Sunday, January 29, 2006

இந்திய பங்கு சந்தை பற்றி ஒரு பேட்டி

சமீபத்தில் தமிழ் வாரப்பத்திரிக்கை ஒன்றில் ஒரு பேட்டி படித்தேன். பங்கு சந்தையில் ட்ரேடு செய்யும் ஒரு பெண்மணியை பற்றி எழுதியிருந்தார்கள். இவர் குறை பிரசவத்தில் பிறந்தவர், வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கிறார். ஐந்து வருடங்களுக்கு முன்னால் பங்கு சந்தையில் ட்ரேடு செய்ய ஆரம்பித்திருக்கிறார். முதலீடு செய்யவில்லை, ட்ரேடு செய்து வருகிறார். ஆரம்பத்தில் ஐந்து லட்சம் வரை நஷ்டப்பட்டு இப்போது மாதம் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறாராம். இவரை பற்றி அந்த வார இதழ் புகழ்ந்து எழுதி, மற்றவர்களையும் பங்கு சந்தையில் ஈடுபட ஊக்கம் கொடுத்திருந்தது.

இப்போது இந்தியாவில் Bull Market. இப்படிப்பட்ட நேரத்தில் யார் வேண்டுமானாலும் ஹீரோவாக முடியும். எந்த பங்கில் பணத்தை விட்டாலும் பெரும்பாலும் லாபம் வரும். இந்த வாரப்பத்திரிக்கையின் பேட்டியை படித்து விட்டு எத்தனை பேர் விபரம் தெரியாமல் காலை விடப் போகிறார்களோ, தெரியவில்லை.

பேட்டியில் குறிப்பிடப்பட்ட பெண்மணி உண்மையிலேயே சிறந்த டிரேடராக இருக்கலாம். அவரின் திறமையை குறைத்து மதிப்பிட்டு நான் இதை எழுதவில்லை. இவரே இவ்வளவு பணம் சம்பாதிக்கிறார், நம்மால் முடியாதா என்று விபரம் தெரியாதவர்கள் பணத்தை இழந்து விடுவார்கள் என்று தான் சொல்ல வருகிறேன். பல நேரங்களில் நம் ஊர் பத்திரிகைகள் பொறுப்பில்லாமல் கண்டபடி ரீல் விடுகின்றன. மேலே குறிப்பிட்ட பேட்டியை படிக்கும் போது பங்கு சந்தையில்
பணம் சம்பாதிப்பது ரொம்ப சுலபம் என்பது போல ஒரு மாயை உண்டு செய்கிறார்கள்.

Whatever goes up, comes down -- இது தான் பங்கு சந்தையின் உண்மை நிலை. அமெரிக்காவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி. 1999-ல் அமெரிக்க பங்கு சந்தை நிலைமை இன்றைய இந்திய பங்கு சந்தை போல இருந்தது. பங்குகள் கீழே விழ வாய்ப்பே இல்லை என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்தார்கள். ஒரே வருடத்தில் நிலைமை தலை கீழாக மாறி விட்டது.

பங்கு சந்தையில் சுலபமாக பணம் சம்பாதிக்கலாம் என்று விபரம் தெரியாதவர்கள் பணத்தை போடுவது அவர்களுக்கும் நல்லதில்லை, பங்கு சந்தைக்கும் நல்லதில்லை! ஏனென்றால், பங்கு சந்தை சரிய ஆரம்பிக்கும் போது விபரம் தெரியாமல் பணத்தை போட்டவர்கள் தான் பீதியாகி விடுவார்கள். அந்த panic attack பங்கு சந்தை வீழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்தும். அமெச்சூர் ட்ரேடர்களின் எண்ணிக்கை அதிகமானால் பங்கு சந்தையின் வீழ்ச்சியும் அதிகமாகும்...

Sunday, January 22, 2006

மின் விசிறி -- வைரஸின் எதிரி

Kronos நிறுவனம் வித்தியாசமான மின் விசிறியை கண்டுபிடித்துள்ளது. இந்த விசிறியில் சுற்றும் பிளேடுகள் கிடையாது. மோட்டார் கிடையாது. வெயிலுக்கு காற்று வாங்குவதற்கு இது பயன்படாது. ஆனால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள இது உதவும்.

