Saturday, December 23, 2006

குழந்தைகளை தொந்தரவு செய்யும் குழந்தைகள்

Child Bullies என்பதற்கான சரியான மொழி பெயர்ப்பு தெரியாததால், நீண்ட தலைப்பை கொடுத்து விட்டேன். உங்களுக்கு சிறு குழந்தைகள் இருந்து அவர்கள் bulliesகளால் பாதிக்கப்பட்டிருந்தால், கீழ்க்கண்ட உத்திகள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

1, உங்கள் குழந்தை உங்களிடம் புகார் செய்யும் போது காது கொடுத்து கேளுங்கள். அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

2. குழந்தைகளின் பிரச்னைகளை பொறுமையாக, விபரங்களுடன் கேளுங்கள்.

3. அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்குமாறு நல்ல வார்த்தைகள் சொல்லி தெம்பூட்டுங்கள். “அவன் அடிச்சான்னு என்கிட்ட வந்து சொல்றியே, உனக்கு வெட்கமாயில்லை” என்று கடிக்காதீர்கள்.

4. குழந்தைகளை bully செய்யும் குழந்தைகளின் மன நிலையை விளக்கி சொல்லுங்கள். பொதுவாகவே bully செய்யும் குழந்தைகள் மனதளவில் பாதுகாப்பு இல்லாமல் (insecured feeling) இருப்பதால் தான் மற்ற குழந்தைகளை வேதனைப்படுத்துகிறார்கள்.

5. உங்கள் குழந்தையின் ஆசிரியரிடம் உடனே புகார் கொடுக்காதீர்கள். Bulliesகளை எப்படி சமாளிப்பது என்று சிறு வயதிலியே குழந்தைகள் கற்றுக்கொண்டால் பிற்காலத்தில் உபயோகமாக இருக்கும். Bulliesகளின் தொல்லைகள் தொடர்ந்தால் மட்டும் ஆசிரியரிடம் புகார் கொடுக்கலாம். Exception: உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டால் அதை உடனே சரி செய்ய வேண்டும். சில சமயங்களில், அதுவும் அமெரிக்க நகரங்களில் குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதில்லை. என் நண்பரின் 6 வயது மகளின் கையில் அவள் வகுப்பு பெண் ஒரு ஊசியை குத்தி வேடிக்கை பார்த்தாளாம். இது போன்ற விபரங்களை உடனே பள்ளி நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

6. தொந்தரவு செய்யும் குழந்தைகள் tease செய்யும்போது புத்திசாலித்தனமாக பதிலடி கொடுக்க சொல்லிக் கொடுப்பதற்காக, உங்கள் குழந்தையுடன் Role-play செய்து பழகுங்கள். அதாவது நீங்களும் உங்கள் குழந்தையுடன் பள்ளியில் படிப்பதாகவும், உங்கள் குழந்தை உங்களை bully செய்வதாகவும் ஒரு கற்பனை விளையாட்டு செய்து பாருங்கள். தன் நிலைமையில் தன் பெற்றோர்கள் இருக்கும் போது அதை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று உங்கள் குழந்தை தெரிந்து கொள்ளும்.

இவை தவிர இன்னும் பல நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ள www.aacap.org வலைத்தளத்துக்கு செல்லுங்கள்.

Thursday, December 21, 2006

மைக்ரோசாப்டின் மார்க்கெட்டிங் வீடியோ

என் நண்பர் இந்த வீடியோ லிங்கை அனுப்பியிருந்தார். Xbox விளையாட்டு சாதனத்தை இந்தியாவில் மார்க்கெட் செய்வதற்காக தயாரிக்கப்பட்ட வீடியோ. அவசியம் பாருங்கள்!

http://soapbox.msn.com/video.aspx?vid=7bbb80e6-0cb0-41bb-9335-1a57130baeb6

Saturday, December 16, 2006

வரியை குறைப்பதற்கான யோசனைகள்

அமெரிக்காவில் டிசம்பருடன் 2006-க்கான கணக்கு வருடம் முடிகிறது. வருமான வரியை குறைக்க சில யோசனைகள்.

உங்களிடமிருக்கும் பல பங்குகளை நீங்கள் லாபத்தில் விற்றிருந்தால் Capital gains tax கட்ட வேண்டியிருக்கும். நஷ்டமடைந்த பங்குகள் உங்கள் கணக்கில் இருந்து, டிசம்பர் 29க்குள் அவற்றை விற்று விட்டால், அந்த நஷ்டம் மற்ற பங்குகளிலிருந்து கிடைத்த லாபத்தை குறைத்து விடும். இதன் மூலம் உங்கள் வருமான வரியும் குறையும்.

இப்போதிலிருந்து வருடக் கடைசிக்குள் புதிதாக பரஸ்பர நிதிகள் வாங்குவதாக இருந்தால் கவனம் தேவை. சில நிதிகள் வருட கடைசிக்கான பண பட்டுவாடா (year-end distribution) செய்யும் நேரம் இது. இந்த நிதிகள் இந்த வருடம் நல்ல லாபம் அடைந்திருந்தால் இதற்கான வரியும் அதிகமாயிருக்கும். நீங்கள் இன்று வரை இந்த நிதிகளை வைத்துக் கொள்ளாமலிருந்தாலும் புதிதாக வாங்கும் போது இந்த நிதிகளின் வரிச்சுமையின் பங்கு உங்கள் தலையிலும் வந்து விழும். இது போன்ற நிதிகளின் year-end-distribution payout முடிந்த பிறகு வாங்குவது நல்லது.

இது போன்ற பிரச்னைகள் 401k கணக்குகளில் புதிதாக பரஸ்பர நிதிகளை வாங்கினால் வராது. 401k கணக்குகள் வரி தள்ளி வைக்கப்பட்ட (tax deferred) கணக்குகள்.

தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை கொடுங்கள். Itemized deduction செய்வதாக இருந்தால் நன்கொடையால் உங்கள் வரி குறையும்.

Thursday, December 14, 2006

சங்கேத வார்த்தைகள்

சராசரியாக அன்றாடம் மூன்று சங்கேத வார்த்தைகளாவது (Passwords) உபயோகிக்கிறோம். மூன்று மாதத்துக்கு ஒரு முறை இவற்றை தொடர்ந்து மாற்றி அதையும் ஞாபகப்படுத்தி கொள்ள வேண்டும். சுலபமாக நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள, அதே சமயத்தில் ஹேக்கர்களால் ஊகிக்க முடியாத படி சங்கேத வார்த்தைகளை தேர்ந்தெடுப்பது எப்படி என்று Passlogix நிறுவனத்தின் மார்க் போரோடிட்ஸ்கி யோசனைகள் சொல்கிறார்:

SAP சிஸ்டத்தை உபயோகிக்க ஒரு சங்கேத வார்த்தை உருவாக்க வேண்டுமென்றால், SAP என்பதை தலைகீழாக மாற்றி, அது கூட உங்களுக்கு சுலபமாக ஞாபகம் வரக்கூடிய வார்த்தைகளை சேர்த்துக் கொள்ளவும். உதாரணமாக (தலைகீழ்) SAP என்பதுடன் Fix me now என்று சேர்த்தால், PASFMN என்றாகி விடும். இதனுடன் ஏதாவது ஒரு எண் சேர்த்தால் உங்களின் சங்கேத வார்த்தை. உதாரணம் PASFMN1980.

இன்னுமொரு வழி: உங்களுக்கு பிடித்த இரண்டு வார்த்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு வார்த்தைகளிலிருந்தும் அடுத்தடுத்த எழுத்துகளை சேர்த்து எழுதினால் சங்கேத வார்த்தை பிறந்து விடும். உதாரணமாக Good Boy என்ற வார்த்தைகள் Gboooyd என்றாகி விடும். இதன் முன்னும் பின்னும் ஒரு நம்பரை சேர்த்தால் (2Gbooyd2) இன்னும் நல்லது.

அகராதிகளில் உள்ள வார்த்தைகளை பாஸ்வேர்டாக வைத்துக் கொண்டால், அதை உடைப்பதற்கு ஹேக்கர்களுக்கு சில விநாடிகளே போதும் என்று மார்க் சொல்கிறார்.

Monday, December 11, 2006

Multi-tasking

நீங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவராக இருந்தால், Multi-tasking என்பதே உங்கள் மந்திரமாக இருக்கும். உங்களிடம் வேலை செய்பவர்களையும் Multi-tasking செய்ய சொல்லி துன்புறுத்தியிருப்பீர்கள்! Multi-task செய்வதால் சிலருக்கு பெரிய பிரச்னைகள் வரக்கூடும் என்று ஆய்வுகளில் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

National Institute for Occupational Safety and Health என்ற ஆய்வுக்கூடத்தில் டயான் மில்லர் என்ற விஞ்ஞானி செய்த ஆய்வின் படி அறியப்பட்ட விஷயங்கள்…

பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்வதால் சிலருக்கு அதிக பாதிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிறைய பேருக்கு அதனால் இரண்டு எமர்ஜென்ஸி ஹார்மோன்கள், அட்ரினலின் மற்றும் கார்டிசால், வேகமாக சுரக்கிறது.

மூச்சு பட பட என்றாவது, இதயம் வேகமாக துடிப்பது போன்றவை அட்ரினலின் உபயம். ஈரலிலிருந்து குளுகோஸை திருடி உடம்புக்கு அதிக சக்தியை தருவது கார்டிசாலின் வேலை. அது மட்டுமில்லாமல், தற்காலிகமாக உடம்பின் நோய் தடுப்பு சக்தியையும் இது குறைத்து விடுகிறது. ஹார்மோன்கள் இது போல அடிக்கடி வீறு கொண்டு முறுக்கேறினால் சங்கை ஊதி விட வேண்டியது தான் என்று டயான் எச்சரிக்கிறார்.


ஆனால் இதற்கெல்லாம் நாம் பயப்படுவோமா, என்ன?! ஒரே திரையில் ஆறு வின்டோக்களை திறந்து வைத்துக்கொண்டு வேலை பார்த்தால் தான் திறமையுடன் வேலை பார்ப்பதாக இருப்பதாக மற்றவர்கள் நம்புகிறார்கள்.

Sunday, December 10, 2006

வெங்காயத்தில் E-coli

வீட்டை விட்டு வெளியே போனால், உயிரோடு திரும்பி வந்தால் பெரிய விஷயம் போலிருக்கிறது. கார் விபத்துகள், மாசு பட்ட காற்று இவற்றுடன் காய்கறிகளும் நம் உயிருக்கு குறி வைக்கின்றன! Taco Bell உணவகங்களில் உணவுடன் கொடுக்கப்பட்ட வெங்காயத்தில் E-coli இருந்ததாக கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. மேலும் விபரங்கள் இங்கே.

Saturday, December 09, 2006

அடையாள திருட்டு

Identity theft பரவலாக நடந்து வருகிறது. நாம் பத்திரமாக இருந்தாலும், நம்முடைய தனிப்பட்ட விபரங்களை பாதுகாக்கும் சில நிறுவனங்கள் கூட கோட்டை விட்டு விடுகின்றன. சில மாதங்களுக்கு முன்னால் Internal Revenue Service, Automatic Data Processing போன்ற நிறுவனங்களிலிருந்து சில விபரநாடாக்கள் (Tapes) திருடு போய் விட்டன. சில வங்கிகள் தங்கள் விபரங்களை வேறு இடத்துக்கு மாற்றும் போது தங்கள் வாடிக்கையாளர்களின் விபரங்கள் அடங்கிய டிஸ்க்குகளை தொலைத்து விட்டன. நாம் கவனமாக இருந்தாலும் இது போன்ற வகைகளில் நம் விபரங்கள் திருடர்களின் கைக்கு போய் விட்டால், நமக்கு பெரிய நஷ்டம் + தலைவலி.

Online shopping செய்தால் தான் அடையாள திருட்டு நடக்கும் என்ற காலம் போய், வலைத்தளங்களின் மூலமாக வேலை தேடினால் கூட அடையாள திருட்டு நடக்கிறது! Online job board-களில் நீங்கள் பார்க்கும் அனைத்து விளம்பரங்களும் உண்மையானவை கிடையாது, அவற்றில் சில அடையாள திருடர்களால் போடப்பட்டது. அதிர்ச்சியாக இருக்கிறதா?

அடையாள திருடர்கள் ஏதாவது ஒரு வேலைக்கான (பொய்) விளம்பரம் போடுகிறார்கள். அதை நம்பி நிறைய பேர் தங்களது பயோடேடாவை அனுப்புகிறார்கள்…பெயர், முகவரி, போன் விபரங்களோடு. விளம்பரம் கொடுத்தவர்கள் சில நாட்களில் தொடர்பு கொண்டு பேருக்கு ஒரு போன் இன்டர்வியூ நடத்தி விட்டு, background check செய்ய வேண்டும் என்று சோஷியல் செக்யூரிட்டி நம்பரை கேட்கிறார்கள். கேட்டதை கொடுத்து விட்டால், வேலை கொடுப்பதாக சொன்ன திருடர்கள் தங்கள் வேலையை காட்டி விடுவார்கள்!

