை உள்ளவர்களிடம் தமிழ்நாட்டை ஆளும் பொறுப்பு இருக்கின்றது என்பதை நினைத்துப் பார்த்தால் பயமாக இருக்கிறது. இந்த மாதிரி எண்கள் மீது மூட நம்பிக்கை கொண்டவர்களை பார்க்கும் போது சமீபத்தில் படித்த ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

இரண்டு நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

“நான் நேற்று இரவு தூங்கும் போது அற்புதமான கனவு வந்தது. அந்த கனவில் ஒரு குதிரையும் நம்பர் ஐந்தும் மாறி மாறி வந்தது. அந்த கனவின் அர்த்தம் புரிந்து இன்று காலை குதிரைப்பந்தயத்தில் ஐந்தாவது ரேஸில் ஐந்தாவது வரிசையில் நின்ற குதிரையின் மேல் 500 டாலர் பந்தயம் கட்டினேன். “

“அப்புறம்...?!”

“அந்த குதிரை ஐந்தாவது இடத்தில் வந்தது…”

Saturday, March 04, 2006

அமெரிக்க சந்தை -- Update

பங்கு சந்தை வழி தெரியாமல் தடுமாறுகிறது. என்னுடைய பெரும்பாலான ட்ரேடுகளை முடித்து விட்டேன். கடந்த சில வாரங்களில் CTSH, BRCM, HXM, LEH, YHOO calls, Google put போன்றவை லாபம் தந்தது. AQNT, Infosys பங்குகளில் நஷ்டம். Long-term holdings-ல் வைத்திருக்கும் பங்குகளிலும் பரஸ்பர நிதிகளிலும் அவ்வளவாக வீழ்ச்சியில்லை. Hennessy Focus 30 பரஸ்பர நிதியில் (HFTFX) மேலும் கொஞ்சம் பணத்தை முதலீடு செய்துள்ளேன். மற்றபடி சில வாரங்கள் சந்தையை விட்டு கொஞ்சம் தள்ளி நிற்கலாம் என்று தோன்றுகிறது.

Google பங்குகள் சந்தையை ஆட்டம் ஆட வைக்கிறது. இந்த பங்குகள் அதிகமாக ஏறினாலும் அல்லது இறங்கினாலும் சந்தையில் ஷாக் தான். எண்ணெய் விலை கொடுக்கும் ஷாக்கை விட கூகுள் ஷாக் தான் பெரிய பிரச்னையாக உள்ளது! கூகுள் பங்குகளை வாங்காதவர்கள் கூட கூகுள் பங்கின் விலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய நிலைமை வந்து விட்டது.

இப்போதைய நிலைமையில் Cash is King. கூகுள், எண்ணெய் மற்றும் மத்திய வங்கி இவையெல்லாம் கொஞ்சம் நிலையாக நின்ற பிறகு சந்தையில் திரும்பவும் நுழைய போகின்றேன். அது வரை என்னுடைய பகுதி நேர வகுப்புகளின் assignments-களில் தான் என்னுடைய போராட்டங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...