இந்த விசிறியில் நிறைய வயர்கள் உள்ளது. இதன் மூலம் அதிக மின்சாரம் செலுத்தப்படுகிறது. மின் சக்தியால் உருவாக்கப்படும் ions காற்றை வேகமாக உள்ளே இழுக்கிறது. விசிறியின் மின் காந்த சக்தி வேகமாக வரும் காற்றிலுள்ள pathogens சமாசாரங்களை அழித்து விடுகிறது. Anthrax, flu போன்ற வைரஸ்களை இந்த விசிறி சுலபமாக அடித்து நொறுக்கி விடுகிறது.

மேலும் விபரங்களுக்கு...http://www.kronosati.com

சரி...தமிழ் நிதிக்கும் இந்த மின் விசிறிக்கும் என்ன சம்பந்தம்? இந்த மின் விசிறியை இந்தியாவில் விற்க நீங்கள் உரிமை எடுத்தால் அது ஒரு நல்ல வியாபாரமாக அமையும். பறவை காய்ச்சல் போன்ற வியாதிகளை தடுப்பதற்கு விமான நிலையங்களிலும் பொது இடங்களிலும் இந்த மின் விசிறிகளை நிறுவினால் உங்கள் நிறுவனத்துக்கு லாபம், மக்களுக்கும் நல்லது. நம் ராணுவத்துக்கும் இந்த விசிறிகள் மிக உபயோகமாக இருக்கும். இந்த விசிறிகள் மருத்துவமனைகளில் பயன்படும் -- நோய்கள் பரவாமல் இருப்பதற்கு. இந்த விசிறியின் பயன்களை எழுதிக்கொண்டே போகலாம். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசி பாருங்கள்.

Monday, January 16, 2006

சிறு துளி....

சில வருடங்களுக்கு முன்னால் விளையாட்டாக ஆரம்பித்த விஷயம், இன்று பயனுள்ளதாய் இருக்கிறது.

என் வீட்டு சமையலறையில் ஒரு சில்லரை பெட்டி இருக்கும். கடைகளில் பொருள்கள் வாங்கிய பிறகு கிடைத்த சில்லரைகள் எல்லாம் இந்த பெட்டிக்கு சென்று விடும். ஒரு நாள் இந்த பெட்டி நிரம்பி வழிந்த போது அதில் உள்ள காலணா, எட்டணா காசுகளை எடுத்து பொட்டலம் கட்டி வங்கியில் நோட்டாக மாற்றும் போது அந்த யோசனை வந்தது.

"இந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யாமல் பங்குகளில் போட்டால் என்ன?"

பல மாதங்களாக சில்லரை பெட்டி காலி செய்யாமல் இருந்ததால் எழுபது டாலருக்கு மேலே பணம் கிடைத்தது. வெறும் எழுபது டாலருக்கு பங்குகள் வாங்குவதா என்று தோன்றினாலும் அந்த எழுபது டாலரை வைத்து Sharebuilder வலை தளத்தில் ஒரு கணக்கு ஆரம்பித்தேன்.

Sharebuilder தளத்தில் ஒரு டிரேடுக்கு வெறும் நாலு டாலர் மட்டுமே கமிஷன் வாங்குகிறார்கள். அடிக்கடி டிரேடு செய்வதற்கு இவர்கள் அருகில் போக மாட்டேன். நான் செய்ய ஆரம்பித்ததே கிட்டத்தட்ட ஒரு ஆராய்ச்சி வேலை! எனக்கு உபயோகமில்லாமல் சும்மா கிடக்கும் சில்லரை காசுகள் எந்த அளவுக்கு லாபம் தரும் என்று யோசித்ததால் வந்த விளைவு இது. அதே சமயம் Long-term-ல் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் எப்படி இருக்கும் என்றும் யோசித்தேன். Long-term என்றால் குறைந்தது 10 வருடங்கள். இந்த முயற்சிக்கு தனியாக தரகர் கணக்கு தொடங்கினால் track செய்ய சுலபமாக இருக்கும் என்று தோன்றியது. அது தவிர இந்த விளையாட்டுக்கு என்னிடம் இருந்ததே வெறும் 70 டாலர் தான், அதை வைத்துக் கொண்டு Brown & Co., அருகே போக முடியாது. அதனால் தான் Sharebuilder.