இது போன்ற புதுவிதமான அடையாள திருட்டு நடப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருப்பதால், FBI விழித்துக் கொண்டு இந்த திருடர்களை தேடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் அடையாள திருட்டு நடத்த சோஷியல் செக்யூரிட்டி நம்பர் வேண்டும். இந்தியாவில் அது கூட தேவையில்லை. சில இந்திய வங்கிகள் கிரடிட் கார்டு கொடுக்கும் முன்பாக வீட்டிற்கு ஆள் அனுப்பி முகவரியை சரி செய்து கொள்கிறது. இது ஒரு நல்ல அணுகுமுறை, ஓரளவுக்கு அடையாள திருட்டு கட்டுப்படுத்தப்படும்.

அடையாள திருட்டிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள சில வழிகள்:

1. உங்களது வங்கி ஸ்டேட்மென்ட்ஸ், கிரடிட் கார்டு ரசீதுகள் மற்றும் கணக்கு சம்பந்தப்பட்ட பேப்பர்கள் தேவையில்லையென்றால் வெறுமனே கிழித்து குப்பையில் போடாதீர்கள். ஒரு shredder வாங்கி அதன் மூலம் உங்கள் முக்கியமான பேப்பர்களை பொடியாக்குங்கள். என்னுடைய நண்பன் ஒருவன் சரியான கஞ்சன். அவனே 20 டாலருக்கு shredder-ஐ வாங்கி வைத்திருக்கின்றான். அடையாள திருட்டு நடந்தால் தான் அடையும் நஷ்டம் பல மடங்கு என்று அவனுக்கு புரிந்திருக்கின்றது.

2. முக்கியமான வலைத்தளங்களில் (Online banking, Online shopping, etc.,) உங்கள் சங்கேத வார்த்தைகளை கவனமாக தேர்வு செய்யுங்கள். வெறுமனே saravanan என்று இல்லாமல் 82sarav7tea என்று நம்பர்களையும் லெட்டர்களையும் கலந்து ஒரு காக்டெயில் சங்கேத வார்த்தையை உருவாக்குவது நல்லது.

3. Phishing, vishing என்று எந்த முறையில் திருடர்கள் உங்களை கவர நினைத்தாலும் ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் வங்கியிலிருந்து வரும் மின்னஞ்சல்களில் உள்ள தொடர்புகளை கிளிக் செய்யாமல், வங்கிகளின் வலைத்தள முகவரிகளை நேரடியாக புரொவ்ஸரில் டைப் செய்யுங்கள்.

4. அமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால், உங்களது கிரடிட் ரிப்போர்ட்டை வருடத்துக்கு ஒரு முறையாவது சரி பார்த்துக் கொள்ளுங்கள். வருடத்துக்கு ஒரு முறை இந்த ரிப்போர்ட்டுகள் இலவசம்.

5. அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு மட்டும்: தேவைப்பட்டால் credit bureau-ஐ கூப்பிட்டு உங்களது ஃபைலில் Fraud alert என்ற வசதியை இலவசமாக வைத்துக் கொள்ளலாம். உங்களது கிரடிட்டை செக் செய்யும் நிறுவனங்கள் இன்னும் கூடுதலாக கவனமாக இருக்க இது ஊக்குவிக்கின்றது.

6. அமெரிக்காவில் 20 மாநிலங்களில் கிரடிட் ரிப்போர்ட்டுகளை freeze செய்யும் வசதியிருக்கிறது. அடையாள திருடர்களின் தொல்லை தாங்கவில்லையென்றால் உங்களின் கிரடிட் ரிப்போர்ட்டுகளை freeze செய்து விடலாம். Caveat: உங்களுக்கு ஏதாவது கடனோ அல்லது கிரடிட் கார்டோ வேண்டுமென்றால், உங்கள் வங்கிகளால் கூட உங்கள் கிரடிட்டை செக் செய்ய முடியாது. அது போன்ற நிலைமை வரும் போது freeze-ஐ எடுத்து விடலாம்.

7. வலைத்தளங்களில் வேலை தேடும் போது பெயர், போன், மின்னஞ்சல் முகவரி போன்ற விபரங்களை மட்டும் கொடுங்கள். நேர்முக தேர்வுக்கு போகும் போது மற்ற விபரங்களை கொடுக்கலாம்.

வலைத்தளங்களில் வரவு-செலவு கணக்குகள்

இந்தியர்களை பொறுத்தவரை வருமானத்தைப் பற்றிய விபரங்களை கேட்பது taboo. இந்தியர்கள் மட்டுமல்ல பெரும்பாலனவர்கள் தங்கள் வருமானத்தைப் பற்றி பேசுவதில்லை. பல காரணங்கள்… திருஷ்டி பற்றிய பயத்திலிருந்து தாழ்வு மனப்பான்மை வரை.

சிலர் தங்களது வரவு செலவு கணக்குகளை உலகம் முழுதும் தெரியும்படி வலைத்தளங்களில் போடுகிறார்கள். இது ஒரு விதமான Public Relations Stunt. இது போல புதிதாக ஏதாவது செய்வதால் இலவசமாக விளம்பரம் கிடைக்கிறது. நிறைய விசிட்டர்கள் வருவதால் இந்த தளங்களின் விளம்பர வருமானங்களும் கூடுகின்றது.

இப்படிப்பட்ட வலைத்தளங்களில் சில:

http://www.mymoneyblog.com/

http://www.2millionblog.com/

இந்த வலைத்தளங்களை நடத்துபவர்களின் வரவு செலவு கணக்குகளை உங்களின் கணக்குகளோடு ஒப்பிட்டு பாருங்கள். Just for fun, also for some insights. பிறரின் தவறுகளிலிருந்து நாம் சில பாடங்களை கற்றுக் கொள்ளலாம். அந்த மாதிரி பாடங்கள் வலி அதிகம் இல்லாதவை! இவர்களின் சாமர்த்தியமான முடிவுகளிலிருந்து நல்ல விஷயங்களையும் கற்றுக் கொள்ளலாம்.

Thursday, December 07, 2006

பாடங்கள் சொல்லிக் கொடுக்கும் வலைத்தளங்கள்

உங்களுக்கு சரியாக குளிக்க தெரியுமா?! How about brushing? ;-)

சரியாக குளிக்க தெரியாமல், பல் விளக்க தெரியாமல், முட்டையை வேக வைக்க தெரியாமல், காபி போட கூட தெரியாமல் நிறைய பேர் இருப்பதாக நினைத்துக் கொண்டு சில வலைத்தளங்கள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. அவற்றில் சில:

Videojug.com – இந்த தளத்தில் சரியாக குளிப்பது எப்படி என்று கற்றுத் தரப்படுகின்றது! வெங்காயத்தை எப்படி நறுக்குவது, பீரை எப்படி கோப்பையில் ஊற்றுவது போன்ற அதி நவீன தொழில் நுட்பங்களையும் இதில் கற்றுக் கொள்ளலாம்.

eHow.com – முட்டை போடுவது பற்றி செயல்முறை விளக்கத்துடன் கற்றுத்தரப்படும். (முட்டையை முகத்தில் சரியாக எறிவது எப்படி என்று நம்மூர் அரசியல்வாதிகள் இந்த தளத்தில் எழுதலாம்)

ViewDo.com – ஆப்பிள் நறுக்குவது பற்றி.

WikiHow.com – ஒளிந்து விளையாடுவது பற்றி இதில் சொல்லித்தரப்படுகின்றது.

இந்த மாதிரி வலைத்தளங்களை யார் பார்க்க போகிறார்கள் என்று நினைக்காதீர்கள். டீ-சர்ட்டை மடிப்பது எப்படி என்ற வீடியோ மட்டும் 60,000 முறை பார்க்கப் பட்டிருக்கின்றது!

இவை தவிர “ஜொள்ளு விடுவது எப்படி” என்ற பாடம் ehow.com தளத்தில் பிரபலம்.

இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைப்பது போல “ஒன்றும் செய்யாமல் இருப்பது எப்படி?” என்று wikihow தளத்தில் சொல்லித் தரப்படுகின்றது. அட ஆண்டவா…!

Wednesday, December 06, 2006

ஆப்ஷன் DVD

ஆப்ஷன் கவுன்சில் ஆப்ஷன்களை பற்றி விளக்குவதற்கு ஒரு DVD-ஐ வெளியிட்டிருக்கிறது. It’s Good to have Options என்று பெயரிடப்பட்டுள்ள இந்த DVD இலவசமாக கொடுக்கப்படுகின்றது.

நான் இந்த DVD-ஐ இன்னும் பார்க்கவில்லை. Options Industry Council அனுப்பியிருந்த மின்னஞ்சலில் இதன் பயன்களை எழுதியிருந்தார்கள். இதன் மூலம் ஆப்ஷன்களின் அடிப்படை விபரங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். சில பயிற்சி பாடங்களும் இதில் உள்ளன.

உங்களுக்கான இலவச பிரதியை பெற்றுக்கொள்ள இங்கு தட்டுங்கள் அல்லது 1-888-options என்ற எண்ணுக்கு கூப்பிடுங்கள்.

அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு மட்டுமே இது அனுப்பப்படும். இந்த DVD பயனுள்ளதாக இருந்தால் தயவு செய்து மற்றவர்களுக்கும் பின்னூட்டம் மூலம் சொல்லுங்கள்.

Thursday, November 23, 2006

துள்ளி வரும் காற்றே, துள்ளி வரும் காற்றே…

காற்றினால் மின்சாரம் தயாரிப்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரபலமாகி வருகிறது. பெட்ரோலுக்காக அரபு நாடுகளை நம்பி இருப்பதை விட இயற்கையை நம்புவது மேல் என்று அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள். இயற்கை சக்திகளின் மூலம் மின்சாரம் தயாரிப்பது தம் தேசத்துக்கு செய்யும் தொண்டு என்று கூட பரவலாக நம்பிக்கை இருக்கிறது. யோசித்துப் பார்த்தால் இது உண்மையிலேயே தேசத்துக்கு நாம் செய்யும் நன்மை தான்.

காற்றாலைகள் மூலமாகவும் சூரிய சக்தியின் மூலமாகவும் இந்தியாவில் மின்சாரம் உற்பத்தி செய்தால் நாம் பல கோடிகள் அந்நிய செலவாணி மிச்சப்படுத்தலாம். கடற்கரை நகரங்களில்/கிராமங்களில் மட்டும் காற்றாலைகள் நிறுவினாலே பல ஆயிரம் கோடிகள் மிச்சமாகும்.

இது போன்ற இயற்கை சக்தி (Natural Energy) தொழில்களில் அரசாங்கத்தின் பங்கு மிக மிக முக்கியமானது. அமெரிக்க போன்ற நாடுகளில் அரசாங்கம் தாராளமான சலுகைகள் கொடுத்து இயற்கை சக்தி தொழிலபதிர்களை ஊக்குவிக்கின்றது. உதாரணமாக கலிபோர்னியாவில் 10 கிலோ வாட் காற்றாலையை 50,000 டாலருக்கு வாங்கினால் அரசாங்கம் 22,500 டாலர் சலுகை கொடுக்கின்றது. இது போன்ற சலுகைகள் இயற்கை சக்தியை பயன்படுத்தும் அனைவரையும் உற்சாகப்படுத்தும். இந்த சலுகைகள் வோட்டுக்காக கொடுக்கப்படும் லஞ்சம் அல்ல. தம் நாடு பிற நாடுகளை எதிர்பார்த்து இருக்கக் கூடாது என்ற அடிப்படை எண்ணம் தான் காரணம்.

அமெரிக்காவில் காற்றாலைகள் பற்றி மேலும் விபரங்கள் ஆங்கிலப்பதிவில் உள்ளன.

Sunday, November 19, 2006

அமெரிக்க சந்தை - Vanguard பரஸ்பர நிதிகள்

பரஸ்பர நிதிகளைப் பற்றிய பதிவின் பின்னூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக ஒரு பதிவே போட்டு விடுகிறேன்.

Vanguard நிறுவனத்தின் சிறந்த பரஸ்பர நிதிகள்:

VGTSX - Total International Stock Index
VHGEX - Global Equity
VWIGX - International Growth
VIMSX - Mid-cap Index
VEXMX - Extended Market Index
VISGX - Small cap growth index
VQNPX - Growth and Income
VFINX - S&P 500 Index

Wednesday, November 15, 2006

பங்கு சந்தை விளையாட்டு

பணம் எதுவும் முதலீடு செய்யாமல் பங்கு சந்தையில் விளையாட வேண்டும் என்ற ஆசையிருந்தால், உங்களுக்கு ஒரு நற்செய்தி!

