Saturday, December 31, 2005

இந்தியாவில் வியாபாரம் செய்ய சில யோசனைகள்

மைக்ரோ கிரடிட் என்ற சமாசாரம் வளரும் நாடுகளில் "Hot topic" ஆகி விட்டது. உங்கள் கையில் கொஞ்சம் பணம் இருந்தால் இதில் இறங்கலாம். இந்த வியாபாரத்துக்கு வங்கியில் பணம் கடன் வாங்க முடியாது, ஏனென்றால் வங்கியே நீங்கள் தான்!

ஏழைகளுக்கு நியாயமான முறையில் கடன் வழங்கி அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது தான் மைக்ரோ கிரடிட்டின் வேலையே. இது வெறும் சமூக சேவை மட்டுமல்ல, லாபம் வரக்கூடிய நல்ல வியாபாரம் கூட. நீங்கள் போட்ட முதலீட்டுக்கு குறைந்தது 10% லாபம் கிடைக்கும். அது மட்டுமில்லாமல் நிறைய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய புண்ணியமும் கிடைக்கும்.

வட்டிக்கு பணம் கொடுப்பதில் என்ன புண்ணியம் என்று டென்ஷனாவதற்கு முன்னால் இது முழுவதையும் படியுங்கள்!

நகரங்களில் வாழ்பவர்கள் புதிதாக வீடு வாங்க விரும்பினாலோ அல்லது 60" டிவி வாங்க விரும்பினாலோ அவர்களுக்கு கடன் கொடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள். காரைக்குடி பக்கத்தில் உள்ள குக்கிராமத்தில் இருக்கும் ஒரு விதவை பெண்மணி கோழிப்பண்ணை வைக்க விரும்பினால் அவருக்கு யார் கடன் கொடுப்பார்கள்? அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு ஏழை விவசாயி உரம் வாங்க கடன் கேட்டால் யார் கொடுப்பார்கள்? தப்பி தவறி கடன் கிடைத்தாலும் கந்து வட்டி தான். சொந்தமாக தொழில் தொடங்க ஆசைப்படும் ஏழைகளுக்கு உதவுவது தான் மைக்ரோ கிரடிட்டின் முக்கிய வேலையே. நியாயமான முறையில் வட்டி மற்றும் வாடிக்கையாளர்களை எடை போடும் திறமை இருந்தால் மைக்ரோ கிரடிட்டில் நீங்கள் ஜொலிக்கலாம்.

அன்றாடம் காய்ச்சிகளுக்கு கடன் கொடுத்து விட்டு கடனை வசூலிப்பதிற்குள் போதும் போதும் என்றாகி விடாதா? உண்மை என்னவென்றால் குக்கிராமங்களில் வசிக்கும் ஏழைகளில் பெரும்பாலானவர்கள் நாணயமானவர்கள், பழிச்சொல்லுக்கு
அஞ்சுபவர்கள். அதற்காக கடன் கேட்பவர்களுக்கு எல்லாம் கடன் கொடுத்து விட முடியாது, அப்படி செய்தால் தலையில் மொட்டை தான்.

முதலில் உங்களுக்கு பரிச்சயமான கிராமத்தில் மைக்ரோ கிரடிட்டை ஆரம்பிக்க வேண்டும். பெண்களுக்கு மட்டும் கடன் கொடுக்க
ஆரம்பியுங்கள். ஆண்களுக்கு கொடுக்கும் பணம் சாராயக் கடை கல்லாவில் போய் விழும். (குக்கிராமங்களில் உள்ள ஆண்கள் இந்த பதிவை படிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் எழுதுகிறேன்). ஒரு கிராமத்தில் 10 பெண்களுக்கு கடன் தேவை என்று வைத்துக் கொள்வோம். இவர்களுக்கு லட்சக்கணக்கில் கடன் தேவைப்படாது. ஒருவருக்கு மீன் வலை வாங்க 5000 ரூபாய் தேவைப்படும், ஒருவருக்கு பசு மாடு வாங்க 20,000 ரூபாய் தேவைப்படும். இந்த 10 பெண்களையும் இரு பிரிவாக பிரிக்க வேண்டும்.