இது நடந்தது பிப்ரவரி 2001-ல். கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஓடி விட்டன. ஆறு மாதத்துக்கு ஒரு முறை சில்லரை பெட்டி காலி செய்யப்பட்டு, வங்கியில் பணமாக மாற்றப்பட்டு, Sharebuilder-ல் டெபாசிட் செய்யப்பட்டது. இப்போது இந்த கணக்கின் மதிப்பு $1100!

பங்குகளை தேர்வு செய்த விதமும் இந்த கணக்கின் மதிப்பு உயர ஒரு காரணம். இந்த கணக்கில் உள்ள பங்குகள்:

5 CSCO பங்குகள்
5 GE பங்குகள்
1.16 GOOG பங்குகள்
5 MSFT பங்குகள்
5 QQQQ பங்குகள்

Sharebuilder போன்ற தரகர்களிடம் 0.5 பங்கு கூட வாங்க முடியும். அதனால் என்னிடம் வெறும் $18 இருந்தால் கூட 0.5 MSFT பங்கு வாங்க முடியும்.

இது வரை இந்த கணக்கில் பங்குகளை வாங்குவதோடு சரி, விற்கும் வேலையே கிடையாது. 2012 பிப்ரவரியில் இந்த கணக்கின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று தெரியாது. ஆனால் அது வரை இந்த வலைப்பதிவு இருந்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்!

Sunday, January 08, 2006

Google மேனியா - Update

கூகுள் பங்குகள் பறப்பதை நிறுத்தவில்லை. நவம்பர் 5, 2005-ல் கூகுளை பற்றி எழுதியபோது பங்குகளின் விலை $390. இன்று $465! ஜிம் கிரேமர் சொன்ன $450 விலையை கடந்து விட்டது.

கடந்த 60 நாட்களில் நிறைய விஷயங்கள் நடந்து விட்டது.

1. கூகுள் America Online நிறுவனத்தின் 5% உரிமையை வாங்கிவிட்டது. கூகுளின் பெரிய வாடிக்கையாளர் America Online. பங்கு சந்தை முதலீட்டாளர்கள் இதில் ரொம்ப த்ரில்லாகி விட்டார்கள்.

2. கூகுள் புதிதாக Video-on-demand போன்ற சேவைகளை ஆரம்பித்து விட்டது

3. குறைந்தது மூன்று வங்கிகள் கூகுள் பங்குகள் $500 மதிப்பை எட்டும் என்று கணித்து விட்டார்கள்

ஜனவரி 20ம் தேதிவாக்கில் கூகுள் லாப நஷ்ட கணக்கை அறிவிக்க போகிறது. அதில் கூகுள் ஏதாவது ஏமாற்றத்தை கொடுத்து விட்டால் பெரிய பிரச்னை ஆகிவிடும். அப்படியெல்லாம் நடக்காது என்று நம்பிக்கை இருந்தாலும் நான் ரிஸ்க் எடுக்க போவதில்லை. ஜனவரி 20க்குள் நான் வாங்கிய ஆப்ஷன்கள் அனைத்தையும் விற்க போகிறேன். ஒரு வேளை கூகுளின் லாப கணக்கு திருப்திகரமாக இருந்தால் ஜனவரி நாலாவது வாரத்தில் திரும்பவும் ஏப்ரல் மாதத்துக்கான கூகுள் ஆப்ஷன்களை வாங்க வேண்டியது தான்.

நீங்கள் கூகுள் ஆப்ஷன்களை வாங்கியிருந்தால் உங்கள் லாபத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...