அமெரிக்காவின் Marketwatch.com நடத்தும் Virtual Stock Exchange தளத்தில் இலவசமாக பங்கு சந்தை விளையாட்டை விளையாடலாம். அமெரிக்க பங்கு சந்தையில் உள்ள பங்குகளை மட்டுமே இந்த விளையாட்டில் நீங்கள் வாங்கி விற்கலாம்.

காசா பணமா, சும்மா விளையாடுங்கள்… பங்கு சந்தையில் புதிதாக முதலீடு செய்பவர்களுக்கு இந்த தளம் மிக உபயோகமாக இருக்கும். நீங்கள் உலகத்தில் எங்கு வசித்தாலும் இந்த விளையாட்டு ஒரு நல்ல அனுபவம்.

Thursday, November 09, 2006

அமெரிக்க சந்தையின் பரஸ்பர நிதிகள்

டிசம்பர் 10, 2005ல் என் ஆங்கில பதிவில் குறிப்பிட்ட மூன்று பரஸ்பர நிதிகளில் இரண்டு நல்ல லாபம் தந்துள்ளன. பங்கு சந்தைக்கு நீங்கள் புதியவராக இருந்தால், கீழ்க்கண்ட பரஸ்பர நிதிகள் உங்களுக்கு உதவும்.

FIGRX - Fidelity Intl Discovery
JAOSX - Janus Overseas
JETAX - Julius Baer Intl Equity Fund
LZOEX - Lazard Emerging Markets (கவனம் தேவை)
MAKOX - Matthews Korea Fund

இவை அனைத்தும் உலக சந்தைகளில் முதலீடு செய்பவை.

Disclosure: I own all the funds mentioned above.

இந்தியாவிலும் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி?

அமெரிக்க ரியல் எஸ்டேட் நீர்க்குமிழி முழுதும் உடைந்து விட்டது. வீடுகளை வாங்குவதற்கு ஆளில்லை. வாங்குவதாக கான்ட்ராக்ட் போட்ட ஆட்களும் கான்ட்ராக்டை கேன்சல் செய்து ஓடுகிறார்கள். இப்படி கேன்சல் செய்யும் போது வைப்புப்பணம் (deposit) திரும்ப வராது. இருந்தாலும் பரவாயில்லை என்று கேன்சல் செய்கிறார்கள். எனக்கு தெரிந்து ஒருவர் 20,000 டாலர் (deposit) போனாலும் பரவாயில்லை என்று கான்ட்ராக்டை கேன்சல் செய்து விட்டார். இவர் வாங்குவதாக இருந்த வீட்டின் மதிப்பு சில மாதங்களிலேயே 100,000 டாலர்கள் குறைந்து விட்டது. ஒப்பந்தப்படி இவர் முன்பு ஒத்துக் கொண்ட விலைக்கே வாங்கினால் வரும் நஷ்டத்தை விட 20,000 டாலர் இழப்பது பரவாயில்லை என்று அவருக்கு தோன்றுகிறது.

ஐரோப்பாவிலும் ரியல் எஸ்டேட் விலைகள் குறைந்து வருகின்றது. வட்டி விகிதம் மேலே செல்ல செல்ல ரியல் எஸ்டேட் விலைகள் கீழே விழும். இந்தியாவிலும் வட்டி விகிதம் மேலே போய் கொண்டே இருக்கிறது. தற்போதைய வட்டி விகிதம் 7.25%. ஆனாலும் நம் நாட்டில் ரியல் எஸ்டேட் விலைகள் வானத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இரண்டு வருடங்களுக்கு முன்னால் உள்ள அமெரிக்க ரியல் எஸ்டேட் நிலவரத்தையும் தற்போதைய இந்திய ரியல் எஸ்டேட் நிலவரத்தையும் என்னால் ஒப்பிடாமல் இருக்க முடிய வில்லை. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது பற்றி அனைத்து பத்திரிகைகளும் “டிப்ஸ்” கொடுத்தன. ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதன் மூலம் எப்படி மில்லியனராகலாம் என்ற workshops நாடு முழுதும் நடந்தது. 2002-ல் வாங்கிய வீடு 2005-ல் மூன்று மடங்கு மதிப்பு கூடியது. சிலர் தங்கள் வீடுகளுக்கு முத்தம் கொடுத்து விட்டு அலுவலகம் செல்ல ஆரம்பித்தனர். இந்த ரேஞ்சில் விலை ஏறினால் இன்னும் ஐந்து வருடங்களில் ரிடையராகி விடலாம் என்று நிறைய பேர் கனவு கண்டார்கள். இதையெல்லாம் பார்த்து பயந்து போய் பணவீக்கத்தை கட்டுப் படுத்துவதற்காக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை மேலே ஏற்றிக் கொண்டே வந்தது… இந்த நீர்க்குமிழி உடையும் வரை.

இதே போன்ற நிலைமை தான் தற்போது இந்தியாவிலும். சென்னை, பெங்களூர், பம்பாய் போன்ற நகரங்களில் வீடு வாங்குவதாக இருந்தால் அமெரிக்க டாலர்களில் தான் சம்பாதிக்க வேண்டும் போல இருக்கின்றது. சென்னையில் 1200 சதுர அடி அபார்ட்மென்ட் 75 லட்சத்துக்கு விற்கிறது. கிட்டத்தட்ட US$167,000. டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பெரும் நகரங்களில் இதே விலைக்கு 1200 சதுர அடி வீடு வாங்கலாம். சென்னை தி.நகரில் ஒரு கிரவுண்ட் நிலத்தின் விலை 2.2 கோடி. கலிபோர்னியாவில் Fremont நகரத்தில் இந்த விலைக்கு புதிதாக வீடு கட்டலாம், நிலத்து விலையும் சேர்த்து! அமெரிக்காவில் உள்ள தனி மனித வருமானத்துக்கும் இந்தியாவின் தனி மனித வருமானத்துக்கும் மிக பெரிய இடைவெளி உள்ளது. ஆனால் வீடு விலைகள் மட்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?! Affordability என்று பார்த்தாலும் இந்த விலைகளுக்கு எந்த அடிப்படையும் கிடையாது. வீட்டை விற்பவர்களின் பேராசையும், அவர்களுக்கு துர்போதனை செய்யும் வீட்டு புரோக்கர்களும் தான் இதற்கு காரணம்.

இது போன்ற விலையேற்றம் அதிக நாட்கள் தாங்காது. விலைகள் எப்போது கீழே விழும் என்று யாராலும் துல்லியமாக சொல்ல முடியாது. ஆனால் இன்னும் ஒரு வருடத்தில் இந்தியாவிலும் ரியல் எஸ்டேட் நீர்க்குமிழி உடையலாம். அப்படி உடையும் போது speculative investment செய்தவர்கள் பெருத்த நஷ்டமடைய போகிறார்கள்.

குறிப்பு: நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால், அமெரிக்காவின் வர்த்தக ரியல் எஸ்டேட் பற்றிய ஆங்கில பதிவும் பயனுள்ளதாக இருக்கும்.

Tuesday, October 24, 2006

விமான நேரங்கள் - Real time information

முதலில் முஸ்லீம் நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள்!

கிறிஸ்துமஸ், புது வருட விடுமுறைக்காக பயணம் செய்வதாக இருந்தால் மற்ற வருடங்களை போல இந்த வருடமும் டென்ஷனான பயணமாகத்தான் இருக்கும். கையில் தண்ணீர் பாட்டில் கொண்டு போனால் கூட விமான நிலையங்களில் செக் செய்கிறார்கள். எல்லா சோதனைகளையும் முடித்து விட்டு கேட்டிற்கு செல்வதற்கு முன்பை விட நேரம் அதிகமாகிறது. சமயோசிதமாக கொஞ்சம் முன்பே விமான நிலையத்துக்கு போனால், “உங்கள் விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாக கிளம்பும்” என்று கூலாக சொல்கிறார்கள்.

விமானங்கள் வந்திறங்கும் மற்றும் புறப்படும் நேரங்கள் பற்றிய real-time விபரங்கள் தெரிந்து கொள்ள http://www.flightstats.com/ தளம் உதவியாக இருக்கும். உலகம் முழுதும் உள்ள விமான நிலையங்களை பற்றிய தகவல்களை இந்த தளம் கொடுக்கிறது.

அமெரிக்காவில் மத்திய விமான போக்குவரத்து நிறுவனத்தின் http://www.fly.faa.gov/ தளம் தற்போது 40 பெரிய விமான நிலையங்களில் உள்ள நிலவரத்தை காண்பிக்கிறது.

இவை தவிர http://www.flightarrivals.com/, http://www.flightview.com/, http://www.flytecomm.com/ போன்ற தளங்களும் விமான நேரங்களையும், தாமதங்களையும் மற்றும் கடைசி நேர மாற்றங்களையும் காண்பிக்கின்றது.

Saturday, October 21, 2006

தீபாவளி வாழ்த்துக்கள்!

உங்களுக்கு என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

Sunday, October 15, 2006

பங்கு சந்தைகளின் நிலவரம்

பெட்ரோல் விலை உயர்வால் ஆட்டம் கண்ட உலக பங்கு சந்தைகள் தற்போது ஓரளவு சுவாசிக்க ஆரம்பித்து விட்டன. கச்சா எண்ணை விலை குறைந்தே கொண்டே வருகின்றது. அமெரிக்க நகரங்களில் $3க்கு குறைவாக பெட்ரோல் விற்பது ஒரு அதிசயம். Dow குறியீடு 11960 லெவலுக்கு போய் விட்டது. 12000 எட்டும் தூரம் தான். ரொம்ப நாட்களாக அடி பட்டு கிடந்த Nasdaq கூட கொஞ்சம் தட்டு தடுமாறி 2357க்கு வந்திருக்கின்றது.

இந்திய பங்கு சந்தை ஒரு கலக்கு கலக்குகின்றது. அமெரிக்க பங்கு சந்தையில் உள்ள optimism உலக சந்தைகள் அனைத்திலும் தெரிகின்றது. சீன சந்தையில் அவ்வளவு உற்சாகம் தெரியவில்லை என்றாலும் அவர்களின் வர்த்தகம் முன்பை விட சிறப்பாக இருக்கின்றது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் BRIC (Brazil, Russia, India and China) Fund என்று பரஸ்பர நிதிகள் ஆரம்பித்தார்கள். இதில் முதலீட்டு செய்தவர்கள் சமீப வாரங்களில் லாபம் பார்க்கிறார்கள்.

Emerging markets fund அனைத்தும் இந்த வருடம் கவர்ச்சியான லாபம் தரவில்லை. அமெரிக்க வட்டி விகிதம் இனிமேல் ஏறாமலிருந்தால் இந்த நிலைமை மாறும். அப்படியே மாறினாலும் முன் போல வருடத்திற்கு 40% லாபம் கிடைக்கும் வாய்ப்பு மிக குறைவு.

பெட்ரோல் விலையை தவிர அமெரிக்க ரியல் எஸ்டேட் மார்க்கெட்டும் தற்போதைய பங்கு சந்தை உயர்வுக்கு காரணம். வட்டி விகிதம் உயர்ந்து ரியல் எஸ்டேட் சரிய ஆரம்பித்து விட்டதால் அதில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை அதிலிருந்து எடுத்து பங்கு சந்தையில் போட ஆரம்பித்து விட்டார்கள். 2001-02 வருடங்களில் இதற்கு எதிர்மறையாக நடந்தது. அப்போது பங்கு சந்தையிலிருந்து பணம் ரியல் எஸ்டேட்டை நோக்கி ஓடியது. அந்த பணம் இப்போது திரும்பி வருவதால் அமெரிக்க பங்கு சந்தையில் உற்சாகம் தெரிகின்றது. வரும் வாரங்களில் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் லாப நஷ்ட கணக்குகளை அறிவிக்க போகின்றன. இந்த நிறுவனங்களின் லாபங்கள் திருப்திகரமாக இருந்தால் அமெரிக்க பங்கு சந்தை இன்னும் உயரும். அந்த தாக்கம் இந்திய பங்கு சந்தையிலும் தெரியும்.

Wednesday, October 11, 2006

யாரைத்தான் நம்புவதோ?!

சிறந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கினாலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை! HP, Apple போன்ற நிறுவனங்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வந்த நிறுவனங்கள். இவற்றின் பங்குகள் இந்த வருடத்தில் நல்ல லாபம் கொடுத்தது. மார்க் ஹர்ட் HP நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பொறுப்பு எடுத்துக் கொண்ட பிறகு நிறுவனத்தின் லாபமும் மரியாதையும் பல மடங்கு உயர்ந்தது. ஸ்டீவ் ஜாப்ஸின் கிரியேட்டிவ் திறமையால் ஆப்பிள் நிறுவனம் சக்கை போடு போட்டது.

சில வாரங்களுக்கு முன்பு பெரும்பாலான முதலீட்டாளர்கள் பார்வையில் இந்த இரு நிறுவனங்களும் “மிக பாதுகாப்பான முதலீட்டிற்கு” உரியதாக இருந்தது. இப்போது நிலைமை மாறிவிட்டது.