ஒவ்வொரு பிரிவுக்கும் அந்த பிரிவிலிருந்து ஒரு லீடரை நியமிக்க வேண்டும். வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது மாதத்துக்கு ஒரு முறையோ இந்த தொழிலதிபர்கள் தான் வாங்கிய கடனுக்கு வட்டி + அசலில் சிறிய தொகையை உங்களுக்கு திரும்பி தந்து விடுவார்கள். தான் வாங்கிய கடன் தொகையை பொறுத்து மொத்த கடனையும் சில
மாதங்களிலோ அல்லது ஒரு வருடத்திலோ அடைத்து விடுவார்கள். தவணை முறையில் கடனை திரும்ப அடைப்பதில் யாராவது பின்தங்கினால் அதை சமாளிப்பது பிரிவு லீடரின் வேலை. தன் தெருவில் இருக்கும் முனியம்மா லீடர் தன்னைப் பற்றி கேவலமாக பேசக்கூடாதே என்ற எண்ணமே ஏமாற்றும் எண்ணத்தை தவிர்த்து விடும். தன்னால் தான் சேர்ந்த பிரிவுக்கு அசிங்கம் வரக்கூடாது என்ற எண்ணமும் உங்கள் முதலீட்டை காப்பாற்றும்.

மைக்ரோ கிரடிட்டில் வெற்றி பெற நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் -- வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்கும் திறமை யாருக்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ளும் திறமை. தன் சொந்த செலவுக்கு கடன் வாங்குபவர்களுக்கு கடன் கொடுத்தால் பெரும்பாலான பணம் திரும்ப வராது. தன் திறமையையும் உழைப்பையும் நம்பி இறங்குபவர்களுக்கு கடன் கொடுப்பது தான் உங்களுக்கும் நல்லது. அவர்களுக்கும் நல்லது.

நீங்கள் கடன் கொடுப்பவர்களில் 90% மக்கள் மட்டும் கடனை திரும்ப கொடுத்தால் கூட உங்களுக்கு லாபம் வரும். மைக்ரோ கிரடிட் உங்களால் வெற்றிகரமாக செய்ய முடிந்தால் இன்சூரன்ஸ் போன்ற பொருட்களையும் வாடிக்கையாளர்களுக்கு விற்கலாம். இந்தியாவில் ஏற்கனவே நிறைய பேர் மைக்ரோ கிரடிட் கொடுக்கிறார்கள். சில நிறுவனங்களின் லிங்குகள் கீழே...

http://www.sksindia.com/
http://www.sa-dhan.org/

அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு இந்த ஆள் ஏதோ அளக்கிறான் என்று நீங்கள் நினைத்தால் அதில் தப்பில்லை! கொஞ்சம் Skeptic ஆக இருப்பது நல்லது தான். பங்களாதேஷ் போன்ற நாடுகளிலேயே மைக்ரோ கிரடிட் பிரமாத வெற்றி பெற்று விட்டது. இந்தியாவில் நல்ல வெற்றி பெறும். பங்களாதேஷ் நாட்டின் கிராமீன் வங்கியின் உயர் அதிகாரி முகமது யூனுஸ் தான் மைக்ரோ கிரடிட்டின் ஹீரோ. Nightly Business Report என்ற அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி கடந்த 25 வருடங்களில் முக்கியமான 25 நபர்களில் ஒருவராக (25 most influential business people of the last 25 years) முகமது யூனுஸை தேர்ந்தெடுத்துள்ளது. அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியை இங்கு படிக்கலாம். அந்த பேட்டி முழுவதையும் தமிழில் மொழி பெயர்க்க நேரமில்லை. அந்த பேட்டியில் எனக்கு பிடித்த சில வார்த்தைகளை மட்டும் மொழி பெயர்த்துள்ளேன்.

"ஏழைகள் போன்சாய் (ஜப்பானிய மரவகை) மரத்தை போன்றவர்கள். நன்றாக செழிப்புடன் உள்ள விதையை எடுத்து அதை சின்ன தொட்டியில் வைத்து வளர்க்கிறோம். அந்த விதை நல்ல நிலத்தில் வளர்ந்தால் அது பெரிய மரமாக வளரும். ஒரு சின்ன தொட்டியில் போன்சாயாக வளர்த்தால் அது சின்ன மரமாக தான் வரும். விதையின் மேல் தப்பில்லை. அந்த விதையை சின்ன தொட்டியில் விதைத்த இந்த சமூகத்தின் மேல் தான் தவறு"

தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

2 comments:

Badri said...