HP நிறுவனம் தன் போர்டு மீட்டிங்கில் பேசப்பட்ட சில ரகசியங்களை வெளியே விட்டது யார் என்று போன வருடம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை நடத்தப்பட்ட விதம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி விட்டது. HP நிறுவனத்தோடு contract வைத்துள்ள ஒரு security நிறுவனம் சில சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு பல விபரங்களை சேகரித்ததால் HP நிறுவனத்தின் சேர்மன் உட்பட பலரின் தலை உருண்டு விட்டது. சிலருக்கு சிறைத்தண்டணை கூட கிடைக்கலாம். இந்த நிகழ்ச்சியால் HP பங்கின் விலை ஊஞ்சலாடுகின்றது.

ஆப்பிள் நிறுவனம் தன் கணக்கு விபரங்களில் தில்லுமுல்லு செய்த விஷயம் இப்போது வெளிச்சத்துக்கு வருகின்றது. மேலதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட stock optionகளில் வேண்டுமென்றே விலை குறைத்து கொடுத்திருக்கிறார்கள். இப்படி கொடுத்ததன் மூலம் இந்த அதிகாரிகள் நிறைய லாபம் பார்த்திருக்கிறார்கள். இது போல இன்னொரு தில்லுமுல்லு நடந்த நிறுவனம் McAfee; இதன் தலைமை அதிகாரிகள் இன்று வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.

இது போன்ற நிகழ்ச்சிகள் நம்மை போன்ற முதலீட்டார்களுக்கு ஒரு wake-up call. நமக்கு பிடித்த ஒரு நிறுவனம் தவறே செய்யாது என்று நினைத்து விடக்கூடாது. எந்த நிறுவனத்தில் முதலீடு செய்தாலும் தொடர்ந்து அதை கண்காணித்து வருவது தான் நம் பணத்துக்கு நல்லது.

Friday, September 29, 2006

60 நாட்களில் 25% லாபம்!

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். 60 நாட்களில் 25% லாபம் கிடைக்குமா? முடியும், ஆனால் மிக கடினம். 60 நாட்களில் 25% லாபம் கிடைத்தால் ஒரு வருடத்தில் 150% லாபம் கிடைக்கும். நீங்கள் 10,000 ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் 25,000 ரூபாய் திரும்ப கிடைக்கும்! இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் படித்தவர்கள் கூட பணத்தை இழந்து தவிக்கிறார்கள்.

ஜார்ஜியா மாநிலத்தில் அட்லாண்டா நகரில் பின்னாக்கிள் டெவலப்மென்ட் என்ற நிறுவனம் உள்ளது. கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகள் பலவற்றிலும் “அறுபதே நாட்களில் 25% லாபம்” என்று இவர்கள் விளம்பரம் கொடுத்தார்கள். “Foreclosure செய்யப்பட்ட வீடுகளை வாங்கி அதை புதுப்பித்து சில நாட்களில் விற்று வருகின்றோம். இவற்றில் சூப்பர் லாபம் உள்ளது. உங்கள் பணத்தை எங்களிடம் முதலீடு செய்தால் அறுபதே நாட்களில் 25% லாபம் கிடைக்கும்” என்பது அவர்கள் விளம்பரத்தின் சாராம்சம். ரியல் எஸ்டேட்டில் பணத்தை அள்ள வேண்டும் என்ற ஆசையில் உள்ளவர்கள் தங்கள் பணத்தை கோடிக்கணக்கில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள்.

அவ்வளவு பணமும் கோவிந்தா… பின்னாக்கிள் நிறுவனம் சில வீடுகளை வாங்கி அதை தனக்கே விற்று விட்டு லாபம் வந்ததாக பாவ்லா காட்டி வந்திருக்கின்றது. உதாரணமாக அட்லாண்டாவில் ஒரு அபார்ட்மென்ட்டை டிசம்பர் 2005-ல் $300,000க்கு வாங்கியது. மூன்று மாதங்கள் கழித்து $389,000க்கு அந்த வீட்டை விற்றது. வாங்கியவர் பின்னாக்கிள் நிறுவனத்தை சேர்ந்தவர். இது போன்று நிறைய வீடுகளை வாங்கி அதிக விலைக்கு விற்றதாக கணக்கு காட்டி வந்திருக்கின்றார்கள். சில வீடுகளை $450,000க்கு வாங்கி பல மில்லியன்களுக்கு விற்றதாகவும் கணக்கு காட்டியிருக்கிறார்கள்.

இந்த fraud scheme-ல் ஆரம்பித்தில் முதலீடு செய்தவர்களுக்கு 25% லாபம் கொடுத்திருக்கிறார்கள். இவர்களுக்கு பின் சேர்ந்தவர்கள் கொடுத்த பணத்தை எடுத்து முதலில் சேர்ந்தவர்களுக்கு லாபமாக கணக்கு காட்டி கொடுத்திருக்கிறார்கள். இது சட்ட விரோதமானது. இப்படி செய்வதற்கு Ponzi Scheme என்று பெயர். பெரும்பாலான நாடுகளில் Ponzi கிரிமினல் குற்றம்.

பின்னாக்கிள் நிறுவனத்தை FBI மற்றும் பல மாநில சட்ட துறைகள் விசாரணை செய்து வருகின்றன. இந்த நிறுவனத்தின் முதலாளிகளுக்கு தண்டனை கிடைக்கும், ஆனால் முதலீட்டாளர்களின் பணம் திரும்ப கிடைக்குமா? சந்தேகம் தான்.

Wednesday, September 20, 2006

ஆப்ஷனால் அழிந்தது ஐந்து பில்லியன் டாலர்கள்

ஆப்ஷனில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தெரிந்தாலும் தன் மேல் உள்ள அதீத நம்பிக்கையால் பணத்தை இழப்பவர்கள் நிறைய பேர். சமீபத்திய உதாரணம் பிரையன் ஹன்டர். இவர் அமெரிக்காவில் இருக்கும் அமராந்த் என்ற நிறுவனத்தின் Energy trading desk-ன் தலைவர். 32 வயது தான் ஆகிறது. போன வாரத்தில் மட்டும் 5 பில்லியன் டாலர் இழந்திருக்கிறார். கிட்டத்தட்ட 22500 கோடி!

இயற்கை எரிவாயு (Natural Gas) விலை எங்கே போகும் என்று அனுமானித்து பல கோடி பந்தயம் கட்டுவது தான் பிரையனின் வேலை. இயற்கை வாயுவின் விலை மேலே எகிறும் என்று பல பில்லியன்களை வைத்து விளையாடியிருக்கிறார். போன வாரம் விலை சறுக்கி விட்டதால் 5 பில்லியன் டாலர் நஷ்டம்.

இவ்வளவு நஷ்டமும் அமராந்த் நிறுவனத்துக்கு தான். இந்த நிறுவனம் பிரையனை இன்னும் வேலையிலிருந்து தூக்கவில்லை. அவர் எப்படி இவ்வளவு பணம் இழந்தார் என்ற விசாரணை முடிந்த பிறகு அவர் கதி என்ன என்று தெரியும். எது நடந்தாலும் பிரையனுக்கு அதிக கவலையிருக்காது, ஏனென்றால் அவரின் போன வருட சம்பளம் மட்டுமே 75 மில்லியன் டாலர்கள்!

Friday, September 15, 2006

அமெரிக்க ரியல் எஸ்டேட்

அமெரிக்க ரியல் எஸ்டேட் நீர்க்குமிழி உடைந்து விட்டது. இது உடையும் நேரம் வந்து விட்டது என்று 11 மாதங்களுக்கு முன்னால் எழுதியிருந்தேன். அமெரிக்கா முழுதும் Foreclosures (இந்த வார்த்தைக்கு தமிழ் வார்த்தை கண்டு பிடிக்க முடியவில்லை, வீட்டுக்கு கொடுக்கப்படும் மஞ்சள் கடிதாசி என்று சொல்லலாம் – ஆனால் அது கொச்சையாக உள்ளது) அதிகமாகி உள்ளது.

கலிபோர்னியா, இர்வின் நகரில் உள்ள RealtyTrac என்ற நிறுவனத்தின் புள்ளிவிபரப்படி 115,292 வீட்டு சொந்தக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் Foreclosures செய்திருக்கிறார்கள். ஜூலை மாதத்தில் செய்யப்பட்ட Foreclosures-ஐ விட இது 24% அதிகம். ஆகஸ்ட் 2005 ல் செய்யப்பட்ட Foreclosures-ஐ விட இது 53% அதிகம்.

உங்களிடம் முதலீடு செய்ய பணமிருந்தால் Foreclosure ஆகியிருக்கும் அல்லது Foreclosure-ல் நுழையும் வீட்டை வாங்கி அதை புதுப்பித்து விற்றால் நல்ல காசு பார்க்கலாம். Foreclosure ஆகும் வீடுகளின் விலை குறைவாக இருக்கும். உதாரணமாக சான் பிரான்ஸிஸ்கோவில் 1000 சதுர அடி வீடு $700,000 விலைக்கு விற்கிறது. அதே ஏரியாவில் Foreclosure-ல் இருக்கும் 1000 சதுர அடி வீட்டை $450,000 - $500,000 விலைக்கு வாங்கலாம்.

Foreclosure பற்றி இது வரை நீங்கள் கேள்விப்படாமலிருந்தால் இந்த முதலீட்டில் விளையாடாமல் இருப்பது நல்லது. இதை பற்றி உங்களுக்கு விபரம் தெரிந்திருந்து உங்கள் லோக்கல் மார்க்கெட் பற்றியும் அறிந்திருந்தால் தைரியமாக இறங்கலாம். Foreclosure.com போன்ற தளங்கள் உங்கள் ஊரில் உள்ள Foreclosures பற்றி மேலும் விபரங்கள் தரும்.

Foreclosures-ல் லாபமிருப்பதால் இது பற்றி training கொடுப்பதாக கூறி நிறைய பேர் காசு பறிக்கிறார்கள். அவர்களிடம் மாட்டி விடாதீர்கள். வீடுகளை கவனமாக பார்த்து வாங்குங்கள். வாங்கிய சில வாரங்களில் விற்று விட்டால் நல்லது. உங்களுக்கு சொந்தமாக வீடு தேவைப்பட்டால் Foreclosure ஆன வீட்டை வாங்கி புதுப்பித்து கொண்டால் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

Microsoft, Google போன்ற அதிக பளு உள்ள நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் இந்த விளையாட்டில் இறங்க வேண்டாம். உங்களுக்கு நேரமே இருக்காது. Foreclosure பற்றி training கொடுக்கும் அத்தனை பேரும் சொல்வது “நீங்கள் வாரத்துக்கு 4 மணி நேரம் இதில் வேலை செய்தால் போதும், பணம் மழையாக கொட்டும்” என்பது தான். உலக மகா பொய் அது. வாரத்துக்கு குறைந்தது 16 மணி நேரம் இதில் உழைக்க வேண்டும்.

அதெல்லாம் சரி, சொந்தமாக இப்போது வீடு வாங்கலாமா, இல்லையா? அமெரிக்க வட்டி விகிதம் இனி மேலும் கூடுவதற்கு வாய்ப்புகள் குறைவு. நீங்கள் வாங்க போகும் வீட்டில் குறைந்த பட்சம் மூன்று வருடங்கள் இருப்பதாக இருந்தால் வாங்கலாம். இல்லாவிடில் வாடகைக்கு இருப்பது தான் நல்லது.

Monday, September 04, 2006

பணத்தை சேமிக்க பல வழிகள்

இதில் உள்ள பெரும்பாலான கருத்துக்கள் உலகம் முழுதும் பொருந்தும். அமெரிக்காவிற்கு மட்டும் பொருந்த கூடிய கருத்துகளில் (US) என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

1. தேவையில்லாத கட்டணங்களை தவிர்த்து விடுங்கள். உதாரணமாக உங்கள் ATM network-க்கு வெளியே உள்ள ATM-லிருந்து பணம் எடுக்காதீர்கள். உங்கள் வங்கி மாதாந்திர கட்டணம் வசூலித்தால் அது போன்ற கட்டணம் இல்லாத கணக்குக்கு மாறுங்கள் அல்லது வங்கியை மாற்றுங்கள்.

2. உங்கள் வங்கியில் automatic bill pay வசதி இருந்தால் பயன்படுத்தி கொள்ளுங்கள். பெரும்பாலான வங்கிகளில் இந்த வ்சதி இலவசம். கிரடிட் கார்டு late fee-ஐ தவிர்க்கலாம்.

3. உங்கள் வீட்டுக்கு loan வாங்கியிருந்தால் refinance செய்வதன் மூலம் வட்டி விகிதத்தை குறைக்க முடியுமா என்று பாருங்கள்.

4. உங்களுக்கு கல்லூரி லோன் பல வங்கிகளில் இருந்தால் அத்தனை லோன்களையும் ஒரே லோனாக ஒரு வங்கியில் வாங்குவதன் மூலம் பணம் மிச்சமாகும்.

5. கிரடிட் கார்டு பில், வங்கி ஸ்டேட்மென்ட் போன்றவற்றை அப்படியே குப்பையில் போடாதீர்கள். Shredder-ல் போட்டால் identity theft-ஐ தவிர்க்கலாம். உங்களிடம் shredder இல்லையென்றால், முக்கியமான பேப்பர்களை எட்டு பங்காக கிழித்து அவற்றை வெவ்வேறு குப்பை கூடைகளில் போடுங்கள். (இந்த தொல்லைக்கு பேசாமல் shredder-ஐ வாங்கி விடலாம்)

6. உங்களுக்கு தேவையில்லாமல் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் பழைய சாமான்களை விற்று விடுங்கள். Garage sale போடலாம் அல்லது Classifieds இணைய தளங்களில் விற்கலாம்.

7. உபயோகம் செய்யாத நேரங்களில் லைட் பல்புகளை off செய்யுங்கள்.

8. உங்கள் TV Cable-க்கு எவ்வளவு செலவாகிறது என்று கணக்கு பாருங்கள். 100 சேனல்களை வைத்துக் கொண்டு வெறும் CNBC மட்டும் பார்த்து கொண்டிருந்தால் உங்கள் cable plan-ஐ மாற்றி பணத்தை மிச்சப்படுத்துங்கள்.

9. செல் போனில் குறைவாக பேசுங்கள். குறிப்பாக SMS அனுப்பும் முன் எவ்வளவு கட்டணம் என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்தியாவில் சில டிவி சேனல்களுக்கு அனுப்பும் SMS-களின் கட்டணம் அதிகம்.

10. மருந்துகளை மாதக்கணக்கிற்கு வாங்குவதாக இருந்தால் mail-order prescription program மூலம் வாங்குங்கள். (US)

11. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் முன் Comparison shopping sites-களில் ஆராய்ச்சி செய்து எந்த கம்பெனியில் குறைவான விலை என்று பார்த்து வாங்குங்கள். இது போன்ற தளங்களில் வாடிக்கையாளர்களின் feedback-ம் இருப்பதால் நிறுவனங்களின் சேவை தரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

12. Best Buy, Tiger direct போன்ற கடைகளின் online coupons-ன் மூலமாக குறைந்தது 5% மிச்சப்படுத்தலாம். இந்த தளங்களிலேயே கூப்பன் உள்ளது. இல்லாவிடில் கூகிளில் தேடிப்பாருங்கள். (US)

13. கிரடிட் கார்டை தேர்ந்தெடுக்கும் போது rewards உள்ள கார்டுகளை வைத்துக் கொள்வது நல்லது. பல வருடங்களாக Yahoo Visa கார்டை வைத்திருக்கிறேன். ஒவ்வொரு டாலருக்கும் ஒரு பாய்ன்ட் தருகிறார்கள். 10,000 பாய்ன்ட்கள் சேர்ந்தால் 100 டாலருக்கான கூப்பன் இலவசம். கடந்த சில வருடங்களில் நான் வாங்கிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சில இந்த கிரடிட் கார்டு மூலம் இலவசமாக கிடைத்தவை.

14. விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முன் Consumer Reports போன்ற பத்திரிகைகளை படித்து தரமுள்ள பொருட்களை வாங்குங்கள். (US)

15. பசியுடன் இருக்கும் போது shopping செய்யாதீர்கள். கண்ணில் படும் அத்தனை சாப்பாட்டு பொருட்களை வாங்க தோன்றும்.

16. இந்த கருத்தை சம்பந்தப் பட்டவர்கள் அலட்சியப் படுத்த போகீறார்கள். இருந்தாலும் சொல்கிறேன்: சிகரெட், ஆல்கஹால் போன்றவற்றை நிறுத்தினாலே வருடத்திற்கு பல்லாயிரம் ரூபாய்களை மிச்சப்படுத்தலாம்.

17. There is no free lunch. இருந்தாலும் free lunchக்கு ஒரு வழி உள்ளது. US-ல் 0% வட்டி கிரடிட் கார்டுகள் சில உள்ளது. இவற்றில் ஒன்றை வாங்கி கிரடிட் கார்டிலிருந்து பேலன்ஸ் டிரான்ஸ்பர் செய்து Netbank போன்ற வங்கிகளில் CD-ல் முதலீடு செய்தால் கிடைக்கும் அத்தனை வட்டியும் லாபம். Discover card ஒன்று 0% வட்டிக்கு ஒரு வருடத்துக்கு கிடைத்தது. $8,000 லிமிட் கொடுத்தார்கள். அந்த எட்டாயிரம் டாலரையும் பேலன்ஸ் டிரான்ஸ்பர் செக் மூலம் என் வங்கி கணக்குக்கு மாற்றிக் கொண்டேன். NetBank-ல் ஒரு வருட CDக்கு 4.85% வட்டி கொடுத்தார்கள். Discover card-லிருந்து கிடைத்த எட்டாயிரத்துக்கு வேறு எந்த கட்டணமும் (Ex: Balance transfer fee) கிடையாது. இதில் ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால் ஒரு வருடம் முடியும் போது மொத்த பணத்தையும் மறக்காமல் Discover card-க்கு கட்டி விட வேண்டும். இல்லையென்றால் வட்டி விகிதம் 0% லிருந்து 18%க்கு எகிறி போய் விடும்.

18. சம்பளத்திலிருந்து பணத்தை நேரடியாக சேமிப்பில் போடுங்கள். US-ல் வசிப்பவராக இருந்தால் 401kல் பணத்தை முதலீடு செய்யுங்கள். நம்மவர்கள் அதிகமாக இருக்கும் பெரும்பாலான நாடுகளில் automatic investment plans உள்ளது. இவற்றின் மூலம் பணம் நம் கைக்கு வராமல் நேராக சேமிப்புக்கு அல்லது முதலீட்டுக்கு போய் விடும்.

Thursday, August 31, 2006

ரிமோட் பார்க்கிங்

காரிலிருந்து கொண்டே ரிமோட் மூலமாக கராஜ் கதவை திறப்பது என்பது எல்லோரும் செய்கிறார்கள் – என் போல ஆட்களை தவிர. எப்போதும் அபார்ட்மென்ட்டிலே வசிப்பதால் எனக்கு அந்த luxury இன்னும் கிடைக்கவில்லை. இப்போது சில கார்களில் ரிமோட் மூலமாக காரை பார்க் செய்வதே சாத்தியமாகி உள்ளது.காரை எங்கே நிறுத்த வேண்டுமென்று ஆசைப்படுகிறோமோ அந்த இடத்துக்கு முன்பே காரை நிறுத்தி விட்டு, காரிலிருந்து இறங்கி ரிமோட் மூலமாகவே காருக்கு கமாண்ட் கொடுத்தால் கார் தன்னைத்தானே நிறுத்திக் கொள்ளும். மனிதர்கள் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு எவ்வளவு தள்ளாடுகிறார்கள். கார்கள் அந்த வேலையை அநாயசமாக செய்ய ஆரம்பித்து விட்டன. சில luxury கார்களில் தான் இந்த வசதி இப்போது உள்ளது. இன்னும் சில வருடங்களில் கரோல்லா போன்ற கார்களில் கூட இந்த வசதி கிடைக்க வாய்ப்புள்ளது. காரை பார்க் செய்யக் கூடவா டெக்னாலஜி தேவைப்படுகிறது என்று எனக்குள்ளே நான் முணுமுணுத்தாலும் சான் பிரான்சிஸ்கோ நகர சாய்வு சாலைகளில் பேரலல் பார்க்கிங் செய்வதற்கு இந்த டெக்னாலஜி உதவினால் பரவாயில்லை.

Monday, August 14, 2006

இந்திரா நூயி

கேட்க சந்தோஷமாக இருக்கிறது. நம் ஊர் பெண்மணி பெப்ஸியின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது ஒரு மகத்தான சாதனை. சென்னையில் பிறந்து வளர்ந்து, படித்து அமெரிக்காவின் வெள்ளையர்களுக்கு நடுவே சாதாரண வேலை பார்ப்பதே கொஞ்சம் கடினம். Glass Ceiling என்பது நிதர்சனமான உண்மை. இந்த சூழ்நிலையில் CEO நிலைக்கு இந்திரா உயர்ந்திருக்கிறார், அதுவும் பெப்ஸி போன்ற நிறுவனத்தில். My Hearty Congratulations to you Mrs. Nooyi!

சில மாதங்களுக்கு முன்னால் கொலம்பியா கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் இந்திரா உரையாற்றினார். சுத்தமாக சொதப்பி விட்டார். அமெரிக்காவை நடு விரலுக்கு ஒப்பிட்டு பேசி பெரிய ரகளையாகி விட்டது. (அமெரிக்காவில் நடு விரலை உயர்த்தி காண்பித்தால் நம் ஊர் சேரி வார்த்தைகளை வாய் திறந்து சொல்லாமலே சொல்வதற்கு சமம்). இந்திரா இந்தியாவில் பிறந்ததால் தான் இப்படி பேசி விட்டார் என்று அமெரிக்க மாணவர்கள் கொதித்து எழுந்து விட்டார்கள். விபரங்களுக்கு இங்கு பார்க்கவும்.

இந்த ஒரு நிகழ்ச்சியினால் இந்திராவுக்கு CEO பதவி கிடைப்பது சந்தேகம் தான் என்று நினைத்திருந்தேன். இதை பெரிது செய்யாமல் பெப்ஸி போர்டு முதிர்ச்சியுடன் செயல்பட்டிருக்கிறது. இதே போன்ற ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்திருந்தால், பெப்ஸிக்கு பதிலாக டாடா சன்ஸ், இந்திராவுக்கு பதிலாக ஒரு அமெரிக்கர் என்று இடங்கள் மாறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! மரங்களை வெட்டி, வெட்டி வேலைகள் செய்த ஒருவர் முகம் எனக்கு நினைவுக்கு வருகிறது.

Monday, July 24, 2006

Vishing, Vishing...

“Phishing” என்ற பெயரில் சிலர் நம் உயிரை எடுத்தார்கள். இப்போது “Vishing” என்ற டெக்னிக்கை பயன்படுத்தி சிலர் கிளம்பியிருக்கிறார்கள். உங்கள் வங்கியிலிருந்து உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். “உங்கள் கணக்கில் சில பிரச்னைகள் உள்ளது. 1800-123-4567 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளவும்” என்று அவசரமான அழைப்பு இருக்கும். அந்த நம்பரை நீங்கள் தொடர்பு கொண்டால் automated voice system உங்களது வங்கி கணக்கு நம்பரை தொலைபேசியில் அழுத்த சொல்லும். அப்புறம் உங்கள் Pin numbers-ஐ கேட்கும். வெகுளியாக அதையும் நீங்கள் கொடுத்து விட்டால் அடுத்த சில நாட்களில் உங்கள் வங்கி கணக்கின் இருப்பு குறைந்து விடும். நீங்கள் டயல் செய்த எண்ணை வைத்திருப்பவர்கள் ரஷ்யாவிலோ பிரேசிலிலோ உட்கார்ந்து கொண்டு நம்மை சுத்தமாக மொட்டை அடித்து விடுகிறார்கள்.

இந்த மாதிரி பிராடு மின்னஞ்சல்களுக்கு “Vishing” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். Phishing + Voice system = Vishing. உங்கள் வங்கியிலிருந்தோ அல்லது Paypal, Ebay போன்ற நிறுவனங்களிலிருந்தோ இது போன்ற மின்னஞ்சல்கள் வந்தால் உங்கள் வங்கியின் கிரடிட் கார்டு அல்லது ஸ்டேட்மென்ட்டில் உள்ள எண்களை டயல் செய்து விசாரிக்கவும். மின்னஞ்சல்களில் உள்ள எண்களை நம்ப வேண்டாம். VOIP டெக்னிக்கை பயன்படுத்தி சில நேரங்களில் உங்கள் ஏரியா கோடு உள்ள நம்பர்கள் கூட இந்த மின்னஞ்சல்களில் வரலாம். ஆனால் அந்த நம்பர்களை மானிட்டர் செய்யும் ஆட்கள் பல ஆயிரம் மைல்கள் தள்ளி இருக்கலாம்! Skype, Vonage போன்ற நிறுவனங்களின் சேவைகளை உபயோகித்து இது போல செய்வது மிக சுலபம்!