பாரதி: இந்தியாவில் மைக்ரோ கிரெடிட் இப்பொழுதைக்கு பெண்களை மட்டுமே வாடிக்கையாளர்களாக வைத்துள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் நீங்கள் சொன்னதுபோல பணம் திரும்பி வருவதுதான்.

மைரோ கிரெடிட்டில் வட்டி கிட்டத்தட்ட 24% வரை வசூலிக்கப்படுகிறது!

ஆனால் மைக்ரோ கிரெடிட் பெண்களைத் தாண்டி வரவேண்டும். சில ஆண்கள் குழுக்களை - அவர்கள் சற்றே மோசமானவர்கள் என்றாலும்கூட! - அணுகவேண்டிய நிலை இப்பொழுது உள்ளது.

உதாரணத்துக்கு நகர்ப்புறங்களில் இன்னமும் ரிக்ஷா இழுப்பவர்களுக்கு, மிதிப்பவர்களுக்குக் கடன் கொடுத்து மிதி ரிக்ஷாவை ஆட்டோ ரிக்ஷாவாக மாற்றுவது. இதற்கு இந்தியா முழுவதையும் எடுத்துக்கொண்டால் பலகோடி ரூபாய்கள் தேவைப்படுகின்றன. ஒரு புது ஆட்டோ ரிக்ஷா வாங்க குறைந்தபட்சமாக ஒரு லட்சம் வரை தேவைப்படலாம்.

இதில் கொடுமையாக கொல்கொத்தா போன்ற இடங்களில் இன்னமும் இழுரிக்ஷாதான். மிதிவண்டிகூட இல்லை. இழுவண்டியை மிதிவண்டியாக்கத் தேவையானது ரூ. 3000-4000 மட்டும்தான் என்று கணிக்கிறேன்.

இதையே நீட்டித்தால் 18-20 வயதான ஆண்களுக்கு தொழிலுக்கான உபகரணங்கள் வாங்குவதற்குக் கடன் கொடுப்பது. (தச்சு, மின்சார, முடிதிருத்தக, பிளம்பிங், டிவி ரிப்பேர் போன்ற தொழில்களுக்கு) - இதற்கு ஒருவருக்கு ரூ. 2000 - 10,000 வரை ஆகலாம்.

16-20 வயதான ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் தனியார் பயிலரங்குகளில் கம்ப்யூட்டர் கல்வி கற்றுத்தர (இதற்கு ஒருவருக்கு ரூ. 3000 - 5000 ஆகும் என்று வைத்துக்கொள்ளலாம்.)

இப்படி எல்லாமெ வாழ்க்கைத் தொழில்களாக இருக்கும் பட்சத்தில் ஒருவரது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த முடியும், அவரது வருமானத்தைக் கூட்டமுடியும், அதன்மூலம் கொடுத்த கடனையும் திரும்பிப் பெறமுடியும்...

ஆனால் ஆண்கள் மீதான குற்றச்சாட்டுகள் - குடிகாரர்கள், பணத்தை வீணடிப்பவர்கள், கொடுத்த கடனைத் திருப்பித் தராதவர்கள் - குறைவதற்கு அவர்களுக்கு நிறையக் கல்வி தேவை.

Bharathi said...

பத்ரி: விளக்கமான பின்னூட்டத்துக்கு நன்றி. 24% வட்டி கொஞ்சம் அதிகமாக தெரிகிறது. ஆனாலும் கந்து வட்டியை விட குறைவு தான். நகர்ப்புறங்களில் இருக்கும் ஆண்களுக்கு ரிக்ஷா போன்றவற்றிற்கு கொடுத்த கடனை திரும்ப வாங்குவதில் அரசியல் தலையீடுகள் வந்தால் கொஞ்சம் பிரச்னை தான். நீங்கள் எழுதியது போல டெக்னிகல் தொழில்களுக்கு கடன் கொடுப்பது எல்லோருக்கும் நல்லது.

ஜனவரி 1ம் தேதி அன்று கூட காலை 6:45க்கு இன்டெர்நெட்டில் இருக்கிறீர்கள்! Wow..! உங்களுக்கு மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Related Posts Plugin for WordPress, Blogger...