Sunday, July 16, 2006

இந்திய பங்கு சந்தை - Update

இந்திய பங்கு சந்தை பற்றி ஜனவரி 29 அன்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். நான் எதிர்பார்த்தபடி இந்திய பங்கு சந்தை பலத்த அடி வாங்கி விட்டது. எத்தனை அமெச்சூர் ட்ரேடர்கள் பணத்தை இழந்தார்களோ தெரியவில்லை. இப்போது பங்குகள் ஓரளவுக்கு மேலே வருகின்றன. நல்ல கம்பெனிகளில் நீண்ட கால முதலீடு செய்ய இது நல்ல தருணம். Short-term traders இது போன்ற சமயங்களில் பெரும்பாலும் பணத்தை இழப்பார்கள்.

இன்போசிஸ் நிறுவனம் நல்ல ரிசல்ட் கொடுத்துள்ளது. இன்னும் கொஞ்சம் விலை குறைந்த பிறகு அதை வாங்குவது நல்லது. இன்போசிஸ் போன்ற நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் சம்பளம் கூடி கொண்டே போகின்றது. இந்திய ரூபாயின் மதிப்பு போன வருடத்தை விட குறைந்திருப்பதால் இன்போசிஸ் ரிசல்ட்டில் அதிக சம்பளத்தின் தாக்கம் தெரியவில்லை. இதே ரேட்டில் இந்தியாவில் சம்பளம் ஏறிக்கொண்டே போனால், இன்னும் சில வருடங்களில் Outsourcing contracts-ல் பெரும்பாலானவை சீனாவுக்கும் தெற்கு அமெரிக்காவுக்கும் போய் விடும். குறைந்த செலவுக்காக மட்டுமல்லாது நம் மக்களின் திறமைக்காக தான் நிறைய நிறுவனங்கள் இந்தியாவில் காண்ட்ராக்ட் கொடுக்கின்றன. ஆனாலும் சம்பளம் ஒரு அளவுக்கு மேல் ஏறினால் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் வேறு நாடுகளை தேடி செல்ல வாய்ப்பு உள்ளது. Infosys, Wipro, TCS போன்ற பங்குகளை நீங்கள் வைத்திருந்தால் இந்தியாவில் programmers-க்கு கொடுக்கப்படும் சம்பள விபரங்களை தொடர்ந்து கண்காணித்து வாருங்கள்.

குறிப்பு: சில வாரங்களாக எழுதுவதற்கு நேரம் கிடைக்க வில்லை. வியாபார வேலையாக நாடு விட்டு நாடு அலைய வேண்டியதாகி விட்டது. இனிமேல் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

Thursday, May 18, 2006

தொழில் தொடங்க பணம் தேவையா?

தொழில் ஆரம்பித்து வெற்றி கண்ட அனைவருக்கும் ஆரம்பத்தில் ஒரு சின்ன பொறி தட்டியிருக்கும். ஆங்கிலத்தில் அதை "aha moment" என்று சொல்வார்கள். காதல் வயப்பட்டது போல இருக்கும். வேறு எதுவும் சிந்திக்க தோன்றாது. தனக்கு வந்த ஐடியாவை வைத்து எப்படி பணம் சம்பாதிப்பது என்று பல கனவுகள் வரும். இந்தக் கட்டங்களை தாண்டிய பிறகு வியாபார திட்டங்கள் தயாரிப்பார்கள். அதில் உள்ள net profit நம்பர்கள் போதை கொடுக்கும். ஆனால் வியாபார முதலீடுக்கான பணம் கையில் இருக்காது. Venture capitalists பலருக்கு தங்கள் வியாபார திட்டங்களை அனுப்புவார்கள். பதிலே இருக்காது. பிறர் ஐடியாக்களை திருடிக் கொள்ளும் VCக்களும் உண்டு. சில மாதங்கள் அல்லது வருடங்கள கழித்து ஒரு நல்ல break கிடைக்கும். அந்த சமயத்தில் ஒரிஜினல் ஐடியா outdated ஆகியிருக்கும்.

உங்களிடம் சூப்பர் ஐடியாக்கள் இருந்து அந்த கனவை நினைவாக்கும் திறமையும் இருந்தால் தமிழ்நிதி at ஜிமெயில்.காம் முகவரிக்கு உங்கள் வியாபார திட்டத்தை அனுப்புங்கள். உங்கள் திட்டமும் எங்கள் எதிர்பார்ப்பும் ஒரே அலைவரிசையில் இருந்தால் உங்கள் வியாபாரத்துக்கு முதலீடும் வழிகாட்டுதலும் நிச்சயம் கிடைக்கும்.

நீங்கள் இந்தியாவில் வசிப்பராக இருக்க வேண்டும். உங்கள் திட்டங்கள் கீழ்க்கண்ட துறைகளை சார்ந்திருந்தால் நல்லது.

Software products
Banking related products
Travel related industries

Cottage industries போன்ற சமாசாரங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். வெறும் ஐடியாக்களை மட்டும் அனுப்பாதீர்கள். வியாபார திட்டம் (Business Plan) தயாரித்து அனுப்புங்கள். குறிப்பிட்ட துறையில் உங்கள் அனுபவம் பற்றிய விபரங்கள் அவசியம்.

உங்கள் ஐடியாக்களை பின்னூட்டத்தில் எழுதாதீர்கள். அதை மற்றவர்கள் சுட்டு விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல!

Sunday, April 23, 2006

தண்ணீர், தண்ணீர்

பல ஆயிரங்களுக்கு முன்னால் இருந்த அளவுக்கு இப்போதும் தண்ணீர் உள்ளது. ஆனால் அதை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி விட்டது. இன்னும் 20 வருடங்களில் பெரும்பாலான நாடுகளில் தண்ணீர் பஞ்சம் வர நிறைய வாய்ப்புள்ளது என்று சிலர் பயமுறுத்திறுகிறார்கள். தண்ணீரை மையமாக வைத்து வியாபாரம் செய்யும் சில நல்ல நிறுவனங்களில் முதலீடு செய்தால் லாபம் வர வாய்ப்புள்ளது.

அமெரிக்க சந்தையில் ட்ரேடாகும் சில நல்ல நிறுவனங்கள்:

SWWC -- Southwest Water Company -- இந்த நிறுவனம் தண்ணீர் வினியோகிப்பது, தண்ணீரை சுத்தப்படுத்துதல் போன்ற சேவைகளில் சிறந்தது.

WTR -- Aqua America -- இந்த நிறுவனம் அமெரிக்காவின் பல மாநிலங்களில் தண்ணீர் வினியோகம் செய்கிறது.

PHO -- Powershares Water Resources -- இது தனி நிறுவனமல்ல, இது ஒரு ETF. தண்ணீர் சம்பந்தமான பல பங்குகளில் இந்த ETF முதலீடு செய்கிறது.

அரபு நாடுகள் இன்று செல்வத்தில் மிதக்க முக்கியமான காரணம் எண்ணெய். இன்னும் 20, 30 வருடங்களில் எண்ணெய் தட்டுப்பாட்டை விட தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்தால் அமெரிக்காவிடம் தண்ணீருக்காக அரபு நாடுகள் கையேந்தும் என்று Maine மாநிலத்து அரசு அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்! இந்த மாநிலத்தில் உள்ள தண்ணீர் வளம் மிக அதிகம்.

தண்ணீர் தவிர சூரிய சக்தியை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முயற்சி செய்யும் சில நிறுவனங்கள்:

SPWR -- Sunpower Corporation
CPST -- Capstone Turbine Corporation


மேலே கண்ட எந்த பங்குகளிலும் நான் இது வரை முதலீடு செய்யவில்லை. சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்னால் என் நண்பரின் மூலம் கேள்விப்பட்ட நிறுவனம் MMGG.OB (Metalling Mining Company). $1.05க்கு வாங்கிய பங்குகள் $2.44க்கு விற்கிறது. இந்த பங்குகள் நிச்சயமாக இன்னும் மேலே போகும் என்று நண்பர் நம்புகிறார், கிட்டத்தட்ட 100,000 பங்குகளை வாங்கி வைத்திருக்கிறார். இவர் வாங்கிய விலை $0.80!

Friday, March 31, 2006

ஒளிமயமான எதிர்காலம்

நான் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற தீராத ஆசை உண்டு. கல்லூரி முடித்த சில மாதங்களில் சென்னை சோழாவில் "சிங்கப்பூரில் வியாபாரம் செய்து வெற்றி பெறுவது எப்படி?" என்று ஒரு கருத்தரங்கம் நடந்தது. மூன்று நாட்கள் கருத்தரங்கத்தில் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். நான் சிங்கப்பூரில் எந்த தொழிலும் தொடங்க வில்லை. ஆனாலும் வியாபாரத்திலும் வாழ்க்கையிலும் வெற்றி பெற துடிப்பவர்களுடன் சேர்ந்து சில விஷயங்களை கற்றுக் கொண்டது பிற்காலத்தில் உபயோகமாக இருந்தது.

இப்போது காலம் மாறி விட்டது. இந்தியாவில் வியாபாரம் செய்வது பற்றி சிங்கப்பூரில் கருத்தரங்கம் நடத்துகிறார்கள்.இந்தியாவின் எதிர்காலம் மிக பிரகாசகமாக இருக்கும் என்று உலகத்தில் உள்ள அத்தனை கன்சல்டன்ஸிகளும் ஒருமித்த குரல் கொடுத்திருப்பதால் வந்த நம்பிக்கை. பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சந்தோஷமாக இருக்கிறது.

கலிபோர்னியா மாநிலத்தில் சான்டா கிளாரா நகரத்தில் இன்று (ஏப்ரல் 6) இதே போன்ற ஒரு கருத்தரங்கம் (“Next Generation Outsourcing & the Coming Wave in India”) நடந்தது. டிக்கெட்டுகள் அத்தனையும் திங்களன்றே விற்று விட்டது!

Friday, March 24, 2006

சக்தி கொடு!

இன்னும் சில வருடங்களில் உலகம் முழுதும் இருக்க போகிற பிரச்னைகள் - தண்ணீர் & மின் சக்தி. இவற்றை உற்பத்தி செய்யும் அல்லது வினியோகிக்கும் நிறுவனங்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. மின்சக்தியை உற்பத்தி செய்ய புது உத்திகள் கண்டுபிடிப்பவர்களுக்கு இன்னும் சிறப்பான எதிர்காலம் உண்டு. அப்படிப்பட்டவர்களை கண்டுபிடிக்க சிகாகோ பல்கலைக்கழகம் முயற்சி எடுத்தது. அவர்களுக்கு வந்த விண்ணப்பங்களை இங்கு பார்க்கலாம்.

நம் ஊர்க்காரரான ராஜ் பாண்டியனின் கண்டு பிடிப்பும் இதில் இடம் பெற்றுள்ளது. குழந்தைகள் விளையாடும் Seesaw-லிருந்து மின் சக்தியை உருவாக்கும் உத்தியை கண்டு பிடித்துள்ளார். விளக்கங்கள் இங்கே. இவை போல Seesaw-க்களை நம் ஊர் கிராமங்களில் ஆங்காங்கே வைத்து விட்டால்,

"மாலை முழுதும் விளையாட்டு
நாள் முழுதும் வெளிச்சம்"

இது போன்ற முயற்சிகளால் தமிழக அரசுக்கு ஒன்றும் செலவு அதிகமாகாது. குக்கிராமங்களுக்கு மின் கம்பிகளை இணைப்பதை விட ராஜ் பாண்டியனின் ஐடியாவை உபயோகித்தால் செலவு மிக குறைவானது.

மேலே குறிப்பிட்ட முதல் இணைப்பில் இன்னும் சில நல்ல ஐடியாக்கள் உள்ளன. சில விசித்திரமான ஐடியாக்களும் உள்ளன. உடற்பயிற்சி நிலையத்தில் உள்ள சாதனங்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஐடியா வேடிக்கையாக இருந்தாலும் பிராக்டிகலானது.

எனக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. நம் ஊர்களில் எந்த வேலையும் பார்க்காமல் வெட்டித்தனமாக ஊர் மேய்ந்து கொண்டிருக்கும் ஆட்களை ஊஞ்சல் ஆட வைத்து அதில் மின் சக்தி உருவாக்கலாம்!

Friday, March 10, 2006

தமிழ் நாட்டின் தலைவிதி

புரட்சி தலைவி ஜெயலலிதாவிடம் அவர் சிறையிட்ட வை.கோ. கூட்டணி அமைத்து விட்டார். அரசியலில் moral, ethics என்று எதுவும் கிடையாது என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வை.கோ.மீது எனக்கு நிறைய மரியாதை இருந்தது உண்டு. நடந்ததை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. கருணாநிதி போன்ற தலைவர்கள் குடும்ப அரசியல் நடத்தாமல் இருந்திருந்தால் வை.கோ. தனிக்கட்சி ஆரம்பித்திருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

இந்த கலாட்டாக்களைப் பற்றி பத்திரிகைகளில் படித்த போது ஒரு செய்தி: ஜெயலலிதா திருமாவளவனிடம் கூட்டணி அமைப்பதற்கு முன்னால் அவரின் ஜாதகத்தை ஜோசியரிடம் காண்பித்து அவரிடம் கூட்டு சேர்ந்தால் அ.தி.மு.க. வெற்றி பெறுமா, எத்தனை தொகுதிகள் அவருக்கு கொடுக்கலாம் என்றெல்லாம் கணித்தார்களாம். திருவாளர் ஜோசியர் திருமாவளவனின் அதிர்ஷ்ட எண் ஒன்பது என்று சொன்னதால் அவருக்கு ஒன்பது தொகுதிகள் கொடுக்கப்பட்டது. அதே போல வை.கோ.வின் அதிர்ஷ்ட எண் எட்டு என்பதால் அவருக்கு 35 தொகுதிகள் கொடுக்கப்பட்டதாம்.

இப்படிப்பட்ட மூட நம்பிக்கை உள்ளவர்களிடம் தமிழ்நாட்டை ஆளும் பொறுப்பு இருக்கின்றது என்பதை நினைத்துப் பார்த்தால் பயமாக இருக்கிறது. இந்த மாதிரி எண்கள் மீது மூட நம்பிக்கை கொண்டவர்களை பார்க்கும் போது சமீபத்தில் படித்த ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

இரண்டு நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

“நான் நேற்று இரவு தூங்கும் போது அற்புதமான கனவு வந்தது. அந்த கனவில் ஒரு குதிரையும் நம்பர் ஐந்தும் மாறி மாறி வந்தது. அந்த கனவின் அர்த்தம் புரிந்து இன்று காலை குதிரைப்பந்தயத்தில் ஐந்தாவது ரேஸில் ஐந்தாவது வரிசையில் நின்ற குதிரையின் மேல் 500 டாலர் பந்தயம் கட்டினேன். “

“அப்புறம்...?!”

“அந்த குதிரை ஐந்தாவது இடத்தில் வந்தது…”

Saturday, March 04, 2006

அமெரிக்க சந்தை -- Update

பங்கு சந்தை வழி தெரியாமல் தடுமாறுகிறது. என்னுடைய பெரும்பாலான ட்ரேடுகளை முடித்து விட்டேன். கடந்த சில வாரங்களில் CTSH, BRCM, HXM, LEH, YHOO calls, Google put போன்றவை லாபம் தந்தது. AQNT, Infosys பங்குகளில் நஷ்டம். Long-term holdings-ல் வைத்திருக்கும் பங்குகளிலும் பரஸ்பர நிதிகளிலும் அவ்வளவாக வீழ்ச்சியில்லை. Hennessy Focus 30 பரஸ்பர நிதியில் (HFTFX) மேலும் கொஞ்சம் பணத்தை முதலீடு செய்துள்ளேன். மற்றபடி சில வாரங்கள் சந்தையை விட்டு கொஞ்சம் தள்ளி நிற்கலாம் என்று தோன்றுகிறது.

Google பங்குகள் சந்தையை ஆட்டம் ஆட வைக்கிறது. இந்த பங்குகள் அதிகமாக ஏறினாலும் அல்லது இறங்கினாலும் சந்தையில் ஷாக் தான். எண்ணெய் விலை கொடுக்கும் ஷாக்கை விட கூகுள் ஷாக் தான் பெரிய பிரச்னையாக உள்ளது! கூகுள் பங்குகளை வாங்காதவர்கள் கூட கூகுள் பங்கின் விலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய நிலைமை வந்து விட்டது.

இப்போதைய நிலைமையில் Cash is King. கூகுள், எண்ணெய் மற்றும் மத்திய வங்கி இவையெல்லாம் கொஞ்சம் நிலையாக நின்ற பிறகு சந்தையில் திரும்பவும் நுழைய போகின்றேன். அது வரை என்னுடைய பகுதி நேர வகுப்புகளின் assignments-களில் தான் என்னுடைய போராட்டங்கள்...

Monday, February 27, 2006

கவர்ந்த கட்டுரைகள்

எத்தனையோ கட்டுரைகளை படிக்கிறோம், சில கட்டுரைகள் நாம் படிக்கும் போது “அட...!” போட வைக்கும். சமீபத்தில் நான் படித்த சில “அட...!” கட்டுரைகள்…

1. தீராநதி 1-6-2006 இதழில் வாஸந்தி எழுதிய “நீர்த்துப்போன கொள்கைகள்”. குமுதம் வலைத்தளத்தில் இதை படிக்கலாம்.

2. சில வாரங்களுக்கு முன் “இந்தியா முன்னேறினால் அமெரிக்காவுக்கு நல்லதா கெட்டதா” என்று சார்லஸ் வீலனால் எழுதப்பட்ட ஒரு அருமையான கட்டுரை.

3. இந்த வார ஆனந்த விகடனில் (5-3-06) வந்திருக்கும் “குட்டி டைரக்டர் கிஷன்”.

4. இதே விகடனில் “கள்வனின் காதலி” படத்தின் விமர்சனம். பத்து கிலோ சாணியை எடுத்து டைரக்டர் சூரியாவின் முகத்தில் விகடன் பூசி விட்டது. யார் யாரெல்லாம் ஹீரோவாகலாம் என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

Wednesday, February 22, 2006

A Tribute to A.R. Rahman

போன வாரம் ஸ்டான்ஃபோர்டு பல்கழை கழகத்தில் “A Tribute to A.R. Rahman” என்ற ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். Asian arts festival என்று ஒரு வாரம் நடந்த திருவிழாவில் A.R. ரகுமானை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது.

மாலை 7:30க்கு நிகழ்ச்சி ஆரம்பம். 7 மணிக்கே போய் இரண்டாவது வரிசையில் இடம் பிடித்து விட்டேன். Asian festival என்பதாலோ என்னவோ நிகழ்ச்சியை தாமதமாக தான் ஆரம்பித்தார்கள். ஆரம்பமே அசத்தலாக இருந்தது. ஸ்டான்ஃபோர்டு மாணவ, மாணவியர் லகான் படத்திலிருந்து ஒரு பாடலை (Ghanan Ghanan) பாடி ஆடி காட்டினார்கள். ரகுமானை இப்போதைக்கு கண்ணில் காட்டப்போவதில்லை என்று கையில் கொடுத்த புத்தகத்தில் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டார்கள். லகான் பாடல் முடிந்ததும் நடாலி (Natalie Sarrazin) மேடையேறினார். நடாலி இந்திய இசையை பற்றி ஆராய்ச்சி செய்தவர். ஹிந்தி கொஞ்சம் தெரிந்து வைத்துள்ளார். அழகாக பேசினார்.

மேடையில் உள்ள பெரிய திரையில் 1950களிலிருந்து வந்த பல திரைப்பட பாடல்களை போட்டுக் காண்பித்து இந்திய சினிமா இசை எந்த அளவுக்கு evolve ஆனது என்பதை சுவாரசியமாக விமர்சித்தார். ரகுமான் இந்திய சினிமா இசையை எப்படி மாற்றி அமைத்தார் என்பதை நகைச்சுவையோடு விளக்கினார். “இந்திய சினிமாவில் வன்முறையான கத்தலுடன் ஒரு பாட்டு ஆரம்பித்தால் பெரும்பாலும் அது காதல் பாட்டாகத்தான் இருக்கும்” என்ற முத்தாய்ப்புடன் அவர் காண்பித்த பாட்டு ஷாருக்கானை நினைத்து கஜோல் குளியல் அறையில் வெறும் துண்டை மட்டும் உடம்பில் உடுத்திக்கொண்டு பாடுவது. என்ன படம் என்று தெரியவில்லை. ஒரு நிமிடம் கழித்து அடுத்த பாட்டைப் பற்றி பேசுவதற்காக அந்த பாட்டை நிறுத்திய போது அரங்கத்தில் ஏக்கம் நிறைந்த கூச்சல்கள். நடாலி ரொம்ப கூலாக “ரொம்ப அலையாதீங்க…அவள் அந்த துண்டை பாட்டு முடியும் வரை கழட்ட மாட்டாள்” என்று சொல்லி விட்டு ரோஜா படப்பாடலைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்! நடாலியின் சொற்பொழிவில் என்க்கு ஆச்சரியமான சமாசாரம் சீனப்படம் (Warriors Of Heaven And Earth) ஒன்றிற்கு ரகுமான் இசை அமைத்தது தான். அந்த படத்தின் கிளிப்பிங்க் ஒன்று போட்டு காண்பித்தார்கள். Lovely… படம் வந்து இரண்டு வருடங்களாகி விட்டது போல, ஆனால் எனக்கு இது புதிய தகவல்.

நடாலி பேசி முடித்தவுடன் ரகுமான் மேடைக்கு வந்தார். ரொம்ப சிம்பிளான மேடை செட்டிங். ரகுமானும் ரொம்பவும் சிம்பிளாக இருந்தார். நடாலி ரகுமானை இண்டர்வியூ செய்வதாக ஏற்பாடு. மொத்த நிகழ்ச்சியும் கேஷுவலாக இருந்தது. தான் எப்படி சினிமா இசைக்குள் நுழைந்தது, ரோஜா பட பாடல்களின் அனுபவம், ரோஜா ஹம்மிங், வந்தே மாதரத்தின் இசையமைப்பு, லார்டு ஆஃப் த ரிங்ஸ் பட இசையமைப்பு, சீன பட அனுபவங்கள் என்று பல்வேறு திசைகளில் ரகுமானும் நடாலியும் பேசுவதை கேட்க ஆடியன்ஸுக்கு ஒரு நல்ல அனுபவம். ரகுமான் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளவேயில்லை. Very Simple. இயல்பாக இருந்தார். வார்த்தைக்கு வார்த்தை சிரிப்பு. தன் வெற்றி அனைத்திற்கும் கடவுள் தான் காரணம் என்று சொல்கிறார். கேள்வி பதில் நிகழ்ச்சி முடிந்ததும் அவரது சாதனைகளுக்காக விருது கொடுத்து கௌரவப்படுத்தினார்கள். Congratulations Mr. Music!

கேள்வி பதில் நிகழ்ச்சி முடிந்ததும் மாணவ மாணவியர் அலைபாயுதே மற்றும் வந்தே மாதரம் பாடல்களை பாடினார்கள். பிரமாதம். அழகும் அறிவும் ஒன்றாக சேராது என்று சொல்பவர்கள் ஸ்டான்ஃபோர்டு பக்கம் எட்டிப்பார்த்து விட்டு போங்கள்! வந்தே மாதரம் பாடலில் சில அமெரிக்க மாணவர்களும் சீன மாணவரும் நம் ஊர் மாணவர்களுடன் சேர்ந்து பாடியது சூப்பர். அது ஒரு பொன் மாலை பொழுது்…

ரகுமானை நடாலி கேள்விகள் கேட்ட பிறகு ஆடியன்ஸும் பத்து கேள்விகள் கேட்கலாம் என்று அறிவித்தார்கள். இரண்டு நிமிடத்தில் 20 பேர் வரிசையில் நின்று விட்டார்கள்.

ஒரு அமெரிக்கர் கேட்ட கேள்வி: “சினிமாவுக்கு வந்த 14 வருடங்களில் நல்ல உயரத்துக்கு போய் விட்டீர்கள். உங்களுக்கு career management skills நிறைய உள்ளது. அதைப்பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?”

“நானாக எதுவும் பிளான் செய்யவில்லை. கடவுள் தான் சிறந்த திட்டமிடுபவர். அவரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்து விடுகிறேன்” என்று ரகுமான் சொன்னார். நான் அதை நம்பவில்லை! தன் ஒவ்வொரு அடியையும் ஆரம்பத்திலிருந்தே கவனமாக எடுத்து வைத்திருக்கிறார். திட்டமிட்டு ஹிந்தி திரைக்குள் சென்றார். ஹிந்திக்கு அவர் செல்லாமலிருந்திருந்தால் அவரின் திறமை மற்றவர்களுக்கு தெரிந்திருக்காது. இந்தியா முழுதும் பிரபலமானதால் Bombay dreams, Lord of the rings என்று மேலும் வாய்ப்புகள். தமிழ் படங்களுக்கு மட்டும் இசை அமைத்து கொண்டிருந்திருந்தால் அவரால் இந்த அளவுக்கு புகழ் பெற்றிருக்க முடியாது என்று தான் எனக்கு தோன்றுகிறது.


அடுத்து ஒரு அமெரிக்க பெண்மணி வந்தார். அவர் கேட்ட கேள்வியும் ரகுமானின் பதிலும்:

“நான் ஒரு Matchmaker. உங்களை போல இள வயதில் நிறைய சாதித்தவர்களை கல்யாணம் செய்து கொள்ள நிறைய பேர் காத்திருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு நல்ல பெண்ணாக நான் பார்க்கட்டுமா?”

ரகுமானால் சிரிப்பு தாங்க முடியவில்லை. “ஹலோ, என் மனைவி என்னை கொன்று விடுவார்!”

அமெரிக்க பெண்மணி பேசிக்கொண்டே போகிறார். ரகுமான் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.

ரகுமான் திரும்பவும் சொன்னார் “ஹலோ, எனக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டது. மூன்று குழந்தைகள் இருக்கின்றார்கள்”

அப்போது தான் அந்த பெண்மணி கல்யாணம் செய்வதால் என்ன நன்மை என்ற தன் சொற்பொழிவை நிறுத்தினார். “ஆ…உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விட்டதா?!” என்று ஏமாற்றத்துடன் போய் விட்டார்.

Sunday, February 12, 2006

இந்தியாவா, சீனாவா?

எந்த நாட்டில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமானது? எந்த நாட்டின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்? இந்த கேள்விகளுக்கு விடை கொடுத்திருக்கிறார் ஜெரமி சீகல். இவர் புகழ்பெற்ற வார்ட்டன் பல்கலைகழகத்தில் பணிபுரிகிறார். இவரின் கட்டுரைகளை படித்து சந்தோஷப்பட்டேன். நான் பெற்ற இன்பம் இந்த வையகம் பெற...

http://finance.yahoo.com/columnist/article/futureinvest/2369

http://finance.yahoo.com/columnist/article/futureinvest/2542

Sunday, January 29, 2006

இந்திய பங்கு சந்தை பற்றி ஒரு பேட்டி

சமீபத்தில் தமிழ் வாரப்பத்திரிக்கை ஒன்றில் ஒரு பேட்டி படித்தேன். பங்கு சந்தையில் ட்ரேடு செய்யும் ஒரு பெண்மணியை பற்றி எழுதியிருந்தார்கள். இவர் குறை பிரசவத்தில் பிறந்தவர், வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கிறார். ஐந்து வருடங்களுக்கு முன்னால் பங்கு சந்தையில் ட்ரேடு செய்ய ஆரம்பித்திருக்கிறார். முதலீடு செய்யவில்லை, ட்ரேடு செய்து வருகிறார். ஆரம்பத்தில் ஐந்து லட்சம் வரை நஷ்டப்பட்டு இப்போது மாதம் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறாராம். இவரை பற்றி அந்த வார இதழ் புகழ்ந்து எழுதி, மற்றவர்களையும் பங்கு சந்தையில் ஈடுபட ஊக்கம் கொடுத்திருந்தது.

இப்போது இந்தியாவில் Bull Market. இப்படிப்பட்ட நேரத்தில் யார் வேண்டுமானாலும் ஹீரோவாக முடியும். எந்த பங்கில் பணத்தை விட்டாலும் பெரும்பாலும் லாபம் வரும். இந்த வாரப்பத்திரிக்கையின் பேட்டியை படித்து விட்டு எத்தனை பேர் விபரம் தெரியாமல் காலை விடப் போகிறார்களோ, தெரியவில்லை.

பேட்டியில் குறிப்பிடப்பட்ட பெண்மணி உண்மையிலேயே சிறந்த டிரேடராக இருக்கலாம். அவரின் திறமையை குறைத்து மதிப்பிட்டு நான் இதை எழுதவில்லை. இவரே இவ்வளவு பணம் சம்பாதிக்கிறார், நம்மால் முடியாதா என்று விபரம் தெரியாதவர்கள் பணத்தை இழந்து விடுவார்கள் என்று தான் சொல்ல வருகிறேன். பல நேரங்களில் நம் ஊர் பத்திரிகைகள் பொறுப்பில்லாமல் கண்டபடி ரீல் விடுகின்றன. மேலே குறிப்பிட்ட பேட்டியை படிக்கும் போது பங்கு சந்தையில்
பணம் சம்பாதிப்பது ரொம்ப சுலபம் என்பது போல ஒரு மாயை உண்டு செய்கிறார்கள்.

Whatever goes up, comes down -- இது தான் பங்கு சந்தையின் உண்மை நிலை. அமெரிக்காவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி. 1999-ல் அமெரிக்க பங்கு சந்தை நிலைமை இன்றைய இந்திய பங்கு சந்தை போல இருந்தது. பங்குகள் கீழே விழ வாய்ப்பே இல்லை என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்தார்கள். ஒரே வருடத்தில் நிலைமை தலை கீழாக மாறி விட்டது.

பங்கு சந்தையில் சுலபமாக பணம் சம்பாதிக்கலாம் என்று விபரம் தெரியாதவர்கள் பணத்தை போடுவது அவர்களுக்கும் நல்லதில்லை, பங்கு சந்தைக்கும் நல்லதில்லை! ஏனென்றால், பங்கு சந்தை சரிய ஆரம்பிக்கும் போது விபரம் தெரியாமல் பணத்தை போட்டவர்கள் தான் பீதியாகி விடுவார்கள். அந்த panic attack பங்கு சந்தை வீழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்தும். அமெச்சூர் ட்ரேடர்களின் எண்ணிக்கை அதிகமானால் பங்கு சந்தையின் வீழ்ச்சியும் அதிகமாகும்...

Sunday, January 22, 2006

மின் விசிறி -- வைரஸின் எதிரி

Kronos நிறுவனம் வித்தியாசமான மின் விசிறியை கண்டுபிடித்துள்ளது. இந்த விசிறியில் சுற்றும் பிளேடுகள் கிடையாது. மோட்டார் கிடையாது. வெயிலுக்கு காற்று வாங்குவதற்கு இது பயன்படாது. ஆனால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள இது உதவும்.

இந்த விசிறியில் நிறைய வயர்கள் உள்ளது. இதன் மூலம் அதிக மின்சாரம் செலுத்தப்படுகிறது. மின் சக்தியால் உருவாக்கப்படும் ions காற்றை வேகமாக உள்ளே இழுக்கிறது. விசிறியின் மின் காந்த சக்தி வேகமாக வரும் காற்றிலுள்ள pathogens சமாசாரங்களை அழித்து விடுகிறது. Anthrax, flu போன்ற வைரஸ்களை இந்த விசிறி சுலபமாக அடித்து நொறுக்கி விடுகிறது.

மேலும் விபரங்களுக்கு...http://www.kronosati.com

சரி...தமிழ் நிதிக்கும் இந்த மின் விசிறிக்கும் என்ன சம்பந்தம்? இந்த மின் விசிறியை இந்தியாவில் விற்க நீங்கள் உரிமை எடுத்தால் அது ஒரு நல்ல வியாபாரமாக அமையும். பறவை காய்ச்சல் போன்ற வியாதிகளை தடுப்பதற்கு விமான நிலையங்களிலும் பொது இடங்களிலும் இந்த மின் விசிறிகளை நிறுவினால் உங்கள் நிறுவனத்துக்கு லாபம், மக்களுக்கும் நல்லது. நம் ராணுவத்துக்கும் இந்த விசிறிகள் மிக உபயோகமாக இருக்கும். இந்த விசிறிகள் மருத்துவமனைகளில் பயன்படும் -- நோய்கள் பரவாமல் இருப்பதற்கு. இந்த விசிறியின் பயன்களை எழுதிக்கொண்டே போகலாம். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசி பாருங்கள்.

Monday, January 16, 2006

சிறு துளி....

சில வருடங்களுக்கு முன்னால் விளையாட்டாக ஆரம்பித்த விஷயம், இன்று பயனுள்ளதாய் இருக்கிறது.

என் வீட்டு சமையலறையில் ஒரு சில்லரை பெட்டி இருக்கும். கடைகளில் பொருள்கள் வாங்கிய பிறகு கிடைத்த சில்லரைகள் எல்லாம் இந்த பெட்டிக்கு சென்று விடும். ஒரு நாள் இந்த பெட்டி நிரம்பி வழிந்த போது அதில் உள்ள காலணா, எட்டணா காசுகளை எடுத்து பொட்டலம் கட்டி வங்கியில் நோட்டாக மாற்றும் போது அந்த யோசனை வந்தது.

"இந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யாமல் பங்குகளில் போட்டால் என்ன?"

பல மாதங்களாக சில்லரை பெட்டி காலி செய்யாமல் இருந்ததால் எழுபது டாலருக்கு மேலே பணம் கிடைத்தது. வெறும் எழுபது டாலருக்கு பங்குகள் வாங்குவதா என்று தோன்றினாலும் அந்த எழுபது டாலரை வைத்து Sharebuilder வலை தளத்தில் ஒரு கணக்கு ஆரம்பித்தேன்.

Sharebuilder தளத்தில் ஒரு டிரேடுக்கு வெறும் நாலு டாலர் மட்டுமே கமிஷன் வாங்குகிறார்கள். அடிக்கடி டிரேடு செய்வதற்கு இவர்கள் அருகில் போக மாட்டேன். நான் செய்ய ஆரம்பித்ததே கிட்டத்தட்ட ஒரு ஆராய்ச்சி வேலை! எனக்கு உபயோகமில்லாமல் சும்மா கிடக்கும் சில்லரை காசுகள் எந்த அளவுக்கு லாபம் தரும் என்று யோசித்ததால் வந்த விளைவு இது. அதே சமயம் Long-term-ல் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் எப்படி இருக்கும் என்றும் யோசித்தேன். Long-term என்றால் குறைந்தது 10 வருடங்கள். இந்த முயற்சிக்கு தனியாக தரகர் கணக்கு தொடங்கினால் track செய்ய சுலபமாக இருக்கும் என்று தோன்றியது. அது தவிர இந்த விளையாட்டுக்கு என்னிடம் இருந்ததே வெறும் 70 டாலர் தான், அதை வைத்துக் கொண்டு Brown & Co., அருகே போக முடியாது. அதனால் தான் Sharebuilder.

இது நடந்தது பிப்ரவரி 2001-ல். கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஓடி விட்டன. ஆறு மாதத்துக்கு ஒரு முறை சில்லரை பெட்டி காலி செய்யப்பட்டு, வங்கியில் பணமாக மாற்றப்பட்டு, Sharebuilder-ல் டெபாசிட் செய்யப்பட்டது. இப்போது இந்த கணக்கின் மதிப்பு $1100!

பங்குகளை தேர்வு செய்த விதமும் இந்த கணக்கின் மதிப்பு உயர ஒரு காரணம். இந்த கணக்கில் உள்ள பங்குகள்:

5 CSCO பங்குகள்
5 GE பங்குகள்
1.16 GOOG பங்குகள்
5 MSFT பங்குகள்
5 QQQQ பங்குகள்

Sharebuilder போன்ற தரகர்களிடம் 0.5 பங்கு கூட வாங்க முடியும். அதனால் என்னிடம் வெறும் $18 இருந்தால் கூட 0.5 MSFT பங்கு வாங்க முடியும்.

இது வரை இந்த கணக்கில் பங்குகளை வாங்குவதோடு சரி, விற்கும் வேலையே கிடையாது. 2012 பிப்ரவரியில் இந்த கணக்கின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று தெரியாது. ஆனால் அது வரை இந்த வலைப்பதிவு இருந்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்!

Sunday, January 08, 2006

Google மேனியா - Update

கூகுள் பங்குகள் பறப்பதை நிறுத்தவில்லை. நவம்பர் 5, 2005-ல் கூகுளை பற்றி எழுதியபோது பங்குகளின் விலை $390. இன்று $465! ஜிம் கிரேமர் சொன்ன $450 விலையை கடந்து விட்டது.

கடந்த 60 நாட்களில் நிறைய விஷயங்கள் நடந்து விட்டது.

1. கூகுள் America Online நிறுவனத்தின் 5% உரிமையை வாங்கிவிட்டது. கூகுளின் பெரிய வாடிக்கையாளர் America Online. பங்கு சந்தை முதலீட்டாளர்கள் இதில் ரொம்ப த்ரில்லாகி விட்டார்கள்.

2. கூகுள் புதிதாக Video-on-demand போன்ற சேவைகளை ஆரம்பித்து விட்டது

3. குறைந்தது மூன்று வங்கிகள் கூகுள் பங்குகள் $500 மதிப்பை எட்டும் என்று கணித்து விட்டார்கள்

ஜனவரி 20ம் தேதிவாக்கில் கூகுள் லாப நஷ்ட கணக்கை அறிவிக்க போகிறது. அதில் கூகுள் ஏதாவது ஏமாற்றத்தை கொடுத்து விட்டால் பெரிய பிரச்னை ஆகிவிடும். அப்படியெல்லாம் நடக்காது என்று நம்பிக்கை இருந்தாலும் நான் ரிஸ்க் எடுக்க போவதில்லை. ஜனவரி 20க்குள் நான் வாங்கிய ஆப்ஷன்கள் அனைத்தையும் விற்க போகிறேன். ஒரு வேளை கூகுளின் லாப கணக்கு திருப்திகரமாக இருந்தால் ஜனவரி நாலாவது வாரத்தில் திரும்பவும் ஏப்ரல் மாதத்துக்கான கூகுள் ஆப்ஷன்களை வாங்க வேண்டியது தான்.

நீங்கள் கூகுள் ஆப்ஷன்களை வாங்கியிருந்தால் உங்கள் லாபத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...